இன்று காலை மணி ஏழானவுடனேயே என்ன டிஃபன் செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது இயல்பு போல. பொங்கலும் சாம்பாருமா அல்லது ரவை கிச்சடியா என யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒன்று தோன்றியது எனக்கு, டிஃபன் பொங்கல், கிச்சடி என்பதையெல்லாம் அன்று கேள்வியாவது பட்டிருப்போமா என. சட்டென இன்னொன்றும் உதித்தது, முதலில் காலை உணவுக்கு டிஃபன் என்ற சொல்லையே கேள்விப்பட்டதில்லையே என. ஆம், அப்போது எங்களிடையே காலை உணவுக்கு ‘பசியாறு‘ என்ற அழகான சொல் புழக்கத்தில் இருந்தது.
‘ஒங்கும்மா என்னமும் பசியாற பாத்துத் தந்தாளா இல்லயா?’
‘எங்க வாப்பா! வெகுநேரம் ஆச்சுதே என்னமும் பசியாறுனியா தங்கம்?’
‘எங்கவூட்ல இன்னக்கி பசியாறொ இடியாப்பமும் மாசியாணமுமாக்கும்.’
‘இப்பந்தா பசியாறிட்டு வந்து நிக்கிறம்மா சாயா ஒண்ணும் போட்ற வேணாம்.’
இப்படி பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பசியாறப் பரிமாறிக் கொண்ட காலங்கள் அவை. எங்கள் வாப்புமா, மூமா, அப்பாவெல்லாம் காலையில் டிஃபன் சாப்பிடாமல் பசியாறியதைப்போல, மதியமும் ஆக்கி வடித்த சோற்றை உண்டார்களே அன்றி, சோற்றைச் சாப்பிடவுமில்லை, தின்னவுமில்லை.
‘சோத்தை அள்ளி உண்ணு சுருக்கொ’
‘சோறு உண்ட வாய்க்கி வெத்தலதான் கேக்குது . ரெண்டெட்டு ஓடிப்போயி வேங்கிட்டு வாங்கொ அப்பன்’
‘இன்னா சோறு வடிச்சிட்டாளே. இருந்து ரெண்டு வாய்ச் சோறு உண்டுட்டுப் போவேன். என்ன அவசரம்?’
‘ஏ பிள்ளைலுவோ வெளயாட்டு போதாதா… சோறு உண்ண வாங்களேன்’,
என்று அழைத்த குரலை மனதில் நினைத்துக் கொள்ளும்போதே எங்கள் தலைமுறை, அதற்கு முந்தைய எங்கள் ம்மா வாப்பா தலைமுறையிலும்கூட பசியாறுதலும் உண்ணுதலும் மறைந்து சாப்பாடு, சாப்பிடு என்ற பொதுவான சொற்களுக்கு மாறிவிட்டிருப்பதை நினைக்கிறேன். ஆனால் இன்றுவரை சோறு ‘ரைஸ்’ ஆகிவிடாமல் பழைய சோறு, புளிச்சோறு, எலுமிச்சைச் சோறு, தேங்காய்ச்சோறு, நெய்ச்சோறு என சோறாகவே தொடர்வதிலும் மகிழ்ச்சிதான். அது போலவே தமிழகத்தின் மற்றெல்லா வீடுகளிலும் சோற்றுக்குத் துணையாக மீன் குழம்போ, கறி சால்னாவோ சமைத்து இறக்கப்படும்போது இன்னும் எங்கள் பகுதிகளில்தான் மீன் ஆணமும் கறி ஆணமும் மணத்தோடு கொதிக்கின்றன என நினைக்கிறேன்.
இன்றைய பேரன் பேத்திகள் எல்லாருமே அவரவர் வாப்புமா, மூமாக்களுக்குச் செல்லம்தான். குழந்தைகளை, தங்கக்குட்டி, செல்லக்குட்டி, பூக்குட்டி, அழகுக்குட்டி எனக் கொஞ்சுவார்கள் பலர். தங்கக்கனி, செல்லவாப்பா,
சீதேவி, எங்க அப்பன் என்று கொஞ்சுவார்கள் சிலர்.
ஆனாலும் வெற்றிலை போட்டுச் சிவந்த உதடுகளோடு முத்தமிட்டு, ‘அட என்னப் பெத்தக் கண்ணு! ஏன் ஈரக் கொலையே!’, என எங்க வாப்புமாக்கள் எங்களைக் கொஞ்சிய அந்த மொழியை இன்றுள்ள மூமா, வாப்புமாவிடம் காண முடிவதில்லைதான்.
