தமிழ் தலித் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை தில்லி பல்கலைக்கழகம் சமீபத்தில் அதன் பாடத் திட்டத்திலிருந்து நீக்கியது. போலவே வங்க மொழி எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான மகாசுவேதாதேவி எழுதிய ‘திரௌபதி’ என்ற சிறுகதையையும் நீக்கியது. இந்தியாவில் எழுதப்பட்ட பன்மை அடுக்குகள் கொண்ட மிக முக்கியமான சிறுகதைகளில் ஒன்று ‘திரௌபதி’. ஆரியம் திரௌபதியை எப்படிக் கட்டமைத்திருக்கிறது என்பதற்கு நேரெதிராக பழங்குடிகளின் ‘தோப்தி’ எப்படி வாழ்ந்தாள் என்பதைச் சொல்கிறது இந்தக் கதை. ஆடையை எப்படித் தேடித் தேடி,கிருஷ்ணா என்று திரௌபதி வேண்டினாள் என்று சொல்கிறது பாரதக் கதை. ஆனால் ஆடை அணியமுடியாது, போ என்று சொல்கிறாள் வஞ்சிக்கப்பட்ட பழங்குடி தோப்தி. ‘திரௌபதி’ கதையின் மொழிபெயர்ப்பு இனி-

பெயர்: தோப்தி மெஜென், வயது இருபத்தேழு, கணவர் துல்னா மாஜி (முன்னாள்), குடியிருப்பு சேராகான், பங்க்ரஜார், உயிருடனோ அல்லது பிணமாகவோ மற்றும்/அல்லது கைது செய்ய உதவும் தகவலுக்கு, நூறு ரூபாய் …

இரண்டு சீருடைகளுக்கு இடையே நடந்த பரிமாற்றம் இது.

முதல் சீருடை: இது என்ன, தோப்தி என்ற பழங்குடி? இதுவரை நான் கொண்டு வந்த பெயர்ப் பட்டியலில் அப்படி ஒரு பெயரே இல்லை! பட்டியலிடப்படாத பெயரை யாராவது எப்படி வைத்திருக்க முடியும்?

இரண்டாவது சீருடை: திரௌபதி மெஜென். பிறந்த ஆண்டு, பாகுலியில் அவளது தாய் (கொலையுண்ட) சுர்ஜா சாகு வீட்டில் கதிர் அடித்த போது, சுர்ஜா சாகுவின் மனைவி அவளுக்குப் பெயர் சூட்டினாள்.

மு.சீ: இந்த அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதுவதை விட வேறு எதையும் விரும்புவதில்லை. அவளைப் பற்றி என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது?

இ.சீ.: மிகவும் மோசமான பெண். பல விஷயங்களில், நீண்ட காலமாக …

ஆவணம்: துல்னா மற்றும் தோப்தி பீர்பம், பர்த்வான், முர்ஷிதாபாத் மற்றும் பங்குரா பகுதிகளுக்கு இடையே அறுவடைகளின் போது சுழன்று வேலை செய்தார்கள். 1971 ஆம் ஆண்டில்  மூன்று கிராமங்கள் முற்றுகையிடப்பட்டு இயந்திரத் துப்பாக்கியால் சுடப்பட்ட புகழ்பெற்ற ஆபரேஷன் பாகுலியில், இவர்களும் இறந்ததைப் போல ஏமாற்றி, தரையில் கிடந்தனர். உண்மையில், அவர்கள்தான் முக்கியக் குற்றவாளிகள். சுர்ஜா சாகு மற்றும் அவரது மகனைக் கொலை செய்த, வறட்சியின் போது உயர் சாதிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை ஆக்கிரமித்த, அந்த மூன்று இளைஞர்களை காவல்துறையில் சரணடைய விடவில்லை. இவை அனைத்திலும் அவர்கள் முக்கிய தூண்டுதலாக இருந்தனர். காலையில், உடல்களை எண்ணிய போது, ​​தம்பதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாகுலியின் காரியகர்த்தாவான கேப்டன் அர்ஜன் சிங்கின் இரத்த சர்க்கரை அளவு சரேலென உயர்ந்து, கவலை மற்றும் மன அழுத்தத்தின் விளைவுதான் நீரிழிவு நோய் என்பதை மீண்டும் நிரூபித்தது. நீரிழிவுக்கு பன்னிரண்டு கணவர்கள், அவற்றில் ஒன்று மன அழுத்தம்.

நியாண்டர்தால் இருளில் துல்னாவும் தோப்தியும் நீண்ட காலம் தலைமறைவாக இருந்தார்கள். அந்த இருளைத் துளைக்கவேண்டும் என்ற முயற்சியில் மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில சாந்தல்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அவர்களைப் படைத்தவனை சந்திக்க ஆயுதப்படை வலுக்கட்டாயமாக அனுப்பியது. இந்தியாவின் சட்டவரைவின்படி, எந்த சாதியோ, இனமோ, மனிதர்கள் எல்லோருமே புனிதமாவர்கள். ஆனாலும் இது போன்ற விபத்துகள் நடந்துவிடுகின்றன. இதற்கு இரு விதமான காரணங்கள். 1) தலைமறைவு வாழ்க்கையில் தங்களை மறைத்துக் கொள்வதில் இந்தத் தம்பதி கைதேர்ந்தவர்கள்; 2) சந்தால்கள் மட்டுமல்ல, ஆஸ்திரோ-ஆசியப் பழங்குடிகளான அனைத்து முண்டா குடிகளும் படையினருக்கு ஒன்று போலவே தெரிந்தார்கள்.

உண்மையில், பங்க்ரஜார் காவல் நிலையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட (நம் இந்தியாவில், ஒரு புழு கூட குறிப்பிட்ட காவல் நிலையத்தின் அதிகாரத்தின் கீழ் வரும்) ஜார்கனியின் புகழ்பெற்ற காட்டைச் சுற்றி, அதன் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலைகளில் கூட, காவல் நிலையங்களைத் தாக்கி, துப்பாக்கிகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், தானியத் தரகர்கள், நில உரிமையாளர்கள், பணக்காரர்கள், சட்ட அதிகாரிகள் மற்றும் இன்னபிற அதிகாரிகளைக் கொலை செய்ததைக் கண்ட நேரடி சாட்சிகளின் மயிர் கூச்செறியும் பதிவுகளைக் கேட்கலாம். சம்பவங்களுக்கு முன்பு கருப்பு நிறத் தம்பதி ஒன்று காவல்துறை சைரன்களைப் போல உலா வந்தது. அவர்கள் சாந்தல்களுக்குக் கூட புரியாத வகையில் காட்டுமிராண்டித்தனமான மொழியில் மகிழ்ச்சியுடன் பாடினார்கள். 
 சமரை ஹிஜுலெனகொ மார் கோகோபெ மற்றும்

ஹெண்டெ ரம்ப்ர கெச்செ கெச்செ புந்தி ரம்ப்ர கெச்செ கெச்செ

கேப்டன் அர்ஜன் சிங்கின் நீரிழிவு நோய்க்கு இவர்களே காரணம் என்பது தெளிவாக நிரூபணமாகிறது.

