இந்தத் தலைப்பின் வரிகள் போல்தான் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்கிற அதீத எதிர்பார்ப்புடனும், பல கனவுகளுடனும் திருமண பந்தத்தில் இணைகின்றனர்.

திருமணம் என்பது ஓர் அழகான பந்தம்தான், அதை மறுப்பதிற்கில்லை.

இங்கு சிலருடைய திருமணம் அவர்களுடைய விருப்பத்திற்கேற்றார் போல  அவர்கள்  விரும்பியவர்களையே கரம் பிடித்திருக்கலாம், மேலும் பலருடைய திருமணம் தனக்கேற்ற இணையைத் திருமண தகவல் மையங்களில் தேடித் தேடி அலைந்து திரிந்து இனியும் தேடிக் கிடைக்காவிட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் கிடைத்த வரன் எப்படி இருந்தாலும் சரி திருமணம் செய்திடுவோம் என்கிற முடிவிற்கு வந்தவர்களாக  இருக்கலாம்,   வேறு சிலருக்கோ அவர்களின் சொந்த விருப்ப வெறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்காமல்  பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கலாம்.

தனக்குத் திருமணம் நடக்க போகிறது என்கிற தகவலறிந்ததும், மனதில் பல பாடல்களின் ராகங்கள் ஒலிக்கத் தொடங்குவதும்,  இனம் புரியாத சந்தோஷம் உருவாவதும், பட்டாம் பூச்சிகள் பறப்பதும், திடீரென இறக்கைகள் முளைத்து சிறகடித்து செல்வதும், அலைபேசியின் அழைப்பிற்காக மணி கணக்காகக் காத்திருப்பதும், ஒவ்வொரு குறுஞ்செய்தி வரும் போதும் சலிக்காமல் புன்னகைப்பதும், எதிரில் இருப்பவர் பேசுவதுகூட காதில் விழாத வண்ணம் என அப்படியொரு மாய வலையில் மிதந்து கொண்டிருப்பார்கள். எல்லாம் காதல் செய்யும் மாயம். அவை தரும் சுகமே தனிதான். இவையெல்லாம் அன்பினால் உருவாகும் அந்தப் பருவத்தின் எதார்த்தமான உணர்வுகள்தாம்.

திருமணமான புதிதில் ஒருவருடைய எதிர்பார்ப்பை அவர் கேட்கும் முன்பே பார்த்துப் பார்த்துச் செய்வது,  ஆச்சரியப்படும் பரிசுகளை வழங்குவது, சின்ன சின்ன விஷயங்களைக்கூடக் கொண்டாடுவது எனக் கோலாகலமாகத் தொடங்கும் திருமண பந்தம்,  இரண்டு, மூன்று வருடங்கள்கூட அல்ல! ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே இருவரும்  பிரிந்து வாழ வேண்டிய முடிவு எடுப்பதற்கான காரணம்தான் என்ன?

சிறப்பாகத் தொடங்கும்  மண வாழ்க்கை

சின்னஞ்சிறு அர்த்தமற்ற காரணங்களாலும்,  சம்பந்தமே இல்லாத பிறருடைய ஆலோசனையாலும், சரியான புரிதலின்மையாலும் எத்தனை அழகான உறவுகள் இங்கு முறிந்திருக்கின்றன.

இதற்கான காரணங்களும் தீர்வுகளும் என்ன?

முதலில் கணவன் – மனைவி இருவருக்குமிடையே நிகழும்  சிறு சிறு முரண்பாடுகளை உங்களுக்கிடையே பேசித் தீர்த்து கொள்ளாமல், உடனே பெற்றோர்கள், நண்பர்கள் என உங்களுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில்  தகவல்களைப் பரிமாறிக் கொள்வது  மிகப்பெரிய தவறு.

ஒரு வேளை,  அன்றைக்கே அந்தப் பிரச்னைக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கும் பட்சத்தில், உங்கள் நலம் விரும்பிகள் பொது நிகழ்ச்சிகள், பொது இடங்களில் எங்கேயாவது சந்திக்கும்  போதோ அல்லது அலைபேசியிலோ அந்தப் பிரச்னை குறித்து ‘நல்லது செய்கிறேன்’ என்கிற பெயரில் உங்கள் இணையரிடம் முடிந்த பிரச்னை குறித்து விசாரித்தால், குழி தோண்டி புதைத்த பிரச்னை மீண்டும் பூதகரமாக  வெளிவர வாய்ப்புள்ளது.

எப்போதும் அருகில் இருந்து வாழ்ந்து வரும் உங்கள் இணையரைக் குறித்த சரியான புரிதல் உங்களுக்கே இல்லாத போது, மற்றவர்களுக்கு மட்டும் அவர்களைக் குறித்து எப்படித்  தெரிய வாய்ப்பிருக்கிறது?

ஒருவரை மற்றவர் எப்போதும் மட்டம் தட்டிப் பேசுவதும், ஒருவரின் திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவதும், குறை கூறுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தால் வாழும் வாழ்க்கையில் நிச்சயம் சலிப்பும் வெறுப்பும் வந்துவிடுவது இயல்புதானே.

