எனக்குப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி எடுத்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதற்கிடையில் மருத்துவத் துறையிலும் ஏராளமான புதிய மருந்துகளும் நவீன சிகிச்சை முறைகளும் வந்துவிட்டாலும்கூடப் பழைய நான்கு வகை சிகிச்சை முறைகளே பிரதானமாக இருக்கின்றன.

புற்றுநோய்க்குத் தற்போதைய சிகிச்சைகள் என்பவை நான்குமட்டுமே.

1. அறுவை சிகிச்சை

புற்றுநோய் செல்கள் கொண்ட திசுக்களை மருத்துவர்கள் வெட்டி எடுப்பது. இந்தச் சிகிச்சையின் குறிக்கோள் புற்றுநோயை அகற்றுவது.

2. கீமோதெரபி

நம்மால் பார்க்க முடியாத புற்றுநோய் செல்களைச் சுருக்குவது அல்லது அழிக்கும் சிறப்பு மருந்துகள்.

3. கதிர்வீச்சு சிகிச்சை

புற்றுநோய் செல்களைக் கொல்ல உயர் ஆற்றல் கதிர்களைப் பயன்படுத்துதல் (எக்ஸ்-கதிர்களைப் போன்றது.)

4. ஹார்மோன் சிகிச்சை

இதன் மூலம் புற்றுநோய் செல்கள் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களைப் பெறுவதைத் தடுக்கிறது.

கீமோதெரபி என்பது புற்றுநோய்க்கான மருந்தை உடலுக்குள் செலுத்தி, புற்றுநோய் செல்களை அழிப்பது. இதில் 100 க்கும் மேற்பட்ட மருந்துகள் உண்டு. இதில் முக்கியமானது Alkalyting agents என்னும் மருந்து. அதிலும் முக்கியமானது சிவப்பு பிசாசு எனப்படும் கீமோதெரபி மருந்துதான் சிறந்தது. இது பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

செல் பிரிவு மற்றும் புற்றுநோய் செல்

சாதாரண செல்கள் உடல் வளர்ச்சிக்காக இரண்டு இரண்டாகப் பிரியும். இதனை செல் பிரிதல் என்கிறோம். அதே நேரம் செல்களில் உள்ள DNA வில் ஏதாவது பிரச்னை என்றால், செல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும். அப்படி முடியாவிட்டால், அந்த DNA தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். இதனை apotopsis என்று சொல்கிறோம். ஆனால், புற்றுநோய் பாதித்த செல்கள் இரண்டாகப் பிரியும். ஆனால், செல் பிரிதல் கட்டுப்பாட்டுக்குள் இராது. அது செல் பிரிதல் நொதிக்குக் கட்டுப்படாமல் இஷ்டத்துக்கு வேக வேகமாகப் பிரியும், அதனுள் இருக்கும் செல்லின் பகுதிகளும் முழுமையாக இருக்காது. இதனை நியோபிளாசம் (Neoplasm) என்கின்றனர். அது போல புற்றுநோய் செல்களின் DNA வில் பாதிப்பு அல்லது சிதைவு ஏற்பட்டாலும் அது தன்னைத்தானே சரி செய்து கொள்ள முடியாது. இவை உடலுக்குள் வேகமாக ரத்த நாளங்கள் வழியே பரவிச் செல்லும்.

இப்படிப்பட்ட புற்றுநோய்ச் செல்களைக் கொல்வதற்குதான் கீமோதெரபி கொடுக்கப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன. எந்தப் புற்றுநோய்க்கு, எந்த நிலை புற்றுநோய்க்கு என்ன வகை கீமோதெரபி கொடுக்க வேண்டும் என்பதை , நோயாளியின் உடல்நிலை, மனநிலை, உயரம், எடை என்பதை எல்லாம் கருத்தில் கொண்டுதான், Medical Oncologists என்னும் புற்றுநோய் நிபுணர் கீமோதெரபிக்காக கொடுக்கும் மருந்தினை நிர்ணயம் செய்வார். கீமொதெரபியில் உள்ள முக்கியமான முதல் வகை மருந்துதான் Alkylating agents. இதன் பணிதான் மகத்தானதும் அற்புதமானதும். இதுதான் புற்றுநோய் மருந்துகளில் மிக முக்கியமானது. இதில் மிக மிக முக்கியமானது Doxorubin எனப்படும் Red Devil என்று அழைக்கப்படும் கருஞ்சிவப்பு மருந்து.


1. Alkalyting agents புற்றுநோய் உயிரணுவை அதன் டிஎன்ஏவை சேதப்படுத்துவதன் மூலம் இனப்பெருக்கம் செய்வதிலிருந்து (தன் நகலை உருவாக்குதல்) தடுக்கிறது. இந்த மருந்துகள் செல் சுழற்சியின் அனைத்துக் கட்டங்களிலும் வேலை செய்கின்றன, மேலும் நுரையீரல், மார்பகம், கருப்பை புற்றுநோய்கள், லுகேமியா, லிம்போமா, ஹாட்ஜ்கின் நோய், மல்டிபிள் மைலோமா, சர்கோமா உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

2. Alkalyting agents தவிர, இரண்டாவது வகை கீமோ மருந்து: Nitrosources. இது பொதுவாக மூளைப் புற்றுநோய்க் கட்டியைக் கரைக்க அல்லது அழிக்கப் பயன்படுகிறது.

3. Amphimetabolites, மூன்றாவது வகை. செல் உருவாக DNA மற்றும் RNA தேவை.இதனை உருவாக்க இந்த மருந்துவிடாது. போலியான DNA, RNAவை உருவாக்கி, வளர்சிதை மாற்றம் இன்றி அழிந்துவிடும்.

