உடலுறவில் கணவன் மனைவி இருவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான உச்சக்கட்ட இன்பம் கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு அதில் ஈடுபடும் இருவருக்குமே நிறைய புரிதலும் அன்பும் காதலும் கூடவே பாலியல் அறிவும் அவசியம் தேவை.

பாலியல் அறிவென்பது ஆண், பெண் உடலியல், உளவியல் பற்றிய பொதுவான அம்சங்களை அறிந்து வைத்திருப்பதும் தங்கள் துணைவருக்கிருக்கும் பிரத்யேக உடல் அமைப்பு மற்றும் உடலுறவு சார்ந்த ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருப்பதுமாகும்.
இதில் ஏதாவது ஒன்றை மட்டும் அறிந்து வைத்திருப்பதில் பயனில்லை.

தீண்டித் தீண்டித் தீயை மூட்டுகிறாயே …

தொடத் தொட மலர்வதென்ன…

தொட்டுவிடத் தொட்டு விடத் தொடரும், கை பட்டுவிட பட்டுவிட மலரும்…

எனத் தொடர்ச்சியான தொடுகைகளைப் பற்றிய நிறைய பாடல்களைக் கேட்டிருப்போம். ஒரே ஒரு முறை, ஒரே ஒரு இடத்தைத் தொட்டுவிடுவதால் மட்டும் கலவியில் இன்பத்தையோ , உச்சக்கட்டத்தையோ அடைய முடியாது. அவை கூடல் நேரத்தில் தொடர்ச்சியான தொடுகைகளாகவும்இயல்பான தருணங்களில் அவ்வப்போது, உங்கள் துணை எதிர்பாராத நேரங்களில் அவர்களைத் தொடுவதாகவும் அமைந்திருக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக உங்கள் மனைவி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கும் போதோ அல்லது சமையலறையில் மும்முரமாக சமைத்துக் கொண்டிருக்கும்போதோ, பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கும் போதோ, அலுவலக வேலையை வீட்டில் செய்து கொண்டிருக்கும்போதோ திடீரென இறுக்கமாகக் கட்டிக்கொள்ளுங்கள். பின்பக்கமாய் எதிர்பாராத நேரத்தில் தங்கள் துணைவன் கட்டிப்பிடித்துக் கொள்வது எல்லாப் பெண்களுக்குமே மிகப்பிடித்த ஒன்று.

மென்மையாக முத்தமிடுதல், கொஞ்சுதல், மென்மையாகவும் இறுக்கமாகவும் கட்டிப்பிடித்தல் இவற்றைச் செய்யும் போதே பெண்களின் உடலில் ‘ஆக்ஸிடோசின்’ மற்றும் ‘டோபமைன்’ சுரப்பு அதிகரிக்கத் தொடங்கி மகிழ்ச்சியுணர்வைத் தூண்டிவிடும். சட்டென ஒரு நொடியில் எல்லா வேலைக் களைப்புகளையும் தீர்க்கும் உற்சாக பானம் போன்றது இத்தொடுகை. கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.

உடலுறவைப் பொறுத்தவரை, திருமணத்திற்கு முன்பும் அதன் பிறகும் இந்தப் பொதுவான புரிதல்கள் இல்லாமலேயே, கூடலில் தனக்கு என்ன பிடிக்கும் தன் மனைவிக்கு என்ன பிடிக்கும் என்பதைக் கற்றுக் கொள்ளாமலேயே உடலுறவில் ஈடுபட்டு, குழந்தையும் பெற்று விடுகிறார்கள்.

அதன் பிறகு குழந்தைகளை வளர்ப்பதிலேயும் பணம் சம்பாதிப்பதிலுமேயே காலம் ஓடிவிடிகிறது. நாற்பத்தைந்து, ஐம்பது வயதிற்குப் பிறகுத் திரும்பிப் பார்த்தால் ‘கூடல்’ என்ற விஷயத்தை நினைத்தே பல மாமாங்கம் ஆகிவிட்டது என்பது புரியும். வாழ்க்கையில் எவ்வளவு இனிமையான தருணங்களை இழந்திருக்கிறோம் என்பது புரியவரும்.

அதற்குள் கணவன் மனைவிக்கிடையே ஒன்றிரண்டாக ஆரம்பித்த மனக்கசப்புக்கள் ஒரு பெரிய கோட்டைச் சுவரைப் போல் வளர்ந்து இருவரும் ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக்கூடப் பேச முடியாத நிலைக்கு வந்திருப்பார்கள். தினசரி பேச்சுவார்த்தையே அவர்களது குழந்தைகள் மூலமாகத்தான் நடந்து கொண்டிருக்கும். இதில் கொஞ்சுவதற்கும், கூடுவதற்கும் ஏது வாய்ப்பு…?

தம்பதிகள் ஐம்பது வயதைக் கடந்திருக்கும் காலகட்டத்தில், அவர்களது குழந்தைகளும் வளர்ந்து தங்கள் வேலையிலும் வாழ்க்கையிலும் பரபரப்பாகியிருப்பார்கள். தனித்து விடப்பட்ட அந்தப் பெற்றோர் மீண்டும் பேசி, தொட்டு, காதலையும் கூடலையும் தங்கள் கைக்குள் கொண்டுவர முயற்சியெடுக்க நினைத்தாலும் அந்த வயதில் அவர்களது ‘ஈகோ’ அதற்கு இடம் கொடுக்காது.

பெரும்பாலும் இந்த உறவு இடைவெளிக்கு அடிப்படைக் காரணமாக கணவர் தானிருப்பார் என்பதால், மனைவியின் மனதில் அந்த ரணங்கள் மிக ஆழமாகப் பதிந்திருக்கும். இத்தனை ஆண்டுகள் தனக்குத் தேவையான அன்பையும் காதலையும் கொடுக்காமல் சித்திரவதை செய்து விட்டு, இப்போது காலம் போன காலத்தில், அவருக்கு வேறு வழியில்லாதபோது, தன்னை நாடி வருகிறாரே என்ற எரிச்சல் மண்டும். தன்னை அவர் உபயோகப்படுத்திக் கொள்கிறார் என்ற ஆத்திரம் வரும் . அதனால், அவள் அவருடன் உறவுகொள்ள, ஒத்துழைக்க முன்வரமாட்டாள்.

தனியாக வாழும் பெண்ணொருத்தியை ‘எப்படி நீ காமம் இல்லாமல் வாழ முடியும்..?” என்று அவளைச் சுற்றியிருக்கும் அனைவரும் கேட்கும்போது, “தேய்ச்சுக்கவோ, தீய்ச்சுக்கவோ தெரியும்…” என்று அவள் பதில் சொல்வது போல் பாலகுமாரன் ஒரு நாவலில் எழுதியிருப்பார். அதைப்போல, ‘இத்தனை வருடங்கள் தனியாகவே இருந்து பழகி விட்டது. நீ உன் வேலையைப் பார்… நான் என் வேலையைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று மனைவி நகர்ந்து விடுவாள்.

இயல்பாக அவளைத் தொடுவதற்கும் சீண்டுவதற்கும் அடிப்படையான பரஸ்பர பாசம், அன்பு எதுவுமேயில்லாமல் வறண்டு போயிருக்கும் அச்சமயத்தில் , ஆண்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வீணாகத்தான் முடியும். எனவே, இந்த சிறு சிறு தீண்டல்கள், தொடுகைகளைத் திருமணமான முதல் நாளிலிருந்தே தொடர்ந்து செய்யத் தொடங்குங்கள். அந்தத் தீ ஒருபோதும் உங்களுக்குள் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சாதாரணமாக என்னென்ன விதமான தொடுகைகளை நீங்கள் பரஸ்பரம் பின்பற்றலாம், பெண்களுக்குக் கிளர்ச்சியூட்டக் கூடிய சிறப்பு மையங்கள் அல்லது புள்ளிகள் (Spots) எவையெவை என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பு மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேசி விடுவோம். அதுதான், கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பிறப்பு காலகட்டத்தில் செய்யப்பட வேண்டிய தொடுகைகள் மற்றும் உடலுறவு முறைகளைப் பற்றி.

