உடலரசியல் சிறுகதை

அந்த வீட்டைச் சுற்றிப் பனிமூட்டமாய் இருந்தது. வீட்டிற்கு நெருக்கமாய் இருந்த மாமரங்களின் கிளைகள் வழியே புகைந்த பனிமூட்டம் வேறு உலகத்தை மலர்விழியின் கண்களுக்குக் கொண்டு வந்திருந்தது. அந்தக் குளிரிலும் ஓர் அணிலை இன்னோர் அணில் விரட்டிச் சென்று கொண்டிருந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரர் மிகவும் ரசனை மிக்கவராக இருக்கவேண்டும். இதை இந்த வீட்டிற்கு வந்து பல முறை நினைத்துவிட்டாள். சசியிடமும் வளர்மதியிடமும் பல முறை சொல்லிவிட்டாள். அப்படி ஒரு பாங்கான வடிவமைப்பு, வீட்டின் அமைப்பில், இருப்பில், அறைகளில் வளைய வர ஏதுவான இடைவெளிகளில். ஐந்து மணிக்கு மேல் தூக்கம் வரவில்லை. எழுந்திருக்கலாமா, வேண்டாமா என்று ஃபோனை எடுத்துப் பலமுறை பார்த்துவிட்டுத்தான் எழுந்தாள். வளர், சசியை இடுப்புடன் சேர்த்துக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள். ஆங்காங்கே நிறைய மாமரங்கள். மரங்களினூடே வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஒரு துகிலைப் போல் அசைந்து கொண்டிருந்தது. இன்னும் ஏழு ஆகியிருக்காது.

தன் வீட்டில் என்றால் இந்நேரம் நிறைய வேலைகளை முடித்திருப்பாள். ஐந்து மணிக்கு எழுந்து பல் துலக்கி, தன் பெட்டியில் இருக்கும் அப்பாவின் புகைப்படத்தை எடுத்து ஒரு முறை பார்த்துவிட்டு கழிவறைக்குச் சென்று அமர்ந்தவாக்கிலேயே ஃபோனில் அன்றைய உலகளாவிய சில செய்திகளை அரைகுறையாக மேய்ந்துவிட்டு, முகம் காலெல்லாம் கழுவிச் சமையலறைக்குள் நுழைந்து விட்டால், எட்டுமணிக்குத் தன் மூத்த பெண் வர்த்தினி என்ற வர்ஷா பள்ளிக்குக் கிளம்பும் வரை கால்கடுக்க நின்று வேலைசெய்யவேண்டியிருக்கும்.

வர்த்தினி, தன் பெயர் நவீனமாக, அந்தக் காலத்திற்குப் பொருந்துவதாக இல்லை என்று மாற்றிக்கொண்டாள். கொஞ்சம் சிடுசிடுவென முகத்தை வைத்திருப்பாள். ஆனால், நல்ல திடமான சிந்தனையும் போக்கும் கொண்ட பெண். நம்பி எங்குவேண்டுமானாலும் அனுப்பலாம். எந்த ஆணிடம் பழகினாலும் கவனமாக இருப்பாள். ‘கவலைப்படாதம்மா. இப்பொழுதுக்குக் கல்யாணமோ காதலோ இல்லவே இல்லை. உன்னைய மாதிரி எனக்கு மாமியார் வாச்சிட்டா…அப்பப்பா…என்னால இப்படியெல்லாம் இவ்வளவு படிச்சிட்டு வீட்டோட இருக்கமுடியாது’.

குழந்தைகளுக்குத் தேவையான காலை உணவு, மதிய உணவு பின் மாமியாருக்குத் தேவையான உப்பு குறைவான, எண்ணெய் அதிகம் சேராத சில காய்கறிகள், தினம் தினம் புதிய ரசம், தயிர் என்ற வகைகள் எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு வந்து வர்த்தினி கிளம்பி வெளியே சென்றதும் சரியாக, மாமியார் வந்து இரண்டாம் முறை கிரீன் தேநீர் கேட்பார். கால்கள் கெஞ்சும். ஒரு பத்து நிமிடங்கள் எனக்கு ஓய்வுகொடுத்துக்கொண்டு மீண்டும் தொடரக்கூடாதா என்று குழையும். அவருக்குத் தேநீர் போடும் போது தனக்கும் கொஞ்சம் சேர்த்துப் போட்டு சமையலறை உள்ளேயே சன்னல் வழியாகத் தெரியும் தோட்டத்துச் செடிகள் ஒவ்வொன்றையும் பார்த்தவாறே குடித்து முடித்துவிடுவாள்.

