குடும்பக் கட்டுப்பாடு என்பது கருத்தடை சிகிச்சையைக் குறிப்பதாகும். கரு உருவாவதைத் தடை செய்வதால் அடுத்தடுத்த பிள்ளைப்பேறு உருவாகாமல் குடும்பம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும் என்பதால் ‘குடும்பக் கட்டுப்பாடு’ என்கிற சொல்லாடல் மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுகிறது.

கருத்தடை அல்லது குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள் ஆண், பெண் இருபாலாருக்கும் உண்டு. ஆனால், இந்திய சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால் பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள் அதிகம் புழக்கத்தில் உள்ளன.

மாத்திரை, ஊசி, சாதனம், அறுவை சிகிச்சை போன்ற அனைத்து விதமான சிகிச்சை முறைகளும் குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ளன. மாத்திரை, ஊசி, சாதனம் போன்றவை தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறைகள் எனவும், அறுவை சிகிச்சை என்பது நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு முறை எனவும் அழைக்கப்படுகிறது.

நிரந்தர கட்டுப்பாடு முறை எனினும் அதையும் மீண்டும் குடும்பக் கட்டுப்பாடு தளர்வு செய்ய இயலும், அதற்காக வெட்டப்பட்ட கருக்குழாய்கள் மீண்டும் இணைக்கப்பட்டு கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படுத்த இயலும்.

ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறைகள்

1. ஆண் கருத்தடை மாத்திரை. ஆனால் புழக்கத்தில் இத்தகைய மாத்திரைகள் இந்தியாவில் இல்லை.

2. வாசக்டமி. வாசக்டமி என்பது அறுவை சிகிச்சை அரங்கில் வைத்து செய்யப்படும் கருத்தடை சிகிச்சை. எனினும் இதை அறுவை சிகிச்சை எனக் கூறமாட்டோம். காரணம் கத்தி வைக்காமலேயே ரத்தம் சிந்தாமலேயே செய்யப்படும் ஒரு சிகிச்சைதான் இது. வட இந்தியாவில் இத்தகைய கருத்தடை சிகிச்சை அதிகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வாசக்டமி செய்யப்பட்டாலும் வடஇந்தியாவைவிடக் குறைவாகவே செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.

பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறைகள்

1. மாத்திரைகள். கருத்தடை மாத்திரைகள் பயன்பாட்டில் உள்ளன. கருத்தடை மாத்திரைகளிலும் மூன்று வகையான மாத்திரைகள் உள்ளன. அவசர கருத்தடை மாத்திரை, வாரம் இரு முறை (அ) ஒரு முறை போடும் கருத்தடை மாத்திரை, 21நாட்கள் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை என மூன்று வகையான கருத்தடை மாத்திரைகள் பயன்பாட்டில் உள்ளன. அனைத்து விதமான மாத்திரைகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கின்றன. ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் ஹார்மோன் அல்லாத மாத்திரைகள் என வேதியல் ரீதியாக இவை பிரிக்கப்பட்டுள்ளன.

2. ஊசி மருந்து

கருத்தடை ஊசிகள் பயன்பாட்டில் உள்ளன. இது ஹார்மோன் ஊசி. ஒரே ஒரு ஊசி மருதிந்தின் மூலம் 3மாதங்களுக்கு கருத்தரிக்காமல் பார்த்துக்கொள்ள இயலும். தசை வழியாகவோ தோலுக்கு அடியிலோ போடும் ஊசியாக இவை வருகின்றன. இத்தகைய ஊசிகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போடப்படுகின்றன.

3. கருத்தடை சாதனம்

மாத்திரை, ஊசிக்கு மாற்றான ஒன்று இது. இது ஹார்மோன் சாதனம் அல்ல, மாறாக copper எனப்படும் துத்தநாக உலோகம் பொருந்திய சாதனம் இது. இதைக் கர்ப்பப்பையில் வைக்கும்போது கரு உருவாதல் தடுக்கப்படுகிறது. இதுவும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

4. கருத்தடை அறுவை சிகிச்சை

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் பரவலாக அதிக அளவு செய்யப்படுகின்றன. திறந்தவெளி அறுவை சிகிச்சைகளாகவும்,

நுண்துளை அறுவை சிகிச்சைகளாகவும் இவை செய்யப்படுகின்றன.

நுண்துளை குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவை இல்லை,

அறுவை சிகிச்சை செய்த அன்றேகூட வீட்டுக்குச் செல்லலாம் (day care surgery) என்பதால் இளம்பெண்கள் பலரும் இத்தகைய நுண்துளை அறுவை சிகிச்சைக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம்

கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கூறவில்லை. அது நம் விருப்பம்தான்.

ஆனால், அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும்போது இந்தியப் பெண்கள் ரத்தசோகை போன்ற நோய்களுக்கு உள்ளாவதாலும்,

கர்ப்பப்பை தனது இயல்பான சுருங்கிவிரியும் தன்மையை இழப்பதாலும் பெண்களின் பிரசவகால மரணங்கள் அதிகரிப்பதாலும் இரு குழந்தைகளோடு குடும்பக் கட்டுப்பாடு முறை ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் என இந்திய மருத்துவத்துறை வலியுறுத்துகிறது.

தேவையற்ற கர்ப்பம் உருவாவதைத் தடுப்போம். அதுக்கு குடும்பக் கட்டுப்பாடு முறை எதையேனும் பின்பற்றுவோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.