இஸ்லாமியர்களுக்கு, வாழ்வின் ஒவ்வொரு தேவைக்கும் பொருந்துமாறு அமைந்த பொதுவான துஆக்கள் (இறைவனிடம் இறைஞ்சும் வேண்டுதல்கள்) அரபு மொழியில் உள்ளன. இப்போது முஸ்லிம்கள் பலருக்கும் அரபு மொழியில் மனப்பாடம் செய்து அந்த துஆக்களை ஓதுவது மிக எளிதாக உள்ளது. அன்று எங்கள் வாப்புமா, மூமாக்கள் பலருக்கு அரபியில் மனனம் செய்ய இயன்றதில்லை. அவர்கள் தங்களின் இறைவனிடம் தங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த தங்கள் தாய்மொழியிலேயே வேண்டுதலை வைத்தார்கள். தன்னுடைய பேத்தி குழந்தை உண்டாகியிருக்கும் செய்தியை அறிந்த உடன், “நெறைய விளைஞ்சு சுளுவா பெத்தெடுக்கட்டும்” என்பது அந்த வாப்புமாவின் முதல் வேண்டுதலாக இருக்கும். அடுத்தடுத்து மாதங்கள் செல்கையில், “மடியில சுமந்த கனியை கையில ஏந்த அந்த நாய(க)ன் கிருபை செய்யட்டும்” என வளரும். பின்னும் நிறைமாதம் நெருங்கும்போது “அங்கன நொந்து(வலி ஏற்பட்டு) அங்கன பெத்துரட்டும்”, “வாய்த் தண்ணிக் கொப்புளிச்சாப்ல பிள்ளை வந்துரட்டும் யா ரப்பே” எனத் தொடர்வது, பிறந்த பிள்ளையைக் கனிவுடன் நோக்கி, “பிள்ளைக்கு ஆயுசை நீட்டிச்சிப் போட்டு தாய் தந்தையை வச்சு பலன் பெறக் கிருபை செய் அல்லா” என நிறைவடையும்.
“மண்டு மனை(மன்று மனை) செழிச்சு பெண்டு பிள்ளைலுவளோட சிறப்பா இருப்பா. அல்லா உன் காவல்”.
“மலை போல வந்த ஆபத்தை பனி போல நீக்கு. அல்லா உன்னுடைய அடைக்கலம்” என அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டன கிடக்கைகள்.
எங்கள் வாப்பா முதன் முதலாக துபாய் சென்றபோது, எங்கள் வாப்புமா வாப்பாவின் நெற்றியில் முத்தமிட்டு இருகையேந்தி, “அல்லா யாரப்பு ரஹ்மானே எம் பிள்ளைய சிரிச்ச வாசலோட கூட்டிட்டுப் போயி சிரிச்ச வாசலுக்குக் கொண்டு உடு”, எனக் கேட்ட துஆ என் காதில் ஒலிக்கிறது.
அன்று அந்த ஆறு வயதில், சிரித்த வாசலின் பொருள் எனக்கு விளங்கியிருக்கவில்லை. பிறிதொரு காலம் விளங்கிக்கொண்டபோது, வியந்து நின்றேன்… எத்தனை ஆழமான வேண்டுதல் எத்தனை எளிய சொற்களில் என.
சந்தூக்கில் (இறந்தவரை அடக்கம் செய்வதற்கு வைத்து எடுத்துச்செல்லும் பெட்டி) மீண்டு வாராப் பயணம் செல்லும் தாயை வாசலில் நின்று நீர் மல்கும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருக்கும் மகளிடம் அருகில் நிற்பவர் இப்படிச் சொல்வார், “ஏம்மா அழுவுற பேரமாரு மக்கமாரு தலைமேல ஏறி பொட்டு கணக்கலோ பொட்டில போறா ஒங்க ம்மா. அழுவாத. கண்ணத் தொட” (பொட்டு கணக்கலோ – பொட்டு கணக்காக – பொட்டு போல – கச்சிதமாக,நேர்த்தியாக). வாழ்வின் எல்லா உணர்ச்சிகளின்போதும் வெளிப்படுத்த அழகழகான பதங்களை வைத்திருந்தார்கள் அவர்கள்.
