(கல்யாணமே வைபோகமே – 4)

கணிசமான அளவில் விவசாய நிலங்களை வைத்து பண்ணையம் செய்து கொண்டிருந்த வெகு சிலரைத் தவிர, வாழ்வாதாரம் இல்லாமல்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய, கீழ் மட்டத்திலிருந்த பெரும்பாலான பார்ப்பனர்கள் வருமானத்திற்காக, சிறுகச் சிறுக கிராமங்களிலிருந்து  நகரங்களுக்குக் குடி பெயரத் தொடங்கினர்.

பிரபலமான கோவில்கள் இருக்கும் முக்கிய திருத்தலங்களில் வணிகரீதியாகப் பிழைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கவே, அங்கிருப்பவர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே புலம் பெயராமல் அங்கேயே  இருக்கின்றனர் எனலாம். சிறு சிறு கிராமங்களில் இருக்கும், வருமானத்திற்கு வழியில்லாத கோவில் பணிகளைச் செய்ய ஒன்றிரண்டு பார்ப்பன குடும்பங்கள் மட்டும் அங்கேயே இருக்கும் நிலை வந்துவிட்டது. அதுவும் பெரும்பாலானவர்கள் அந்தந்த ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாகக்கூட இருப்பதில்லை. அங்கே வந்து குடியேறி, மாதச் சம்பளத்திற்காக வேலை செய்பவர்களாக இருக்கின்றனர்.

ஓர் ஊரில் வசித்துக்கொண்டு, அக்கம் பக்கத்தில் இருக்கும் மூன்று நான்கு ஊர்களில் உள்ள கோவில்களையும் சேர்த்து பூஜை செய்யும் பார்ப்பனர்களெல்லாம் இருக்கின்றனர். கூடவே அந்தந்த ஊர்களில் உள்ளவர்களுக்குப் புரோகிதமும் செய்வதால், ஓரளவுக்கு அவர்களால் வருமானம் ஈட்ட முடிகிறது. மற்றபடி, 1980 காலகட்டங்களுக்குள் பெரும்பாலான கிராமங்களில் பார்ப்பனர்களே இல்லை என்கிற நிலை வந்துவிட்டது. 

ஓரளவுக்குப் பொருளாதார பின்புலம் இருந்தவர்கள், உயர்கல்வி பெற்று நல்ல அரசாங்க வேலைகளும், தனியார் நிறுவனங்களில் பெரும் பதவிகளிலும் இருந்து கொண்டு, நல்ல வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.  தங்களைச் சார்ந்தவர்களையும் அரவணைத்துக்கொண்டனர். போக, சொற்பச் சம்பளத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் மற்றும் நான் முதல் அத்தியாயத்தில் சொன்னது போல, கடைநிலை ஊழியர்களாக வாழ்ந்தவர்கள் அதிகம். 

மாம்பலம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, நங்கநல்லூர், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற ஊர்கள் பார்ப்பனர்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளாக இருக்கிறன. தொடக்க காலத்தில் மாம்பலம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில், ஒண்டுக் குடித்தன வீடுகள் ஏராளம் இருந்தன. வீட்டின் உரிமையாளர்கள் பார்ப்பனர் அல்லாதவராக இருந்தாலும்கூட, வீடுகளைப் பெரும்பாலான பார்ப்பனர்களுக்குத்தான் வாடகைக்கு அளித்தனர். குறைந்தபட்சம் ஐந்து வீடுகள் தொடங்கி, நாற்பது வீடுகள் கொண்ட ஒண்டு குடித்தனங்கள் அங்கெல்லாம் சகஜமாக இருந்தன. 

தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம். குளியலறை கழிவறை அனைத்தையுமே எல்லாக் குடும்பமும் பகிர்ந்து உபயோகிக்க வேண்டிய சூழல். கிராமங்களில் விஸ்தாரமான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இதெல்லாம் அசவுரியமாகவே இருந்தது. ஆனாலும் மிகவும் குறைந்த வாடகையில் இது போன்ற வீடுகள் கிடைக்கவே, பெருவாரியானவர்கள் இதைத் தேர்ந்தெடுத்தார்கள். 