ஆனால், அதற்குள்ளாகவே நிறைய வேலைகள் சொல்லுவார் மாமியார். ‘மேல என்னோட கண் கண்ணாடிய வச்சிட்டுவந்துட்டேன், மலர். எடுத்துட்டு வா. கொடியில காயுற நீல ப்ளவுச எடுத்து உள்ள போட்டுரு. வெளுத்துடும். ஷெல்ஃப்ல என்னோட அமிர்தாஞ்சன் டப்பா இருக்கு. அதையும் எடுத்துட்டு வந்துரு.’, மலரை மாடிக்கு ஏறச்செய்யும் நோக்கமும், மலர் இன்னும் மாமியாருக்கு அடிமையாகத்தான் இருக்கிறாளா என்று பரிசோதிக்கும் நோக்கமும் தான் இருக்கும்.

அந்தப் பனித்துகிலினூடே ஒளி வீச அதன் திரையில் கண்ணுக்குப் புலனாகாத தன் வாழ்க்கையின் ஓட்டத்தை நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி பார்த்திருந்தாள் என்ற உணர்வில்லாமல் நின்று கொண்டிருந்தாள். சசி, கையில் ஒரு காபி கப்புடன் வந்து நின்றாள். தன்னுடைய காபியை எதிரில் முழங்கால் உயரமே இருந்த சுவர் மீது வைத்துவிட்டுப் பின்பக்கமாக வந்து மலரை அணைத்துக் கொண்டாள். மலருக்குக் கிறக்கமாக இருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள்.

Photo by V T on Unsplash

தன் இடுப்பைக் கட்டியிருந்த வளர்மதியின் கைகளை எடுத்துவிட்டு விட்டு வந்திருக்கிறாள் என்று மலர் எண்ணிக்கொண்ட படியே, சசியின் கைகளைத் தன் மீது முழுவதுமாக உணர்ந்தாள். தன் கணவன் மதனின் கைகளின் நினைப்பும் கூடவே வந்தன. தொடக்கத்தில் அவன் தொடுகையில் படர்ந்த இன்பத்தின் அதிர்வு குறைந்து போய் செயற்கையான பழகிப்போன அசைவுகளுக்கு உடலைத் தயார் செய்து அவனுக்கு ஈடுகொடுத்துப் பல சமயங்களில் ஒப்புக்குத் தன்னை அளித்து அவன் அயர்ந்து போகும் போது விலகி வேறுபக்கம் திரும்பித் தன் வெறுமையைப் பெருமூச்சால் நிரப்பித் தூங்கிவிடும் வழக்கத்திலிருந்து வெளியே வந்தது போலிருந்தது. சசியின் கைகள் மென்மையாக, ஈரப்பதமாய், கருணையின் சுகத்துடன் இருந்தன. அதற்குத் தன் உடலின் வெப்பமும் கூடக்காரணம் என்று நினைக்கும் போதே,

சசி மலரின் வலது காதருகில் நெருக்கமாய், கிசுகிசுப்பாய், ‘நேத்து எப்படி இருந்துச்சு?’

‘ம்’, என்றாள். ‘என்ன ம்? ஏதாவது சொல்லு. புதுசா சொல்லு.’ சசி கிளறினாள்.