சங்கை என்ற சொல்லுக்கு மதிப்பு எனப் பொருள். இன்றளவும் முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழில் சங்கைக்குரிய ஹிஜ்ரி இத்தனாவது ஆண்டில் எனக் குறிப்பிடும் பழக்கம் உள்ளது. அதேபோல ஆலிம்களும் இமாம்களும் மார்க்க உரை நிகழ்த்தும்போது, ‘சங்கைக்குரிய உலமாக்களே, பெரியோர்களே’ என விளிக்கும் வழமையும் உண்டு. ஆனால் ஊரில் சாதாரண உரையாடலில்கூட சங்கை நுழைந்துவிடுவதுண்டு.
‘கொண்டான் குடுத்தான் வூடுலோ. ஒரு சங்கையா இருக்க வேணாமா? இப்பிடி வீசுன கையும் வெறுங்கையுமா போனா அது சங்கையா?’
‘சபையில எங்களுக்கு சங்கை செய்யாம உட்டுட்டீங்களே. யாருக்கு வந்த விருந்தோன்னு கையக் கட்டிக்கிட்டு நிண்டீங்களே?’, இவை போல பல உரையாடல்களை அன்று கேட்க முடியும்.
ஊரிலும் சரி, வெளியூர்களில் வேறு மாநிலங்களில் வேறு நாடுகளில் வசிப்பவர்களும் சரி, இன்றும் வீட்டில் புழங்கும் மொழி தமிழாகத்தான் இருக்கிறது. ஆனால் அன்றைய மொழிக்கும் இன்றைய மொழிக்கும்தான் எவ்வளவு வேறுபாடு? அன்றாடப் பேச்சினையும் அணி செய்யும் உவமைகள் வந்து விழுந்த வண்ணமாகவே இருந்தன அன்று. அப்படி உவமைகளோடு இன்று யாரும் பேசுவதில்லையே என்று வருந்துவதை விடுங்கள், அவற்றில் பலவற்றுக்குப் பொருளே விளங்காதே இன்றுள்ளவர்களுக்கு!
‘ஏ சீமாட்டி! காப்பிய என்னண்டு கொண்டு வந்திருக்கா! ஆறி ஆழத் தண்ணியாப் போய்க் கெடக்கே!’
‘இப்பத்தான வூட்டுக்குள்ள நொழைஞ்சிருக்க, அதுக்குள்ள கால்ல கஞ்சைக் கவுத்த மாதி போறேன் போறேன்னு பறக்குறியே என்னத்துக்கு?’
‘வூட்ல தைலம் இருந்தா எள்ளுப்போல தாவேன். தல நோவிட்டே இருக்கு’. இவையெல்லாம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவைதான்.
“அவள்ட்ட பேசிட்டுத் தப்பவா?”, “உட்டுட்டுத் தேட மாட்டா” பாத்துக்கோ- தனக்கு உவப்பில்லாத பேச்சைக் கேட்கும்போது சும்மா விட்டுவிடாமல், அங்கேயே அப்போதே எதிர்ப்பைத் தெரிவித்துவிடுபவர்கள்தான் விட்டுவிட்டுத் தேடாதவர்கள்.
“அவன்டப் போய்ச் சொல்லிப் பாரேன். ஒரு நெலைக்கு நிப்பான்”, “ஒங்கும்மா காதுக்கு போச்சுன்னு வையி… நெலயா நிப்பா சொல்லிட்டேன்…” – தான் நினைத்ததே சரியென்று வாதிடுவது ஒரு நிலைக்கு நிற்பது. சில சமயம் திட்டுவதையும் நிலையாய் நிற்பது என்று சொல்வதுண்டு. திட்டுவதையே இன்னும்கூடச் சுவையாகச் சொல்வதுமிருக்கிறது.

“எம்மாடி! ஒங்க வாப்புமாக்காரி திட்டி பொட்டில அள்ளி வச்சிருவாளே?” என்று. பனையோலையில் பின்னப்பட்ட பெரிய கடகப் பெட்டியை கடவாப்பொட்டி, பொட்டி என்றெல்லாம் சொல்வதுண்டு. அரிசி, நெல், உமி, தவிடு போன்றவற்றைப் ‘பொட்டியில்தான்’ அள்ளிக் குவித்து வைப்போம். இப்படிக் குவிந்துவிடும் அளவுக்குத் திட்டினார்கள் என்றால், பிறகு அதைப் பொட்டியில் அள்ளாமல் வேறென்ன செய்வது!
