பக்கத்து வீட்டில் நரேந்திரன் இறந்துவிட்டார். 65 வயது. படுத்த படுக்கையான மாமியாருக்கும் மாமனாருக்கும் பணிவிடை செய்து உழைத்தே ஓய்ந்து போன உடல் அவருடையது. மாமனார், மாமியார் ஒன்றன்பின் ஒன்றாக மறைந்த பின்பும் ஓய்வு இல்லை. வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் தங்கள் குழந்தைகளை வளர்க்க முறை போட்டு அழைத்துச் சென்று வேலை வாங்கினார்கள். ஆனால், அங்கேயே தங்கி விடவும் நரேந்திரனுக்கு வாய்க்கவில்லை.

மனைவி யசோதாவுக்குச் சொந்த ஊரை விட்டு வர விருப்பமில்லை. புகழ் பெற்ற விளையாட்டு வீரரும் சமூக ஆர்வலருமான யசோதா சுற்றாத அயல்நாடில்லை. அவருக்கு இப்போது அரசியல் கனவுகள் இருந்தன. எத்தனை உதவியாளர்கள் இருந்தாலும் கணவன் பக்கத்தில் இருந்து பணிவிடை செய்தால்தான் பிடிக்கும் எனும் யசோதா, 68 வயதிலும் திடகாத்திரமாக அழகாகவே இருந்தார். மனைவி குறித்த பெருமையில் பூரித்துக் கிடந்த நரேந்திரன் தனது உடல்நிலை குறித்து என்றுமே கவலைப்பட்டதிலை.

நரேந்திரனுக்கு வெகு காலமாக க்ரானிக் அல்சர் (Chronic ulcer) இருந்துள்ளது. சரிவரக் காலையில் சாப்பிடாமல், எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்து கொள்ளாமல் இருந்ததில் அது புற்று நோயாகத் தீவிரமடைந்து நான்காவது கட்டத்தில்தான் கண்டுபிடித்தார்கள். சில மாதங்களுக்குள்ளே நோய் அவர் உயிரைக் குடித்துவிட்டது.

காரியமெல்லாம் முடிந்தது. யசோதாவுக்கு ஆறுதல் சொல்லப் பெருங்கூட்டம் கூடியிருந்தது.

“அவனுக்கு அல்சர் இருந்ததே தெரியாது. எதையுமே சொல்ல மாட்டான். ஒரு தலைவலி காய்ச்சல்னு படுத்ததில்லை. எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பான். சமையலுக்கு, தோட்ட வேலைக்கு எல்லாத்துக்கும் ஆள் இருந்தாலும் அவனே இழுத்துப் போட்டு எல்லா வேலையும் செய்வான். குறிப்பா என்னை அப்படிப் பார்த்துப்பான். அவன் இல்லாம எப்படி இருக்கப் போறேன்னே தெரியல…”

மௌனமாகத் தன் சோகத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார் யசோதா ஆன்ட்டி. கணவனைப் பற்றி அவர் பேசுவதை அதிகம் கேட்டிராத நிலாவும் பிற தோழிகளும் கொஞ்சம் சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார்கள். என்ன ஆறுதல் சொல்வதென்று யாருக்கும் தெரியவில்லை. சுவையாக ரவா லட்டு, மீன் குழம்பு செய்வார், இன்முகத்துடன் சமைத்து உபசரிப்பார் என்பதைத் தாண்டி நரேந்திரன் குறித்து யாருக்கும் எந்த மனப்பதிவும் இல்லை.

”டேய் பத்ரி…”

துண்டை வாயில் வைத்துத் தூணோரமாக நின்று அழுது கொண்டிருந்தனர் சமையல்காரர் பத்ரி சேஷாத்ரியும், ட்ரைவர் ஜானகி பார்த்தசாரதியும்.

“எங்கே போய் ஒழிஞ்சான் இந்த பத்ரி…”

“அம்மா…..” அழுது கொண்டே ஓடி வந்த பத்ரி, “அண்ணா இப்டி நம்மளை எல்லாம் விட்டுப் போயிட்டாரேம்மா” என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினான்.

