வானளாவிய வணிக கான்க்ரீட் காடுகளுக்கடியில்

மூச்சடைக்க கிடக்கிறாள் எங்கள் பூமித்தாய்

இது வல்லரசின் கதை அல்ல;

அதன் விளிம்பிற்கு விரட்டப்பட்ட

எங்கள் இரத்தத்தின் கதை!

இன்னும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்

கேட்பதற்குத்தான் காதுகளில்லை…

இதுவொரு காதற்ற குரலின் கதறல். கதறல் என்றால் உரத்த குரலில்தானே இருக்கும். யாருக்காவது கொஞ்சமாவது கேட்கத்தானே செய்யும்? ஏன் யாருக்கும் கேட்கவில்லை? ஏன் காதற்ற குரலானது? ஐரோப்பியரின் மண்ணாசையும், பொன்னாசையும்தான் (கனிம வளம் இன்னபிற) காரணம் என ஒற்றை வரியில் கூறலாம். 

ஏன் கேட்கவில்லை என்பதைத் தாண்டி, எங்கிருந்து அக்குரல் வருகிறது? ஏன் வருகிறது ? இதோ அதற்கான விடையைக் காண அமெரிக்க வரலாற்றை சிறிது புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த வரலாறு நாம் அனைவரும் அறிந்த அமெரிக்க வரலாறு அல்ல. கருப்பு மையால் மறைக்கப்பட்ட பக்கங்களை புரட்ட வேண்டியுள்ளது. இல்லை… இல்லை கருஞ்சிவப்பு மையினால் மறைக்கப்பட்டவை. கருஞ்சிவப்பா? ஆம்…செங்குருதி ஆற்றின் அடியாழ படிமங்கள் வலியாலும் இழப்பின் கொதிப்பாலும் காய்ப்புத் தட்டி கருஞ்சிவப்பாக இருக்கத்தானே செய்யும்? 

கடந்த வாரம் ஜூலை 4,(2026) அமெரிக்க வான எல்லைகளின் வர்ணஜால வான வேடிக்கைகள் உலகத்தின் மொத்த கவனத்தையும் கவர்ந்தது. உலகத்தின் வல்லரசாக தன்னை வரித்துக் கொண்ட அமெரிக்கா, தனது 250 ஆவது சுதந்திர தினத்தை வெகு கோலாகலமாக கொண்டாடியது. ஆம்… அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் பிலடெல்பியா நகரில் எழுதப்பட்டு 250 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரவாரம் இன்னும் அடங்கவில்லை. வலுத்து ஒலித்துக் கொண்டிருக்கும் வெடி சத்தத்திற்கும் வானளாவிய கொடி அசைப்புகளுக்கும் இடையில் வல்லரசின் விளிம்பிலிருந்து ஒலிக்கும் ஈனக்குரல் யார் காதிலும் விழாமல் இருப்பதில் நியாயமுண்டு. 

அந்த வரலாற்று சிறப்புமிக்க அந்த சுதந்திர பிரகடனம் எழுதப்படுவதற்கு முன்பிருந்தே ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரல் அமுக்கப்பட்டுக் கிடக்கிறது. அதுதான் இந்த நிலத்தின் உண்மையான மைந்தர்களின் குரல்.

ஐரோப்பியக் குடியேற்றவாதிகள் இந்த மண்ணிற்குள் நுழைந்தபோது, அவர்கள் கொண்டுவந்த துப்பாக்கிகளும், நோய்களும், பேராசையும் பூர்வகுடிகளின் வாழ்வைச் சிதைத்தன. தங்களின் பரந்து விரிந்த தாய்மண்ணிலிருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டனர். சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் கொண்டாடும் இந்த வல்லரசின் அடித்தளம், பூர்வகுடிகளின் செங்குருதியாலும் கண்ணீராலும் ஆனது என்பதை வரலாறு சற்றே வசதியாக மறந்துவிட்டது.

அந்த விளிம்பின் குரல் ஒடுக்கப்பட்டது. அடக்கப்பட்டது. ஒடுக்கி ஒடுக்கி ஓரிடத்தில் அடக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் அடக்கப்பட்டது. நில ஒதுக்கீடு (ரிசர்வேஷன்) என்ற பெயரில் வல்லரசால் வரையப்பட்ட குறுகிய வட்டத்திற்கும் ஒடுக்கப்பட்டது. 