‘ஒம் மனசோட வச்சுக்கோ’ன்னு ஒருத்தரிடம் ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அடுத்த நாளே ஏழெட்டு பேராவது அதைப்பற்றி நம்மிடம் விசாரிக்கிறார்கள் என்று வையுங்கள். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் “அவ வாய்ல அஞ்சரிசி நனயாதே” என்பது! அதாவது ஐந்து அரிசி மணிகள் ஊறி நனைவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்பட்டுவிடும்? அந்த அளவு நேரத்துக்குக்கூட அரிசியை வாயில் ஒதுக்கியபடி வாய்மூடி இருக்க முடியாதவர்கள், ரகசியமாக வைக்கத் தெரியாதவர்கள், ‘வாயில அஞ்சரிசி நனயாதவர்கள்.’
பறை சாற்றுதல் என்றால் பறையை அடித்து(தட்டி) ஊர் மக்களுக்கு செய்தியை அறிவித்தல் என்பதை அறிவோம்தானே. வீட்டில் நடப்பதைப் பற்றி வெளியே அறிந்தவர் தெரிந்தவரிடம் சொல்லி விடும் இயல்பு சிலருக்கு இருக்கும். எங்கள் ஊரில் இப்படி வீட்டில் நடப்பதை வெளியே சொல்பவர்களை ‘தட்டுப்பறைசாத்துபவர்கள்’ (தட்டிப்பறைசாற்றுபவர்கள்) என்ற மிகப் பொருத்தமான சொல்லால் குறிப்பிடுவார்கள்.
“மீனாணத்துல அல்லா பேருக்கும் புளியக் காணமெமா. கொஞ்சம் பாத்து ஆக்கி இறக்குனா என்னண்டு ஒரு சொல்லுதாம்லா சொன்னேன். அத எங்கமாமி நான் ஆக்குறத எல்லாம் கொறகுத்தம் சொல்றான்னு நெடூவொ தட்டுப்பறைசாத்திக்கிட்டு அலயிறாளே இவொ “. விளக்கம் தேவையில்லாமலே யார் யாரைப்பற்றி சொல்லியிருக்கக்கூடுமென தெரிந்திருக்குமே!
சிலபேர் தன் வீடென்று அடங்கி இராமல் சதா அங்குமிங்கும் சுற்றும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் ஒரு இடத்தில் ஒரு வேலை எனப் பார்த்துக்கொண்டு இருக்காமல் இங்கொரு கை, அங்கொரு கை என்றிருப்பார்கள். அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதானால் “அவனுக்கு ஒரு எடத்துல சப்பரம் பதியாதே” என ஒரே வரியில் சொல்லி முடித்து விடுவார்கள் ஊரில். சப்பரம் என்றால் சாமி சிலைகளை வைத்து இழுத்துச் செல்லும் தேர். திருவிழாக்களைத் தவிர மற்ற நாட்களில் சப்பரத்தை அங்குமிங்குமாக நகர்த்திக் கொண்டிருக்க இயலாது. அது ஒரே இடத்தில்தான் பதிந்து நிற்கும்.

அது போலப் பதிந்திருக்கும் இயல்பில்லாதவர்கள், எப்போதும் பரபரவென அலைந்து கொண்டிருப்பவர்கள் “சப்பரம் பதியாதவர்கள்”.
இஸ்லாமியர்களின், சுப்ஹு லுஹர் அஸர் மஃரிப் இஷா என்ற ஒரு நாளின் ஐந்து தொழுகைகளும் முறையே அதிகாலை, மதியம், பிற்பகல், பொழுதடைந்த மாலை, இரவு என்ற ஐந்து வேளைகளில் தொழப்படுபவை. பள்ளிவாசல்களிலிருந்து ஐவேளைத் தொழுகைக்கும் அழைப்பதை பாங்கு சொல்வது என்போம். அன்று பாங்கு சொல்வதற்கு முன் ‘நகரா’ எனும் வாத்தியத்தை முழக்கி ஒலி எழுப்புவார்கள். பேச்சு வழக்கில் அதை நகரா அடிப்பது என்போம். ஐந்து வேளைகளிலும் நகரா அடிப்பதை அடிப்படையாக வைத்து வேலைகளையும் நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டுக் கொள்வது அப்போது வழக்கமாகியிருந்தது.
‘சுப்வுக்கு அடிக்க முன்னயே எந்திச்சி அரிசிய ஊறப் போட்டு வச்சிருக்கேன். மாவிடிக்கிறவள இன்னும் காணமே?’
‘மெய்ம்பாத்து பேத்தி பிள்ள பெத்திருக்காளே அஸர்க்கு அடிச்சாப்ல போய்ப் பாத்துட்டு வருவோம் வாவேன்.’