சாங்க்ய தத்துவத்தில் ஆண் கோட்பாடு, அல்லது அன்டோனியோனியின் ஆரம்பகால படங்களைப் போலவே அரசாங்க நடைமுறை புரிந்துகொள்ள முடியாததாக இருந்ததால், மீண்டும் ஒருமுறை ஆபரேஷன் ஃபாரஸ்ட் ஜர்கானியில் கேப்டன் அர்ஜன் சிங்கே அனுப்பப்பட்டார். மேற்கூறிய குலவையிட்டு நடனமாடிய தம்பதிதான் தப்பிய பிணங்கள் என்று உளவுத்துறை தந்த செய்திகளைக் கேட்டு, அர்ஜன் சிங் சிறிது சிறிதாக ஒரு ‘சாம்பி’ மனநிலைக்குச் சென்று, இறுதியாக கருப்புப்பை போர்த்திய எந்த கருப்பு நபரைப் பார்த்தாலும், அவர் மயங்கி விழுந்து, "அவர்கள் என்னைக் கொல்கிறார்கள்" என்று அரற்றி, நிறைய தண்ணீர் குடித்து, அதை வெளியேற்றினார். சீருடையோ, வேதங்களோ அந்த மனச்சோர்விலிருந்து அவரை விடுவிக்கவில்லை. ஒரு வழியாக, முன்கூட்டிய மற்றும் கட்டாய ஓய்வு பெறுவதாகக் கூறியவரை, மூத்த வங்காளத்தவரான தீவிர இடது அரசியல் களமறிந்த திரு. சேனாநாயக்கின் மேஜையின் முன் நிறுத்தினார்கள்.
 சேனாநாயக்கிற்கு தன்னைவிட தன் எதிர் தரப்பின் செயல்பாடுகள் மற்றும் திறன்கள் நன்றாகவே தெரியும். எனவே, முதலில், அவர் சீக்கியர்களின் இராணுவ மேதைக்கு ஒரு வாழ்த்துரை வழங்குகிறார். பின்னர் அவர் மேலும் விளக்குகிறார்: “துப்பாக்கி விசைக்குப் பின் எதிர்த்தரப்பின் அதிகாரம் மட்டுமே செல்லுமா? துப்பாக்கியின் ஆண் உறுப்பிலிருந்து அர்ஜன் சிங்கின் சக்தியும் வெடிக்கும். கையில் துப்பாக்கியின்றி "ஐந்து கே”க்கள் (சீக்கிய தர்மத்தின் ஐந்து விழுமியங்களான கேஷ், கரா, கங்கா, கச்சா, கிர்பன்) கூட இந்த நாளில் மற்றும் ஒன்றுமில்லாமல் போகின்றன. இந்த உரையை அவர் சுற்றியிருக்கும் அனைவருக்கும் வழங்குகிறார். இதன் விளைவாக, போராடும் படைகள் “இராணுவக் கையேட்டின்” மேல் தங்கள் நம்பிக்கையை மீண்டும் வைக்கின்றன. இது அனைவருக்குமான புத்தகம் அல்ல.
 முற்காலக் கருவிகள் கொண்டு செய்யப்படும் கொரில்லாப் போர் மிகவும் இழிவான மற்றும் வெறுக்கத்தக்க சண்டை வடிவம் என்று சொல்கிறது அந்த நூல். அத்தகைய போரில் ஈடுபடும் ஒவ்வொரு நபரையும், அனைத்து நபர்களையும் பார்த்தாலே வேறறுத்தல் என்பது ஒவ்வொரு சிப்பாயின் புனித கடமையாகும். தோப்தியும் துல்னாவும் அத்தகைய போராளி வகையைச் சேர்ந்தவர்கள், ஏனென்றால் அவர்களும் குறுவாள், அரிவாள், வில் மற்றும் அம்பு போன்றவற்றால் கொலை செய்கிறார்கள். இதனால் கணவான்களின் போர்த் திறனைக் காட்டிலும் அவர்களது திறன் மேலானதாக இருக்கிறது. எல்லா கணவான்களும் "அறைகளை" வெடி வைத்துத் தகர்ப்பதில் நிபுணர்களில்லை; துப்பாக்கியை கையில் ஏந்தினால் சக்தி தானாகவே வெளிவரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் துல்னா மற்றும் தோப்தி படிப்பறிவற்றவர்கள் என்பதால், அவர்களது வகையறா தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
 இன்னொரு தரப்புக்கு அவரைப் பற்றிய புரிதல் இல்லை என்றாலும், சேனாநாயக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும். அவரது செயல்முறை எதுவாக இருந்தாலும், கோட்பாடுகளில் அவர் எதிர்தரப்பை மதிக்கிறார். எதிரியை “துப்பாக்கிகளுடன் விளையாடும் சிறு விளையாட்டு” என்ற எண்ணத்தோடு இருந்தால், அவர்களைப் புரிந்துகொள்ளவோ அழிக்கவோ முடியாது என்பதை உணர்ந்ததால், அவர் அவர்களை மதிக்கிறார். எதிரியை அழிக்கவேண்டும் என்றால் அவர்களில் நீயும் ஒருவனாகிவிடு. இவ்வாறு (கோட்பாட்டளவில்) அவர்களில் ஒருவராக மாறுவதன் மூலம், அவர் அவர்களைப் புரிந்து கொண்டார். எதிர்காலத்தில் இவை அனைத்தையும் பற்றி எழுதுவார் என்று அவர் நம்புகிறார். அவர் தனது எழுத்துப் பணியில், கணவான்களை (அதிகாரிகளை) ஒதுக்கிவிட்டு அறுவடைத் தொழிலாளர்களை முன்னிலைப்படுத்துவார் என்றும் முடிவு செய்திருந்தார். அவரது இந்த மன செயல்முறைகள் சிக்கலானதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் ஆமை இறைச்சியை உண்டதும் மகிழ்வடையும் அவரது மூன்றாவது மாமாவைப் போலவே அவரும் மிக எளிமையானவர். உண்மையில், பழைய பிரபலமான பாடலைப் போலவே, உலகம் ஒவ்வொரு திருப்பத்திலும் மாறும் என்பதை அவர் அறிவார். மேலும் அவ்வாறு மாறும் ஒவ்வொரு உலகத்திலும் அவர் கௌரவத்துடன் வாழத் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும்.
 அவசியமானால் அவர் எதிர்காலத்தை எந்த அளவிற்கு சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதைக் காண்பிப்பார். அவர் இன்று என்ன செய்கிறார் என்பதை எதிர்காலம் மறந்துவிடும் என்பதை அவர் நன்கு அறிவார். ஆனால் அவர் உலகுக்கு உலகு தன் வண்ணத்தை மாற்ற முடிந்தால், அவர் விரும்பும் உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்த அவரால் முடியும் என்பதையும் அவர் அறிவார். இன்று அவர் "அச்சம் மற்றும் ஒழித்தல்" மூலம் இளைஞர்களைக் களையெடுக்கிறார், ஆனால் ரத்தத்தின் நினைவையும், பாடத்தையும் மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். அதே நேரத்தில், அவர், ஷேக்ஸ்பியரைப் போலவே, உலக பாரம்பரியத்தை இளைஞர்களின் கைகளில் வழங்குவதை நம்புகிறார். அவரே ப்ரோஸ்பெரோவும் கூட. எப்படியிருந்தாலும், பல இளைஞர்கள் மற்றும் பெண்கள், பகுதிகளாகவும் ஜீப்புகளிலும், ஒவ்வொரு காவல் நிலையமாகத்தாக்கி, பிராந்தியத்தை அச்சுறுத்துவிட்டு, ஜார்கனியின் காடுகளில் மறைந்துவிட்டார்கள் என்ற தகவல் கிடைக்கிறது.
 பாகுலியில் இருந்து தப்பித்த பிறகு, தோப்தி மற்றும் துல்னா கிட்டத்தட்ட ஒவ்வொரு நில உரிமையாளரின் வீட்டிலும் வேலை செய்ததால், அவர்கள் கொலையாளிகளுக்கு தங்கள் இலக்குகளைப் பற்றி மிகத் தெளிவாகத் தெரிவிக்கலாம், அவர்களும் வீரர்கள், அவர்களைப் போன்ற அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று பெருமையுடன் அறிவிக்கலாம். இறுதியாக ஊடுருவ முடியாத காடு ஜார்கனிக் காடுகள் உண்மையான வீரர்களால் சூழப்பட்டுள்ளது. ராணுவம் நுழைந்து போர்க்களத்தைப் பிரிக்கிறது. குடிநீருக்கான ஒரே ஆதாரமாக இருக்கும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீரூற்றுகளை மறைந்திருக்கும் வீரர்கள் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். இன்னும் பார்க்கிறார்கள். அத்தகைய ஒரு தேடலில், இராணுவத்துக்கு துப்பு சொல்லும் துகிராம் கராரி, ஒரு இளம் சாந்தலைப் பார்த்தான். 
 ஒரு தட்டையான கல்லின் மீது வயிற்றில் படுத்து, தண்ணீர் குடிக்க முகத்தை நனைத்திருந்தான் அவன். அவன் படுத்திருந்தபோதே வீரர்கள் அவனை சுட்டனர். .303 அவனைக் கழுகு போல கைகால்களை விரித்துத் தூக்கி எறிந்து, அவனது வாயில் ரத்தம் தோய்ந்த நுரையைக் கொணர்ந்தபோது, ​​அவன் "மா-ஹோ" என்று கர்ஜித்து, பின்னர் உயிர்விட்டான். அது சந்தேகத்துக்கு இடமின்றி துல்னா மாஜி என்பதை அவர்கள் பின்னர் உணர்ந்தனர்.