மனைவி கர்ப்பமானதுமே மருத்துவரைச் சந்திக்கும் முதல் ஆலோசனை சந்திப்பிலேயே பெரும்பாலான ஆண்கள் கேட்கும் முதல் கேள்வி,”எப்ப டாக்டர் நான் என் மனைவியோட உடலுறவு வெச்சுக்கலாம்…?” என்பதுதான்.

இந்தக் காலகட்டத்தில் ஆணுறுப்பு பெண்ணுறுப்பிற்குள் செல்லும் இயல்பான உடலுறவு வைத்துக் கொள்வது பாதுகாப்பானதா, பரிந்துரை செய்யக்கூடியதா என்பதைப் பற்றியெல்லாம் முதலில் பேசி விடுவோம். சரியா?

பெரும்பாலான ஆண்கள், தங்கள் மனைவி அவளது கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகு சில மாதங்கள் வரையிலும் உடலுறவைத் தவிர்க்கிறாள் என்று குற்றம் சாட்டுவார்கள். அதனால், பதிலுக்கு அவர்களும் அச்சமயங்களில் அவளை அன்பாகத் தொடுவதையும் ஆதரவாக வருடிக் கொடுப்பதையும் உடலைப் பிடித்து விடுவதையும் செய்யாமல் தவிக்க விடுகிறார்கள்.

மாறாக, அவள் ஏன் அப்போது உடலுறவைத் தவிர்க்கிறாள், அவளது உடலில், மனதில் என்னென்ன மாற்றங்கள் அப்போது ஏற்படுகின்றன, அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் பாதிப்புகள் என்னென்ன என்று எதைப் பற்றியுமே அவர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளவும் முயற்சியெடுப்பதில்லை. ‘பெண்கள் உடலுறவைத் தவிர்க்கும் தருணங்கள்’ என்ற அத்தியாயத்தில் இதைப்பற்றியும், அதற்கான காரணங்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

ஆண்கள் அந்தக் காலகட்டத்தில் என்ன செய்ய வேண்டும், எந்த விதமான தொடுகைகள் அவளது உடலுக்கும், மனதிற்கும் தேவைப்படுகின்றன, அப்போது இயல்பான உடலுறவு வைத்துக் கொள்ளலாமா என்பதைப் பற்றி இப்போது பேசலாம்.

மனைவி கர்ப்பமாக இருக்கும்போதும், குழந்தை பெற்ற பிறகு உடலுறவில் ஈடுபட அவளது உடலும் மனமும் ஒத்துழைக்காத போதும் ஆண்கள் அவர்களைப் புறக்கணிப்பதும் கண்டுகொள்ளாமலிருப்பதும் மிக மிகத் தவறான செயல்.

Photo by Sergiu Vălenaș on Unsplash

ஏற்கெனவே, தங்கள் அழகு குறைந்து விட்டதோ அல்லது அறுவை சிகிச்சையால் தற்போது ஏற்பட்டிருக்கும் வலிகள் இப்படியே நிரந்தரமாகி விடுமோ என்றெல்லாம் பலவாறாக யோசித்துப் பெண்கள் ஒருவித மன அழுத்தத்திலிருப்பார்கள். இதைப் ‘பின்மகப்பேறு இறுக்கம்’ அல்லது ‘பின் மகப்பேறு மன அழுத்தம்’ (Postpartum depression) என்போம். இந்தச் சமயத்தில் கணவர் மனைவியைக் கண்டுகொள்ளாமலிருப்பதாலும், சிறு சிறு தொடுகைகளைச் செய்யாமலிருப்பதாலும் ‘தாங்கள் இதுவரை உடல் தேவைகளுக்காக மட்டுமே தங்கள் கணவரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறோம்’ என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாகத் தோன்றுகிறது.

இப்போது தன்னால் கலவியில் ஈடுபடமுடியாதென்ற ஒரே காரணத்திற்காகத் தன் கணவர் தன்னை மதிப்பதில்லை, மென்மையாகத் தொடுவதில்லை என்று நினைக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் நிறையப் பெண்களுக்கு தன் கணவர் வேறு யாராவது ஒரு பெண்ணிடம் சாதாரணமாகப் பேசினாலோ அல்லது அவர் வேலையிலிருந்து வீட்டிற்குச் சிறிது தாமதமாக வந்தாலோ சந்தேக உணர்வு தலைதூக்கும்.

இந்த உணர்வலைகள் அவ்வளவு சீக்கிரமாக அவர்களது மனதிலிருந்து மறையாது. குழந்தை பெற்றெடுத்த பிறகு மீண்டும் சில மாதங்களுக்குப் பெண்களால் உடலுறவில் ஈடுபடமுடியாமல் கூடப்போகும். சில பெண்கள் கர்ப்பகாலத்திலும், குழந்தை பெற்றெடுக்கும் காலகட்டத்திலும் தன் கணவன் தன்னிடம் அன்பாக நடந்துகொள்ளவில்லை என்ற காரணத்தினால், அதன் பிறகு வேண்டுமென்றே அவனைப் பழிவாங்குவதற்காகக் கூட, அவன் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக உடலுறவைத் தவிர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே இது ஒரு ‘சங்கிலித் தொடர் பிரச்னை’ (Chain reactions) என்பதைப் புரிந்து கொண்டு ஆண்கள் இந்தக் காலகட்டங்களில் தங்கள் மனைவியிடம் கூடுதல் அன்புடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களது உடலும் மனமும் மிகவும் சோர்வாயிருக்கும் நாள்கள் இவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பாதங்களை மென்மையாகப் பிடித்து விடுவது, வெதுவெதுப்பான நீரில், உப்பும் எலுமிச்சைச் சாறும் கலந்து அவளது கால்களை அதில் வைக்க உதவுவது போன்றவற்றைச் செய்யுங்கள்.

முதுகுப் பகுதியை மென்மையாகவும் பின் கழுத்தைக் கொஞ்சம் அழுத்தமாகவும் பிடித்து விடுங்கள். ஏனெனில் பின்னங்கழுத்துப் பகுதி என்பது நமது உடல் வலிகளும் மன அழுத்த உணர்வின் பாதிப்புக்களும் அதன் பின் விளைவுகளும் ஒருங்கே சென்று சேரும் ஒரு புள்ளி அல்லது மையம். எனவே, இந்தப் பகுதியைக் கொஞ்சம் அழுத்தமாகப் பிடித்து விடுவது இந்த உடல் மற்றும் மன வலிகளிலிருந்து அவள் மீண்டு வர உதவும்.

குனிந்து குழந்தைக்குப் பாலூட்டுவதால் இச்சமயத்தில் இன்னும் அதிகமாகவே முதுகும், பின் கழுத்துப் பகுதியும் வலிக்கும். அதனால் அங்கே கொஞ்சம் அழுத்தமாகப் பிடித்து விடுங்கள். அவளது வயிற்றுப்பகுதியிலும் தொப்புள் மீதும் தொப்புளைச் சுற்றியும் மிக மெதுவாக எண்ணெய் தடவி விடுங்கள். இது அவளது உடல் சூட்டைக் கொஞ்சம் தணிப்பதோடு உடலையும் மனதையும் மிகத் தளர்வாகவும் ஓய்வாகவும் உணர வைக்கும்.

