எப்போதுமே போராட்டத்தில் வலுவுள்ளவர்கள்தாம் வெற்றி பெறுவார்கள். அது போல நம் உடல் செல்களில் நடக்கும சண்டையில் எந்த செல் வலுவுள்ளதோ, அது போராட்டத்தில் வெற்றி பெறுகிறது. இதுதான் போராட்டத்தில் பொதுவான நிலை, இயல்பான நிலையும்கூட. இதற்குப் புற்றுநோயும் விதிவிலக்கல்ல.

குறிப்பாகப் புற்றுநோயில் நம் உடல் செல்களின் உள்ளே இருக்கும் டி.என்.ஏ.வின் மாற்றத்தால் / பிறழ்வு நிலையால் புற்றுநோய் செல்லாக மாறுகிறது. பின்னர் இது மிகத் துரித கதியில் பிரிவதால் இதனைப் புற்றுநோய் என்கிறோம். இதில் கருப்பை புற்றுநோய் / கர்ப்ப வாய் புற்றுநோய் மட்டும் விதிவிலக்கு. இது Human papilloma virus (HPV) என்கிற வைரசால் ஏற்படுகிறது. இதன் இருப்பைப் பாப்ஸ்மியர் (pap smear) என்கிற எளிய சோதனை மூலம் கண்டறியலாம்.

மேலும் சில நேரம், இந்த வைரசால் பெண்ணின் பிறப்பு உறுப்பு, மலக்குடல் முடியும் இடம், ஆணின் பிறப்பு உறுப்பு (Peeniiss) போன்ற இடங்களிலும் புற்றுநோயை உருவாக்கும்.

பொதுவாகப் புற்றுநோய் வந்தவர்களில் நன்கு குணமாகி நன்றாக இருப்பவர்கள் வெளியில் அதைப் பற்றி எதுவுமே சொல்வதில்லை. பொதுவாக எந்த வியாதி வந்தாலும் வெளியில் சொல்வார்கள். ஆனால், புற்றுநோய் வந்தால் யாரிடமும் கூறமாட்டார்கள். காரணம் புற்றுநோய் என்பது ஏதோ முன் ஜென்மத்தில் செய்த பாவம் அல்லது கடவுள் கொடுத்த தண்டனை என்கிற எண்ணம் பொதுப்புத்தியில் உறைந்து போய்க் கிடப்பதால்தான் இந்த நிலைமை.

பெரும்பாலும் புற்றுநோய் வந்தவர்களைப் பற்றி அவர்கள் இறந்த பின்னரே அறிகிறோம். புற்றுநோயை ஆரம்பத்தில் அறிந்துகொண்டால், சரியாகும் குணமாகும் என்கிற அதன் மறுபக்கத்தைப் பார்க்காமலேயே எதிர்மறை பற்றிய செய்திகளையே பரப்பிக் கொண்டிருக்கிறோம். இதனால்தான் புற்றுநோய் வந்துவிட்டால் இறந்துவிடுவோம், நம் வாழ்க்கை இதோடு முடிந்தது என்று எண்ணி அதற்கான சோதனை செய்யக்கூடத் தயங்கி, அநியாயமாக உயிரைத் தொலைத்துவிடுகிறார்கள்.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சரியான சிகிச்சை கொடுக்க முடியும். குணப்படுத்திவிட முடியும். புற்றுநோய் குணப்படுத்த முடியாத நோய் அல்ல.

ஆனால், புற்றுநோய்க்கு வேறொரு முகமும் இருக்கிறது. புற்றுநோயின் ஏதாவது ஒரு செல் எங்காவது ஒட்டிக்கொண்டிருந்தால், அது ரத்த நாளங்கள் வழியே எங்காவது போய் உட்கார்ந்து கொள்ளும். நமது உடலும் மனமும் பலவீனமாக இருக்கும்போது, அது வேகமாகப் பரவி இரண்டாம் நிலைக்குப் போய்விடுகிறது. அப்போதும்கூட இதனைக் குணப்படுத்த முடியும் என்கிற நிலையில்தான் நாம் இருக்கிறேறோம். இப்போது இரண்டாம் நிலை புற்றுநோயையும் குணப்படுத்தக்கூடிய ஏராளமான நவீன மருந்துகளும் மருத்துவ சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. எனக்குத் தெரிந்த ஒருவர் மார்பகப் புற்றுநோயாளி, கல்லீரலுக்குப் புற்றுநோய் பரவியும்கூட, அதற்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டு நன்றாகவே வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார். எலும்பு முழுமைக்கும் புற்றுநோய் பரவியும்கூட ஒரு பெண் நன்கு சிகிச்சை எடுத்ததன் விளைவாக, 7 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாகவே உள்ளார். எனது மாணவர் ஆறுமுகம் ஓர் அறிவியல் ஆசிரியர். அவருக்கு கணையத்தில் புற்றுநோய் வந்து, பின்னர் அது கல்லீரல் முழுமைக்கும் பரவி இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, மிகுந்த நம்பிக்கையுடன் வாழ்ந்தார். பழனிக்கு அருகில் உள்ள கீரனூரில் மாணவர்களுக்கும் பாடம் நடத்தினார். எனக்கு முன்பிருந்தே அவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. அந்த நிலையிலேயே சுமார் 9 ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார்.