தொடக்கத்தில் ஆண்கள் மட்டும் வேலை தேடிக்கொண்டு பட்டினத்திற்கு வந்துவிட, திருமண பந்தத்தில் இணைந்த பெண்களும் பிள்ளை குட்டிகளுடன் இங்கே குடி பெயர்ந்தனர். நம் நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னான காலகட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட புதிய சட்டங்களும், கிராமப்புறங்கள் முழுவதும் நிறுவப்பட்ட பள்ளிகளும் பெண்கள் அடிப்படை கல்வி பெற வழி வகுத்தன.

ஆனாலும் கல்லூரிப் படிப்பு என்பது பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்த குடும்பத்துப் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஊரை விட்டுத் தொலைவில் பெண்களைப் படிக்க அனுப்ப மக்கள் பயந்ததும் மற்றுமொரு காரணம். அதையும் உடைத்துக்கொண்டு படித்து மேலே வந்தவர்களும் சொற்பமாக இருக்கவே செய்தனர். குழந்தைத் திருமணத்திலிருந்து தப்பினாலும், பதினெட்டு வயது ஆனதோ இல்லையோ, பெண்களைத் திருமணம் செய்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர் எனலாம். 

மேற்படிப்பு, மதிப்பான உத்தியோகம் எனத் தங்கள் மனதுக்குள்ளேயே வளர்த்துக்கொண்ட பெண்களின் கனவுகள் மொட்டிலேயே கருகிப் போயின. நடைமுறை புரிந்து, இதெல்லாம் நமக்கு அவசியமற்ற ஒன்று என, வீட்டு வேலைகளைப் பிடித்துக்கொண்டு கல்வியில் ஆர்வமே காட்டாத பெண்கள் மட்டும் நிம்மதியாகக் கல்யாணக் கனவுகளைக் கண்டனர்.

எது எப்படி இருந்தாலும், வீட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் கொண்டுவந்து நிறுத்தும் வரனை, தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, சிறு மறுப்பு கூடச் சொல்லாமல் மணந்துகொண்டு நகரங்களுக்கு வந்தனர். அத்துடன் சரி, இனி அவர்களுடைய வாழ்க்கை அவர்கள் பாடு என்கிற நிலைதான். தெருவை அடைத்து, வீட்டுவாசலில் பந்தல் போட்டு நடந்த திருமணங்கள், இவர்கள் தலைமுறையுடன் முடிவுக்கு வந்தன. அதேபோல, பெண்கள் விருப்பத்தைக் கருத்தில் கொள்ளாமல், ஆடு, மாடு போல அவர்களைக் கைமாற்றிவிட்ட நிலையும் முடிவுக்கு வந்தது எனலாம். 

  • அடிப்படைக் கல்வியைக் கூட முடிக்காதவர்கள்…
  • பள்ளிப்படிப்பை மட்டும் முடித்தவர்கள்… (SSLC வரை மட்டுமே பள்ளியில் படிக்க இயலும். PUCயை தொடர, கல்லூரிகளில் சேர வேண்டும். ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி போன்றவற்றுக்கும்கூட வெளியூரில் சென்று தங்கிப் படிக்கவேண்டிய சூழல்தான் இருந்தது. +2 பாடத்திட்டம் வந்த பிறகு, பெண்கல்வியில் மேலும் சிறந்த முன்னேற்றம் வந்தது) 
  • கல்லூரிப் படிப்பையோ தொழிற்படிப்பையோ முடித்தவர்கள் (நகரங்களில் வசித்தவர்கள் / முந்தைய தலைமுறையிலேயே நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் போன்றோருக்கு இதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. நெருங்கிய உறவினர்கள் வீட்டில் தங்கிப் படித்த பெண்களும் இருந்தனர்)
  • வேலைக்குச் சென்று சுய வருமானம் பெற்றவர்கள்

இவ்வாறாகப் பெண்களின் நிலையைப் பொறுத்து, பிரிக்கலாம். 

