பெண்களின் போராட்டம் , வலி அனைத்திற்கும் கிடைத்த ஒரு பொன் நாள் மகளிர் தினம். என்னளவில் பெண்ணுக்கு இழைக்கப்படும், இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொடுமைகளுக்கு இந்த ஒரு நாள் மகளிர் தினம் ஒன்றும் தீர்வு அல்ல. ஓர் ஆறுதலின் நாள் அவ்வளவுதான். ஏதோ ஒரு மூலையில் ஓரே ஒரு பெண் சாதனையாளரக இருக்குபோது, அதே இடத்தில் பல இடுக்குகளில் பல பெண்களின் அழகுரல்கள்  ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு முழுமையான பெண் சுதந்திரம், விடுதலை கிடைத்துவிட்டது  என்று எல்லாம்  சொல்லிவிட முடியாது என்பதற்கான ஒரு நிகழ்வு பாலியல் வன்முறையினால் கொடுமை செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமியின் மரணம். பால்ய வயது பெண்களையும் நடுத்தர வயது பெண்ணையும் இதுவரை போக பொருளக பார்த்த ஓர் இனம் சற்றும் மனசாட்சி இன்றி குழந்தைகளையும் இச்சித்து கொன்று குவித்து கொண்டிருக்கிறது.அதையும் அன்றாட நிகழ்வாகக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

பெண்களின் பாதுகாப்பு என்பதைத் தாண்டி பெண்ணாகப் பிறந்ததற்காகக் கருவில் இருந்தே குழந்தைகளைப் பாதுகாப்பு என்கிற பெயரில் கடிவாளம் போட்டு வைக்க கடமைப்பட்டுள்ளோம். இதுவரை எத்தனையோ ஏதும் அறியாத பிஞ்சு குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அதன் கதறல்     ஓலங்களுக்கும் பதில் என்று ஒன்று இல்லாத நமக்கு வருங்கால சந்ததிக்கு வாழ்வியல் உரிமையை எப்படிக் கொடுப்பது?

பெண் குழந்தையின் வாழ்வு என்பது கேள்வி குறியாக அல்லவா உள்ளது இத்தலை முறையில்.ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போது மனம் கனக்கிறது.பெண் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்தில் இருந்து வயதான மூதட்டி வரை ஏதோ ஒரு கொடுமையை அன்பவித்துக் கொண்டிருப்பது வேதனை. பெண் என்றால் வீட்டைத் தாண்டினால் ஆபத்து என்கிற கட்டமைவு வைத்திருக்கும் இந்தச் சமுதாயம், யாரால் பெண்ணுக்கு ஆபத்து, சில ஆண்களால் தானே என்று கண் எதிரே கண்டும் உணர முடியாது குருடர்களாக, “பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளணும் “என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறதே தவிர, அதற்கான தீர்வு கிட்டினபாடில்லை.

தவறு செய்பவர்களுக்கு கட்டுப்படுகள், கடுமையான தண்டனைகள் கொடுப்பதை விட்டுவிட்டு, தவறு ஏதும் செய்யாதவர்களுக்குக் கட்டுப்பாடு என்கிற பெயரில் தண்டனை தருவதுதானே இயேசு காலத்தில் தொடங்கி தற்காலம் வரை நடத்திக் கொண்டிருக்கிறது. நமது கடந்தகால குழந்தைப் பருவம் எவ்வளவு இனிமையானதாக இருந்தது.  இன்று அப்படி அல்ல. குற்றவாளிகளுக்குத் தண்டனை தருவதோடு சமூகத்துக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது அவசரம்.

நட்சத்திரா

ஆய்வக நுட்பனராக மருத்துவமனையில் பணிபுரிகிறேன். இதுவரை புத்தக வாசிப்பு மட்டுமே கொண்டிருந்தேன். இது என்னுடைய முதல் எழுத்துப் பணி.