4. Antifolate மருந்து பார்ப்பதற்கு வைட்டமின் B9 போல போலியாகச் செயல்பட்டு DNA உற்பத்தியைத் தடுக்கும்.

5. Topoisomerase inhibitors மருந்துகள், DNA இரட்டிப்பாக பிரிவதைத் தடுக்கும். எனவே புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும்.

6. Antitumour antibiotic மருந்துகளும் புற்றுநோய்க் கட்டியை அழித்துவிடும்.

பொதுவாக கீமோதெரபி மருந்துகள் 3வாரங்களுக்கு ஒரு முறை (21 நாட்கள்) கொடுக்கப்படும். இதன் காரணம் என்ன வென்றால் கீமோதெரபி மருந்துகளுக்கு எது சாதாரண செல், எது புற்றுநோய் செல் என்று இனம் பிரித்துப் பார்க்கத் தெரியாது. எனவே எல்லா செல்களின் DNAவையும் சிதைத்து விடும். ஆனால், சாதாரண செல்கள் மீண்டும் அவற்றில் இருக்கும் நொதியால், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும், அதற்குத்தான் இந்த மூன்று வார கால அவகாசம் உதவுகிறது.

கீமோதெரபி எடுத்துக்கொண்டால் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படும்.

  1. சோர்வு என்பது கீமோதெரபியின் மிகவும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று.
  2. உடல் மற்றும் எலும்புகளில் வலி
  3. மயக்கம்
  4. முடி கொட்டுதல்
  5. மறதி ஏற்படுதல் (Chemo Brain)
  6. நோய்த்தொற்றுகள்
  7. ரத்த சோகை
  8. ரத்த அணுக்கள் குறைதல்
  9. சிராய்ப்பு மற்றும் ரத்தப்போக்கு
  10. வாய்ப்புண்
  11. பசியிழப்பு
  12. சுவை குன்றுதல்
  13. எலும்பில் கால்சியம் சரிவு
  14. வயிற்றுப்போக்கு
  15. மலச்சிக்கல்
  16. தோல் மற்றும் நகங்களில் நிற மாற்றம்

அனைத்துப் பக்கவிளைவுகளும் கீமோதெரபி நிறுத்தியதும் உடல் சாதாரண நிலைக்கு வந்துவிடும். தலையில் முடி முளைத்துவிடும்.

இந்த கீமோதெரபியில் 8 வகை சிகிச்சைகள் உண்டு.

  1. Intravenous chemotherapy என்பது நேரடியாக கீமோதெரபி மருந்தை ரத்தநாளத்தில் ஏற்று. இதற்கு 6 மணி நேரம் ஆகும்.
  2. இரண்டாவது வகை வாய்வழியாக கீமோ மருந்தை, மாத்திரை, டானிக்காக எடுத்துக்கொள்ளுதல். இதிலும் தொடர்ந்து நான்கு வராம் கொடுத்த பின்னர், கீமோவின் வீரியம் குறைக்க 2 வாரம் இடைவெளிவிட்டு மீண்டும் கொடுப்பார்கள்.
  3. மூன்றாவது வகையில், நேரடியாக மருந்தை, புற்றுநோய் செல்களின் மேல் தசை வழியாகத் தோலுக்கு அடியில் செலுத்துதல் (injected chemotherapy).
  4. நான்காவது வகை என்பது, புற்றுநோய் ரொம்பவும் பெரிய கட்டியாக இருந்தால், அது அதிகப்படியான ரத்தம் எடுத்துக்கொள்ளும். சில நேரம் அது ரத்தத் குழாய்களில் பாதிப்பும் ஏற்படுத்தும். அப்போது புற்றுநோய் கட்டிகளுக்கு நேரடியாக ரத்தம் செலுத்தும் ரத்த தமனிகளில் மருந்து செலுத்தப்படும். இதற்கு intra-arterial chemotherapy என்று பெயர்.
  5. ஐந்தாவது வகை, தோலில் ஏற்படும் புற்றுநோய்க்குப் பசைபோல ஆயின்ட்மென்ட் தடவுதல் Ointment chemothrapy/Topical chemotherapy.
  6. ஆறாவது வகையில், நேரடியாகக் குறிப்பிட்ட புற்றுநோய் கட்டி மேலேயே மருந்தைச் செலுத்துதல் (Direct Injection).
  7. ஏழாவது வகையில், நுரையீரல் போன்ற இடங்களில் புற்றுநோய் வந்தால், அதன் சுற்றுச் சுவர்களில் intraplueral பகுதியிலும் வயிற்றுப் பகுதியில் இருந்தால் intra -peritonial போன்ற இடங்களிலும் கீமோ மருந்தைச் செலுத்துவார்கள். தண்டுவடம் பகுதியில் புற்றுநோய் என்றால், அங்கேயே நேரடியாக மத்திய நரம்பு மண்டலத்தில் கீமோ மருந்து செலுத்தப்படும்.
  8. சில நேரம் புற்றுநோய்க் கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய பிறகு, அதன் அருகில், கீமோ மருந்துகளை, மிக மெல்லிய தட்டைப் போலச் செய்து அடுக்கி வைத்து மூடிவிடுவார்கள். இதில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்த மருந்து அங்கே சென்று, கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, கலந்து மிச்சம் மீதம் இருக்கும் புற்றுநோய் செயல்களைக் கொன்றுவிடும்.

(இன்னும் பகிர்வேன்)

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.