ஒரு குறுகிய வட்டத்தைவிட்டு வெளியேறிய பெண்களுக்கு நகர வாழ்க்கை வேறு ஒரு புது பரிமாணத்தைக் காண்பித்தது. மாமியார் நாத்தனார் போன்றோருக்குக் கீழ்ப்படிந்தே கிடக்கவேண்டிய நிலை மாறினாலும் புதிதாக நிறையப் பிரச்னைகளும் உருவாகின.

வேலைக்குச் சென்றவர்களுக்கு ஒருவிதச் சிக்கல் என்றால், பொருள் ஈட்டாமல் கணவன் கொண்டுவந்து கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்தியாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் வாழ்ந்த பெண்களுக்கு வேறு விதமான சிக்கல்கள்.

சம்பாதிக்கும் பணத்தைக் குடும்பத்துக்காக மட்டுமே செலவு செய்து பொறுப்புடன் நடந்த ஆண்கள் அனேகமானோர் இருந்தனர். குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் கல்வியை கைவிட்டு, கிடைத்த வேலைகளைச் செய்து வளமான வாழ்க்கையை தொலைத்த ஆண்களும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கமே.

குதிரைப் பந்தயத்தில் மூழ்கி, தன் குடும்பத்தை விட்டே விலகி வந்து, தனியாக ஒரு மூலையில் ஒண்டிக் கிடந்த ஒரு நபரைப் பார்த்திருக்கிறேன். குதிரைப் பந்தயத்துக்கு என ஒரு சிறு கையேடு இருக்கும். அதைக் கட்டுக் கட்டாக வைத்திருப்பார். படுத்து உறங்க மட்டும் நாங்கள் குடியிருந்த குடியிருப்புக்கு வருவார். அவர் என்ன வேலை செய்கிறார், என்ன சம்பாதிக்கிறார், சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார் என எதுவும் அங்கிருந்த யாருக்கும் தெரியாது. அவருடைய குடும்பம் பற்றியும் எதுவுமே தெரியாது. இப்படிப் பட்ட ஒரு ஆண் அவரது குடும்பத்துக்கு என்ன நன்மையைச் செய்திருப்பார்?

கும்பல் கூடிக்கொண்டு புகையிலை, சிகரெட், குடி, சினிமா, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்ற சூதாட்டங்கள் என ஆண்கள் ஆடிய ஆட்டத்தை பற்றி ஒரு வரியில் சொல்லி விளக்குவது கடினம். லாட்டரி சீட்டு வாங்கியே, சம்பாதிக்கும் சொற்பப் பணத்தையும் தொலைத்த கூட்டம் இங்கே இருந்தது. குறிப்பாக, பெரும்பாலான கீழ் நடுத்தட்டு வர்க்க ஆண்கள் இப்படித்தான் இருந்தார்கள்.

குடித்துவிட்டு பெண்களை அடித்து, உதைத்து குடும்ப வன்முறைக்கு உட்படுத்துவதில் பார்ப்பன ஆண்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை என்பதை இங்கே வெளிப்படையாகச் சொல்லித்தான் ஆகவேண்டும். குடி மட்டும் இல்லை, ஆண் அகங்காரம் என்பதே ஒரு போதைதான், பெண்களின் மீது கை நீட்ட அதுவே போதுமானதாக இருக்கிறது! 

போதும் போதாத குறைக்கு, தண்டலுக்குக் கடன் வாங்கி, திரும்பக் கொடுக்க முடியாமல், கடன் கொடுத்தவர் முன்னால்  கூனிக் குறுகி அவமானப்படும் சூழலில் வளரும் பிள்ளைகளின் நிலையை நாம் கொஞ்சம் எண்ணிப் பார்க்கவேண்டும். எந்தக் காலத்தில் ஆண்கள் வீடு தங்கினார்கள்? வீடே கதி எனக் கிடக்கும் பெண்களும், பிள்ளைகளும்தான் இத்தகைய சூழல்களை எதிர்கொள்ளநேரும்!

குடும்பப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க இயலாமல், கணவனிடம் சண்டையிட்டுப் போராடி, ஒரு முன்னேற்றமும் இல்லாமல்  சோர்ந்துபோய் மனம் குமுறி பெண்கள் வடித்த கண்ணீர், உண்மையில் அடுத்த தலைமுறைக்கு அவர்களிட்ட சாபமே!