குளிர்ச்சியான எண்ணெய்களோ அல்லது நல்லெண்ணெய்யோ உங்கள் மனைவிக்கு ஒத்துக்கொள்ளாமல், சளி, ஜலதோஷப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு . அந்த ஒவ்வாமை குழந்தைக்கும் தாய்ப்பால் மூலம் பரவும் என்பதால் அத்தகைய குளிர்ச்சியான எண்ணெய்களைத் தவிர்த்து விடுங்கள். சாதாரண, செக்கில் ஆட்டிய சுத்தமான, தரமான தேங்காய் எண்ணெயையோ அல்லது மேற்கத்திய நாட்டினர் உபயோகிப்பதைப் போல் ஆலிவ் எண்ணெயையோ பயன்படுத்துங்கள். அல்லது அவள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் உடலுக்குப் பூசும் வழுவழுப்பான, மென்மையான பிரத்யேகக் க்ரீம்களையும் (Body lotion) நீங்கள் பயன்படுத்தலாம்.

குழந்தைக்குப் பால் கொடுக்கும் காலகட்டத்தில், குனிந்து, உடலைச் சற்று வளைத்து பால் புகட்டுவதால் பெண்களுக்கு பின்னங்கழுத்தும் முதுகுத்தண்டும் பயங்கரமாக வலிக்கும். எனவே அப்பகுதிகளில் வெதுவெதுப்பான நீரினால் ஒத்தடம் கொடுங்கள். எண்ணெய் மசாஜ் செய்து விடுங்கள். பாலூட்டும் பெண்களுக்கு மார்பகங்களில் கணவர் எண்ணெய் மசாஜ் செய்து விடுவது மிகவும் தேவையான ஒன்று. அப்போது நீங்கள் கொடுக்கும் மென்மையான அழுத்தம் அவளது உடலில் எண்டோர்ஃபின் (Endorphins) சுரப்பையும், ஆக்சிடோசின் சுரப்பையும் அதிகரித்து மகிழ்ச்சியுணர்வைத் தூண்டும். இந்த எண்டோர்ஃபின் வலிகளைப் போக்குவதிலும் மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் சந்தோஷமான மனநிலையைக் கொடுப்பதிலும் மிக மிக முக்கியப் பங்காற்றுகிறது.

அதைவிட முக்கியமாக இச்சமயத்தில் பெண்களுக்குப் பொதுவாக வரும் தாய்ப்பால் கட்டிக் கொள்ளும் பிரச்னையைக் குறைக்கவும் நன்றாக, இலகுவாக பால் சுரப்பதற்கும் இந்த மசாஜ் உதவும். இவ்வாறு தொடர்ச்சியான தொடுகைகள் உங்களுக்கிடையே நிகழ்ந்து கொண்டேயிருந்தால், குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் மீண்டும் உடலுறவில் ஈடுபடும்போது, ’தன்னை இவர் கலவிக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்கிறார்’ என்ற எண்ணம் நிச்சயமாய் உங்கள் மனைவிக்கு வராது.

கர்ப்பமாவதற்கு முன்பு எப்படி நிகழ்ந்ததோ அதேபோல் மிக இயல்பாகவும் இன்னும் சொல்லப்போனால் அதைவிட உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் நெருக்கமாகவும் புரிந்து கொள்தலுடனும் உங்கள் கூடல் பொழுதுகள் அமையும். உடலுறவைப் பொறுத்த வரையில் கர்ப்ப காலத்தின்போது, ஆண்கள் மேலிருந்து செயல்படும் (Male on top) முறைதான் தவிர்க்கப்படவேண்டுமேயொழிய மற்ற முறைகளைக் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று சிலர் வலியுறுத்துகிறார்கள். ஏற்கெனவே கருக்கலைப்பு நடந்திருக்கவில்லை, முற்றிலும் ஆரோக்கியமான உடலுடனிடருக்கிறாள் எனும்பட்சத்தில்பெண் ஆணின் மேலே இயங்கும் முறை, பக்கவாட்டிலிருந்து புணரும் முறைகள் அல்லது நின்றுகொண்டு செய்யும் முறைகளைப் பின்பற்றலாம் எனப் பலரும் ஆலோசனை சொல்வார்கள். ஆனால், இந்த அனைத்து முறைகளையுமே தவிர்த்து விடுவது நல்லது. ஆணுறுப்பு பெண்ணுறுப்பிற்குள் நுழையும் எந்தப் பாலுறவு முறையாயிருந்தாலும் அது குழந்தைக்குப் பாதுகாப்பற்றதுதான். என்னதான் ’ஊடுகதிர்’ (ஸ்கேன் – Scan) செய்து நீங்கள் அடிக்கடிப் பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டாலும் எந்தளவிற்கு கரு ஸ்திரத்தன்மையுடனிருக்கிறது, எப்போது அதன் கோணம் (பொஸிஷன் – Position) மாறுகிறது என்பதையெல்லம் நொடிக்கு நொடி உங்களால் துல்லியமாகக் கணித்துக்கொண்டேயிருக்க முடியாது.

Photo by Deon Black on Unsplash

உங்கள் மனைவியின் உடல் நிலையிலும் உடலுறுதியிலும் அவ்வப்போது நிறைய பலகீனங்கள் வரலாம். எனவே, மாற்று வழியான ஆண், பெண் இருவருமே ஒருவரையொருவர் மகிழ்வித்துக்கொள்ளும் வாய்வழிப்புணர்வை (Oral sex) மட்டும் பின்பற்றுவது நல்லது. இதைத்தான் பெரும்பாலான மகப்பேறு மருத்துவர்களும், பாலியல் நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். க்ளைட்டரஸை நாக்கினால் தூண்டி உங்கள் மனைவியை உச்சக்கட்டமடைய வையுங்கள். அப்போது தூண்டப்படும் மகிழ்வுணர்வு உங்கள் மனைவியின் மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, குழந்தையின் மன வளர்ச்சிக்குமே சிறந்தது. குழந்தை பிறந்த பிறகும், அது சுகப்பிரசவமாகயிருந்தாலும் அறுவை சிகிச்சையாகயிருந்தாலும் இம்முறையில் உறவு கொள்ளும்போது அவளது உடலில் ஆக்ஸிடோசினும் எண்டோர்ஃபினும் தூண்டப்படுகின்றன. இவை சுரக்கும்போது அவளுக்கு மகிழ்வுணர்ச்சியைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடல் காயங்களையும் விரைவில் குணப்படுத்த உதவுகின்றன.

இந்தமுறையில் பெண்கள் விரைவில் உச்சக்கட்டமடையவும் முடியும். ஆணுறுப்பு வெஜைனாவிற்குள் ஊடுருவும் இயல்பான கலவியில் (Vaginal penetration sex) பெரும்பாலான பெண்கள் உச்சக்கட்டமே அடைவதில்லை என்பதைப்பற்றி இதற்கு முந்தைய அத்தியாயங்களில் நிறையவே பார்த்துவிட்டோம்.

அந்த முறையில் உச்சக்கட்டமடையும் மிக வெகுசிலப் பெண்களும் ஒரு ஆண் குறைந்தது பதினான்கு நிமிடங்கள் கலவியில் ஈடுபட்டால்தான் அவர்களால் உச்சமடையமுடிகிறது என்பது ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 2304 பெண்களைப் பங்கேற்க வைத்து நடத்தப்பட்ட அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியில் இதைக் கண்டுபிடித்தனர். சுய இன்பத்தில் ஈடுபடும்போது பெண்கள் எட்டு நிமிடங்களிலேயே உச்சக்கட்டம் அடைந்துவிடுவதையும் இதில் கண்டறிந்தனர்.