‘அங்குட்டும் இல்லாம இங்குட்டும் இல்லாம பொழுவுற நேரமா போவா? செத்த நேரம் இரி. மவ்ரிபுக்கு அடிச்ச பொறவு பிள்ளயக் கூப்ட்டுப் போ (பொழுவுற – பொழுது சாய்கிற).
இதேபோல, பாங்கு சொல்வதோடு தொடர்புடைய இன்னொரு வழக்கும் ஊரில் உண்டு. “அவன்ட போயிச் சொன்னியாக்கும் நீ. அல்லாஹு அக்பர்ன்னப் பொறவுலோ வந்து சேருவான்”. அதாவது ஒரு தொழுகை வேளையில் செய்யச் சொன்ன வேலையை அடுத்த தொழுகை வேளைக்கு, ‘அல்லாஹு அக்பர்’ என பாங்கு சொல்லும்வரை தொடங்க மாட்டான் அல்லது செய்து முடிக்க மாட்டான் என்பது பொருள். செய்யுள்களை அழகாக்குபவை அவற்றில் பயின்று வரும் அணிகள் என்பதைப் படித்திருக்கிறோம். அந்தந்தப் பொருளில் அந்தந்த சொல் எனத் அதங்கள் பேச்சுக்கு விதவிதமான அலங்காரங்களைச் சூடியதோடு தங்கள் பண்பாட்டையும் பேச்சோடு பேச்சாக இணைத்துக் கொண்டனர் அன்று. ரசனை மிகுந்தவர்கள்!
மஃரிபு பாங்கு என்றதும் அன்று ஊரில் இருந்த இன்னொரு வழமை நினைவு வருகிறது. இஸ்லாமிய முறைப்படி மாலை பிறை உதித்தவுடனேயே அடுத்த நாள் தொடங்கிவிடுகிறது. எப்படி எனில் இன்று வியாழக்கிழமை மாலை ஆறு,ஆறரை மணிபோல ஆனதும் வெள்ளிக்கிழமை தொடங்கிவிடுகிறது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குரிய நாளாதலால் மற்ற நாள்களைவிட சிறப்பானதாகக் கருதப்படும். இப்படி வெள்ளிக்கிழமை இரவுகள் தோறும் வீடுகளில் பத்தி கொளுத்தி வைப்பதும் முனாஜாத்துகளைப் பாடுவதும் மரபாக இருந்தது. முனாஜாத்துகள் என்பவை தமிழ் முஸ்லிம்களின் இலக்கிய மரபில் குறிப்பிடத் தகுந்த செய்யுள் வகையைச் சார்ந்தவை. தமிழும் அரபும் கலந்த மொழியில் இறைவனை, முகமது நபி (ஸல்) அவர்களை, அவர்களின் மகள் ஃபாத்திமா நாயகியை, இறைநேசர்கள் சிலரைப் புகழ்ந்து தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்த முஸ்லிம் புலவர்களால் இயற்றப்பட்ட பாக்கள். இவற்றுள் ஃபாத்திமா நாயகியைப் புகழ்ந்து பாடப்பட்ட முனாஜாத்துகளை வெள்ளி இரவுகளில் மஃரிபு தொழுகைக்குப்பின் பெண்கள் அவரவர் வீடுகளிலிருந்து பாடுவார்கள்.
பாவையர் திலகமதான பைங்கிளி ஃபாத்திமத்தைப் புகழ்ந்தே துதிப்போம்நற்றிரு மேனியர் நல்கதீஜா
புத்திரி ஃபாத்திமத்தைப் புகழ்வோம்
ஆதிஅலி புலியின் மனைவியர் அன்பான ஃபாத்திமத்தைப் புகழ்வோம்காடுமலை கடல் கானகங்களில்
தேடும்பொருள் உமைப் போலேகாணோம் – இப்படி ஈரடிகளில் அமைந்தவையும் உண்டு.
அருவாய் ஆலம் அடங்கலுக்கும் அரிய பொருளாய் விளங்கி நிற்கும்
திருவாய் அணையாப் பேரொளியாய்த் திகழ்ந்து நாளும் பராபரிக்கும்
கருவாய்க் கருவின் உள்மணியாய்க் காட்சியருளும் ரஹ்மானே
உருவாய்த் துலங்கும் மன்னானே
உனது கிருபை அருள்வாயே. – இது நான்கடிகளில் அமைந்து இறைவனைத் துதித்து இயற்றப்பட்ட ஹக்கு பேரில் முனாஜாத். ஹக், அதாவது, சத்தியம் என்பது அல்லாஹ்வின் 99 திருப்பெயர்களுள் ஒன்றாகும்.