குறிப்பாகச் சாப்பிடும் போது எந்தப் பிரச்னை குறித்தும் வாயைத் திறக்காதீர்கள்.

எல்லா நேரத்திலும் சிரித்துக் கொண்டும் ரொமாண்டிக்காகவும் இருப்பது சாத்தியமில்லாத ஒன்று. ரீலுக்கும், ரியலுக்குமான வித்தியாசத்தை முதலில் உணர கற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்றால் இன்பம்-துன்பம், சிரிப்பு – அழுகை எல்லாமே இருக்கும். அந்தத் தருணங்கள் சொல்லித்தரும் அனுபவப் பாடங்கள் பல.

 சிலர் பொசசிவ் என்கிற பெயரில் அவர்கள் நேசிப்பவர்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் கஷ்டப்படுத்திப் பார்ப்பார்கள்.

தன் இணையர் மீது முழு உரிமை எடுத்துக் கொள்ளுவேன் என்கிற பெயரில் பலர் அதிபிரசங்கித்தனமாக இந்த வார்த்தையைப் பயன்படுத்துவர்.

உங்கள் இணையர் மீது நம்பிக்கையின்மை ஏற்படும் போது தான் இப்படியான வார்த்தைகள் வெளிவரத் தொடங்கும்.

எல்லாவற்றிற்கும் பொசசிவ் என்கிற வார்த்தையைப் பிரயோகித்து தேவையற்ற வெறுப்பை உங்கள் இணையரிடமிருந்து சம்பாதித்து விடாதீர்கள். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்; எத்தனை உறவுகள் வந்தாலும் கணவன் – மனைவியின் அன்பு தனித்துவமானதுதான்.

உங்கள் இணையர் உங்களைவிட மற்றொருடன் கூடுதலாக நேரம் செலவு செய்துவிட்டார் என்பதற்காக, உங்கள் மீதுள்ள அன்பையும் உங்களுக்கான இடத்தையும் யாராலும் களவாடிச் சென்றிட முடியாது என்கிற புரிதலும் தெளிவும் உங்களுக்குள் வர வேண்டும்.

இந்த எதார்த்தமான உண்மை தெரியாமல் பலரும் பொசசிவ் என்கிற வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் புரிந்து கொள்ள வேண்டியது:

 சிந்திக்கும் திறன், ரசனை, ஒருவரை இன்னொருவர் அணுகும் முறை, பேசும் விதம், சாப்பிடும் வழக்கம் எனப் பல உணர்வுகள் இங்கு மனிதருக்கு மனிதர் வேறுபடும்.

திருமணமான புதுத் தம்பதியரைப் பார்த்தவுடன், Made for Other போன்ற வசனங்களைக் கேள்விப்பட்டிருப்போம். அதெல்லாம் முற்றிலும் உண்மையல்ல. அவர்களை அந்தக் கணம் உற்சாகப்படுத்தப் பயன்படுத்தும் வார்த்தை உத்திகள்.

இன்னும் சிலர் காதலின் மோகத்தில் மூழ்கியிருக்கும் போது நம் இருவரின் எண்ணங்களும், விருப்பங்களும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது பாருங்களேன் என்று  கூறி மகிழ்ச்சியடைந்து கொள்வார்கள்.

ஆண் – பெண் இருவருமே வேற்றுக்கிரக வாசிகளாக இருக்கும் பட்சத்தில் எப்படி அவர்களுடைய உணர்வுகள் ஒன்றாக இருக்க முடியும்?

சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு ஒருவருக்கு இன்னொருவர் வேறுபட்டு இருக்கிறோம், வேற்றுக் கிரகவாசிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து ஜான் கிரே  எழுதிய ’ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்’ என்கிற நூலின் வாயிலாகப் பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

வேற்றுக் கிரகவாசிகளுக்கு இருக்கும் இயல்பு குணங்களை நாம் மாற்றவும், அடக்கி ஆளாவும் முயற்சி செய்யும் போதுதான் இங்கு பல பிரச்னைகள் உருவாகின்றன.

இருவரின் எண்ணங்களுக்கிடையே அடிக்கடி முரண்பாடுகள் எழுவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது.

எல்லாருக்கும் அமைதியான சூழலில் உற்சாகமாக வாழ வேண்டும் என்றுதான் ஆசை. அப்படி அமையாத பட்சத்தில் குடும்ப நெருக்கடி காரணமாக கரோனா வேரியன்ஸ் போல திடீரென புதுப் புதுப் பிரச்னைகள் உருவாவதற்கும் வாய்ப்புண்டு. அதை எப்படித் திறம்படக் கையாள வேண்டும் என்கிற வித்தையையும் நீங்கள்தான் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

வேற்றுக் கிரகவாசிகள் இப்படித்தான் என்று எல்லா நேரத்திலும் கடந்து செல்வது கடினமான செயல்தான். அதற்காக அர்த்தமற்ற பிரச்னைக்கெல்லாம் குழாயடி சண்டையெல்லாம் போடத் தேவையில்லை. அவற்றை அமைதியாகக்  கடந்துவிட முயற்சிக்கலாம். இது ஆண்களுக்கு கைவந்த கலை என்பதால் அவர்கள் இதைக் கடைப்பிடிக்க எளிதாக இருக்கும்.