ஒவ்வொரு பெண்ணுக்குமே இந்த உச்சக்கட்டமடையும் கால அளவில் சில சிறிய மாறுபாடுகள் முன் பின் இருக்கலாமேயொழிய பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்காது.

2020 ஆம் ஆண்டு, நிறுத்தக் கடிகாரத்தைப் (Stop watch) பயன்படுத்தி செய்யப்பட்ட ஆராய்ச்சியில் பெண்களுக்கு ஏற்படும் உடலுறவுச் செயல்முறைச் சுற்றின் ‘முதல் நிலையான தூண்டப்படுதல்’ (Arousal or Excitement phase) முதல் மூன்றாம் நிலையான உச்சக்கட்டம் (Orgasm) வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது (Time from arousal to orgasm). இந்த ஆய்விலும் கலவிக்குத் தூண்டப்படுவதிலிருந்து உச்சக்கட்டம் அடைவதற்கு ஒரு பெண்ணுக்கு ‘ஆறு முதல் இருபது நிமிடங்கள்’ தேவைப்படுகின்றன, அதாவது சராசரியாக ‘பதினான்கு நிமிடங்கள்’ தேவைப்படுகின்றன என்று கண்டறியப்பட்டது. இந்தக் கால அளவு IELT (Intravaginal ejaculatory latency time) எனப்படுகிறது. (Ref: Psychologytoday.com 15 January 2021)

பதினான்கிலிருந்து இருபது நிமிடங்கள் வரை பாலுறவில் இயங்குவதென்பது பெரும்பாலான ஆண்களுக்கு மிக மிகக் கடினம். இதற்கு சிறந்த அளவில் மூச்சுக் கட்டுப்பாடு, உடல் கட்டுப்பாடு, மற்றும் மனக்கட்டுப்பாடு இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம். பெரும்பாலான ஆண்களுக்கு இரண்டு, மூன்று நிமிடங்களிலேயே விந்து வெளியேறி விடுவதால், அவர்களது மனைவியை உச்சக்கட்டம் அடைய வைக்க முடியாமல் போய்விடுகிறது. சொல்லப்போனால் பெண்களுக்கு அப்போதுதான் கலவியின் முதல் நிலையான தூண்டுதல் நிலையிலிருந்து அடுத்த நிலையான Plateau க்குச் செல்லும் நேரம். பெண்களுக்குப் பாதி கூட முடிந்திருக்காத நிலையில், ஆண்கள் கலவியையே முடித்து விடுகிறார்கள்.

இவ்வாறு பாதியில் நின்று விடும் உடலுறவு பெண்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் ஆணின் மேல் மிகக் கடுமையான கோபத்தையும், ‘தான் ஒரு போகப்பொருளாக மட்டும் உபயோகப்படுத்தப்பட்டு விட்டோம்’ என்ற சுய கழிவிரக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதிலும் அவன் தன் வேலையை முடித்ததும் உடனே தூங்கப்போய் விட்டால் கேட்கவே வேண்டாம். ”நான் என்ன உனக்குத் தூக்க மாத்திரையா…?” என்று கணவனின் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும்போல் ஆத்திரம் பொங்கும்.

இதற்குத்தான் வாய்வழி உறவை ஆண்களுக்குப் பல பாலியல் நிபுணர்களும் பரிந்துரை செய்கிறார்கள். வாய்வழி உறவில் ஒரு பெண் மூன்றிலிருந்து நான்கு நிமிடங்களுக்குள் உச்சக்கட்டமடைந்து விடுவாள். அதிலும் கிவின் முறை (Kivin method) என்று சொல்லப்படும் பக்கவாட்டில் சாய்ந்தபடி கிளிட்டரஸின் நுனிப்பகுதி நாவால் தூண்டப்படும்போது சராசரியாக மூன்று நிமிடங்களிலேயே பெண்ணால் உச்சக்கட்டமடைந்து விட முடியும். (Ref:wellandgood.com 5 August 2021)

கலவி முடிந்து ஆண்களுக்கு விந்து வெளியேறியவுடன் உங்கள் மனைவிக்கு இந்த முறையைப் பயன்படுத்தி அவளையும் உச்சக்கட்டமடைய வையுங்கள். ஒன்றும் அவசரமில்லை, மூன்று நிமிடங்கள் கழித்து நீங்கள் தூங்கச் செல்லலாம்!

எந்தக் காரணத்தைக் கொண்டும் உடலுறவில் நீங்கள் உச்சக்கட்டமடையத் துணை நிற்கும் உங்கள் மனைவியை அதிருப்தியுடன் தூங்கச் செல்ல விடாதீர்கள். இது மிகுந்த மன உளைச்சலை அவளுக்குக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், காலம் செல்லச் செல்ல உடலுறவில் விருப்பமின்மையையும் உங்கள் மீது வெறுப்பையும் அதிகமாக்கி உங்கள் இருவருக்கிடையேயான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்படக் காரணமாகி விடும்.

இதுபோன்ற காரணங்களால்தான் மனைவியின் கர்ப்ப காலத்திலும் குழந்தைப் பேறு முடிந்த பிறகும் வாய் வழிப் புணர்ச்சியை பாலியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கர்ப்பமடைவது முதல், குழந்தை பிறந்து மீண்டும் நீங்கள் கலவியில் ஈடுபடத் தொடங்கும் காலம் வரை நீங்கள் செய்யும் இத்தொடுகைகளெல்லாம் கண்டிப்பாக உங்களிருவருக்கும் மிக ஆழமான காதலையும் நெருக்கத்தையும் வளர்க்கும்.

ஒருவேளை நீங்கள் ஏதோ சில காரணங்களால், நடைமுறை சிக்கல்களால் அல்லது புரிந்து கொள்ளாததால் இந்தக் காலகட்டத்தில் முற்றிலுமாக தொடுதல்கள் இல்லாமல் போயிருக்கலாம். அப்படியிருந்தால், அதற்கு “நீதான் காரணம், இல்ல… என்மேல எந்தத் தப்புமில்ல… நான் அப்போல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலேல்ல..? இப்ப மட்டும் உனக்குத் தேவைப்படறேன்” என்றெல்லாம் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு அந்த இடைவெளியை இன்னும் இன்னும் பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள்.

காரணம், இதற்குப் பிறகும் இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தாக வேண்டும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தாக வேண்டும். ஒரே கட்டிலில் இருவரும் படுத்தாக வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எடுத்தவுடனே குற்றம் சொல்லும் தொனியில் இறங்காமல், உங்கள் கணவருடன் நெருக்கமான உறவில் ஈடுபட்ட பிறகு, சில நாட்களுக்குப் பின் ஓய்வாக இருவரும் பேசும் சமயத்தில், அவர் உங்களது கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் உங்களைத் தொடாமல் தவிர்த்தது எந்தளவு உங்களுக்கு மனவேதனையளித்தது என்று சொல்லுங்கள்.

அவரது நெருக்கம் உங்கள் உடலைத் தளர்வாகவும் ஓய்வாகவும் வைத்திருக்க உதவும், பிடித்து விடுதல், ஒத்தடம் கொடுத்தல் போன்றவை எந்தளவிற்கு உங்களது உடல், மன மேம்பாட்டிற்கு உதவியாயிருந்திருக்கும் என்று புரிய வையுங்கள். உங்களால் நேரடியாகச் சொல்ல முடியவில்லை என்றால், அது தொடர்பான வீடியோக்கள் அல்லது புத்தகத்தின் பக்கங்களை அவர் பார்க்கும்படி ஸ்டேட்டஸின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்த உங்களது குழந்தைக்கும் அது மிகவும் அவசியமான ஒன்றுதான். அதன் உடல் மன வளர்ச்சிக்கும் கூட இதில் பெரிய பங்குண்டு என்பதை உங்கள் கணவருக்குப் புரிய வையுங்கள்.

