ஹாய் தோழமைகளே,

ஒரு பழைய பாடலில்…

“ஆறும் அது ஆழமில்லை, அது சேரும் கடலும் ஆழமில்லை. ஆழம் எது ஐயா, இந்தப் பொம்பள மனசுதான்யா” என வரும். இதில் பாதி உண்மைதான் உள்ளது.

உலகின் மிக சக்திவாய்ந்த கம்ப்யூட்டரை விட சிக்கலானது மனித மனம். ஆனால், இதற்கு ஆண், பெண் வேறுபாடெல்லாம் கிடையாது,  இருவருக்குமே அப்படித்தான். ஒரு வேளை பெண்கள் சிறு வயதிலேயே அடக்கியே வளர்க்கப்பட்டு, பொருளாதாரத்தில் பிறரைச் சார்ந்த நிலை என்பதால் பல உணர்வுகளை அவர்கள் அமைதியாகக் கடக்க பழகிக்கொண்டனர்.

அவர்களுக்குப் பகிரப்படாத உணர்வுகள் அதிகம் இருக்கலாம். வடிகாலுக்கு வழியில்லாத இடத்தில் உணர்வுகள் சிக்கலாவதும் இயற்கையே.

நாம் கனவு காணும் சமமான சமுதாயத்தில் இது இல்லாமல் போகும்.  சிக்கலான மனம் இரு பாலருக்கும் ஒன்று தான்.

மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்துகொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், “அது போன வாரம், இது இந்த வாரம்.”

ஆகவே தோழிகளே சிக்கல் அந்த நிகழ்விலோ, நடக்கும் நேரத்திலோ, கூட இருக்கும் நபரிடமோ அல்ல. நம்மிடம், நம்மிடம் மட்டுமே. நாம் சரியாக இருந்தால் எது சரி இல்லாவிட்டாலும் சமாளிக்கலாம்.

சமீபத்தில் ஒரு நீயா நானா நிகழ்ச்சி, மண விலக்கு பெற்றவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அதில் பேசிய பலர், அந்த நேரத்து உணர்வில் முடிவெடுக்காமல் கொஞ்சம் ஆறப் போட்டு இருக்கலாம் என்கிற தொனியிலேதான் பேசினார்கள். தனக்கு என்ன வேண்டுமென்ற தெளிவான முடிவுக்கு வரும் முன்பே, மற்றவர்களின்  தாக்கம் மற்றும் அந்த நேரத்தின் உணர்வு உந்த மணவிலக்குப் பெற்று இப்போது வருந்துகின்றனர்.

இதன் அர்த்தம் மணவிலக்கு தவறு என்பதல்ல. அந்த முடிவு முழுக்க முழுக்க நம்முடையதாகவும், அதை நாம் நன்கு ஆராய்ந்து தெளிவான மனநிலையில் எடுத்ததாகவும் இருந்திருக்க வேண்டும்.

இங்கே நாம் முதல் அத்தியாயத்தில் பேசியதை நினைவுகூறலாம். எந்த உணர்வாக இருந்தாலும் சில நிமிடம் நிதானித்து பின் செயலில் இறங்குவது. வினாடி நேர செயல்களுக்கு அது சரி, மணவிலக்கு போன்ற  முக்கிய முடிவில் சில நிமிடம் என்பது, சில நாட்களாகவோ, மாதங்களோ அல்லது வருடங்களோகூட எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.

சரி, இந்தத் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது எனப் பார்க்கலாம். அதற்கு முக்கியமான முதல் படி ‘தன்னை அறிதல்.’

’உன்னை அறிந்தால்’ தலைப்பில், நாம் இதைப் பற்றியும் நிறைய பேசி உள்ளோம். இங்கே நம் உணர்வுகளை அறிந்துகொள்வது பற்றி இன்னும் ஆழமாகப் பேசுவோம்.

பல நேரம் “நான் ஏன் இப்படி இருக்கிறேன்” என்று நம்மை நாமே நொந்துகொள்வோம். நானா இப்படி என்று அதிர்ந்தோ ஆச்சரியமோ பட்டுக்கொள்வோம். ஏனெனில் பல நேரம் நாம் இவ்வளவு நல்லவளா என்கிற சந்தேகம் நமக்கே வரும் அளவிற்கு நடந்துகொள்வோம், சில நேரம், உள்ள தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தைத் தீண்டி எழுப்பி, என்னா வில்லத்தனம் என்று நம்மை பார்த்தே நாம் அதிர்ந்தும் போவோம். அப்படி உங்களுக்குத் தோன்றி இருந்தால் கவலைப்பட ஏதுமில்லை, நீங்கள் தனியாக இல்லை, அனைவருமே அப்படித்தான். சிலர் வெளியில் தெரிவதுபோல் நடப்பார்கள். சிலர் அதை அழகாக மறைத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். சிலருக்கு அவர்களுக்கே வித்தியாசமாக நடந்துகொள்வது புரியாது.

நமது உணர்வுகளைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள ஓர் எளிமையான உத்தி. நாட்குறிப்பு எழுதுவது (journaling). இதில் 4 படிகள் (steps) உள்ளது.

  1. அன்றாடம் நடந்த நிகழ்வுகளில் நம்மை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதித்த ஒன்றைப் பற்றி என்ன நேர்ந்ததோ அப்படியே எழுதுவது.
  2. அந்த நிகழ்வின்போது நமக்கு எந்த விதமான உணர்வு தோன்றியது என்பதை அப்படியே பதிவு செய்வது.
  3. அந்த உணர்வின் விளைவாக நம் உடலில் ஏதும் மாற்றம் நிகழ்ந்ததா என்று பதிவு செய்வது.
  4. அந்த உணர்வு எப்போது, எதனால் மாறியது என்கிற குறிப்பு.

உதாரணமாக…

  1. இன்று நான் அலுவலகம் முடிந்து சோர்வாக வீடு வந்தபோது வீடு முழுக்கப் பொருட்களும், விளையாட்டுச் சாமான்களும் சிதறி இருந்தன.
  2. பொறுப்பில்லாத பிள்ளை, வராத வேலைக்காரர்கள் மேல் எக்கச்சக்க கோபம், சோர்வும் அதிகமானது.
  3. விண்ணென்ற தலைவலி ஒருபக்கம், சோர்வால் வந்த உடல்வலி என சோஃபாவிலேயே சிறிது நேரம் கண்ணயர்ந்தேன்.
  4. சிறிது நேரம் கழித்து எழுந்தபோது தேநீர் கோப்பையுடன் எதிர்கொண்ட கணவர், எனக்கு உடல் நலமில்லையென வீட்டை ஒதுக்க ஆரம்பித்த பிள்ளையைப் பார்த்த உடன் மனதில் இதம் வந்தது. ஓய்வும் தேநீரும் தலைவலியையும் போக்கின.

இது ஒரு சாதரண பயிற்சி போலத் தோன்றலாம், குறைந்தது ஒரு வாரம், பத்து நாள் எழுதி அதை நாம் திரும்பப் படிக்கும் போது, நம்மைப் பற்றியே நிறைய புரிந்துகொள்வோம். அது மட்டுமன்றி அடுத்த அடுத்த பயிற்சிகளுக்கு இந்த நாட்குறிப்புதான் அடிப்படை.

வாங்க தோழிகளே, அறிவு தேடலை நம்மில் இருந்தே ஆரம்பிக்கலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.