 “மா -ஹோ" என்றால் என்ன? இது பழங்குடி மொழியில் வன்முறை முழக்கமா? எவ்வளவு யோசித்தாலும், பாதுகாப்புத் துறையால் உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை. கல்கத்தாவிலிருந்து இரண்டு பழங்குடி-சிறப்பு நிபுணர்கள் வரவைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹாஃப்மேன்-ஜெஃபர் மற்றும் கோல்ட்மன்-பாமர் போன்றோர் உருவாக்கிய அகராதிகளைப் புரட்டிப் புரட்டி வியர்க்கிறார்கள். இறுதியாக சர்வ வல்லமையுள்ள சேனாநாயக் நீர் பிடிப்பவனான சம்ருவை வரவழைத்தார். சம்ரு இரண்டு நிபுணர்களையும் பார்த்துச் சிரித்தான். அவனது "பீடி" யால் காதுகளைச் சொறிந்துவிட்டுச் சொன்னான், காந்தி அரசர் காலத்தில் மால்டாவின் சாந்தல்கள் சண்டையிடத் தொடங்கியபோது இதைத்தான் சொன்னார்கள்! இது ஒரு போர்க்குரல். இங்கே "மா -ஹோ" என்று சொன்னது யார்? மால்டாவிலிருந்து யாராவது வந்தார்களா? 
இதனால் பிரச்சினை தீர்ந்துவிட்டது. பின்னர், துல்னாவின் உடலை கல்லில் விட்டு, வீரர்கள் பசுமையில் தங்களை மறைக்க மரங்களில் ஏறுகிறார்கள். அவர்கள் பல பெரிய கடவுளான பான்ஸைப் போல இலைகள் கொண்ட கொம்புகளைத் தழுவி, பெரிய சிவப்பு எறும்புகள் தங்கள் அந்தரங்கங்களைக் கடிக்கும் வரை காத்திருக்கிறார்கள். உடலை எடுத்துச் செல்ல யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறார்கள். இது வேட்டைக்காரனின் வழி, சிப்பாயின் வழி அல்ல. ஆனால் இந்த மிருகங்களை அங்கீகரிக்கப்பட்ட முறையில் அனுப்ப முடியாது என்பது சேனாநாயக்கிற்கு தெரியும். எனவே அவர் தனது ஆள்களை ஒரு பிணத்தை இரையாக்கி இழுக்கும்படிக் கேட்கிறார். எல்லாம் தெளிவாகும், என்கிறார் அவர். தோப்தியின் பாடலை நான் கிட்டத்தட்ட புரிந்துகொண்டேன். 
அவரது கட்டளைப்படி வீரர்கள் செல்கின்றனர். ஆனால் துல்னாவின் சடலத்தை யாரும் தேடி வரவில்லை. இரவில் வீரர்கள் சிறு சலனம் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி, இறங்கிக் காய்ந்த இலைகளின் மேல் கலவி கொண்டிருந்த இரண்டு முள்ளம்பன்றிகளைத் தாங்கள் கொன்றதை கண்டுபிடித்தனர். துல்னாவைக் கைப்பற்றியதற்கான வெகுமதியைப் பெறுவதற்கு முன்பே, வீரர்களுக்கு துப்பு சொல்லும் சாரணர் துகிராமின் கழுத்தைக் கத்தி பதம் பார்க்கிறது. துல்னாவின் சடலத்தைத் தூக்கிவரும் வீரர்கள் தங்கள் விருந்தில் குறுக்கிட்டுவிட்டார்கள் என்ற கோபத்தில் எறும்புகள் கடிக்கத் தொடங்கியதால், வீரர்கள் கடும் வலியை அனுபவிக்கின்றனர். பிணத்தை எடுத்துச் செல்ல யாரும் வரவில்லை என்று சேனநாயக் கேள்விப்பட்டதும், அவர் தனது ‘தி டெபுடி’- பாசிச எதிர்ப்பு காகிதப் பிரதி நகலைத் தட்டிவிட்டு, "என்ன?" என்று கத்துகிறார். உடனடியாக பழங்குடி நிபுணர்களில் ஒருவர் ஆர்கிமிடிஸைப் போல நிர்வாணமாகவும் வெளிப்படையாகவும் மகிழ்ச்சியுடன் ஓடிவந்து, “எழுந்திருங்கள் ஐயா! அந்த 'ஹெண்டே ரம்ப்ரா'வின் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். இது முண்டாரி மொழி. " 
இதனால் தோப்திக்கான தேடல் தொடர்கிறது. ஜார்கனியின் வனப்பகுதியில், நடவடிக்கை தொடர்கிறது - தொடரும். இது அரசாங்கத்தின் பின்புறத்தில் உள்ள புண் ஆகும். சோதனை செய்யப்பட்ட களிம்பால் குணப்படுத்த முடியாது, பொருத்தமான மூலிகை கொண்டு அதை உடைக்கவும் முடியாது. முதல் கட்டத்தில், வனத்தின் நிலப்பரப்பை அறியாமல் தப்பியோடியவர்கள் எளிதில் பிடிபடுகிறார்கள், எதிரிகளுடன் மோதும் சட்டத்தின்படி அவர்கள் வரி செலுத்துவோரின் செலவில் சுடப்படுகிறார்கள். மோதி அழிக்கும் சட்டப்படி அவர்களின் கண்கள், குடல், வயிறு, இதயம், பிறப்புறுப்பு போன்றவை நரி, கழுகு, கழுதைப் புலி, காட்டுப் பூனை, எறும்பு மற்றும் புழு ஆகியவற்றின் உணவாகின்றன, தீண்டத்தகாதவர்கள் எலும்புக்கூடுகளை விற்க மகிழ்ச்சியுடன் எடுத்துச் செல்கிறார்கள். 
அடுத்த கட்டத்தில், வெளிப்படையான போரில் தங்களைக் கைப்பற்ற அவர்கள் அனுமதிக்கவில்லை. இப்போது அவர்கள் நம்பகமான தகவலாளனைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. பத்துக்கு ஒன்று அது தோப்தி தான். தோப்தி தன் உயிரை விட துல்னாவை அதிகமாக நேசித்தாள். தப்பியோடியவர்களை இப்போது காப்பாற்றுவது அவள்தான் என்பதில் சந்தேகமில்லை. "அவர்கள்" என்பது ஒரு கருதுகோள்.
ஏன்?
எத்தனை பேர் உண்மையில் சென்றார்கள்?
பதில் வெறும் மௌனம் மட்டுமே. 
அதைப் பற்றி பல கதைகள், பல புத்தகங்கள் பத்திரிகையில் உள்ளன. எல்லாவற்றையும் நம்பாமல் இருப்பது நல்லது.
ஆறு வருட மோதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? பதில் அமைதி.
மோதல்களுக்குப் பிறகு கைகள் உடைந்த அல்லது துண்டிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஏன் கண்டுபிடிக்கப்பட்டன? கை இல்லாத மனிதர்கள் போராடியிருக்க முடியுமா? கழுத்து எலும்புகள் ஏன் நடுங்குகின்றன, கால்களும், விலா எலும்புகளும் ஏன் நசுக்கப்படுகின்றன?
இரண்டு வகையான பதில். மௌனம். கண்களில் புண்படுத்தும் கண்டனம். அவமானம்! இதை ஏன் கொண்டு வர வேண்டும்? என்னவாக இருக்கும். 
காடுகளில் எஞ்சியிருப்பது எத்தனை பேர்? பதில் அமைதி.
ஒரு படையணி? வரி செலுத்துவோர் செலவில் அந்த காட்டு பகுதியில் ஒரு பெரிய பட்டாலியனை பராமரிப்பது பாதுகாப்பானதா?
பதில்: ஆட்சேபனை. "காட்டுப் பகுதி" தவறானது. பட்டாலியனுக்கு மேற்பார்வை ஊட்டச்சத்து, மதத்தின் படி வழிபடுவதற்கான ஏற்பாடுகள், "விவித பாரதி" யைக் கேட்கும் வாய்ப்பு மற்றும் ‘இது தான் வாழ்க்கை’ படத்தில் சஞ்சீவ் குமார் மற்றும் கிருஷ்ணனை நேருக்கு நேர் பார்க்கும்  வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இல்லை, அந்தப் பகுதி காடு இல்லை.
எத்தனை பேர் எஞ்சியிருக்கிறார்கள்? பதில் அமைதி.
எத்தனை பேர் எஞ்சியிருக்கிறார்கள்? யாராவது இருக்கிறார்களா?
பதில் நீண்டது.
பொருள்: சரி, விவரணை இன்னும் தொடர்கிறது. பணக்காரர்கள், நில உரிமையாளர்கள், தானிய வியாபாரிகள், அநாமதேய விபச்சார விடுதிகள், முன்னாள் தகவல் அளிப்பவர்கள் இன்னும் பயப்படுகிறார்கள். பசியும் நிர்வாணமும் இன்னும் அடக்க முடியாதவையாக உள்ளன. சில பகுதிகளில் அறுவடைத் தொழிலாளர்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்கிறது. தப்பியோடியவர்களுக்கு அனுதாபம் காட்டும் கிராமங்கள் இன்னும் அமைதியாகவும், விரோதமாகவும் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் ஒருவரை சிந்திக்க வைக்கிறது ....
இதில் எங்கு தோப்தி மாஜென் பொருந்துகிறாள்?