இந்தப் பாடல்களெல்லாம் கிழமைதோறும் பாடிப்பாடி பெரும்பாலும் மனனமாகியிருக்கும் பெண்களுக்கு. இவற்றையே குழந்தைகளுக்குத் தாலாட்டாகவும் பாடித் தூங்க வைப்பார்கள் மூமாவும் வாப்புமாவும். தொட்டிலில் இட்டுத் தாலாட்டித் துயில் கொள்ளச் செய்வது ஒரு வகை. இன்னொரு வகையிலும் குழந்தையைத் தூங்க வைப்பதுண்டு.
தரையில் இருகால்களையும் நீட்டி அமர்ந்து பாதங்களின்மேல் தலையணையை இட்டு குழந்தையைக் கால்களில் தங்கள் முகத்தை நோக்குமாறு போட்டுக் கொள்வார்கள். கால்களைப் பக்கவாட்டில் தொடர்ச்சியாக அசைத்துக் கொண்டிருந்தால் குழந்தை மூமாவைப் பார்த்துக்கொண்டே தாலாட்டையும் கேட்டுக்கொண்டு சுகமாகத் தூங்கும். இப்ப என்ன தூக்கம் என்று அதற்குத் தோன்றிவிட்டாலோ கிளி போன்ற சொண்டைக் கூட்டிக்கொண்டு மூமாவோடு உரையாடத் தொடங்கிவிடும். பிறகென்ன! அந்த மூமாவும் தன் வேண்டுதல்களை எல்லாம் குழந்தையின் சொல்லாக்கி குழந்தையோடும் இறைவனோடும் உரையாடுவாள்…
ஆயுசை நீளமாக்கு அல்லா
நோயை ஹராமாக்கு
இரணம் தா வல்லவனே
எங்க வாப்பாக்கு ரிஸ்கை விஸ்தீரணமாக்கு
எங்க மாமாக்கு நல்ல வேலை கிடைக்கட்டும்
எங்க சாச்சிமாக்கு நல்ல சாச்சாவைத் தா
எங்க கண்ணப்பாக்கு கோபத்தைப் போக்கி பொறுமையக் குடு….
நோயை ஹராமாக்கு என்றால் நோயை விலக்கப்பட்டதாக்கு என இறைவனிடம் வேண்டுவது. இரணம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு உணவு என்ற பொருளும் உண்டு. ஆணம் என்ற பழந்தமிழ்ச் சொல்லைப் போலவே இதுவும் தமிழ் முஸ்லிம்களிடையே மட்டும் புழங்கும் அரிதான சொல்.
ரிஸ்க் என்ற அரபுச் சொல்லுக்கு உணவு உடை இல்லம் பொருள் அனைத்தும் அடங்கிய வாழ்வாதாரம் எனப் பொருள் கொள்ளலாம். சாச்சிமா என்பவள் மூமாவின் இளைய மகள் அதாவது குழந்தையின் சித்தி. கடைசியில் சொன்ன குழந்தையின் கண்ணப்பாதான் மூமாவின் கணவர் என்பது நமக்குத் தெரியும்தானே!
அறையைச் சுத்தம் செய்ய வேண்டும், படுக்கை விரிப்புகள் மாற்ற வேண்டும், அலமாரியில் துணிகளை அடுக்க வேண்டும் என்று அடுக்கடுக்காக வேலைகளைத் திட்டமிட்டுக் கொண்டு அறையில் நுழைவோம். அறையின் ஷெல்ஃபில் வைத்திருக்கும் ஏதோ ஒரு பழைய ஆல்பம் கையில் கிடைக்கும். அவ்வளவுதான்! அவ்வளவேதான்! இனி திட்டமிட்டிருந்த வேலைகளை அந்தரத்தில் விட்டுவிட்டு ஆல்பத்தைப் புரட்டுவதும் அடுத்ததைத் தேடி எடுப்பதுமாக நினைவுகளில் மூழ்கிவிடுவோமில்லையா. அதுமாதிரி காலைப் பசியாறுதலில் கைப்பற்றி இழுத்த ஊர் மூமாவின் மடிமீது சுகமான தாலாட்டைக் கேளென இறக்கிவிட்டிருக்கிறது என்னை…
படைப்பாளர்
ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.
அற்புதமான பதிவு.