“சரி சரி” என்று அவனைச் அமைதிப் படுத்திவிட்டு வந்திருப்பவர்களுக்கு டீ கொடுக்க உத்தரவிட்டார் யசோதா. அவனை யசோதாவுக்கு எப்போதுமே பிடிக்காது. “நரேன் ரொம்ப வெகுளி. பத்ரி செம கன்னிங். சுத்தமும் கிடையாது. வேற குக் பார்க்கணும்” என்று நிலாவிடம் மட்டும் பகிர்ந்தார்.

“கண்டிப்பா ஆன்ட்டி. நான் வருண் கிட்ட சொல்றேன். அவன் பார்த்து வெச்சிடுவான். யூ டோண்ட் வொர்ரி.” நிலா யசோதாவின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினாள். துக்கம் விசாரிக்க வந்துகொண்டே இருந்தார்கள். பெரும்பாலும் யசோதாவின் நண்பர்கள்தாம்.

நிலா வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். நரேன் அங்கிளுக்கு யசோதாவும் குழந்தைகளும் அந்த வீடும்தான் உலகமே. வீட்டின் ஒவ்வொரு மூலையையும் அங்கிளின் கைகள் அழகு படுத்தி இருப்பது தெரிந்தது.

உள்ளறையில் ஆண்களுடன் பேசிக் கொண்டிருந்த வருண் வந்தான்.

“யசோதா ஆன்ட்டி, நீங்க இன்னிக்கு ப்ரஷர் டேப்லெட் போட்டீங்களா?”

“அடடா, இல்லப்பா. “

“இருங்க நான் எடுத்துட்டு வரேன். அங்கிள் எங்கே வெச்சிருப்பார்னு எனக்குத் தெரியும்.”

நிலா கணவனைப் பெருமை பொங்கப் பார்த்தாள். வருண் கொண்டு வந்து கொடுத்த மாத்திரையையும் தண்ணீரையும் விழுங்கிய பின்பு அவனிடம் சின்னதாக தாங்க்ஸ் சொன்னார். பின்பு நிலாவிடம் திரும்பிப் பேச்சைத் தொடர்ந்தார் யசோதா.

ஊரிலிருந்து வந்திருந்த பலரும் இருபத்தி ஐந்து வயதுகூட முடிவுறாத, அடக்க ஒடுக்கமான தங்கள் மகன்களைப் பற்றிப் பெருமை பேசத் தொடங்கி இருந்தனர்.

“எங்க அபிலாஷ் பிரியாணி செஞ்சா ஊரே மணக்கும்” என்றும் “எங்க நவீன் கோலம் போட்டா இன்னிக்கு பூரா நின்னு பார்த்துக்கிட்டே இருக்கலாம்!” என்றும் பேச்சுகள் கேட்டன.

யசோதா லிக்கருடன் ஓய்வெடுக்கச் சென்ற பின்பு, அவர்களுக்குள் பலவிதப் பூசல்கள் மூண்டன. தங்கள் மகனை, ஒன்றுவிட்ட தம்பியை, பேரனைத்தான் யசோதாவுக்கு மறுமணம் முடிக்க வேண்டும் என்று மும்முரமாகப் பேச்சு நடந்தது.

வருணுக்கும் நிலாவுக்கும் அதற்கு மேல் அங்கிருக்கச் சங்கடமாக இருந்தது. வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

”எவ்ளோ வேலை பார்த்திருக்காங்கல்ல நரேன் அங்கிள்? க்ரேட்” என்று வருணிடம் நெகிழ்ந்தாள் நிலா. வருணும் தலையாட்டி ஆமோதித்தான். தான் சும்மா இருந்தால் பொறாமை என்றாகி விடுமே என்று தன் பங்குக்கு அங்கிளைப் புகழ்ந்தான். அவனுக்கு நரேன் அங்கிள் குறித்துச் சற்று அதிகமாகவே தெரிந்திருந்தது.