தப்பியோடியவர்களுடன் அவளுக்கு தொடர்பு இருக்க வேண்டும். பயத்திற்கான காரணம் வேறு. காடுகளி இன்னும் இருப்பவர்கள் அந்தப் பழமையான உலகில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள். அவர்கள் ஏழை அறுவடைத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினருடன் கூட்டு வைத்திருப்பார்கள். அவர்கள் புத்தகங்கள் கற்றலை மறந்துவிட்டிருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் தங்களுடைய ஏட்டுக் கல்வியை அவர்கள் வாழும் மண்ணிற்கு உறுதி தரவும், புதிய போர் மற்றும் உயிர்வாழும் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும் பயன்படுத்தியிருக்கலாம். வெளிப்புற ஏட்டுக்கல்வியும் நேர்மையான உள்ளார்ந்த ஆர்வமும் கொண்டவர்களை எளிதாகச் சுடலாம், அகற்றலாம். ஆனால் நடைமுறையில் வேலை செய்பவர்களை அவ்வளவு எளிதில் அழிக்கமுடியாது.

 எனவே ஆபரேஷன் ஜார்கனி வனத்தை நிறுத்த முடியாது. காரணம்: ராணுவக் கையேட்டில் இருந்த எச்சரிக்கை வார்த்தைகள்.
 தோப்தி மெஜெனைப் பிடியுங்கள். அவள் நம்மை மற்றவர்களிடம் அழைத்துச் செல்வாள்.
இடுப்பு வாரில் கொஞ்சம் சோறைக் கட்டியிருந்த தோப்தி மெல்ல முன்னேறிச் சென்றாள். 
முஷாய் துதுவின் மனைவி அவளுக்குக் கொஞ்சம் சமைத்திருந்தாள். அவள் அவ்வப்போது இவ்வாறு செய்கிறாள். சோறு குளிர்ந்ததும், தோப்தி அதைத் தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, மெதுவாக நடக்கிறாள். அவள் நடக்கும்போது, கூந்தலில் இருந்த பேன்களை எடுத்துக் கொன்றாள். அவள் மண்ணெண்ணெய் வைத்திருந்தால், அதை உச்சந்தலையில் தேய்த்துப் பேன்களை அகற்றுவாள். பிறகு அவள் பேக்கிங் சோடா கொண்டு தலைமுடியைக் கழுவலாம். ஆனால் நீர்வீழ்ச்சியின் ஒவ்வொரு வளைவிலும் சோரப்பிள்ளைகள் பொறிகளை வைக்கிறார்கள். தண்ணீரில் மண்ணெண்ணெய் வாசனை வந்தால், அவர்கள் அந்த வாசனையை எளிதாகப் பின்பற்றுவார்கள்.
தோப்தி!
அவள் பதிலளிக்கவில்லை. அவள் தன் சொந்தப் பெயரைக் கேட்கும்போது பதிலளிப்பதில்லை. அவள் பெயரில் உள்ள வெகுமதிக்கான அறிவிப்பை இன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் பார்த்தாள். முஷாய் துதுவின் மனைவி சொன்னாள், "நீ எதைப் பார்க்கிறாய்? தோப்தி மெஜென் யார்! நீ அவளைக் காட்டிக்கொடுத்தால் பணம்! "
"எவ்வளவு?" "இருநூறு!" அடக் கடவுளே!
முஷாயின் மனைவி அலுவலகத்திற்கு வெளியே கூறினார்: “இந்த முறை நிறைய தயாரிப்புகள்.
ஏ -11 புதிய போலீசார். ம்.
மீண்டும் வர வேண்டாம். ஏன்?
முஷாயின் மனைவி கீழே பார்த்தாள். துது சாஹிப் மீண்டும் வந்ததாகச் சொன்னான். அவர்கள் உன்னைப் பிடித்தால், கிராமம், எங்கள் குடிசைகள் ...
அவை மீண்டும் எரியும்.
ஆம். துகிராம் பற்றி ... சாஹிபுக்குத் தெரியும். 
ஷோமாய் மற்றும் புதனா எங்களுக்கு துரோகம் செய்தனர். அவர்கள் எங்கே?
ரயிலில் ஓடிவிட்டார்கள்.
தோப்தி ஏதோ நினைத்தாள். பிறகு, வீட்டிற்குப் போ என்றாள். என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது, அவர்கள் என்னைப் பிடித்தால் உனக்கு என்னைத் தெரியாது.
உன்னால் ஓட முடியவில்லையா?
இல்லை சொல்லுங்கள், நான் எத்தனை முறை ஓட முடியும்? அவர்கள் என்னைப் பிடித்தால் என்ன செய்வார்கள்? அவர்கள் என்னை கவுன்டர் (என்கவுன்டர்) செய்வார்கள். செய்யட்டும்.
முஷாயின் மனைவி சொன்னாள், எங்களுக்குப் போக்கிடம் வேறு இல்லை. 
நான் யாருடைய பெயரையும் சொல்ல மாட்டேன், தோப்தி மென்மையாகச் சொன்னாள். 

