வடுகபட்டி பூண்டுச் சந்தை
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… அக்கா, காரம் தலைக்கு ஏறுது” கண்களில் நீர் திரண்டு நிற்க, கையிலிருந்த பூண்டை என் கைக்கு மாற்றுகிறாள் தோழி ஆனந்தி. நானும் மல்லிகா அக்காவும் அசட்டையாக, ஆளுக்கொரு பூண்டை கடித்ததும் நாவைத்தாண்டி மூளை வரை நெடி பரவ, பேந்தப் பேந்த ஆனந்தியின் அதே ரியாக்ஷனை காப்பி & பேஸ்ட் செய்தோம்.
“அக்கா, இந்த மாதிரிப்பூண்டு நீங்க எங்க போனாலும் கெடைக்காது, ஒரு வருசமானாலும் கெடாது, நம்பி வாங்கிட்டுப்போங்க” என்ற கடைக்காரர், எங்களைத் தவிர்த்து அடுத்த போணியில் பிசியாகிவிட்டார். சுற்றிலும் ஐம்பது, அறுபது பூண்டுக்கடைகள் இருக்கும். ஒவ்வொரு கடையிலும் கூட்டம் நெட்டித் தள்ளிக்கொண்டிருந்தது. மல்லிகா அக்கா பக்கத்துக் கடையில் ‘ஒருப்பூடு’ வாங்க நகர்ந்து விட்டார். நாவில் படர்ந்த காரத்தின் சுவை அப்படியே நிற்க, கலங்கிய கண்களுடன்(!) நானும் ஆனந்தியும் ஆளுக்கு இரண்டு கிலோ ‘மலைப்பூடு’ வாங்கிக் கொண்டு, வண்டிக்குத் திரும்பினோம்.

கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது ‘குழந்தை வேலப்பர் கோயில்’. பொதுவாக எந்தக் கோவிலைச்சுற்றியும் கோயில் சார்ந்த கடைகளும் குழந்தைகளுக்கான கடைகளும் உணவுக்கடைகளும் பார்த்திருப்போம். ஆனால் இங்கு மட்டுமே வித்தியாசமாய், விநோதமாய் கோவிலைச்சுற்றிலும் பூண்டுக்கடைகள்; அதுவும் ஒன்றிரண்டல்ல, நூற்றுக்கணக்கில். மூட்டை மூட்டையாக தெருவெங்கும் குவிந்து கிடக்கின்றன வெவ்வேறு ரக மலைப்பூண்டு. செப்டம்பர் மாதத்தில் சென்றால், கோவிலுக்குச் சற்றுத்தள்ளி பூண்டு அறுவடையைப் பார்க்கும் வாய்ப்பும் அறுவடையான பூண்டு மூட்டைகளைச் சுமந்து கொண்டு வரும் குதிரைகளையும் பார்க்கமுடியும்.
தேனி பண்பாடு, வரலாறு, வாழ்வியல் கட்டுரையில் எங்கிருந்து கொடைக்கானலும் பூம்பாறையும் வந்தது என்ற குழப்பம் வேண்டாம், இருக்கு… தொடர்பு இருக்கு..! இது திண்டுக்கல் மாவட்டத்தின் பூம்பாறைக்கும் தேனி மாவட்டத்தின் வடுகபட்டிக்குமான தொடர்பு. வாங்க அப்படியே பூண்டுப் பையோடு மலையிலிருந்து கீழிறங்கி தேனிக்குப் போகலாம்.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வடுகபட்டி. ஊருக்குள் நுழையும்போதே Amaryllidaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த Allium Sativum என்ற தாவரப் பெயர் கொண்ட பூண்டின் மணம் காற்றில் கலந்து வாசத்தை அள்ளி வீசி நம்மை வரவேற்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பூண்டுச் சந்தை, பூண்டிற்கு மட்டுமேயான சந்தை இங்குதான் இருக்கிறது. பொதுவாக உள்ளூரில் விளையும் பொருள்களுக்கு அதே ஊரில் சந்தை கூடுவது இயல்பு. ஆனால் கடல்மட்டத்திலிருந்து 1200 முதல் 2000 மீட்டர் உயர இடங்களில் சாகுபடி செய்யப்படும் பூண்டிற்கான சந்தை சமவெளிப்பகுதியான இங்கு எப்படி? அதுவும் தமிழ்நாட்டில் பூண்டு கொள்முதல் மற்றும் மொத்த விற்பனைக்கு எனப் பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்ட முதல் சந்தை! காரணத்தை அலசி ஆராயாமல் விட்டுவிடுவோமா என்ன?
பூண்டின் தாயகம் ஐரோப்பாவும், மத்திய ஆசியாவும் என்கின்றன தரவுகள். இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் பூண்டு விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொடைக்கானலின் மேல் மலைக்கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், வில்பட்டி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக இது ‘பூம்பாறைப் பூண்டு’ என பேச்சுவழக்கில் அழைக்கப்படுகின்றது.