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ந்து வந்த சில படங்கள் பேசிய ஆணாதிக்கப் பார்வையிலான ‘பெண்ணியம்’, உள்ளதையும் கெடுத்தது எனலாம். நேரடியாக அவை ஒரு செய்தி சொன்னால், அதன் உள்ளே ஒளிந்திருந்த மற்றொரு ஆழமான பொருள், பெண்களை அவர்கள் நிலையிலிருந்து மீளவே முடியாமல் அழுத்தும் தன்மை உடையதாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

  • கல்வியும் சுய சம்பாத்தியமும் பெண்களுக்குள் அகங்காரத்தை விதைக்கும்.
  • படித்து வேலைக்குப் போகும் பெண்களுக்கு, குடும்ப வாழ்க்கை நிம்மதியாக அமையாது. அவர்களுக்கு விவாகரத்து மட்டுமே தீர்வு.
  • கணவனால் கை விடப்பட்ட பெண்களுக்குத்தான் கல்வி அவசியும். அவர்களால்தான் தங்கள் பணியில் உயர்ந்த பதவிகளை அடைய முடியும் வேலைக்குச் செல்லும் பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களாக மாறிப்போவார்கள்.
  • பெண்கள் வேலை செய்து சம்பாதிக்கத் தொடங்கினால், வீட்டு ஆண்கள் பொறுப்பற்று கிடப்பார்கள். அவள் சாகும்வரை திருமணம் செய்துகொள்ளாமல் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டியதுதான்.

மீண்டும் மீண்டும் மனுதர்மம் சொல்லும் அதே கருத்தை நவீனமாகச் சொன்ன இந்தப் படங்களால், ஆண்கள் பெண்களை இன்னும் அதிகம் தங்கள் கண்காணிப்புக்கு உள்ளேயே வைத்திருந்தனர் என்றால் அது பொய்யில்லை.

‘நானும் என் நிலையை மேம்படுத்திக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன், நீயும் படிக்காதே, வேலைக்குப் போகாதே. ஆனால் என்னைக் கல்யாணம் செய்துகொள். என்னுடன் உறவு கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள். போராடி அவர்களை வளர்த்து ஆளாக்குவதை மட்டுமே உன் வாழ்நாள் கடமையாகக் கொள்!’

என்ன ஓர் அரக்கத்தனமான சிந்தனை இது?

சில தினங்கள் முன், ‘பார்ப்பன பெண்களின் குலத் தொழில் என்ன?’ எனச் சமூக வலைத்தளப் பதிவு ஒன்று கண்ணில் பட்டது. அதன் பின்னூட்டத்தில், பல ஆண்கள் தங்கள் வக்கிரங்களைக் கொட்டி பதில் சொல்லியிருந்ததைக் கண்டு அருவருத்துப் போனேன். பார்ப்பனப் பெண்கள் மட்டுமில்லை, எந்த வர்ணத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், பெண் அடிமை மட்டுமே! ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு உள்ள இடம்தான் பெண்களுக்கு. முதலில், அவர்களுக்கென்று குலமே கிடையாது! பிறகு ஏது குலத் தொழில்?

பிள்ளைகளுக்கு வயிறார உணவளிக்க, அவர்களைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு உயர்த்த, குளத்தங்கரை வேலை போன்ற எந்த வரையறைக்குள்ளும் அடங்காத பல பணிகளைப் பெண்கள் செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஆனால், ‘House wife’ என்று வெகு சாமானியமாக மதிப்பிடப்படும் பெண்கள், வீட்டுக்குள் இருந்துகொண்டே வருமானம் ஈட்ட தங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு தாங்களே தங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். கூடவே  நம் சமூகமும் பல வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுத்தது. இது பார்ப்பனப் பெண்கள் என்றில்லை, அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்.

சமையல், வீட்டுவேலை, (பணம் படைத்த பார்ப்பனர்களின் வீட்டில் வேலை செய்ததெல்லாம் பார்ப்பன பெண்களே) அப்பளம், வத்தல், வடகம், முறுக்கு, அதிரசம் போன்ற பண்டங்களைச் செய்து விற்பனை செய்வது, பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுப்பது, வீட்டிலிருந்துகொண்டே துணிகளை தைத்துக் கொடுப்பது போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். 