ஒருவரை எப்படி சித்திரவதை செய்ய முடியும் என்று அடிக்கடியும், நீண்ட நேரமும் கேட்டு தோப்தி தெரிந்துகொண்டிருந்தாள். மனமும் உடலும் சித்திரவதைக்கு உட்பட்டால், தோப்தி நாக்கைக் கடித்துவிடுவாள். அந்த பையன் அதைச் செய்தான். அவர்கள் அவனை கவுன்டர் செய்தார்கள். அவர்கள் உங்களைக் கவுன்டர் செய்யும் போது, ​​உங்கள் கைகள் உங்களுக்குப் பின்னால் கட்டப்படுகின்றன. உங்கள் எலும்புகள் அனைத்தும் நசுக்கப்பட்டிருக்கின்றன, உங்கள் பாலுறுப்பே பெரும் காயமாக இருக்கும். போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார் … அடையாளம் தெரியாத ஆண் … வயது இருபது… 

இந்த எண்ணங்கள் சூழ அவள் நடக்கும்போது, ​​யாரோ அழைப்பதைக் கேட்டாள்.
தோப்தி, தோப்தி!
அவள் பதிலளிக்கவில்லை. தன் பெயரால் அழைத்தால், அவள் பதிலளிக்க மாட்டாள்.
இங்கே அவள் பெயர் உபி மெஜென். ஆனால் யார் அழைக்கிறார்கள்?
அவள் மனதில் எப்போதுமே சந்தேகத்தின் முனைகள் நிறைந்திருக்கும். "தோப்தி" என்ற குரல் கேட்டு அவை ஒரு முள்ளம்பன்றியின் முட்கள் போல் விறைத்தன. நடைந்துகொண்டே, அவள் மனதில்/தெரிந்த முகங்களை நினைத்துப் பார்த்தாள். யார்? ஷோம்ரா அல்ல, ஷோம்ரா தப்பி ஓடிவிட்டான். ஷோமாய் மற்றும் புதனாவும் வேறு காரணங்களுக்காக தப்பி ஓடிவிட்டனர். கோலோகும் இங்கு இல்லை. அவர் பாகுலியில் இருக்கிறார். இது பாகுலி ஆள் யாராவதா? பாகுலிக்குப் பிறகு, அவளது மற்றும் துல்னாவின் பெயர்கள் உபி மெஜென், மாதங் மாஜி. இங்கே முஷாய் மற்றும் அவரது மனைவியைத் தவிர வேறு யாருக்கும் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியாது. இளம் குழுவினரிடையே, முந்தைய ‘பேட்ச்’ உறுப்பினர்கள் எல்லோருக்கும் இவர்களைத் தெரியாது. 
அது ஒரு சிக்கலான நேரம். அதை நினைக்கும் போது இன்னும் தோப்தி குழப்பமடைகிறாள். பாகுலியின் ஆபரேஷன் பாகுலி. சுர்ஜா சாகு தனது இரண்டு வீடுகளின் வளாகத்திற்குள், இரண்டு குழாய்க்கிணறுகளும் மூன்று கிணறுகளும் தோண்டி எடுக்க, பிட்டிபாபுவை ஏற்பாடு செய்தார். எங்கும் தண்ணீர் இல்லை, பீர்பமில் வறட்சி. சுர்ஜா சாகுவின் வீட்டில் பொங்கும் வரம்பற்ற நீர், காகத்தின் கண் போல தெளிவானது.
 உங்கள் தண்ணீரை கால்வாய் வரியுடன் பெறுங்கள், எல்லாம் எரிந்து கொண்டிருக்கிறது. 
வரிப் பணத்தில் சாகுபடியை அதிகரிப்பதில் எனது லாபம் என்ன? 
எல்லாம் தீப்பிடித்து எரிகிறது.
இங்கிருந்து வெளியேறுங்கள். உங்கள் பஞ்சாயத்து முட்டாள்தனத்தை நான் ஏற்கமாட்டேன். தண்ணீரைக்கொண்டு சாகுபடியை அதிகரியுங்கள். அறுவடைக்கு மட்டும் அரைப்பங்கு நெல் வேண்டும். இலவச நெல் கிடைத்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். பிறகு எனக்கு வீட்டில் நெல் கொடுங்கள், பணம் கொடுங்கள், உங்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்து என் பாடத்தை நான் கற்றுக்கொண்டேன்.
நீங்கள் என்ன நன்மை செய்தீர்கள்?
கிராமத்திற்கு தண்ணீர் கொடுக்கவில்லையா? 
நீங்கள் அதை உங்கள் உறவினரான பாகுனாலுக்கு கொடுத்தீர்கள். 
உங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லையா?
இல்லை தீண்டத்தகாதவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.
சண்டை அங்கே தொடங்கியது. வறட்சியில், மனிதப் பொறுமை எளிதில் பற்றிக்கொள்ளும். கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ஜோகல் மற்றும் அந்த இளம் மனிதர், ராணா என்பது அவரது பெயரா? நிலம் சொந்தமாகக் கொண்ட வட்டிக்காரன் எதுவும் தரமாட்டான், அவனைப் போட்டுத் தள்ளுங்கள்... 
சுர்ஜா சாகுவின் வீடு இரவில் சூழப்பட்டது. சுர்ஜா சாகு தனது துப்பாக்கியை வெளியே கொண்டு வந்தார். சுர்ஜாவை மாட்டுக் கயிற்றால் கட்டினார்கள். அவரது வெண்மையான கண் திரைகள் விரிந்துத் திரும்பின, அவரை அடக்கமுடியவில்லை. சகோதரர்களே, முதல் அடியை நான் தருகிறேன் என்று துல்னா சொல்லியிருந்தான். என் முப்பாட்டன் அவரிடமிருந்து கொஞ்சம் நெல் வாங்கியிருந்தார், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த நான் இன்னும் அவருக்கு சம்பளமின்றி உழைக்கிறேன்.
அவர் என்னைப் பார்த்தபோது அவரது வாயில் எச்சில் ஊறியது என்று தோப்தி சொன்னாள். நான் அவருடைய கண்களைப் பிடுங்கி எடுப்பேன்.

சுர்ஜா சாகு. பின்னர் ஷியூரியிலிருந்து ஒரு டெலிகிராஃபிக் செய்தி. சிறப்புப் படை. ராணுவம். பாகுலி வரை ஜீப்பால் வரமுடியவில்லை. மார்ச் -மார்ச் -மார்ச். நொறுக்கப்பட்ட பூட்ஸ் கீழ் சரளைக் கற்கள் நெறிபட்டன. நறநற நறநற நறநற. கார்டன் அப். கட்டளைகள். ஜுகல் மண்டல்; சதீஷ் மண்டல், ராணா ஆல்டர் பிரபிர், தீபக், துல்னா மாஜி- தோப்தி மெஜென். சரண் சரண் சரண். சரண் இல்லை சரண். கிராமத்தை தவிடு பொடியாக்கு. இடித்துத் தகர். தகர். புட்-புட் புட்-புட்- காற்றில் உள்ள கார்டைட்-புட்-புட். சுடர் வீசுபவன். பாகுலி எரிந்து கொண்டிருக்கிறது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் … நெருப்பு –நெருப்பு- நெருப்பு. கால்வாயை மூடு. ஓவர்- ஓவர்-ஓவர். இரவு. துல்னாவும் தோப்தியும் வயிற்றால் ஊர்ந்து தப்பினார்கள்.  