ஐரோப்பியக் குடியிருப்புகள் அட்டைகளாலும், கட்டைகளாலும் கட்டப்பட்டன. காலனிகள் என்றழைக்கப்பட்டன. அதன் அஸ்திவாரங்களில், உலகம் கேட்டிராத மொழிகளின் ஒப்பாரிகள் இன்றும் ஓயவில்லை. வஞ்சகத்தால் வணிகம் வளர்ந்தது. கான்க்ரீட் காடுகள் கிளைத்தன. அதன் கட்டுமான கம்பிகளுக்கு இடையில் மண்ணாகிப் போன சதைத் துணுக்குகளும், எலும்புத் துகள்களும் சீறிப் பாயமுடியுமா? 

காலாதீதத்தின் கசிவாக காற்றில் கலந்த குரலைக் கேட்கும் திறன் கான்கீரீட்வாசிகளுக்கு ஏது? கதறும் அக்குரல்கள் கேட்பதற்கு நாதியற்ற குரல்கள்… அவை காதற்ற குரல்கள். 

கிறிஸ்டஃபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய கடலோடியின் கப்பற் பயணங்கள் 1492ஆம் ஆண்டில் தொடங்கின. அவை அமெரிக்கக் கண்டங்களுக்கு புதிய கரைகளை தந்தன. ஆனால் அவை கறை படிந்ததாய் இருந்தன என்பதுதான் தாங்க முடியாத துயரமாகும். அதுவும் ரத்தக்கறையும், நிண நாற்றமும் நிரம்பியது என்பது வரலாற்றின் பெருவலி படலமாகும். ஸ்பெயின் நாட்டிற்கு அந்நிய மண்ணின் மேலிருந்த பேராசையும், இந்தியாவை அடையும் கடல்வழித் தேடலும் கொலம்பஸ் கப்பலேற காரணமாயின. அதற்காக ஸ்பெயின் அரசி இஸபெல்லா அளித்த நிதியுதவி உடன் துணையானது. கொலம்பஸ் இந்தியாவை நோக்கிய கடல் பயணத்தை தொடங்கினார். 

கடுமையான கப்பல் பயணத்திற்கு பிறகு கண்ணுக்கெட்டும் தொலைவில் கரையைக் கண்டார். தரையிறங்க ஆணைப் பிறப்பித்தார். அந்த இடம் இந்தியா என்று எண்ணினார். ஆனால் அது அட்லாண்டிக் கடலில் உள்ள மேற்கிந்திய தீவுக்கூட்டங்களில் ஒன்று. அதை இந்தியா என்று அவர் நினைத்துக் கொண்டதும், இங்கிருந்த மக்களை ‘இந்தியர்கள்’ (Red Indians) என்று அழைத்ததும் ஒரு வரலாற்றுப் பிழையாகும்.

கொலம்பஸின் முதல் வருகை பஹாமாஸ் தீவுக்கூட்டத்தில் நிகழ்ந்தாலும், இந்த நிகழ்வே பிற்காலத்தில் அமெரிக்க கண்டம் முழுவதும் பரவிய ஐரோப்பியர்களின் வருகைக்கும், ஆதிக்கத்திற்கும் ஒரு ஊக்கியாக அமைந்தது. இதுவே இன்றைய அமெரிக்காவின் நிலப்பரப்பையும், பூர்வீக மக்களின் சமூகங்களையும் முற்றிலுமாக மாற்றியமைத்தது.

அவர் அங்கு கண்ட மக்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே இந்த மண்ணில் தங்களுக்கான பிரத்யேக மொழிகள், கலாச்சாரங்கள், தனித்துவமான எல்லைகளுடன் ஐநூறுக்கும் மேற்பட்ட சுதந்திர நாடுகள்/பழங்குடி கூட்டமைப்புகள் வாழ்ந்து வந்தன என்பது பேருண்மையாகும். 

அமெரிக்க பூர்வகுடி இனங்கள், ‘இயற்கையே இறை சக்தி’ என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தன. அவர்கள் மரங்கள், விலங்குகள், பறவைகள், நதிகள் அனைத்தும் உயிர்ப்புமிக்கவை என்ற கண்ணோட்டம் கொண்டிருந்தனர். இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானவை, தனிப்பட்ட மனிதருக்கோ, குழுவிற்கோ உடைமைப் பொருள் அல்ல என்ற பொதுநோக்கு அவர்களின் வாழ்வியலாக இருந்தது. 