ஒருவேளை அடுத்த குழந்தைக்குத் திட்டமிடுகிறீர்களென்றால் இப்போதிருந்தே கர்ப்ப காலம் மற்றும் குழந்தைப்பேறுக்குப் பிந்தைய நாட்களில் அவரது தொடுகைகள் குறித்து உங்கள் எதிர்பார்ப்புக்கள் மற்றும் தேவைகள் உங்களது கணவருக்குப் புரிய ஆரம்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் நீங்களிருவரும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குச் சென்றுகொண்டிருக்கும் உங்கள் மகப்பேறு மருத்துவரின் உதவியை நாடலாம். மேற்கத்திய நாடுகளில் கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிலையிலும் குழந்தை பிறப்பிற்குப் பிறகும் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவர்களுக்கும் இந்த விஷயங்களிலெல்லாம் ஆலோசனைகள் வழங்கப்படும். ஆனால் அந்தளவிற்கு முக்கியத்துவம் நம் ஊரில் கொடுக்கப்படுவதில்லையென்றாலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டால் நிச்சயமாய் உங்கள் மருத்துவர் உதவுவார்.

இப்போது கர்ப்ப காலம் மற்றும் குழந்தைப் பிறப்பு சமயங்கள் அல்லாமல் சாதாரண தருணங்களில் எந்தெந்த விதமான தொடுகைகள் மற்றும் உடலுறவு முறைகளைப் பின்பற்றலாம் என்பதைப் பற்றிப் பேசலாம்.

மென்மையாகக் கடிப்பது:

கூடலின்போதும், முன் விளையாட்டுக்களின் போதும் லேசாகக் கடிப்பது பெண்களின் உணர்ச்சி நரம்புகளைத் தூண்டிவிடும். அதற்காக வேகமாகவோ, காயமேற்படும்படியோ, ரத்தம் வருமாறோ உங்கள் மனைவியைக் கடித்து விட்டு, “ இந்தப் புத்தகத்தில் நான் எழுதியதைப் படித்துவிட்டுத்தான் செய்தேன்…” என்று சொல்லிவிடாதீர்கள். மிக மிக மெதுவாகவும், மிகவும் லேசாகவும் உங்கள் பற்கள் மென்மையாக அவளுடலில் பதியும்படியும் கடியுங்கள்.

https://sasn.rutgers.edu/about-us/faculty-staff/barry-komisaruk-0

ரட்கெர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பாலியல் நிபுணருமான டாக்டர். பேராசிரியர். கொமிசரூக் (Dr. Komisaruk, Rutgers university) இவ்வாறு மென்மையாகக் கடிப்பது ஆண்களைவிட பெண்களுக்கு மிக அதிகமாக பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்கிறார். குழந்தைப்பருவத்திலிருப்பவர்கள் ஒருவரையொருவர் கடித்து விளையாடுவது போல், நீங்கள் மென்மையாகக் கடித்து விட்டு, பதிலுக்கு உங்கள் மனைவியையும் கடிக்கச் சொல்லுங்கள்.

மிக மெலிதாக அவளது பின்புறத்தில் கடித்துவிட்டு, அதையே அவளும் செய்யும்போது, முணுமுணுப்பாக, ”’நீ ரொம்ப மோசம்…’ என்று சொல்லுங்கள். இவ்வாறு செய்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், முயற்சி செய்து பாருங்கள்…” என்று ஆண்களுக்கு அவர் ஆலோசனை சொல்லியிருக்கிறார். நீங்கள் இப்படிக் கடிப்பது அவளுக்குப் பிடித்திருக்கிறது என்று அவள் அச்சமயத்தில் வெளிப்படையாகச் சொன்னாலோ அல்லது உங்களை இறுக்கிப் பிடித்து அவளது உடல்மொழியால் மறைமுகமாக வெளிப்படுத்தினாலோ தொடர்ந்து மென்மையாகக் கடியுங்கள். இவ்வாறு செய்யும்போது அவளது உடலில் ‘என்டோர்ஃபின்’ (Endorphins) சுரப்பு அதிகரித்து, பெண்ணுறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரத்தஓட்டம் அதிகரிப்பதால் அவளால் எளிதாக உச்சக்கட்டமடைந்து விட முடிகிறது.

உடலுறவில் இன்பம் கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால், ஒன்று அந்த ஆணுக்கு அவளைச் சரியாகக் கையாண்டு, முறையாக பாலுறவில் ஈடுபடத் தெரியவில்லையென்று அர்த்தம். இரண்டாவது காரணம், அவனுக்குப் பெண்ணின் உடலமைப்பைப் பற்றி போதிய அளவு தெரிந்திருக்கவில்லையென்பது. மூன்றாவது காரணம் இரண்டு பேருக்குமே பாலியல் அறிவு இல்லையென்பது.

தொடுகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும்போது பெரும்பாலானவர்களுக்கு A Spot, G spot இவற்றைப் பற்றியக் கேள்விகள் எழும். பெண்களின் அதிக உணர்ச்சிமிக்கப் பகுதியான G spot ஐப் பற்றிய நிறைய விவாதங்கள் இன்னமும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. G spot என்ற ஒன்று இருக்கிறது என்றும், இல்லை இல்லை… அதெல்லாம் கற்பனை, அவ்வாறு ஒரு பகுதி கிடையவே கிடையாது என்றும் நிறைய விவாதங்களும் கருத்து மோதல்களும் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தன. தொடர்ந்த பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இதுதான் G Spot என்று குறிப்பிட்ட ஒரு இடத்தையோ அல்லது புள்ளியையோ மட்டும் காட்ட முடியாது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மிக நுண்ணிய, மென்மையான உணர்ச்சி மிக்க கிளிட்டரஸைச் சுற்றிள்ள பகுதிதான், இந்த உணர்ச்சி மிக்க நரம்புகளின் தொகுப்புதான் G Spot என்ற ஒரே மாதிரியான முடிவுக்குத்தான் அனைத்து ஆராய்ச்சிகளுமே இதுவரை வந்திருக்கின்றன.

பெண்களின் பாலியல் உணர்ச்சிகளைப் பற்றியும், அவர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் பாகங்களைப் பற்றியும் பேசும்போது பெரும்பாலானோர் கேட்கும் சந்தேகங்கள் (G Spot ) ‘ஜி ஸ்பாட்’ மற்றும் ‘எ ஸ்பாட்’ ( A Spot) பற்றியதாகத்தானிருக்கும். G Spot எனப்படுவது கிளிட்டரஸைச் சுற்றியுள்ள பகுதிகள் அல்லது தொகுப்பாகும். C Spot எனப்படுவது கிளிட்டரஸ், U Spot எனப்படுவது சிறுநீர்க் குழாய்ப்பகுதி (Urethra) குறிப்பாகச் சொல்லப்போனால் சிறுநீர்க்குழாயின் ஆரம்ப நுழைவுப் பகுதியாகும். A Spot எனப்படுவது வெஜைனாவின் உட்பகுதி. (G spot பகுதிக்குக் கீழே) இவையெல்லாமே பெண்களின் உணர்ச்சி மிகுந்த பகுதிகள்தான். இவற்றைச் சரியாகத் தூண்டி கையாண்டாலே அவளால் எளிதாக உச்சக்கட்டமடைய முடியும்.

