ஞாயிறு காலை.

“இன்னிக்கு எப்படியாவது அத்தை, மாமா கிட்ட நாம தனிக்குடித்தனம் போறதைப் பத்திப் பேசிடணும் என்ன?”

வருண் நிலாவுக்கு ஒரு மாதமாகவே தலையணை மந்திரம் போட்டுக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் கோபப்பட்டு வருணை அடிக்கவே போய்விட்டாள் நிலா.  ஆனால், வருண் திருப்பி அடிக்கவில்லை. கண்ணீரால் அடித்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா. வருணின் கண்ணீரும் கம்பலையும் பொறுக்க முடியாமல் இந்த ஞாயிறன்று பெற்றோருடன் பேசுவதாய்ச் சொல்லி இருந்தாள் நிலா.  கிரிக்கெட் விளையாடி விட்டு  மதிய உணவு நேரத்தில் பேசுவதாய்ச் சொல்லிப் போனவளை எதிர்பார்த்துக் கடிகாரத்தில் கண் வைத்துக் கொண்டே இருந்தான் வருண். 

அத்தை மாமாவையும் நல்ல மூடில் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் வருண். சமையலைத் தானே முழுக்கப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி மாமாவை ஓய்வெடுக்க வைத்து விட்டு ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான். சண்டை சச்சரவில்லாமல் எப்படியாவது தனிக்குடித்தனம் போக அனுமதி வாங்கி விட வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தான்.

”ம்.. ரொம்ப சந்தோசம்…. நிலாவா? வெளிய போயிருக்கா. 

ஆகட்டும் சொல்றேன். வந்துடுறோம்.”

மாமியார் ஆரவல்லி யாரிடமோ வேண்டா வெறுப்பாய்ப் பேசிக் கொண்டிருந்தார். 

”நல்லா இருந்த குடும்பம். அந்த நாசமாப் போனவன் வந்து தான் அக்கா தங்கச்சிங்களைப் பிரிச்சிட்டான். இப்ப பையனுக்குக் கல்யாணம் வெச்சிருக்கும் போது மட்டும் சொந்தம் ஞாபகம் வருது!”

ஃபோனை வைத்து விட்டுக் கடுகடுக்கத் தொடங்கினார் ஆரவல்லி. 

”என்ன அத்தை? ஏன் டென்ஷனா இருக்கீங்க?” 

”அந்த வீணாப் போனவன், என் தங்கச்சி புருஷனைத் தான் சொல்றேன்.” வருண் காபி கொடுத்தான். சூடாக இருந்தது. 

”அந்த ஃபேனைப் போடுப்பா. அப்பாடா…” 

வருண் ஓடிச் சென்று ஃபேனைப் போட்டான். சோஃபாவில் அத்தை வசதியாக அமர்ந்து கொள்ளும் வகையில் தலையணைகளைச் சீர் செய்தான். பின்பு தரையில் அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டே கதை கேட்க ஆர்வமானான். 

தங்கள் குடும்பப் பெருமைகளைப் பேசத் தொடங்கினால் அத்தை நல்ல மூடுக்குச் சென்று விடுவார் என்பது அவன் எண்ணம். 

”சின்ன மாமா ஞானவேலையா சொல்றீங்க?” 

காபியை ருசித்துக் குடித்த உற்சாகத்தில் மருமகனுடன் பேசத் தொடங்கினார் ஆரவல்லி. 

”அமாம். இங்க பாருப்பா… நாங்க மூணு பேரு, அக்கா தங்கச்சி. 

எங்கக்கா சூரவல்லி, நானு, அப்றம் தங்கச்சி அம்சவல்லி. 

ஒண்ணுக்கு மூணு வாரிசுன்னு ஊரே பொறாமைப் படுற குடும்பம் எங்களுது.