அவ்வாறே, ‘ நிலம்’ என்பது ஆக்கிரமிக்கப்படும், பிறகு ஒரு வணிகப் பொருள்போல விற்கப்படும் என்பதை அறியாதவர்கள் அந்த வெள்ளந்தி மாந்தர்கள். பூமித்தாயின் உடலின் மீது கோடுகளைக் கீறி எல்லை கட்டி நிலவுடைமை உரிமை கொண்டாடும் குறுகிய மனப்பான்மையைப் பற்றி அறியாமல் இருந்தார்கள். அதுவே அம்மக்கள் வாழ்வாதாரமான நிலம் முதல் அனைத்து வளங்களையும் இழந்து, மண்ணோடு மண்ணாகிப்போகக் காரணமானது என்றால், அது நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். 

தென் மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் வீரமும் விவேகமும் ஒருங்கே பெற்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருந்த பூர்வகுடிகள் கொத்துக்கொத்தாக மறைந்த மாயம் என்ன? 

பெரும்பான்மையோர், ஐரோப்பிய காலனியர் செய்த நில ஆக்கிரமிப்பால் உண்டான ஓயாத போர்ச்சூழல், இடப்பெயர்வுகள், (எண்ணிப் பார்க்க முடியாத தொலைதூர இடங்களுக்கு, மிகக்கடுமையான பனிப்பொழிவுகள் போன்ற காலநிலைகளில் செய்யப்பட்ட வலுக்கட்டாய இடமாற்றம்) மடிந்தனர். இத்துடன் ஐரோப்பியர்களுடன் பயணசீட்டு இல்லாமல் இலவசமாக இறக்குமதியான அம்மை போன்ற தோற்று நோய்களும் இறப்பு விகிதம் கூட பெருங்காரணமாகின. முக்கிய உணவுப் பொருளான காட்டெருமைபோன்ற வேட்டை விலங்குகளை அழித்ததும் வரலாற்றின் வன்கொடுமைப் பக்கங்கள். 

எஞ்சியிருந்த சிறுபான்மையினர் மதமாற்ற கெடுபிடிகளாலும் கலாச்சார குளறுபடிகளாலும் அரசியல் உடன்படிக்கை என்ற கபட நாடகங்களாலும் முடக்கப்பட்டு பரந்து விரிந்த இப்பரப்பில் கட்டுக்கடங்காத காட்டெருமைகளாக (பைசன்) திமிறிக் கொண்டிருந்தவர்கள் மூலை முடுக்குகளில் நில ஒதுக்கீடு (ரிசர்வேஷன் பகுதி) என்ற பெயரில் பாலைவனத்துப் பாறையிடுக்குப் பல்லிகளாகிப் போயினர். 

விவசாயத்திலும், ஆட்சியமைப்பு மற்றும் நிர்வாகத் திறமையிலும் பல்வேறு மைல்கல்களைக் அடைந்து, வந்தாரை வாழ்விக்கும் நல்ல பண்பாளர்கள் தடமன்றி அழிக்கப்பட்டனர் என்பது பற்றி அனேக வரலாற்று நூல்கள் உரக்கப் பேசுவதில்லை. 

அமெரிக்கப் பூர்வ குடிகள் உலக விவசாயத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. இன்று உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் உண்ணும் உணவில் அறுபது சதவீதம் உணவு, அமெரிக்கப் பூர்வ குடிகள் முதன்முதலில் பயிரிட்டு, வளர்த்தெடுத்தவை. இதனை அமெரிக்காவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வு நிறுவனமான ஹிஸ்டரி டாட் காம் (History.com) மற்றும் பர்டூ பல்கலைக்கழகத்தின் (Purdue University) தோட்டக்கலைத்துறை பேராசிரியர்கள் தங்களின் ஆய்வுகளில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். 

சோளம் (Maize/Corn), உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய், பூசணிக்காய், முந்திரி, சாக்லேட்டின் மூலப்பொருளான கொக்கோ (Cocoa) மற்றும் வாசனைப் பொருளான வெனிலா ஆகியவை பூர்வ குடிகள் உலகிற்கு அளித்த கொடைகள். அவர்கள் கண்டுபிடித்த ‘முப்பரிமாண விவசாய முறை’ (Three Sisters Method) — அதாவது சோளம், பீன்ஸ், பூசணி ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் ஒன்றோடொன்று அமையுமாறு பயிரிடும் முறை — இன்றும் மிகச்சிறந்த இயற்கை விவசாயத் தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது.

வேளாண்மையைத் தொடர்ந்து அமெரிக்கப் பூர்வகுடிகள் அரசியலமைப்பு சட்டங்களை வடிவமைப்பதிலும் வல்லவர்களாக இருந்தார்கள் என்று கூறினால் கட்டுக்கதை என தோன்றலாம். ஆனால் இது நிதர்சனமாக உண்மை என்பதை வரலாற்றுத் தரவு மூலமாக பார்ப்பது அவசியமாகிறது. 