இதுபோன்ற தொழிற் திறமைகள பெற இயலாத சூழலில் வாழ்ந்த பெண்கள் என்ன செய்திருப்பார்கள்?

ஒரு காலகட்டத்தில் ஒயர் கூடை வியாபாரம் மிகவும் பிரபலமாக இருந்தது. அதை முழு நேரத் தொழிலாகச் செய்தவர்களெல்லாம் இருந்தனர். ஒயரை மொத்த விலைக்கு வாங்கிவந்து எடை போட்டு, அளந்து கொடுப்பார்கள். பெண்கள் அதை வாங்கிவந்து கூடையாகப் பின்னி, திரும்பக் கொடுப்பார்கள். கூடையின் அளவைப் பொருத்து அதற்குக் கூலியாக ஒரு தொகை கிடைக்கும் (திரையரங்கில் படம் பார்க்க வரும்போதுகூட அந்தக் கூடைகளை கையில் எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். கண்களால் பார்த்து அதைப் பின்னுவதெல்லாம் இல்லை. கை அதன் போக்கில் பின்னி முடித்துவிடும். இதை நேரில் பார்த்தால் அவ்வளவு வியப்பாக இருக்கும்)

அருகில் இருக்கும் தையல் கடைகளில் தைத்த இரவிக்கைகளை வாங்கிவந்து அதற்குக் கொக்கி கட்டிக் கொடுத்தால், அதற்கு ஒரு சிறு தொகை ஊதியமாகக் கிடைக்கும். தங்கள் வீட்டிலிருந்துகொண்டே, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை பராமரித்து, அதற்காக ஒரு கட்டணத்தை பெற்றுக்கொண்ட பெண்கள் நிறையவே இருந்தனர்.

ஆண்களின் வருமானம் சிகரெட், குடி, ரேஸ், சூதாட்டம் எனச் சிதறிப் போனாலும், பெண்களின் சிறு சம்பாத்தியம் என்றாலும் கூட அது சிந்தாமல் சிதறாமல் குடும்பத்துக்கே சென்றது.

வீட்டு வேலை, பிள்ளைகள் பராமரிப்பு, தண்ணீருக்கான தேடல் போக, தங்களுக்குக் கிடைத்த சிறு ஓய்வு நேரத்தைகூட உழைப்பாக மாற்றி நம் பெண்கள் குடும்பத்துக்காக ஈட்டிக் கொடுத்த வருமானம் யாவும் கணக்கிலேயே வருவதில்லைதானே? இவற்றையெல்லாம் யாராவது ஆவணப் படுத்தியிருப்பார்களா என்றே தெரியவில்லை! இவ்வளவு உழைப்பையும் பெண்கள் கொட்டிக் கொடுத்தது தாங்கள் பெற்ற பிள்ளைகளின் வளமான எதிர்காலத்தை மனதில் சுமந்துதானே?

உருப்படாத தகப்பன்களைப் பார்த்து வளரும் ஆண்பிள்ளைகள், வீட்டுக்கு அடங்காமல், பள்ளிப் படிப்பைக்கூட உருப்படியாக முடிக்காமல் வீணாகப் போனார்கள். விதிவிலக்காகப் பொறுப்புடன் படித்து நல்ல பணிக்குப் போய் முன்னேறியவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால், தாயைப் பார்த்து வளர்ந்த பெண்பிள்ளைகள் நூறு சதவிகிதத்தினரும் கல்வியில் ஜொலித்தார்கள். முன்னேறிப் போய்க்கொண்டே இருந்தார்கள். 

இதற்கான சிறு எடுத்துக்காட்டு என்று பார்த்தால், தட்டெழுத்து சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்களில் அதிகம் பயின்றது பெண்களே. வருடந்தோறும் பொதுத் தேர்வுகளில் அதிகச் சதவிகிதம் தேர்ச்சி பெற்றதும், பெறுவதும் இன்றுவரை பெண்களே!