குழந்தைகள் எல்லாம் வளர்ந்து வீட்டை விட்டுப் பறந்த பின்பும் சும்மாவே இருக்க மாட்டாராம். எப்போதும் வீட்டைச் சுத்தப்படுத்துவது, புதிது புதிதாக ஏதாவது சமைப்பது, சுவர்களில் தொங்கும் பூவேலைப்பாடுகள் எல்லாம் நரேன் அங்கிள் கை வண்ணம்தானாம். ஆனால், அவருக்கு அல்சர் இருந்தது தனக்கும் தெரியாது என்று வேதனையுடன் வருண் குறிப்பிட்டான்.

நிலாவுக்கும் வருணுக்கும் யசோதா ஆன்ட்டியை நினைத்துப் பரிதாபமாக இருந்தது. நரேந்திரன் அப்படி ஒரு மாடல் கணவர். அதிர்ந்து பேச மாட்டார். மனைவிக்குப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தவர். அவரில்லாமல் இனி யசோதா எப்படி வாழப் போகிறார்?

“வருண், பேசாம ஆன்ட்டிக்கு நாமளே நல்லதா ஒரு பையன் பார்க்கலாம்” என்றாள் நிலா.

“நானும் அதேதான் நினைச்சேன் நிலா. ஷீ நீட்ஸ் கம்பெனி” என்றான் வருண்.

ஆனால், யசோதா ஆன்ட்டி யாருக்குமே வேலை கொடுக்கவில்லை. வெகுநாளாக ரகசிய உறவில் இருந்த பெர்சனல் செக்ரட்டரி 28 வயது ரித்திக்கை அடுத்த வாரமே பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

இன்று மாலை ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் பால்ரூமில் மிக நெருங்கிய நண்பர்களுக்குத் தன் இளம் அழகிய கணவனை அறிமுகப்படுத்த பார்ட்டி வைக்கிறார்.

வருணுக்கு எரிச்சலான எரிச்சல். “சரியான கோல்ட் டிக்கர் அந்த ரித்திக். ஆன்ட்டியோட பணத்துக்காகத்தான் கட்டிக்கிறான். இந்த ஆன்ட்டிக்கு ஏன் இப்படிப் புத்தி போகணும்!”

நிலாவுக்கும் லேசாக எரிச்சல்தான். ஆனால் தான் மதிக்கும் ஆன்ட்டியைக் கணவன் மரியாதை இல்லாமல் பேசுவது அதைவிட எரிச்சலைக் கொடுத்தது.

“டேய் வருண், நிறுத்து. பெரியவங்க மேல மரியாதை இல்லாம பேசாதே. அவங்களோட பெர்சனல். நாம கண்டிப்பா போகணும்” என்று சற்றுக் கடுமையாகவே சொன்னாள் நிலா.

“நான் வரலை. எனக்கு அந்த ரித்திக்கைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு. நீ வேணா போயிட்டு வா” என்று வருண் முணுமுணுத்தான். அதில் தவறிப் போய் ஒரு கெட்ட வார்த்தையும் வந்துவிட்டது.

“டோண்ட் பீ சில்லி. குடும்பப் பையன் மாதிரி பேசு. நான் ஆபிஸ் கெளம்புறேன். நீ ஏதாவது கிஃப்ட் வாங்கி பேக் பண்ணி வெச்சிடு. என்ன புரியுதா?” – அதட்டி விட்டுக் கிளம்பினாள் நிலா.

“ஐயோ நிலா, எனக்கு இன்னிக்கு ஆபிஸ்ல நிறைய வேலை. ஈவினிங் லேட்டாகும்…’’ – சட்டென்று நினைவுக்கு வந்தவனாக வருண் கத்திக்கொண்டு ஓடியதை நிலாவின் பைக் உறுமல் சதம் மூழ்கடித்து மறைத்தது.

மனதுக்குப் பிடிக்காத பார்ட்டிக்குப் போக லஞ்ச் டைமில் எங்கு போய் கிஃப்ட் வாங்கலாம் என்று வெறுப்புடன் சிந்தித்துக்கொண்டே வீட்டை ஒழுங்கு செய்து, உடை மாற்றி அவசர அவசரமாக அலுவலகத்துக்குக் கிளம்பினான் வருண்.


(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.