இருவரும் சண்டை போடுவதற்கு முன், பிரச்னையின் பின்விளைவை மனதில் நிறுத்தி,  இந்தப் பஞ்சாயத்து அவசியம் தேவைதானா, இதனால் சல்லி பைசா பிரயோசனம் உண்டா என்பது குறித்து நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

குறிப்பாக உங்கள் இணையருடன் யாரையாவது ஒப்பிட்டு சண்டையிடுவது, அவர்களின் பெற்றோர் வளர்ப்பைக் குறை கூறுவது போன்ற தவறுகளை எக்கணமும் செய்திடாதீர்கள்.

இருவரிடத்தும் விட்டுக் கொடுத்தல் பண்பும் புரிதலும் இருக்க வேண்டும். எப்போதும் ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்து செல்கிறார் என்றால் அதற்குப் பெயர் அன்பு அல்ல, அடிமைத்தனம்.

திடீரென கருத்து முரண்பாடு ஏற்படும் நேரத்தில், முடிந்தளவு அன்றைய தினத்தின் பிரச்னையை எப்படிச் சரி செய்யலாம் என்பதைக் குறித்து மட்டும் சிந்தியுங்கள்.

அதை விடுத்து  பழைய பஞ்சாங்க பிரச்னைகளையும்  சேர்த்துப் பேசி, மேலும் ’ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி’ உறவுகளுக்குள் தேவையற்ற மனஸ்தாபங்கள் உருவாக வழிவகுத்து விடாதீர்கள்.

சிறிது நேரம் தனிமையில் அமர்ந்து பிரச்னைக்கு யார் காரணம், எது காரணம் என்பது குறித்து யோசியுங்கள்.

உங்கள் இணையரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, யார் மீது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள். இங்கு ஆண், பெண் என்கிற பாகுபாடெல்லாம் இருக்கக் கூடாது.

’இறுகப்பற்று’ என்கிற திரைப்பம் தம்பதியர் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கதைக்களம். வெவ்வேறு விதமான சூழலில் இருக்கும் வெவ்வெறு விதமான எண்ணங்களும் குணங்களும் கொண்ட மூன்று தம்பதியர் வாழ்க்கை முறையையும், அவர்கள் இணையரை அணுகும் விதத்தையும் பற்றியது. அப்படத்தினை  பார்க்கும் போது ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் உங்கள் பிம்பம் தெரிந்தால், அதிலிருந்து உங்களைச் சரி செய்து கொள்வதற்கான வழியையும் அவர்களே சிறப்பாகக் கூறியிருப்பார்கள்.

உங்கள் இணையரின் மீது உண்மையான அன்பு இருப்பின் அவர்களை அடக்கி ஆளவும், அடிமைத்தனப்படுத்தவும் முயற்சிக்க மாட்டீர்கள்.

அவ்வப்போது ஒருவரின் சிறு சிறு செயல்களை மற்றொருவர் பாராட்டுவது போன்ற நல்ல பண்புகளையும் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

உங்களைத் திருமணம் செய்து கொண்டதற்காக உங்கள் இணையருடைய தனி மனித சுதந்திரத்தைப் பறித்து விடாதீர்கள்.

தனி மனித உணர்வுகள் மதிக்கப்படவும் வேண்டும். அதற்கு முன்னுரிமை வழங்கப்படவும் வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் விருப்பம் போல இப்பிரபஞ்சத்தில் வாழ உரிமை இருக்கிறது.

பிறரிடம் பேசுவதற்கோ, ஒரு பொருளைத் தேர்வு செய்வதற்குக்கூட உங்கள் விருப்பத்தையும், கருத்தையும் எதிர்பார்க்கும்படியாக அவர்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்காதீர்கள்.

எந்தவொரு தருணத்திலும் உங்களைச் சார்ந்து இல்லாமல், அவர்களே  சுயமாக நிற்கும்படியாக இருக்க வேண்டும்.

குடும்ப கடமைகளையும் தேவைகளையும் உணர்ந்து,   இருவரும் வேலைகளைச் சரி சமமாகப் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முயற்சியுங்கள்.

பொருளாதாரச் சுமை ஆண்களுக்கானது மட்டுமல்ல என்பதைப் பெண்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆரம்பத்தில் இல்லாத புரிதல் முதுமை அடைந்ததும் பலருக்கு வரும்.

’நமக்காக ஒருவர் வேண்டும், நேசிப்பதற்கும், நேசிக்கப்படுதற்கும்.”

இங்கு அனைவரின் தேடலும், தேவையும் இது தான்.

படைப்பாளர்:

 இராஜதிலகம் பாலாஜி. ஜெர்மனியில் வசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளர். பிரதிலிபி தமிழ், பிரித்தானிய தமிழிதழ், சஹானா இணைய இதழ் பலவற்றில் கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் பல எழுதி வருகிறார். சிந்தனைச் சிறகுகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்.