எங்கக்காவைத் தான் நீ பார்த்துருக்கே. அம்சவல்லி இருக்காளே சரியான புருஷதாசி. அப்படியே புருசன் கிட்ட மயங்கி அவன் வீட்டோட போய்த் தங்கிட்டா..பொம்பளையா அவ… த்தூ” காறித்துப்பினார். 

”சரி சரி சொல்லுங்கத்தை.” துப்பியது பட்டு விடாமல் கொஞ்சம் நகர்ந்து கொண்டே கேட்டான் வருண்.  

”நானும் சூரவல்லியும் எங்க அப்பா அம்மாவுக்கு அடங்கி நடக்குற மாதிரி உங்க மாமா மாதிரி, உன்னை மாதிரி  ஒழுங்கான பசங்களா கட்டிக்கிட்டோம்பா.” கண்ணடித்தார். 

”போங்கத்தை!” வருண் மகிழ்ச்சியுடன் வெட்கபட்டான். சற்று நெருங்கி அமர்ந்து அத்தையின் காலை அமுக்கத் தொடங்கினான். அப்போது தான் அத்தை மகிழ்ந்து நிறைய பேசுவார். 

”ஆனா என் தங்கச்சி இருக்காளே அம்சவல்லி. அவளுக்குத் தானா தேடிக்கத் துப்பில்லை. நாங்களே சொந்தத்துல பார்த்துத் தான் இந்த ஞானவேலைக் கட்டி வெச்சோம். சொந்தக்காரப் பயலாச்சே எல்லாரையும் அனுசரிச்சு நடந்துப்பான்னு பார்த்தா அடங்காப்பிடாரியா இருந்தான். என் தங்கச்சியைப் பிரிச்சித் தனிக்குடித்தனம் கூட்டிட்டுப் போயிட்டான். ஹும்.. ஒத்துமையா இருந்த குடும்பம்.” பெருமூச்சு விட்டார் ஆரவல்லி.  

வருண் ஒன்றும் பேசவில்லை. என்னடா இது பேச்சு இப்படிப் போகுது? நம்ம தனிக்குடித்தனப் பேச்சு அம்போ தானா? ஆபிஸ் இருவருக்குமே தூரமாக இருக்கிறது என்று எவ்வளவோ நியாயங்களை எடுத்துரைத்தாலும் அம்மா அப்பாவை விட்டு வர முடியாது என்று நிலா ரொம்பவே பிடிவாதமாய் இருந்தாள். எவ்வளவு கஷ்டப்பட்டுச் சம்மதிக்க வைத்திருந்தான். அத்தை என்னடான்னா இன்று பார்த்து சீரியல் ஓட்டுகிறாரே.  

நிலா அம்மாவிடம் சொல்லி இருப்பாளோ? அது தான் அத்தை இந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கிறாரோ? என்று சிந்தித்துக் கொண்டே அரிசியைக் களைந்து குக்கரில் போட்டான். அடுத்த ஒன்றரை மணி நேரம் சமையலில் ஓடிப் போனது. மாமாவுக்கும் ஓய்வு கொடுத்து விட்டதால் அடுத்தடுத்த வேலைகளில் நாள் ஓடிப் போனது. 

நிலா அன்று இரவு வரை வீட்டுக்கே வரவில்லை. 

*****

”அருண்! இப்ப எப்படி இருக்குடா உடம்பு?”

வருணின் தம்பி அருணுக்குப் பித்தப்பைக் கல் அறுவை சிகிச்சை நடந்திருந்தது. ஊருக்குப் போக முடியாமல் ஃபோனில் விசாரித்துக் கொண்டிருந்தான் அருண். 

”பரவால்லைண்ணா. நீ எப்படி இருக்கே?”

“ம்… ஏதோ இருக்கேன். எப்ப டிஸ்சார்ஜ்?”

”இன்னும் ரெண்டு நாள்ளண்ணா. நீ கவலைப்படாதே. அப்பா பார்த்துக்குறாங்க. தாத்தாவும் ஊர்லேர்ந்து வந்து என் கூடத் தான் இருக்காங்க”

”ம்ம்…அம்மா எங்கே?”