பூம்பாறையில் முதன்முதலாக பூண்டு பயிரிடத் தொடங்கிய ஆண்டு பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும், 1834ஆம் ஆண்டு வெளியான The Madras Journal of Literature and science இதழில் வெள்ளைப்பூண்டு நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயிரிடப்பட்டதற்கான சான்று கிடைத்துள்ளது.
இந்தியாவில் விளையும் 734 வகையான பூண்டுகளில் முதன்மையானது கொடைக்கானல் மலைப்பூண்டு. ஆரம்ப காலத்தில் மலைப்பகுதியில் விளைவித்த பூண்டை இருப்பு வைக்க குளிர்சாதன கிட்டங்கி வசதியும் சந்தைப்படுத்தும் வசதியும் மலைப்பகுதியில் இல்லை. மேலும் அதிக அளவில் விளைந்த பூண்டை வாங்கும் அளவிற்கு மக்கள் தொகையும் இல்லை. அதனால் கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள ஊர்களுக்குத் திருவிழாக்களின்போது மலையிலிருந்து வரும் விவசாயிகள், தாங்கள் விளைவித்த பூண்டுகளை இங்கு வாழ்ந்த மக்களிடம் கொடுத்து வெற்றிலை, அரிசி, தேங்காய், பருப்பு போன்ற தங்களுக்குத் தேவையானப் பொருள்களை பண்டபமாற்று முறைப்படி மாற்றி வாங்கிச் சென்றுள்ளனர். பல ஊர்களிலும் இந்த முறை பல்லாண்டுகளாகத் தொடர்ந்திருக்கவேண்டும்.

விதைப்பு முதல் அறுவடை வரை பூண்டு விவசாயத்துக்குக் குளிர்ந்த பருவநிலையும் அறுவடைக்குப் பின்னர் வெப்பமும் தேவை. ஏனெனில் குளிர் இருந்தால் அறுவடை செய்த பூண்டு கெட்டு விடும். எனவே, பூண்டிற்குச் சாதகமான பருவநிலை வடுகபட்டியில் இருந்ததால் மலையில் விளைந்த பூண்டுகளை வடுகபட்டிக்குக் கொண்டு வந்தனர். அங்கு உலர்த்தி, புடைத்துக் கழிவுகளை நீக்கி வியாபாரிகள் விற்பனை செய்யத் தொடங்கினர். வியாபாரம் பெருகப்பெருக அங்கு பூண்டிற்கான சந்தை உருவாகியது. காலப்போக்கில் வட மாநிலமான மத்திய பிரதேசத்தின் பூண்டும் வடுகபட்டி வரத்தொடங்கியது. சந்தை அமைப்பால் பலனடைந்த வியாபாரிகள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்குச் சென்று பூண்டுகளை கொள்முதல் செய்யத் தொடங்கினர். இவ்வாறு மிகச்சிறிய அளவில் யதேச்சையாகத் தோன்றிய வணிகம், இன்று ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.
100 ஆண்டுகளுக்கும் மேலாக வடுகபட்டி பஜார் சாலையில் இயங்கி வந்த பூண்டுச்சந்தை, கடந்த சில ஆண்டுகளாக நான்கு வழிச்சாலையை ஒட்டிய பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் 120 கடைகளுடன் இயங்கி வருகிறது. அனைத்து நாட்களிலும் திறந்திருந்தாலும், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 முதல் 12 மணி வரை ஏலம் விடப்படும் நேரத்தில் எள் போட இடமில்லாமல் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து ரகம் ரகமாய் பூண்டு வடுகபட்டிக்கு வந்து குவிந்தாலும், கொடைக்கானல் பகுதியில் விளையும் மலைப்பூண்டுதான் மார்க்கெட் விலையைத் தீர்மானிக்கிறது.

மற்ற மாநில பூண்டு வெள்ளை நிறத்திலும், நம்மூர் மலைப் பூண்டு பழுப்பு நிறத்தில் மண் வாசத்தோடு இருக்கின்றன. நாம் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்தும் பெரிய பெரிய பற்கள் கொண்ட பூண்டு சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. பூம்பாறை மலைப்பூடுகள் அளவில் மிகச்சிறிய பற்கள் கொண்டவை. இவைகள் கொடைக்கானல் பகுதியில் ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டுக்கு 2256 டன் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கரில் 3500 கிலோ பூண்டு கிடைக்கும் என்கிறார் விவசாயி ஒருவர். பயிரிட்ட 120 நாட்களில் அறுவடை செய்து விடலாம். காரத்தன்மையும், மருத்துவத்தன்மையும் கொண்ட இந்த வகைப்பூண்டில் ஆண்டி ஆக்ஸிடண்ட், நுண்ணுயிர் எதிர்ப்பு, கரிம கந்தக கலவைகள் பீனால்கள், பிளாவனாய்டுகள் இருப்பதால் பூம்பாறை பூண்டிற்கு அத்தனை மவுசு!