பாகுலிக்குப் பிறகு அவர்களால் பல்டகுரியை அடைந்திருக்க முடியாது. பூபதி மற்றும் தாபா அவர்களை அழைத்துச் சென்றார்கள். பின்னர் தோப்தியும் துல்னாவும் ஜார்கனி பகுதியைச் சுற்றி வேலை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. துல்னா தோப்திக்கு விளக்கினான். அன்பே, இது சிறந்தது! இப்படி வாழும்போது நமக்குக் குடும்பமோ குழந்தைகளோ கிடையாது. ஆனால் யாருக்கு தெரியும்? நில உரிமையாளர் மற்றும் பணக்காரர் மற்றும் போலீசார் ஒரு நாள் அழிக்கப்படலாம்!
இன்று அவளைப் பின்னால் இருந்து அழைத்தது யார்?
தோப்தி நடந்து கொண்டே இருந்தாள். கிராமங்கள் மற்றும் வயல்கள், புதர் மற்றும் பாறைகள்-பொதுப் பணித் துறை குறிப்பான்கள்- அவள் பின்னால் ஓடும் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரே ஒருவர்தான் ஓடுகிறார். ஜார்கனி வனப்பகுதி இன்னும் இரண்டு மைல் தொலைவில் உள்ளது. இப்போது அவள் காட்டுக்குள் நுழைவதைத் தவிர வேறொன்றையும் நினைக்கவில்லை. காவல்துறை அவளுக்காக மீண்டும் நோட்டீஸை ஒட்டியுள்ளது என்பதை அவள் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சாஹிப் மீண்டும் வந்திருக்கிறார் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும். மறைவிடங்களை மாற்ற வேண்டும். 

மேலும், சந்திராவில் சுஜா அடிமையாக ஊழியம் செய்தவர்களுக்குப் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக சுஜா சாகுவுக்கு, லக்கி பெரா மற்றும் நரன் பெரா ஆகியோர் செய்ததற்கு பழிவாங்கும் செய்கையை ரத்து செய்ய வேண்டும். ஷோமாய்க்கும் புதனாவுக்கும் எல்லாம் தெரியும். தோப்தியின் விலா எலும்புகளின் கீழ் பெரும் ஆபத்தின் அவசரம் இருந்தது. ஷோமாய் மற்றும் புதனா ஆகியோரின் துரோகத்தால் அவர்களுக்கு சாந்தல்கள் என்ற பெருமை கொஞ்சமும் இல்லை என்று இப்போது அவள் நினைத்தாள். தோப்தியின் இரத்தம் சம்பாபூமியின் கலப்படமில்லாத கறுப்பு இரத்தம். சம்பாவிலிருந்து பாகுலி வரை ஒரு மில்லியன் நிலவுகள் தோன்றி மறைந்திருக்கும். அவர்களின் ரத்தம் மாசுபட்டிருக்கலாம்; தோப்தி தனது முன்னோர்களை நினைத்து பெருமைப்பட்டாள். அவர்கள் தங்கள் பெண்களின் ரத்தத்தை கருப்புக் கவசங்களில் காத்து நின்றனர். ஷோமாய் மற்றும் புதனா அரை இனப் பயல்கள். போரின் பலன்கள். ஷியாண்டங்காவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் ராதாபூமிப் பங்களிப்பு அவர்கள். இல்லையென்றால், சாந்தல் சாந்தலைக் காட்டிக் கொடுக்கும் முன் காகம் காகத்தின் சதையை சாப்பிட்டுவிடும்.
 அவளுக்குப் பின்பிறம் காலடி ஓசைகள். அவை தூரத்தில் இருக்கின்றன. அவளது இடையில் சோறு, புகையிலை ஒட்டிக்கொண்டது. அரிஜித், மாலினி, ஷாமு, மந்து - அவர்கள் யாரும் புகைப்பதில்லை அல்லது தேநீர் கூட குடிப்பதில்லை. புகையிலை மற்றும் சுண்ணாம்புத் தூள். தேள் கடிக்கு சிறந்த மருந்து. எதுவும் அவர்களிடம் கிடைத்துவிடக்கூடாது.
தோப்தி இடது பக்கம் திரும்பினாள். இந்த வழியில் கேம்ப். இரண்டு மைல்கள். இது காட்டுக்கு செல்லும் வழி அல்ல. ஆனால் தோப்தி தனக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரருடன் காட்டுக்குள் நுழைய மாட்டாள்.
நான் என் உயிரால் சத்தியம் செய்கிறேன். துல்னா உயிரால், என் உயிரால். எதுவும் சொல்லக்கூடாது.
 காலடிகள் இடப்புறம் திரும்புகின்றன. தோப்தி அவளது இடுப்பைத் தொடுகிறாள். அவள் உள்ளங்கையில் ஒரு அரை நிலவின் ஆறுதல். ஒரு குட்டி அரிவாள். ஜார்கனியில் உள்ள கொல்லர்கள் சிறந்த கைவினைஞர்கள். அதை கொண்டு அவர்களை நாம் விளிம்பில் நிறுத்துவோம்உபி, நூறு துகிராம்கள்-
கடவுளுக்கு நன்றி தோப்தி ஒரு அதிகாரி அல்ல. ஆனால் அரிவாள், குறுவாள் மற்றும் கத்தியை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் வேலையை ஒரே மாதிரியாக செய்கிறார்கள். தூரத்தில் விளக்குகள் தெரிந்தன. தோப்தி ஏன் இந்த வழியில் போகிறாள்? சற்று நில்லுங்கள், அது மீண்டும் திரும்புகிறது. ஹா! கண்களை மூடிக்கொண்டு இரவு முழுவதும் அலைந்தால்கூட நான் எங்கே இருக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியும். நான் காட்டுக்குள் போகமாட்டேன், அவனை இழக்கவும் மாட்டேன். நான் அவனை மிஞ்சி ஓடவும் மாட்டேன்.ஓநாய் போன்ற காவல்காரனே, மரணத்தைக் கண்டு அஞ்சும் நீ காட்டுக்குள் ஓடமுடியாது. உன்னை விட வேகமாக ஓடி, உன்னை மூச்சுமுட்டச் செய்வேன். கால்வாயில் எறிந்து உன்னை முடிப்பேன்.  
