மருத்துவர் அறிவுரையின்படி மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் சென்னை சென்று மருத்துவச் சோதனை செய்து கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்தோம். தீவிர உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தோம்.

ஆனால் கணவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அடிக்கடி ஐந்துக்கும் கீழே போனது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ரத்தச் சிவப்பணுக்கள் உருவாக உதவும் ஹார்மோனான எரித்ரோப்பொயிட்டினை (Erythropoietin) உற்பத்தி செய்வது சிறுநீரகத்தின் வேலை. எனவே கணவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து ரத்தம் ஏற்ற வேண்டியிருந்தது.

ரத்தச்சோகையால் தொடர்ச்சியாக அவதிப்பட்ட கணவருக்கு வாரம் ஒன்று வீதம் எரித்ரோபாயிட்டின் (EPO) ஊசி போட மருத்துவர் பரிந்துரைத்தார். அந்த ஓர் ஊசியின் விலை, அப்போது மூவாயிரம் ரூபாய். எனவே மாதம் நான்கு ஊசியின் விலை 12,000 ரூபாய். நாட்டுடைமை வங்கிப் பணியாளர்கள் மருத்துவமனையில் சேர்ந்து செலவு செய்யும் தொகையை ஒரிஜினல் மருத்துவ ரசீதுகளை இணைத்து விண்ணப்பம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். இது வங்கிப் பணியாளர்க்கான மருத்துவ நலத்திட்டம்.

நாம் முதலில் செலவு செய்துவிட்டு, வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு பில்லை அனுப்ப வேண்டும். மருத்துவ அறை வாடகை, அறுவை சிகிச்சைக்கான தொகை என ஒவ்வொன்றுக்கும் உச்ச வரம்பு உண்டு. எடுத்துக்காட்டுக்கு மருத்துவமனை அறை வாடகை ஒரு நாளுக்கு 1,000 ரூபாய் என வங்கி ஏற்கெனவே உச்சவரம்பு நிர்ணயத்திருக்கும். நாம் ஒருநாள் அறை வாடகையாக 2,000 ரூபாய் செலவழித்திருந்தால், வங்கி 1,000 ரூபாய் மட்டுமே நமக்குத் திருப்பித் தரும். ஆனால், மருந்து மாத்திரைக்கு உச்ச வரம்பு இல்லை. அதை முழுதாக நாம் திருப்பி வாங்கிக் கொள்ளலாம். ஆனால், நாம் அனுப்பும் பில்லைத் தலைமை அலுவலகம் பல வகைகளில் சோதித்த பிறகே ஒப்புதல் அளிக்கும். கணவர் வங்கிக் கணக்கில் ஊசிக்கான மெடிக்கல் பில் தொகை வரத் தொடங்கியவுடன், அவருடன் வேலை செய்தவர்கள் சிலருக்கு அது பொறுக்கவில்லை.

“அது என்ன ஊசி? அதற்கு இவ்வளவு செலவாகுமா? மாதம் அவசியம் நான்கு போட வேண்டுமா? மாதா மாதம் தனியாக ஒரு சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வருகிறதே?” என்றெல்லாம் கணவரின் முதுகுக்குப் பின்னால் பேச ஆரம்பித்தார்கள். செலவழித்துவிட்டுத் திருப்பி வாங்குகிறோம் என்பதை அவர்கள் நம்பவில்லை.    

நண்பர்கள் என்றும், நலம்விரும்பிகள் என்றும் நம்பியிருந்த சிலர் கணவரிடம் நேரடியாகவே, “இது பொய் பில் என்று வங்கி நிர்வாகம் கண்டுபிடித்தால் வேலை போய்விடும்; ஜாக்கிரதை. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்” என்று எச்சரித்தார்கள்.      

“இதுதான் டாக்டரின் போன் நம்பர். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்” என்று ஒரு முறை அவர்களிடம் சொன்னதாக வருத்தப்பட்டார் கணவர். நமக்குத் துன்பம் வருங்காலத்தில்தான், ஒருவரின் உண்மையான இன்னொரு முகம் தெரிய வருகிறது!

கணவருக்குச் சிகிச்சை தொடங்கியபோது 1.5 mg/dL ஆக இருந்த கிரியாட்டினின் அளவு, ஆண்டுக்கு ஒன்றாக ஏறி ஆறுக்கு வந்திருந்தது. (கிரியாட்டினின் என்பது தசைகளில் உருவாகும் ஒரு கழிவுப் பொருள்.  ரத்தத்தில் இதன் அளவு அதிகரிப்பது, சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் குறைவதற்கான அறிகுறி). கணவருக்கு கிரியாட்டினின் அளவு ஆறைத் தொட்டுவிட்டதால், ஏவி ஃபிஸ்டுலா (arteriovenous (AV) fistula) அறுவை சிகிச்சை பற்றி விளக்கினார் மருத்துவர்.  

ஏவி ஃபிஸ்டுலா என்பது ஒரு தமனியையும் (Artery), ஒரு சிரையையும் (Vein) இணைத்துக் கையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை. அவ்வாறு இணைத்த இடத்தில் தமனியிலிருந்து அதிக அழுத்தத்தில் ரத்தம் சிரையை நோக்கிப் பாயத் தொடங்கும். சில வாரங்கள் ஆனபிறகு அந்த இடத்தில் சிரை பெரியதாகவும் தடிமனாகவும் ஆகிவிடும். மீண்டும் மீண்டும் ஊசி குத்தி ஹீமோடயலிசிஸ் (Haemodialysis) செய்வதற்கு அந்தச் சிரை வலிமையுள்ளதாக இருக்க வேண்டும். அதற்கு அந்த அறுவை சிகிச்சை அவசியம். அந்த அறுவை முடிந்த பிறகு சில வாரங்கள் கழித்துத்தான், சிரை தடிப்பாகி டயலிசிஸ் செய்வதற்குத் தயாராகும் என்பதால் முன்கூட்டியே அதைச் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றார் மருத்துவர்.       