G Spot- ஜி ஸ்பாட் :

https://en.wikipedia.org/wiki/G-spot#/media/File:G-Spot_1.png

ஐயூடி (IUD – Intrauterine Device) சாதனத்தை வடிவமைத்த ஜெர்மானிய மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான எர்னஸ்ட் கிராஃபன்பெர்க் (Ernst Grafenberg) என்பவரின் பெயரை அடிப்படையாகக் கொண்டுதான் G Spot என்று பெயரிடப்பட்டது. பெண்களுக்கு ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்திற்கும் சிறுநீர்க் குழாய் பகுதிக்குமிருக்கும் தொடர்பைப் பற்றி இவர் ஆய்வு செய்தார். 1950ம் ஆண்டு தம் ஆய்வு பற்றி அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் பெண்ணுறுப்பில், வெஜைனாவின் முன்புறத்திற்கும், சிறுநீர் துளைக்குமிடையேயான பகுதியில் , உணர்ச்சிமிகுந்த ஒரு இடத்தைக் காணமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார். கிளிட்டரஸ் தூண்டுதலால் பொதுவாகப் பெரும்பாலான பெண்கள் உச்சக்கட்டமடைகிறார்கள் என்றாலும், மிக வெகு சிலர் ஆணுறுப்பு உட்புகும் புணர்ச்சியின் மூலம் மட்டுமே தங்களால் உச்சக்கட்டமடைய முடிகிறது என்கிறார்கள். ஏனெனில், வெஜைனாவின் உள் மற்றும் வெளிச் சுவர்களில் அநேக மென்மையான, கிளர்ச்சியூட்டும் நரம்புகள் பொதிந்திருக்கின்றன.

ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பின் அளவும் வடிவமும் மாறுபட்டிருப்பதால், அவர்களது பிரத்யேகக் கிளர்ச்சியூட்டும் பகுதி மற்றும் ஜி ஸ்பாட் இதுதானென்று குறிப்பிட்டுச் சொல்வது கடினம். அதைப் பெண்கள்தான் உணர்ந்து கண்டறிந்து உங்கள் துணைவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். கலவியின் போது உங்கள் மனைவிக்கு எது பிடித்திருக்கிறது, எந்த முறை மற்றும் பாகத்தில் அவள் உச்சக்கட்டம் அடைகிறாள் என்பதை அவளது நேரடி மற்றும் மறைமுக வெளிப்பாடுகள், உடல் மொழிகள் மூலம் கண்டறிந்து அதற்கேற்ப செயல்படுவது ஒவ்வொரு ஆணின் கடமையாகும். இதற்கு மிகவும் பொறுமையும் உங்கள் மனைவியின் மீது அளவுகடந்த காதல், அன்பு, ஆசை, அக்கறை எல்லாம் இருக்க வேண்டும்.

உங்கள் மனைவிக்கு முழு இன்பம் கிடைத்தால் மட்டுமே உங்களுக்கும் அது நிறைவான, முழுமையான , திருப்தியான உடலுறவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அவள் நீங்கள் பரிந்துரைக்கும் புதிய கலவியல் முறைகளையும், உடலுறவில் வித்தியாசமானக் கோணங்களை முயற்சி செய்வதிலும், செயல்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுவாள்.

தனக்குக் கிளர்ச்சியூட்டும் இடங்களையும், செயல்களையும் பற்றி வெளிப்படையாகப் பேச உங்கள் மனைவியைத் தூண்டுங்கள். ரட்கெர்ஸ் ( Rutgers University) பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் பாலியல் நிபுணர் டாக்டர். பெவெர்லி விப்பிள் (Dr.Beverly Whipple). செவிலியராகத் தன் பணியைத் தொடங்கிய இவரது ஆராய்ச்சி வேலைகளெல்லாம் பெண்களது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதைக் குறித்தானதாக இருந்தது.1981ல் பெண்களின் உச்சக்கட்ட வெளிப்பாடு – ஓர் ஆய்வு (“Female ejaculation – A Case study); என்ற ஆராய்ச்சிப் பதிப்பை , “தி ஜர்னல் ஆஃப் செக்ஸ் ரிசர்ச்” (The journal of sex Research ) ல் வெளியிட்டார். 2017ல் G Spot என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா, இல்லையா என்ற ஆராய்ச்சி மீண்டும் நடத்தப்பட்டது. ஆனால், எந்த முடிவும் அதில் கிடைக்கவில்லை.

லண்டனிலுள்ள கிங்க்ஸ் கல்லூரி குழுவினர் டாக்டர் ‘டிம் ஸ்பெக்டர்’ (Tim Spector, King’s college, london) என்ற பேராசிரியரோடு இணைந்து G spot உள்ளதா என்று ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். 1800 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவின்படி ஜி ஸ்பாட் என்பது கிளிட்டரஸின் ஒரு பாகத்தைக் குறிப்பதாக இருக்கலாமேயொழிய, அது ஏதோ ஒரு தனியான உணர்ச்சிமிக்கப் பகுதியோ அல்லது உறுப்போ அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. பெண்ணுறுப்பின் கிளிட்டரஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள மென்மையான நரம்புத் தொகுப்புகளடங்கிய பகுதிதான் G Spot என்று அறிவிக்கப்பட்டது.

A Spot – ஏ ஸ்பாட்

A Spot – https://www.facebook.com/AskDrGure/photos/what-is-the-a-spot-and-how-can-it-make-your-sex-life-better-sexplanations-whith-/2360238994091304/?paipv=0&eav=AfZxzAPet5z33lAsed2nZDJcOQqtw9_mvzAP9wWP_rtB9pzz4Ay_KkIs61qvf3x1BpU&_rdr

பாலியல் நிபுணரும் B-Vibe என்ற பாலியல் மேம்பாட்டு சாதன நிறுவனத்தின் அதிபரும் நிறுவனருமான அலிஷியா சின்க்லேர் ( Alicia Sinclair) A Spot என்பது G Spot டிலிருந்து இரண்டு இன்ச்கள் மேலேயுள்ளது என்று அறிவித்தார். ஜி ஸ்பாட்டை விட சிறிது ஆழத்திலிருப்பதால் அதைப் பேச்சு மொழியில் “ஆழமான பகுதி” (Deep spot) என்றும் சிலர் குறிப்பிடுவதாகத் தெரிவித்தார். G spot மட்டுமல்ல , ஜி ஸ்பாட்டுக்கு அருகிலுள்ள A Spot ம் தூண்டப்படுவதும், கவனிக்கப்படுவதும் அவசியம். வெஜைனா சுவர் மற்றும் செர்விக்ஸ் இவையிரண்டிற்குமிடையே பெண்ணுறுப்பின் நான்கு அல்லது ஐந்து இன்ச்கள் ஆழத்திலிருப்பதுதான் A Spot. விரிவாக The anterior Fornix Erogenous zone (AEF Zone) என்றழைக்கப்படுகிறது.

மலேசிய மருத்துவரான டாக்டர். ச்வா சீ ஆன் (Dr.Chua Chee Ann ) எண்பதுகளின் இறுதியில் செய்த ஆராய்ச்சியின் முடிவில் இந்த A Spot ஐத் தூண்டுவதன் மூலம் வெஜைனல் லூப்ரிகன்ட்ஸ் எனப்படும் கலவிக்குத் தேவையான திரவத்தை சுரக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், பெண்களை உச்சக்கட்டமடைய வைக்கவும் செய்யலாம் என்று தெரிவித்தார். அருகருகேயிருக்கும் A Spot, G Spot இவையிரண்டிற்குமே வெவ்வேறு விதமான தூண்டுதல்கள் அவசியம்.

