திறமையான, நல்லாட்சி செய்யும் மன்னர் ராஜ்ஜியத்தை மிகச் சிறப்பாக ஆண்டு வந்தார். அவருக்கு இயற்கையிலேயே வலது கண்ணில் குறைபாடு, வலது காலும் இல்லை. மன்னர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் நாட்டைச் செவ்வனே ஆண்டு வந்தார். ஆனால், அவரை ஓவியம் வரையவோ சிலை வடிக்கவோ தடை விதித்திருந்தார். அவரது குறை பின்வரும் சந்ததிக்குத் தெரியாமல் சாதனைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்கிற எண்ணம். ஓர் ஓவியன் அரசவைக்கு வந்து அவரை ஓவியமாக வரையும் எண்ணத்தை வெளிபடுத்தினான். அரசர் வெளிப்படையான காரணத்தை கூறி மறுத்தார். ஓவியனோ அரசரை எந்தக் குறையும் தெரியாதவாறும் அவரது வீரத்தைப் பறைசாற்றுமாறும் ஓவியத்தை வரைவதாக வாக்களித்தான்.

அரசரும் அனுமதி அளித்தார். ஓவியத்தை முடித்து அரசருக்குப் பரிசளித்தான் ஓவியன். அதைத் திறந்து பார்த்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. அரசர் ஒரு குதிரையின் மேல் அமர்ந்து உயர்த்திய வலக்கையில் வாளேந்தி கம்பீரத்துடன் அமர்ந்துள்ளார், இடக்கையால் குதிரையைப் பிடித்துள்ளார். முன்னங்காலைத் தூக்கிய குதிரையும் சிலிர்த்து நின்றது. இது அத்தனையும் மன்னருக்கு இடது பக்கத்தில் இருந்து பார்ப்பது போல ஓவியம் அமைந்து இருந்தது.

ஓவியத்தில் எதையும் மாற்றவில்லை, ஆனால் அவரது கோணம் மாறிய போது குறைகள் தவிர்க்கபட்டன. மகிழ்ந்த மன்னர் ஓவியரைப் பரிசால் திணறடித்தார்.

இந்தக் கதை நமக்குச் சொல்லும் நீதி, எதையும் ஒரு புதிய கோணத்தில் பார்க்கும் போது பல சவால்களுக்கு எளிய தீர்வு கிடைக்கும். போன அத்தியாயத்தில் மாற்றி யோசிப்பதைப் பற்றிப் பேசினோம். மாற்றி யோசிப்பதும் புதிதாக யோசிப்பதும் எல்லாச் சவால்களுக்கும் தீர்வு தரும். இரண்டும் ஒன்றல்ல, ஆனால் ஒன்றை இன்னொன்று முழுமையாக்கும்.

ஒரு சவாலுக்கு எல்லாரும் எடுக்கும் தீர்வையே தேர்ந்தெடுக்காமல், மற்ற எல்லா வகை தீர்வுகளையும், எந்த முன் தீர்மானமும் இன்றி அலசி ஆராய்ந்து ஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்தால் மாற்றி யோசித்தல் (கூர் சிந்தனை திறன் / Critical thinking ), அதே சவாலுக்கு இதுவரை இல்லாத ஒரு தீர்வைக் கண்டுபிடித்தல் புதிதாக யோசித்தல் (படைப்பாற்றல் திறன் / Creative Thinking ).

இரண்டும் ஒன்றை இன்னொன்று சார்ந்தது.

படைப்பாற்றல் திறனால் நமக்கு சில தனிபட்ட நன்மைகளும் உண்டு. வாழ்க்கை வெகு சுவாரசியமாகப் போகும். இன்றைய இயந்திர உலகில் சலிப்பில்லாத வாழ்வே பெரும் வரம். நம் உலகம் அழகாகும் போதே நம்மால் இந்த உலகமும் அழகாகும்.

யோசித்துப் பாருங்கள், அமேசான், முகநூல், வாட்ஸ்அப், ஸ்விகி, ஓலா, ஏடிஎம், கூகுள் ஏன் ஒரு சிறிய கம்ப்யூட்டரைப் போல் இயங்கும் உங்கள் தொலைபேசி இதெல்லாம் யாரோ ஒருவர் புதிதாக யோசித்ததால்தானே நமக்கு கிடைத்தது?

நெகிழி டம்ளர்களில் தேநீர் அருந்துவதால் வரும் ஆரோக்கியக் கேடும், சுற்றுச் சூழல் கேடும் அனைவருக்கும் தெரியும், ஒரு மாணவன் கண்டுபிடித்த ‘பிஸ்கட் கோப்பைகள்’, நெகிழி கோப்பைக்குப் பதிலாக பிஸ்கட் கோப்பையில் தேநீர், அருந்திய பின் கோப்பையையும் சாப்பிடலாம். உலகின் போக்கையே மாற்றக்கூடிய வல்லமை கொண்ட கண்டுபிடிப்பு. இது போன்ற சிறிய பெரிய கண்டுபிடிப்புகளால் மனிதர்களின் வாழ்க்கை எளிதாகவும் தரமாகவும் அழகாகவும் ஆகிறது.

நாம் எப்போதும் புதிதாக யோசிப்பதாலும், புதிதாகத் தேடிக்கொண்டே இருப்பதாலும் மூளை சுறுசுறுப்பாகவும் மூளை சுருங்குதல், மறதி நோய் போன்ற தாக்கங்கள் இன்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். சவால்களை ரசியுங்கள், எதையும் குழந்தையின் ஆர்வத்தோடு அணுகுங்கள், தெரியாததை, புரியாததை நேர்மையாக ஒத்துக்கொண்டு கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஆழமாகக் கற்க முனையுங்கள், கொஞ்சம் உங்களின் கற்பனைச் சிறகை விரிக்க விரிக்க புதிய புதிய சிந்தனைகள் உருவாவதை நீங்களே உணர முடியும்.

இது பொதுவாகப் பிறவித்திறன் என்றாலும் சிறிது மெனக்கெடும் போது நாமும் மேம்படுத்திக் கொள்ள முடியும். தியானம், உடற்பயிற்சி, இசை, நிதானமான மனநிலை போன்றவை நிச்சயம் உதவும்.

தவறாகிவிட்டால் என்ன செய்வது என்கிற பயமும் மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் தயக்கமும் பெரிய எதிரிகள். அப்படி தாமஸ் எடிசன் தயங்கி இருந்தால் நாம் வெளிச்சத்திற்குத் தாமதமாகத்தானே வந்திருப்போம்.

தயக்கத்தை உதறுங்கள், எல்லா விஷயமும் முதலில் கோமாளிதனமாகத்தான் பார்க்கப்படும். வெற்றி அடைந்த பின் கொண்டாடப்படும். உங்களை நீங்கள் அறிந்தால், நம்பினால் உலகத்தில் வெல்ல முடியாததென்று எதுவுமே இல்லை.

உங்கள் படைப்பாற்றலை நீங்களே அறிந்துகொள்ள ஒரு சிறிய கணக்கு விளையாட்டு. கீழ்கண்டவற்றை உபயோகித்து ஒரு சமன்பாடு எழுதவும் (கூகுள் ஆண்டவரின் உதவியின்றி)

1, 2, 3, 4, + =

விடை அடுத்த வாரம்

வாங்க, சிந்தனைத் தொப்பி (Thinking hat) அணிந்து சிகரம் தொடுவோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.