ஆனால் அச்சமயம் கேரளத்தின் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் மகள் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. இறுதியாண்டுத் தேர்வில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதால், ஆறு மாதங்களாக அவர் வீட்டுக்கு வரவேயில்லை. எனவே தேர்வு பயம் காரணமாக ஏற்பட்டிருந்திருந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுத் தேர்வை நன்றாக எழுதுவதற்கு, இரண்டு வாரம் நான் அங்கு வந்து தங்கினால் உதவியாக இருக்கும் என்று மகள் விரும்பினார். எனவே மகளின் தேர்வு முடிந்த பிறகு அடுத்த மாதம் வந்து ஃபிஸ்டுலா அறுவை செய்து கொள்கிறோம் என்று மருத்துவரிடம் சொல்ல, அவரும் சம்மதித்தார்.  

நானும் கணவரும் கோழிக்கோடு சென்றோம். என்னை மகளிடம் விட்டுவிட்டு மறுநாளே அவர் புதுச்சேரி திரும்பினார். மூன்று நாளுக்குப் பிறகு புதுவையிலிருந்து கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று மாமியார் தொலைபேசினார். உடனே புதுவையிலேயே மருத்துவரைப் பார்க்கச் சொன்னேன். அப்போது மகளுக்கு ஒரு தேர்வுதான் முடிந்திருந்தது.

“அவன் டாக்டரைப் பார்த்துட்டான். வாந்தி நிக்கல. ஒண்ணும் சரியாகல. நீ உடனே கிளம்பி வா” என்று அடுத்த நாள் மாமியாரிடமிருந்து மீண்டும் அழைப்பு.

“மகளுக்குத் தேர்வுன்னுதானே வந்துருக்கேன். ஒரு வாரம் ரெண்டு பேரும் நான் இல்லாம சமாளிச்சிக்கக் கூடாதா?” என்று அவரிடம் கோபப்பட்டேன்.   

“நீங்க போங்கம்மா; நான் பார்த்துக்கிறேன்” என்று மகளும் அரைமனதுடன் சொல்ல, வேறு வழியின்றி அன்றிரவே ரயிலேறி மறுநாள் காலை புதுவை வந்து சேர்ந்தேன்.

ரயில் விட்டிறங்கிக் கணவரைத் தேடினால், அவரைக் காணோம். தெரிந்த ஆட்டோகாரர் அழைக்க வந்திருந்தார். எனக்குத் திக்கென்றிருந்தது.

‘கேரளத்திலிருந்து நன்றாகத்தானே திரும்பினார்? நான்கு நாளுக்குள் அப்படி என்ன உடம்புக்கு வந்தது?’ என்று யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

கணவர் மூச்சுத் திணறல் காரணமாகப் படுக்கக்கூட முடியாமல் தலையணைகளை உயரமாக அடுக்கிக் கொண்டு, அதில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். முகம், கை, கால்கள் ஊதிப் போயிருந்தன.

நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் தம் மோசமான உடல்நிலை குறித்துத் தொலைபேசியில் என்னிடம் எதுவும் சொல்லாமல் மறைத்துவிட்டார். மகள் நன்றாகத் தேர்வு எழுத வேண்டும் என்கிற அக்கறையில் தவிர்த்திருக்கலாம். நல்லவேளை! மாமியார், “உடனே கிளம்பி வா” என்று சொல்லியிராவிட்டால், நான் வந்திருக்க மாட்டேன்.   

அன்று காலையிலேயே கணவரைப் புதுவையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவர்கள் பல ரத்தச் சோதனைகள் செய்துவிட்டு முடிவு தெரிந்துகொள்ள அன்று பிற்பகல் வரச் சொன்னார்கள். மாலை நான்கு மணிக்கு மீண்டும் மருத்துவமனை சென்றோம்.   

“சிறுநீரகம் செயலிழந்துவிட்டது. தண்ணீர் வெளியேறாமல் நுரையீரலில்  சேர்ந்துவிட்டது. மூச்சுத் திணறலுக்கு அதுதான் காரணம். உடனே டயலிசிஸ் செய்ய வேண்டும். ஏவி ஃபிஸ்டுலா ரெடியாக இல்லை. எனவே கழுத்தில் கதீட்டர் போட்டு டயலிசிஸ் செய்வோம்” என்றார் மருத்துவர்.

5 முதல் 10 ஆண்டுக்குள் செயலிழப்பு வரும் என்று மருத்துவர் ஏற்கெனவே சொல்லியிருந்தாலும், எல்லாம் நார்மலாக போய்க் கொண்டிருக்கும் போது முன் அறிகுறி எதுவும் இல்லாமல் சிறுநீரகம் திடுதிப்பென்று வேலை செய்வதை நிறுத்தி இப்படி அதிர்ச்சி கொடுக்கும் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. கொஞ்சங் கொஞ்சமாக உடல்நலம் மோசமாகிச் சிறுநீர் வெளியாவது முற்றிலுமாக நின்று, இறுதியில் செயலிழப்பு வரும் என்றே அதுவரை நாங்கள் தவறாக நினைத்திருந்தோம்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் உடலில் என்னென்ன கோளாறுகள் ஏற்படும் என்பதையும் நாங்கள் அப்போது தெரிந்து வைத்திருக்கவில்லை. எனவே அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சில மணித்துளிகள் அப்படியே நின்றோம். பிறகு சுதாரித்துக் கொண்டு பணம் ஏற்பாடு செய்து கொண்டு, மீண்டும் வருவதாக மருத்துவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.