பெண்ணுறுப்பின் உள்ளே செர்விக்ஸ் மற்றும் சிறுநீர்ப்பைக்கிடையே அமைந்துள்ள இந்த A Spot தூண்டப்படுவது கலவிக்கும் உச்சக்கட்டம் அடைவதற்கும் மிக மிக அவசியம். அதனால்தான் இது பெண்களின் மிக நுட்பமான, முக்கியமான காமவுணர்வுப் பகுதி (Erogenous zone) எனவும் பேரின்பப் பகுதியெனவும் (Pleasure zone) அழைக்கப்படுகிறது.

ஆண்களின் ப்ரோஸ்டேட் (Prostate – P spot) அமைந்திருக்கும் அதே பகுதியில் பெண்களின் A Spot ம் அமைந்திருப்பதால் இது, “பெண்களின் ப்ரோஸ்டேட்” என்றும் அழைக்கப்படுகிறது.

பெண்கள் உடலுறவில் ஆதிக்கம் செலுத்தும் (Female on top) ஆண்கள் கீழேயும் பெண்கள் அவன் மேலுமிருந்து உடலுறவு மேற்கொள்ள இயங்கும் நிலையைத் தவறென்றும்= அது தங்கள் ஆண்மைக்கு இழுக்கு என்றும் பல ஆண்கள் இன்றும் நினைக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால், இருவருமே எளிதாக உச்சக்கட்டமடைய சிறந்த நிலை இது. பெண் ஆணின் மேலிருந்து செயல்படும்போது பெண்ணின் கிளிட்டரஸ் பகுதி முழுவதும் ஆணுறுப்பினால் தொடப்படுவதாலும், ஊடுருவுதல் (Penetration) எளிதாக நிகழ்வதாலும் அவளால் விரைவாக உச்சக்கட்டமடைய முடிகிறது.

ஆண்களுக்கு நல்ல உணவு அல்லது அன்பான கவனிப்புக் கிடைக்கும் போது எவ்வாறு தான் கொஞ்சப்படுவது போல் உணர்கிறானோ, சிறந்த முறையில் தான் கவனிக்கப்படுவதாக சிலிர்க்கிறானோ அதே போல் கூடலில் மனைவி இந்த செயல்படும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் பொறுப்பை எடுத்துக்கொள்ளும் போதும் அவனால் ஓய்வாகவும் மகிழ்ச்சியாகவும் உணர முடியும்.

கலவியைச் சரியாக செய்ய வேண்டுமே என்ற பதட்டமில்லாமலிருப்பான். ஆனால், ஒருவேளை உங்களுக்கு விந்து வெளியேறி விடும் நிலைக்கு வந்து விட்டீர்கள் என்று உணர்ந்தால் அதை உங்கள் மனைவியிடம் தெரியப்படுத்துங்கள். சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடரச் சொல்லுங்கள். இவ்வாறு உங்கள் மனைவி உங்கள் மீது செயல்படும்போது உங்களது இரண்டு கரங்களையும் பயன்படுத்தி அவளது மார்பகங்களையும், தோள்பட்டைகள் மற்றும் இடுப்பு மற்றும் அவளது பின்பகுதியை வருடிக்கொடுங்கள். பெண்களும் உங்கள் கணவனின் நெற்றிப் பொட்டுப் பகுதியை மென்மையாக வருடுங்கள். ஆண்கள் மிகவும் ஆழமான ஒரு மனநிலைக்குச் செல்ல இம்முறை உதவும். ஆக, இருவருக்குமே மகிழ்ச்சியையும் நெருக்கத்தையும் கொடுக்கும் இந்த “பெண் ஆணின் மேலிருந்து இயங்கும் முறை’யைத் தடுக்காதீர்கள், தவிர்க்காதீர்கள்.

ஒரு பெண்ணுடன் உங்கள் இல்லற உறவு ஆரம்பிக்கும் காலகட்டத்திலேயே, திருமணம் செய்து கொண்ட உடனேயே இந்தத் தொடுகை முறைகளையெல்லாம் செய்யத் தொடங்குவது அவசியம். இனிய பாலியல் வாழ்க்கைக்கு இவற்றையெல்லாம் சரியாக செயல்படுத்தத் தேவையான பொறுமையும் முறையான கற்றலும் அடிப்படையாகும். திருமண வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே அந்த உறவில் மனக்கசப்புக்களோ, விரிசலோ ஏற்பட்டுவிட்டால் அதன் பின்னர் பாலுறவு குறித்து வெளிப்படையாகப் பேசுவதும், அதில் பரஸ்பரம் உச்சக்கட்டமடையும் செயல்களைத் தொடர்வதும் சாத்தியமாகாது. ஒரு விதமான மனத் தடை இருவருக்குமே ஏற்பட்டு விடும்.

அதை மீறி அதே துணையுடன் உங்கள் அந்தரங்க உறவைப் புதுப்பித்துக் கொள்வது மிகவும் கடினம். எனவே உங்கள் திருமண பந்தத்தின் தொடக்கத்திலிருந்தே மிகவும் கவனமாகவும் அக்கறையாகவும் உங்கள் பாலியல் செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள். இப்படி தங்கள் உறவின் ஆரம்பத்திலிருந்தே உடலுறவில் வெளிப்படையாகவும், ஒருவருக்கொருவர் புரிதலுடனும் பகிர்தலுடனும் வாழ ஆரம்பிக்கும் தம்பதிகள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கையின் இறுதிவரை அதே புரிதலுடனும் ஒற்றுமையுடனும் இருக்கிறார்கள்.

உடலுறவில் பெண்கள் கடந்து வரும் நான்கு நிலைகள்:

கலவியில் ஈடுபடும்போது பெண்கள் அனைவருமே நான்கு நிலைகளைக் கடந்து வருகிறார்கள். இந்த உணர்வு நிலைச் சுற்று Sexual Response Cycle எனப்படுகிறது. இந்த ஒவ்வொரு நிலையிலும் அவள் இருக்கும் போது உங்களது தொடுகைகளின் அழுத்தமும் தொடப்படும் இடங்களும் வேறுபட வேண்டும். அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.

  1. Arousal or Excitement phase:

உடலுறவு கொள்ளத் தூண்டப்படும் அல்லது உடலுறவு கொள்ள வேண்டும் எனப் பெண் ஆழமாக ஆசைப்படும் முதல் நிலை:

இந்தக் கட்டத்தில் பெண்களின் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இரத்தஓட்டம் அதிகமாகும். கூடலுக்கு அவர்களது உடல் தயாராகும்.

  1. Plateau phase: (ப்ளேட்டோ நிலை)

இந்தக் கட்டத்தில் பெண்களின் உடலில் இதயத்துடிப்பு அதிகரித்தலும் இரத்த ஓட்டம் அதிகமாகுதலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கும். அவர்களின் மார்பகக் காம்புகளும் பெண்ணுறுப்புப் பகுதிகளும் கடினமாக ஆரம்பிக்கும்.

  1. Orgasm: (உச்சக்கட்டம்)

இரண்டாம் நிலையின் நிறைவு நிலை இது. பெண்கள் உச்சக்கட்டம் அடைவதுதான் இந்த மூன்றாம் நிலை.

  1. Resolution phase: (இயல்பு நிலை திரும்பல்)

கலவி முடிந்த நிலையில், பெண்ணின் உடல் தசைகள் தளர்ந்து, இரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்து சீராகியிருக்கும். முழுவதுமாக அவளது உடல் இயல்பு நிலைக்கு வர எடுத்துக்கொள்ளும் நேரம் நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு 24 மணி நேரம் கூட ஆகலாம்.