வீட்டில் அடைந்துகிடந்த பெண்களை விட, வேலைக்குப் போய் மாத ஊதியம் பெறும் பெண்கள் நிலை இன்னும் சவாலாக இருந்தது. குடும்பத்துக்குள் சிறு பிசகு என்றாலும், ‘உன்னால்தான்’ என்று குற்றம் சாட்டி எல்லோர் விரலும் அவள் பக்கம்தானே நீளும்? அவளுடைய கல்வியும் அவள் ஈட்டும் வருமானமும் போற்றப்படவில்லை. மாறாக, அவளைக் குற்றம்சாட்ட உதவும் கருவியாகவே இருந்து.  எனவே, படித்திருந்தாலும், சம்பாதித்தாலும், ‘நான் எந்த விதத்திலும் உயர்ந்துவிடவில்லை’ எனத் தன்னை புனிதராக நிரூபிக்க, அவள் இன்னும் அதிக முனைப்புடன் போராடவேண்டியதாக இருந்தது.

அலுவலகத்தில் அவள் வகிக்கும் பதவியைப் பற்றியோ அவளது பணிச்சுமை பற்றியோ வீட்டிலுள்ள  யாருக்கும் பெரிதாக அக்கறை இருந்திருக்காது. நேரத்துக்குச் சமைக்க வேண்டும். வீட்டு வேலைகள் எதிலும் குறை வைக்கக் கூடாது. கணவனுக்கான பணிவிடைகளைக் கவனமாகச் செய்துமுடிக்க வேண்டும். வீட்டுப் பெரியவர்கள் மனம் சற்றும் கோணாமல் அதிலும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாகப் பிள்ளை வளர்ப்பில், எந்த சிறு குற்றமும் ஏற்பட்டுவிடக் கூடாது. அனைத்தையும் விட முக்கியமாக, நாள், பண்டிகை, பூஜை, புனஸ்காரம், விரதம், திவசம், திங்கள் அனைத்தையும் மிகச் சிரத்தையாகப் போற்றி செய்து முடித்தாக வேண்டும்.

இதுபோன்ற சடங்குகளின் மீதிருந்த புனிதக் கட்டமைப்பு, பெண்களின் மீது சாட்டையைச் சுழற்றி அவர்களை வேகமாகச் சுழல வைத்தது. ஓடி ஓடி ஓய்ந்து போனாலும், தங்கள் கடமைகளை விட்டு அவர்களால் விலக இயலவில்லை.  அனைத்துக்கும் மேலாக, அவளுடைய சம்பளம் முழுவதையும் மாமியாரிடமோ, கணவனிடமோ கொடுத்துவிட்டு, பயணக் கட்டணம் உள்பட தன் சொந்த செலவுகளுக்கும்கூட அவர்களிடம் கையேந்தி நிற்கவேண்டும். அனைத்துக்கும் கணக்கு சொல்லியாக வேண்டும்.  இதெல்லாம் எல்லோருக்குமே நடந்ததா என்றால், ‘நடக்கல, ஆனாலும் நடந்தது’ கதைதான்.

இப்படியெல்லாம் அம்மாக்கள் படும் பாட்டையெல்லாம் அடுத்த சந்ததிப் பெண்பிள்ளைகள் தெளிவாகப் பார்த்துக்கொண்டுதானே இருந்தார்கள்? அவர்களுடைய ஆழ்மன உணர்வுகளுக்குள் எல்லாமே பதிவாகிக்கொண்டேதானே இருந்தது? அது அவர்களுடைய எண்ணப்போக்கில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்? 

திரும்பும் பக்கமெல்லாம், சுவர்களில் சிவப்பு முக்கோணத்துடன் படங்கள் வரையப்பட்டு ‘நாம் இருவர். நமக்கிருவர்’ என்கிற வாசகத்துடன் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரங்களைத் தீவிரமாக மேற்கொண்ட காலகட்டம் ஒன்று இருந்தது. அது, பெண்களின் வாழ்கையில் ஏற்படுத்திய மாற்றமும், தற்காலத்தில் அதனால் உண்டான சிக்கலையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

  • உள்ளிருந்து ஒரு குரல்