“ஹ்ம் அம்மாவைப் பத்தி உனக்குத் தெரியாதா? முதல் நாள் அட்மிட் பண்ணிட்டுப் பணம் கட்டிட்டுப் போனாங்க அத்தோட சரி. ஆபிஸ் ஃப்ரெண்ட்ஸ்னு வழக்கம் போல இருக்காங்க. நாளைக்கு வருவாங்கன்னு பாக்குறேன்.”

”ஹும்…  நானாவது கூட இருந்திருக்கலாம்.”

“பரவால்லைண்ணா. உன் குடும்ப சூழல் தெரியாதா.”

“சாரிடா. நான் ஊருக்கு வரணும்னு கேட்டாலே அத்தை மாமா மூஞ்சைத் தூக்கி வெச்சிக்கிறாங்க. தவிரவும் இங்கே நிலா தங்கை கலா செமஸ்டர் லீவுல வந்திருக்கா. நாளைக்கு கலா பர்த்டே வீட்ல ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் பார்ட்டி வெக்கிறா. நிறைய வேலை இருக்கு. இப்ப போய் ஊருக்குப் போறேன்னு சொன்னா உங்கண்ணி சங்கடப்படுவாங்க.”

“அண்ணி நல்லவங்கண்ணா. உன் மேல உயிரையே வெச்சிருக்காங்க. அதுக்காகக் கொஞ்சம் பொறுத்துப் போண்ணா.”

சின்னப் பையன் எவ்வளவு பொறுப்பாகப் பேசுகிறான். வருணுக்குத் தம்பியை நினைத்துப் பெருமையாக இருந்தது. கண்கள் கலங்கியது. 

எவ்வளவு நாளாயிற்று அப்பா, அம்மா, தம்பி எல்லாரையும் பார்த்து. 

”பொங்கலுக்கு ஊருக்கு வரோம்னு அப்பா கிட்ட சொல்லுடா செல்லம். அண்ணா ஃபோனை வெச்சிடுறேன்.”

பொங்கிய கண்ணீரை அடக்கிக் கொண்டு நிமிர்ந்த வருண் அதிர்ச்சியானான். 

”நி..நிலா! நீ எப்ப வந்தே?”

”ம்… உன் தம்பி எப்ப டிஸ்சார்ஜ்னு கேட்டுட்டு இருந்தியே அப்பவே வந்துட்டேன்.”

“நிலா அது வந்து…”

“பேசாதே. என்னை வேற ஆளா நினைச்சிட்டேல்ல? உன் தம்பி ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி இருக்கான்னு எனக்கு ஏன் சொல்லல?” நிலா கோபமானாள். 

”இல்ல, நிலா, கலா லீவ்ல வந்திருக்கா…. இந்த நேரம் பார்த்து…”

“டோண்ட் பி சில்லி. கலா ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங்க் கேர்ல். அவ புரிஞ்சுப்ப்பா. நீ இன்னிக்கே போய்த் தம்பியைப் பார்த்துட்டு வந்துடு.”

“அத்தை மாமா….?”

“ம்ம்… அவங்களை நான் ஒரு நாளைக்குச் சமாளிச்சிக்கிறேன்.”

”கலா பர்த்டே?”

“அது நாளைக்குத் தானே? நீ இப்ப கிளம்பிப் போய்ப் பார்த்துட்டு ராத்திரி திரும்பி வந்துடு!” என்ன மூணு மணி நேரம் தானே?”

“தாங்க்யூ நிலா!” உடல்நலமின்றி மருத்துவமனையில் இருக்கும் தம்பியைப் பார்த்து வர அனுமதி கொடுத்த மனைவியை நன்றிப் பெருக்குடன் கட்டியணைத்துக் கொண்டான் வருண். 


படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.