பெண்கள் கடந்து வரும் இந்த நான்கு நிலைகளிலுமே ஆண்களின் தொடுகையும், ஆதரவான உடல் மொழியும் மிக அவசியம்.
நம் உடல் முழுவதுமே தோலால் போர்த்தப்பட்டிருந்தாலும் அதை உணராதவர்களாகவே நாமிருக்கிறோம். இந்த நான்கு நிலைகளிலுமே பெண்ணின் உடல் முழுவதுமிருக்கும் தோல் கவனிக்கப்படவும் மென்மையாக வருடிக்கொடுக்கப்படவும் வேண்டும்.

முதல் நிலையான ‘தூண்டுதல் நிலையில்’ அவளது நெற்றிப்பகுதியையும், முதுகு மற்றும் பெண்ணுறுப்பைச் சுற்றியுள்ள தொடைப்பகுதியையும் வருடிக்கொடுங்கள். இச்சமயத்தில் அவளது பின்னங்கழுத்து மற்றும் காதுமடல்களை மென்மையாக வருடுவதும் முத்தமிடுவதும் சிறந்தது.

இரண்டாம் நிலையில் உங்கள் மனைவியின் கன்னம் மற்றும் உதடுகளில் முத்தமிடத் தொடங்குங்கள். மென்மையாக அவளைக் கடிப்பதையும் இப்போது செய்யலாம்.

மூன்றாம் நிலையான உச்சக்கட்டமடையும் நிலையின் போது, பெண்ணின் தோள்பட்டைகள் மற்றும் இடுப்புப்பகுதியைச் சற்று இறுக்கமாகவே அழுத்திப் பிடியுங்கள்.

நான்காவது நிலையான இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில் அவள் தளர்வாகவும் இன்னும் படபடப்பு அடங்காமலுமிருப்பதால் உங்கள் மார்பில் அவளை சாய்த்துக் கொண்டு, கழுத்து, முதுகுப்பகுதி மற்றும் தலையை மென்மையாக வருடிக் கொடுங்கள்.

இந்த இடத்தில் தொடுகையின் மிக முக்கியமான அம்சமான மசாஜ் செய்வதைப் பற்றிய சில விஷயங்களை இரு பாலரும் புரிந்து கொள்தல் வேண்டும். ஆண்களுக்குப் பெண்கள் மசாஜ் செய்வது சிறந்தது என்ற ஓர் எண்ணத்தைச் சிலர் பரப்பி வருகிறார்கள். அவற்றைப் பார்க்கும் படிக்கும் ஆண்களும் தங்கள் மனைவியிடமிருந்து உடல் மசாஜை எதிர்பார்க்கிறார்கள். ஒப்பிட்டுப் பார்த்தால், ஆண்களின் உடல் வலிமையை விட, தசைகளின் இறுக்கம் மற்றும் திடத்தன்மையை விடப் பெண்களுக்கு மிகக் குறைவுதான். சில விதிவிலக்குகளிருக்கலாம். மென்மையான உடலமைப்புக் கொண்ட கணவனும், வலிமையான, இறுக்கமான கைகளையும் , உடலமைப்பையும் கொண்டிருக்கும் மனைவியும் அமைந்திருந்தால் வேண்டுமானால் இம்முறை சரிப்பட்டு வரலாம். மற்றபடி பெண்கள் ஆண்களுக்கு மசாஜ் செய்வதென்பது இருவருக்குமே பலனளிக்காது.

Photo by Toa Heftiba on Unsplash

கணவனின் வலிமையான உடலை அழுத்திப் பிடித்து விடும் போதும் திடமான கரங்களை உருவி விடும் போதும் பெண்ணின் மென்மையான கைகளும் முழங்கைகளின் உட்பகுதியான மடக்கி விரிக்கும் பகுதியும் வலிக்கும். ஆண்களுக்கும், பெண்ணின் கைகளிலிருந்து போதிய அளவு அழுத்தம் கிடைக்காது. ஒரு செயலில் ஒருவருக்கு வலியையும் இன்னொருவருக்கு எந்தப் பலனையும் தராத ஒரு விஷயத்தை எதற்கு வீணாகச் செய்ய வேண்டும்?

அதே சமயம், ஆண்கள் தங்கள் வலிமையான கைகளாலும் பெண்களின் சில கடினமான இடங்களில் தங்கள் பாதங்களைக் கொண்டு மென்மையாக மிதிப்பதாலும் பெண்களுக்குக் கட்டாயம் உடல் வலிகள் நீங்கி தசைகளுக்கு ஒரு நல்ல இளைப்பாறுதல் கிடைக்கும். ஒருவேளை ஆண்களைப் போலவே கடினமான உடற்பயிற்சிகள் செய்து திடமான தசைகளைப் பெண்கள் பெற்றாலும், அது ஆண்களுக்கு உடல் பிடித்து விட வேண்டுமானால் உதவுமேயொழிய கலவியின் போதும் முன் விளையாட்டுக்களின் போதும் அவர்களுக்கு எந்த வித சுவாரஸ்யத்தையும் அளிக்காது.

“கடினமான உடல்வாகுடனிருக்கும் பெண்களிடம் எங்களுக்கு பெரிதாக மகிழ்ச்சி கிடைப்பதில்லை. கலவியின் போதும், நெருக்கமான படுக்கையறை விளையாட்டுக்களின் போதும் பெண்மையின் மென்மையை உணர முடியாமல் போவதால் தங்களுக்கு அதிருப்தியளிப்பதாகவே இருக்கிறது” என்று பல ஆண்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

National Autonomous University of Mexico நூற்றுக்கணக்கான தம்பதிகளை வைத்து நடத்திய ஆய்வில், மென்மையான ‘கொழுக் மொழுக்’ பெண்களை மணந்த ஆண்கள் மற்ற ஆண்களைவிட 10 மடங்கு அதிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. (Times of India, 25 November 2018)

என்னென்ன காரணங்களால் ஆண்களுக்கு இத்தகைய உடல்வாகுள்ள பெண்கள் கிளர்ச்சியளிக்கிறார்கள் என்பதற்கான பல்வேறு காரணங்களை நிறைய ஆய்வுகள் பட்டியலிட்டிருக்கின்றன. எனவே, பெண்களின் மென்மையான கைகளைப் பயன்படுத்தி கணவருக்கு மசாஜ் செய்வதைத் தவிர்த்து விட்டு, தலை, நெற்றிப் பொட்டு அதாவது இரண்டு புருவங்களுக்கு நடுவே மற்றும் அவரது உடல் முழுவதும் மிக மென்மையாக வருடிக் கொடுங்கள். கண்டிப்பாக இது உங்கள் கணவருக்கு மன, உடல் அமைதியையும், கிளர்ச்சியையும் கொடுக்கும். குறிப்பாக புருவங்களுக்கு நடுவில் இவ்வாறு மிக மென்மையாக வருடிக் கொடுப்பது அவரை ஆழ்நிலைக்கு இட்டுச் செல்லும்.

இவையனைத்திற்கும் மேலாக, உடலால் மட்டுமின்றி உணர்வுகளாலும் உங்கள் துணையைத் தொடக் கற்றுக்கொள்ளுங்கள். அதற்கு உங்கள் இருவருக்கும் ஒத்திசைந்த மனம், எண்ணங்கள், அன்பு, ஒருவர் மீது மற்றவருக்கு நிறைய அக்கறையு, இருவருக்கும் பொதுவான சில ஆர்வம் ஆகியவை இருக்க வேண்டும். அவற்றை மேம்படுத்திக் கொண்டீர்களென்றால் தொடத் தொட காதலும், அதன் கூடவே காமமும் மலரும்.

பேசுவோம்…

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.