ஒரு வார்த்தை கூட சொல்லக்கூடாது. தோப்தி புதிய கேம்பைப் பார்த்தாள், அவள் இந்த நிலையத்தில் உட்கார்ந்து, பகல் நேரத்தைக் கடந்து, "பீடி" புகைத்திருந்தாள். எத்தனை போலீஸ் வாகனங்கள் வந்தன, எத்தனை ரோடியோ ரேம்களைக் கண்டுபிடித்தாள். ஸ்குவாஷ் நான்கு, வெங்காயம் ஏழு, மிளகு ஐம்பது, நேரடியான கணக்கு. இந்தத் தகவலை இப்போது அனுப்ப முடியாது. தோப்தி மெஜென் கவுன்டர் செய்யப்பட்டாள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். பின்னர் அவர்கள் ஓடுவார்கள். அரிஜித்தின் குரல். யாரேனும் பிடிபட்டால், மற்றவர்கள் அதை சரியாகக் கண்டு, அவர்களின் மறைவிடத்தை மாற்ற வேண்டும். காம்ரேட் தோப்தி தாமதமாக வந்தால், நாங்கள் அங்கு இருக்க மாட்டோம். நாங்கள் எங்கு சென்றோம் என்பதற்கான அடையாளம் இருக்கும். எந்தத் தோழனும் தன் பொருட்டு மற்றவர்களை அழிக்க விடமாட்டான். 
அரிஜித்தின் குரல். நீரின் ஓசை. அடுத்த மறைவிடத்தின் திசை கல்லின் கீழ் மர அம்புக்குறியின் நுனியால் குறிக்கப்படும். தோப்தி இதை விரும்புகிறாள், புரிந்துகொள்கிறாள். துல்னா இறந்தார், ஆனால், நான் உங்களுக்கு சொல்கிறேன்,அவர் வேறு யாருடைய உயிரையும் இழக்கவில்லை. இது தொடங்குவது நம் தலையில் இல்லாததால், வேறொருவர் பிரச்சனைக்காக மற்றவர் கவுன்டர் செய்யப்பட்டார். இப்போது அதைவிட மிகவும் கடுமையான விதி, ஆனால் எளிதானது மற்றும் தெளிவானது. தோப்தி வந்தால்-நல்லது; வரவில்லை- மோசம். மறைவிடத்தை மாற்ற வேண்டும். இந்தத் துப்பு எதிர்த்தரப்பு பார்க்காது, அவர்கள் பார்த்தாலும் எதுவும் புரியாது.
 அவளுக்குப் பின் காலடி சத்தம். தோப்தி மீண்டும் திரும்புகிறாள். இந்த பாறைகள் நிரம்பிய 30 மைல் நிலம் தான் காட்டுக்குள் நுழைய சிறந்த வழி. தோப்தி அந்த வழியைத் தவறவிட்டுவிட்டாள். முன்னால் ஒரு சமவெளி. பின்னர் மீண்டும் பாறைகள். அத்தகைய பாறை நிலப்பரப்பில் ராணுவம்  தாக்கமுடியாது. இந்தப் பகுதி போதிய பாதுகாப்பானது. ஒவ்வொரு மேடும் மற்றதைப் போலவே தோன்றும். இது நன்றாக இருக்கிறது. தோப்தி எரியும் "காட்" க்கு காவலரை வழிநடத்துவாள். எரியும் மலைகளின் காளி என்ற பெயரில் சரந்தாவின் பதித்பவன் பலியிடப்பட்டான்.
சரணடை!
ஒரு பாறை எழுந்து நிற்கிறது. மற்றொன்று. இன்னொன்று. வயதான சேனாநாயக் ஒரே நேரத்தில் வெற்றியும், விரக்தியும் அடைந்தார். நீங்கள் எதிரியை அழிக்க விரும்பினால், அவர்களில் ஒருவராகுங்கள். அவர் அவ்வாறு செய்திருந்தார். ஆறு ஆண்டுகளாக அவர் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கணித்திருந்தார். அவரால் இன்னும் முடியும். அதனால் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர், அவர் வாசித்த ஃபர்ஸ்ட் பிளட் அவரது சிந்தனை மற்றும் வேலைக்கு ஒப்புதல்தான். 
தோப்தியால் அவரை ஏமாற்ற முடியவில்லை, அவர் அதைக்குறித்து மகிழ்ச்சியடையவில்லை. அதற்கு இரண்டு வகையான காரணங்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மூளை செல்களில் தகவல் சேமிப்பு பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டார். களப் பணியாளர்களின் பார்வையில் இருந்து இந்தப் போராட்டத்தை ஆதரித்ததை அவர் அந்த அறிக்கையில் நிரூபித்தார். தோப்தி ஒரு களப் பணியாள். மூத்த போராளி. தேடல் மற்றும் பிடித்தல். தோப்தி மெஜென் கைது செய்யப்பட உள்ளார். அழிக்கப்படுவாள். வருத்தம். 
தோப்தி அசையாமல் நிற்கிறாள். பின்னால் கேட்ட காலடிகள் முன்னால் சுற்றி வருகின்றன. தோப்தியின் விலா எலும்புகளின் கீழுள்ள கால்வாய் அணை உடைக்கிறது. நம்பிக்கை இல்லை. சுர்ஜா சாகுவின் சகோதரன் ரோட்டோனி சாகு. முன்புறமிருந்து இரண்டு பாறைகள் வருகின்றன. ஷோமாய் மற்றும் புதனா. அவர்கள் ரயிலில் தப்பவில்லை.