பூண்டுச் செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு. எந்தப் பூண்டையும் வேரோடு சேர்ந்து (ஜடையோடு சேர்த்து என்று சொல்கிறார்கள்) வாங்கி வைத்துக் கொண்டால் ஒரு வருடம் வரை முளை வருவதில்லை. ஏனெனில் முளைவிடும் பூண்டில் இருக்கும் கசப்புத்தன்மை சமையலுக்கு ஆகாது என்று அறிவுறுத்துகிறார்கள் அனுபவஸ்தர்கள். இப்பூண்டு வகைகளின் பாரம்பரியமும் மருத்துவகுணமும் மத்திய அரசின் ‘புவிசார் குறியீட்டால்’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீட்டின்படி இது ‘கொடைக்கானல் மலைப்பூண்டு’ என்று குறிப்பிடப்படுகிறது.
“பூண்டு எப்படி செடியில் வளரும்?” என்ற என் தீராத சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார் கொடைக்கானல் ஏரிக்கரையில் பூண்டு வியாபாரம் செய்து கொண்டிருக்கும் அண்ணன் ஒருவர். பூண்டு நமது வெங்காயச் செடியைப் போலத்தான் மண்ணுக்கு அடியில் வேரில் காய்க்கும் தாவரம். ஒரு பூண்டுத்தலை (bulb) பல பற்களாகப் பிரிக்கப்பட்டு விதைக்கப்படும். அதாவது பூண்டிலுள்ள ஒவ்வொரு பல்லும் தனித்தனிச் செடியாக வளரும். ஆனால், ஒரு செடிக்கு ஒரு பூண்டு மட்டுமே விளையும். சில வகை பூண்டுச்செடியில் ஊதா நிறத்தில் பூ பூக்கும். பூண்டுச்செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிட்டால், அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். அந்த சமயத்தில் மண்ணை மெதுவாக அகற்றி பூண்டுக் கிழங்கை வெளியே எடுப்பார்கள். அறுவடை செய்த பூண்டை உடனடியாக பயன்படுத்த முடியாது. ஏழு நாட்கள் வரை நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு காயவைத்த பூண்டை 30 கிலோ, 50 கிலோ மூடைகளாகக் கட்டி லாரியில் ஏற்றி வடுகபட்டி சந்தைக்கு அனுப்பிவிடுவார்கள் என்கிறார் மூச்சுவிடாமல். சந்தைக்குச் செல்வதற்கு முன் இங்கேயும் ஒருமுறை பூண்டை கசடு நீக்கி, பெரியது, சிறியது என பிரிக்கின்றனர்.
கொழுப்புச்சத்து, நார்ப்பொருள், புரதம், சுண்ணாம்புச் சத்து, நிக்லோனிடிக், ஆசிட் ரைபோபிளேவி, பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், வைட்டமின் ஏ, சி, இ மக்னீசியம், மாங்கனீசு, சல்பர், காப்பர், செலினியம், என நீண்டு கொண்டேயிருக்கும் மலைப்பூண்டின் மருத்துவ குணங்களின் காரணமாகவோ என்னவோ, கொரோனாவிற்குப் பிறகு வெள்ளைப்பூண்டின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்துள்ளது என்கின்றனர் வியாபாரிகள். எல்லா விளைபொருள்களைப் போலவே பூண்டின் விலையும் உச்சத்தை தொட்டு லாபத்தை அள்ளித் தருவதும் உண்டு, அதலபாதாளத்தில் விலை குறைந்து பெரும் இழப்பை ஏற்படுத்தி விடுவதும் உண்டு என்பதுதான் அவர்களின் கவலை.
இந்தியாவின் மூன்றாவது பெரிய பூண்டுச்சந்தை, தமிழ்நாட்டின் முதல் பெரிய பூண்டுச்சந்தை என்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வடுகபட்டி பூண்டுச்சந்தை உருவாகக் காரணமானவை, ஆழமான வரலாற்று வேர்களும் பாரம்பரியமும் கொண்ட பூம்பாறை மலைப்பூண்டுகளே. தான் விளைந்த மண் விலகி, பிறிதொரு இடத்தில் நிலைகொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் பூம்பாறை மலைப்பூண்டுகளின் வாசம் தினந்தோறும் என் வீட்டுச் சமையலில்!
Source : The Madras Journal of Literature and Science – Published by the Madras Literary Society.
தொடரும்…
படைப்பாளர்
ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.