இன்று உலகமே கொண்டாடும் அமெரிக்க ஜனநாயகத்தின் அஸ்திவாரம், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல; அது இந்த மண்ணின் மைந்தர்கள் உருவாக்கிய ‘இரோகுவய் கூட்டமைப்பின்’ (Iroquois Confederacy) உன்னத தத்துவமாகும். 1988ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றமே (US Congress) அதிகாரப்பூர்வமாக ஒரு தீர்மானத்தை (H.Con.Res.331) நிறைவேற்றி இப்பேருண்மையை ஒப்புக்கொண்டது.

இவ்வாறு வாழ்வியல் முறைகளிலும், வேளாண்மை, அரசியல், ஆட்சிமுறை, நிர்வாகம், மொழி, கலாச்சாரம் என பலதரப்பட்ட தளங்களிலும் மாண்புடன் திகழ்ந்த பூர்வகுடி இனத்தினரை நாகரிகம் அறியாதவர்கள், கல்வியறிவு அற்றவர்கள், கலாச்சாரம் அறியாதவர்கள் என தவறாக அடையாளம் கண்டனர் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, நாகரிகம் மிக்கவர்களாக மாற்றுவதாக கண்துடைப்பு செய்து கண்ணில் கண்ட நிலப்பரப்புகளையும், வளங்களையும் வாரிச் சுருட்டினர். 

துப்பாக்கிகளோடும், புதிய நோய்க்கிருமிகளோடும், நிலப்பசியோடும் வந்திறங்கிய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்த அமைதியான உலகத்தைச் சிதைக்கத் தொடங்கினார்கள். வரலாற்றின் மிகப்பெரிய இன அழிப்பை மக்கள் தொகை சரிவு பிரதிபலிக்கத் தொடங்கியது.

கி.பி. 1492-ல் கொலம்பஸ் கால் பதித்தபோது, இன்றைய அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்குள் மட்டும் சுமார் 50 லட்சம் முதல் 1 கோடி (5 மில்லியன் முதல் 10 மில்லியன்) பூர்வ குடிகள் வாழ்ந்ததாக தரவுகள் கூறுகின்றன. நவீன மானிடவியல் மற்றும் மரபணு சார்ந்த வரலாற்று ஆய்வுகள் இந்த கூற்றை ஆமோதிக்கின்றன. 

ஆனால், 1900-களின் தொடக்கத்தில் அமெரிக்க அரசு எடுத்த கணக்கெடுப்பில், பூர்வ குடிகளின் மக்கள் தொகை வெறும் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரமாக (.25 மில்லியன்) குறைந்துள்ளது. அதாவது, அவர்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 95% க்கும் அதிகமானோர் ஐரோப்பியர்களின் வருகையினால் (துப்பாக்கிகளாலும், அவர்கள் கொண்டுவந்த அம்மை (Smallpox), தட்டம்மை (Measles) போன்ற புதிய நோய்க்கிருமிகளாலும்) துடைத்தழிக்கப்பட்டனர். 

குரல்வளைகள் நெறிக்கப்பட்டன, ஆனால் குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இன்று காதற்ற குரல்களாக இருந்தாலும், காலம் அப்படியே கடந்துவிடாது என்ற நம்பிக்கையில் அந்த குரல்கள் காத்திருக்கின்றன ஒலித்தபடியே. முதல் குரலாக ‘பவ்-ஹட்-டன் ‘ பழங்குடி இனத்தின் குரல் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து எதிரொலிக்கும். 

தொடரும் குரல்…

18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவின் சில மாகாண அரசாங்கங்கள், பூர்வகுடிகளைக் கொன்று அவர்களின் மண்டையோட்டுத் தோலை (Scalp) உரித்துக் கொண்டு வருபவர்களுக்குப் பணப்பரிசு (Bounty) அறிவித்தன. அவ்வாறு கொண்டுவரப்படும் இரத்தக் கறை படிந்த பூர்வகுடிகளின் தோலை ஆக்கிரமிப்பாளர்கள் ‘ரெட்ஸ்கின்ஸ்’ (Redskins) என்று அழைத்தனர். இது பிற்காலத்தில் ஒட்டுமொத்த இனத்தைக் குறிக்கும் இனவெறிச் சொல்லாக மாறியது.

படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்) 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.