அரிஜித்தின் குரல். நீங்கள் எப்போது வெற்றி பெற்றீர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதைப் போல, தோல்வியையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும், அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகவேண்டும்.  

இப்போது தோப்தி தன் கைகளை விரித்து, வானத்தை நோக்கி முகத்தை உயர்த்தி, காட்டை நோக்கித் திரும்பி, முழு உயிரின் சக்தியைத் திரட்டிக்க் குலவையிடுகிறாள். ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை. மூன்றாவது முறையின் போது வனத்தின் புறப்பகுதி மரங்களில் உறங்கிக்கொண்டிருந்த பறவைகள் விழித்தெழுந்து இறக்கைகளைப் படபடவென்று அசைத்தன. அழைப்பின் எதிரொலி வெகுதூரம் பயணிக்கிறது. 
திரௌபதி மெஜென் மாலை 6:53 க்கு கைது செய்யப்பட்டாள். அவளை கேம்புக்கு அழைத்துச் செல்ல ஒரு மணி நேரம் ஆனது. கேள்வி கேட்க இன்னும் சரியாக ஒரு மணி நேரம் ஆனது. யாரும் அவளைத் தொடவில்லை, அவள் முகாமின் கேன்வாஸ் ஸ்டூலில் உட்கார அனுமதிக்கப்பட்டாள். 8:57 மணிக்கு சேனாநாயக்கின் இரவு உணவு நேரம் நெருங்கியது. “அவளைச் செய்யுங்கள். தேவையானதைச் செய்யுங்கள், ”அவர் மறைந்தார். 
பின்னர் ஒரு பில்லியன் நிலவுகள் கடந்து செல்கின்றன. ஒரு பில்லியன் சந்திர ஆண்டுகள். ஒரு மில்லியன் ஒளி ஆண்டுகளுக்குப் பிறகு கண்களைத் திறந்த திரௌபதி, விசித்திரமாக, வானத்தையும் சந்திரனையும் பார்க்கிறாள். அவளது மூளையில் இருந்து இரத்தம் தோய்ந்த ஆணித்தலைகள் மெதுவாக நகர்கின்றன. நகர முயன்றபோது, ​​அவளது கைகளும் கால்களும் இன்னும் நான்கு கம்புகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்கிறாள். அவளது பின்புறத்திலும் இடுப்பின் கீழும் ஏதோ பிசுபிசுவென ஒட்டியது. அவளுடைய ரத்தம். வாயிலிருந்த துணி மட்டுமே அகற்றப்பட்டிருந்தது. நம்பமுடியாத தாகம். "தண்ணீர்" என்று கேட்டுவிடுவோமோ என்று அவள் கீழ் உதட்டை பற்களில் கடித்துக் கொள்கிறாள். அவளது பிறப்புறுப்பில் இரத்தம் வருவதை அவள் உணர்ந்தாள். எத்தனை பேர் அவளைச் ‘செய்ய’ வந்தார்கள்? 
அவமானத்தில் அவளறியாமலே அவள் கண்ணிலிருந்து ஒற்றைக் கண்ணீர்த் துளி வழிந்தது. கலங்கிய நிலா வெளிச்சத்தில் அவள் ஒளியற்ற தன் கண்களைத் தாழ்த்தி, அவளது மார்பகங்களைப் பார்த்து, உண்மையில் அவள் ‘செய்யப்பட்டிருக்கிறாள்’(வன்புணரப்பட்டிருக்கிறாள்) என்பதைப் புரிந்துகொள்கிறாள். அவளது மார்பகங்களில் கடித்த காயங்கள் பச்சையாக இருக்கின்றன, முலைக்காம்புகள் கிழிந்திருக்கின்றன. எத்தனை பேர்? நான்கு-ஐந்து-ஆறு-ஏழு-பின்னர் திரௌபதி மயக்கமடைந்தாள். 
அவள் கண்களைத் திறந்து வெள்ளை நிறத்தைப் பார்க்கிறாள். அவள் மேல் போர்த்தியிருந்த துணி. வேறெதுவும் இல்லை. திடீரென்று அவளுக்கு புது நம்பிக்கை துளிர்க்கிறது. ஒருவேளை அவர்கள் அவளைக் கைவிட்டிருக்கக்கூடும். நரிகள் தின்னுவதற்கு. ஆனால் அவள் காலடி ஓசை கேட்கிறாள். அவள் தலையைத் திருப்பினாள், காவலாளி அவனது பானெட்டில் சாய்ந்து அவளைக் கிண்டலாகப் பார்க்கிறான். திரௌபதி கண்களை மூடிக்கொண்டாள். அவள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மீண்டும் அவள் வன்புணரப்படுகிறாள். தொடர்கிறது. சந்திரன் சிறிது வெளிச்சத்தை வாந்தி எடுத்துவிட்டு உறங்கச் செல்கிறான். இருள் மட்டுமே எஞ்சியுள்ளது. கைகள் விரித்துக் கட்டப்பட்ட சலனமில்லாத உடல். சுறுசுறுப்பான சதை பிஸ்டன்கள் அதன் மேல் உயர்கின்றன, வீழ்கின்றன;  உயர்கின்றன, வீழ்கின்றன.
பின்னர் காலை வருகிறது.
பின்னர் திரௌபதி மெஜென் கூடாரத்திற்கு கொண்டு வரப்பட்டு வைக்கோலில் வீசப்படுகிறாள். அவளது துணித் துண்டு அவள் உடல் மீது வீசப்படுகிறது.
பின்னர், காலை உணவுக்குப் பிறகு, செய்தித்தாளைப் படித்துவிட்டு, "திரௌபதி மெஜென் கைது செய்யப்பட்டார்" என்ற வானொலி செய்தியை அனுப்பிய பிறகு, திரௌபதி மெஜெனை அழைத்து வர உத்தரவிடப்பட்டது.
திடீரென்று பிரச்சனை வருகிறது.
“புறப்படு!” என்ற ஆணையைக் கேட்டவுடன் திரௌபதி நிமிர்ந்தாள். நான் எங்கே போக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்கிறாள்.
புர்ரா சாகிப்பின் கூடாரத்திற்கு.
கூடாரம் எங்கே? 
அங்கே.
திரௌபதி தன் சிவந்த கண்களை கூடாரத்தின் மேல் பதிக்கிறாள். சொல்கிறாள், வா, நான் வருகிறேன். காவலர் தண்ணீர்ப் பானையை முன்னோக்கி தள்ளுகிறார்.
திரௌபதி எழுந்து நிற்கிறாள். அவள் தண்ணீரைத் தரையில் ஊற்றுகிறாள். அவளது துணியை பற்களால் கிழித்தெறிகிறாள். அத்தகைய விசித்திரமான நடத்தையைப் பார்த்து, காவலன் குழப்பமடைகிறான். அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது, அடுத்த ஆணைகளுக்காக ஓடுகிறான். கைதியை வெளியே அழைத்துச் செல்ல அவனுக்குத் தெரியும், ஆனால் கைதி புரிந்துகொள்ள முடியாத வகையில் நடந்து கொண்டால் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அதனால் அவன் தனது மேலதிகாரியிடம் கேட்கப் போகிறான்.
சிறைச்சாலையில் அலாரம் அடித்தது போல் பரபரப்பு. சேனாநாயக் ஆச்சரியத்துடன் வெளியேறி, திரௌபதி, நிர்வாணமாக, பிரகாசமான சூரிய ஒளியில் தலையை உயர்த்தி அவரை நோக்கி நடப்பதைப் பார்க்கிறார். நடுங்கும் காவலர்கள் அவள் பின்னால் செல்கின்றனர்.
இது என்ன? அவர் கேட்கத் தொடங்கி நிறுத்துகிறார்.
திரௌபதி நிர்வாணமாக அவர் முன் நிற்கிறாள். அவளது தொடை மற்றும் அந்தரங்கப் பகுதியின் முடி உலர்ந்த இரத்தத்துடன் சிக்குப் பிடித்திருக்கிறது. இரண்டு மார்பகங்களும் இரு பெரும் காயங்கள்.
இது என்ன? அவர் சத்தம் போடத் தயாராகிறார்.
திரௌபதி அருகில் வருகிறாள். இடுப்பில் கையை வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே, நீங்கள் தேடும் பொருள், தோப்தி மெஜென். என்னை வன்புணரச் சொன்னீர்கள், அவர்கள் எப்படிப் புணர்ந்தார்கள் என்று பார்க்க வேண்டாமா?
அவளுடைய ஆடைகள் எங்கே?
அவற்றை அணிய மாட்டேன், சார். அவற்றைக் கிழிக்கிறாள்.
திரௌபதியின் கருப்பு உடல் இன்னும் அருகில் வருகிறது. சேனாநாயக்கால் புரிந்து கொள்ள முடியாத ஒரு அடங்காத சிரிப்புடன் திரௌபதி அதிர்கிறாள். சிரிக்கத் தொடங்கும் போது அவளது உதடுகளிலிருந்து ரத்தத் துளிகள் சிதறுகின்றன. திரௌபதி தன் உள்ளங்கையில் உள்ள ரத்தத்தைத் துடைத்து, பயமுறுத்தும், வானம் பிளக்கும், கூர்மையான கூச்சலில், தன் குலவையைப் போலச் சொல்கிறாள். ஆடைகளால் என்ன பயன்? நீங்கள் அதைக் கழற்றி எறியலாம், ஆனால் நீங்கள் எப்படி எனக்கு மீண்டும் அதை அணிவிக்க முடியும்? நீ ஒரு மனிதனா? 
அவள் சுற்றும் முற்றும் பார்த்து, சேனாநாயக்கின் வெள்ளை புஷ் சட்டையின் முன்புறத்தில் ரத்தம் தோய்ந்த உமிழ்நீரைத் துப்புகிறாள். நான் வெட்கப்பட வேண்டிய எந்த ஆணும் இங்கு இல்லை என்று சொல்கிறாள். என் துணியை என் மீது போட நான் உங்களை அனுமதிக்க மாட்டேன். இன்னும் என்னதான் நீங்கள் செய்யலாம்? வரலாம், வாருங்கள், என்னை கவுன்டர் செய்யுங்கள் -வாருங்கள், என்னை கவுன்டர் செய்யுங்கள்-?

திரௌபதி சேனாநாயக்கை தன் சிதைந்து போன இரண்டு மார்பகங்களால் முட்டித் தள்ளுகிறாள், முதல் முறையாக சேனாநாயக் நிராயுதபாணியான அந்த இலக்கின் முன் நிற்க அச்சம் கொள்கிறார், வெகுவாக அச்சம் கொள்கிறார்.

***

மொழியாக்கம்: (காயத்ரி ஸ்பிவாக்கின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில்)

நிவேதிதா லூயிஸ் 

வரலாற்றாளர், எழுத்தாளர்.