பொதுவாகப் புற்று நோய் வந்தால், நல்ல சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால், அது வேறு இடங்களுக்குப் பரவுவது இல்லை. ஆனால், ஒரு சிலருக்குப் பிற இடங்களில் குறிப்பாக நுரையீரல், கல்லீரல், எலும்புகளில் பரவுகிறது. அதிலும் மார்பகப் புற்றுநோய் வந்தவர்களுக்கு, அடுத்த மார்பகத்தில் பரவுவதற்கான வாய்ப்பு உண்டு. மேலும் இவர்களுக்கு மார்பக புற்றுநோய் வந்து 20 ஆண்டுகள் வரை செகண்டரிஸ் (secondaries) என்னும் இரண்டாவது நிலைக்கு நோய் பரவும் வாய்ப்பு உண்டு. ஆனால், வந்துவிடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தாலோ அதைப் பற்றி மிகவும் கவலைப் பட்டாலும் இரண்டாவது நிலை புற்றுநோய் வருகிறது என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், புற்றுநோய் வந்தபின் அதைப் பற்றியே எண்ணிக்கொண்டிராமல், நேர்மறையாகச் செயல்படுபவர்களுக்கு, இரண்டாம் நிலை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பில்லை. என் மருத்துவர்களும் அறிவியல் ஆய்வுகளும் கூறுகின்றன. உணவில் புற்றுநோய் காரணிகள் உள்ள உணவை உண்ணாமல் இருப்பவர்களுக்கும் மேலும் தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சியும் முக்கால் மணி நேரம் நடைப் பயிற்சி மேற்கொண்டாலும் இரண்டாம் நிலை புற்றுநோய் பரவுதல் குறைகிறது என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் தினமும் காலை 10 மணிக்கு மேல் வெயிலில் அரை மணி நேரம் இருந்தால் / நடந்தால், அல்லது 10 நிமிடமாக அல்லது 5 நிமிடமாகப் பிரித்து பிரித்துப் வெய்யிலில் இருந்தால், உடலுக்கு வைட்டமின் டி அதிகம் கிடைக்கும். அதன் மூலம் தற்காப்பு சக்தி (Immunity) ஏற்படுகிறது. இது புற்றுநோய் வருவதையும் புற்றுநோய் பரவுவதையும் தடுக்கிறது.

எனக்குப் புற்றுநோய் வந்து 2009 ஆகஸ்டில் அறுவை சிகிச்சை முடிந்து அதன் பின்னர் 6 கீமோதெரபி எடுத்துக் கொண்டேன். புற்றுநோய்க்கான வேதி சிகிச்சை முடிந்து ஓராண்டு காலத்திற்குப் பின்னர், சில நேரம் புற்றுநோயின் இரண்டாம் நிலை உடலில் எங்கு வேண்டுமானாலும் கிளர்ந்து வரும் வாய்ப்பும் உண்டு. எனக்குத் தொடர்ந்து கால் வலி இருந்ததால் மகன் வினோபா எலும்பில் பரவி இருக்கலாம், நீங்கள் டாக்டரைப் பாருங்கள் என்றார். டாக்டர் கார்த்திகேஷ், “உங்களுக்கு மீண்டும் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் இல்லை. ஏனெனில் நீங்கள் பாசிட்டிவ்வாக யோசிக்கிறீர்கள். பாசிடிவ்வாகச் செயல்படுகிறீர்கள். உடற்பயிற்சி செய்கிறீர்கள். தாய்சி செய்கிறீர்கள். எனவே வருவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.

நானும் அப்படித்தான் நினைத்தேன்,. இதுவரை கை, கால் வலி வந்தால் ஓய்வெடுத்தோ அல்லது உடற்பயிற்சி செய்தோ வலியைப் போக்கினேன். புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னர் ஒன்பது ஆண்டுகள் வரை நன்றாகப் போனது. கடந்த மூன்று ஆண்டுகளாக வலதுபக்க மார்பகத்தில் ஒரு சின்னக் கட்டி உள்ளது. ஆனால், அதன் வளர்ச்சி அபரிமிதமாகவோ வேகமாக இல்லை. இன்னும் ஒரு சென்டிமீட்டர் அளவுகூட இல்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனைக்குச் சென்று வருகிறேன். மூன்றண்டுகளாக அதில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை. எனவே இதற்காக பயப்பட வேண்டாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.

எனக்கு மீண்டும் புற்றுநோய் வராமல் இருப்பதற்காக Latrozole மாத்திரையைக் கொடுத்தார் டாக்டர். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதனால் புற்றுநோய் தடுக்கப்படலாம். இதன் பக்கவிளைவு என்பது எலும்புகளில் உள்ள கால்சியம் கரைதல்.

(இன்னும் பகிர்வேன்)

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.