மலருக்குப் பேசத்தோன்றவில்லை. அப்பொழுதைய அவள் உடல் தரும் கிறக்கத்தில் இன்னும் இன்னும் மூழ்கவேண்டும் போல் இருந்தது. ‘கிறக்கமா இருக்கு’. சசி, அது தான் வாய்ப்பு என்பது போல், மலரின் இடது மார்பைத் தன் இடது கையால் தடவிக்கொடுத்தாள். மலர் முனகினாள். மயக்கம் வருவதைப் போல இருந்தது. அந்த இடத்திலேயே உடைகளையெல்லாம் களைந்து விட்டு சசியை மேலே கிடத்திக்கொள்ளவேண்டும் போல இருந்தது. ஆனால், அதை மெதுவாக நடைபெறச் செய்யவேண்டும். இங்கே எதுவுமே அவசரமில்லை. காலக்கோடு இல்லாத வெளிக்கு வந்திருக்கிறோம். மொபைல் ஃபோன்கள் இல்லையென்றால் இந்தக்காலத்தில் தொலைந்து போவது இன்னும் எளிதாக இருந்திருக்கும். ‘இப்படி வா’, என்று சசி மலரை இழுத்துக்கொண்டு போய் எதிர்ப்பக்கம் ஓரத்தில் இருந்த சுவர் மீது சாய்த்து அவள் மீது தானும் சாய்ந்து இருகைகளாலும் இரு முலைகளையும் வருடிக்கொடுக்க உடை மீது என்றாலும் கடும் போதையாக இருந்தது. தேநீர் ஆறிக்கொண்டிருந்தது.

மூவரில், வளர்மதி தான் இந்தப்பயணத்தில் மிகவும் இன்புற்றுக் கிடந்தாள். அவளுடைய கணவன் எப்பொழுதும் அவளிடம் வன்முறையாக நடந்து கொள்பவன். பேச்சிலும் சரி செயலிலும் சரி அவளை அடிக்காமல் துன்புறுத்தாமல் அவனால் எதுவுமே செய்யமுடியாது. பார்க்க அழகாக இருப்பான். மலருக்கு அவனைப் பிடிக்கும். முன்னொரு தோழியின் வீட்டுத் திருமணச் சந்திப்பில் வளர் அவனைப்பற்றிய எல்லாவற்றையும் சொன்னதும், மலருக்குச் சப்பென்று ஆனது. பின் அவனைச் சுத்தமாகப் பிடிக்காமல் ஆனது. மனிதர்களின் புறத்தோற்றத்திற்கும் குணத்திற்கும் சம்பந்தமே இல்லை. திருமணம் முடிந்து சாப்பிட்டு மண்டபம் ஒட்டிய தென்னந்தோப்பில் காலாற நடந்து வரும் சிறிய வாய்ப்பு கிடைக்கும் போது வளர் அவனைப்பற்றிச் சொல்லியபடியே அழுதாள். அவளுடைய மாமியாரையும் தான் இறக்கும் நாள் வரை மாமனார் அப்படித்தான் அடிப்பாராம். தலையில் நங் நங்கென்று கொட்டுவாராம். அது குறையென்று மாமியாருக்கு எப்பொழுதுமே தோன்றியதில்லை. அதனால் தான் வளர்மதியின் கணவனுக்கும் அது ஒரு நோய் என்று தோன்றியதே இல்லை.

வளர் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்க்கத் தொடங்கி ஒரு முறை சண்டையாகி வளரின் வலது கையை முறுக்கி உடைத்துவிட்டான் அவளுடைய கணவன். அந்தச் சில நிமிடங்கள் குற்றவுணர்வில் அவன் வருந்தியது போல் தோன்றினாலும் இதெல்லாம் சரியாகிவிடும் என்று தனக்குத்தானே மனதைத் தேற்றிக்கொண்டானாம். வளரின் மாமியார் எப்பொழுதாவது மனம் திறந்து பேசினாலும் பல நாட்கள் தொடர்ந்து வளரிடம் பேசாமல் இருந்திருக்கிறார். இந்திரா என்ற பெயருக்கும் வளரின் மாமியாருக்கும் சம்பந்தமே இல்லை என்று கசப்பாய்ச் சிரிப்பாள். மாமனாரும் கணவனும் எப்பொழுதாவது வெளியூருக்குச் செல்லும் போது, வளரின் மாமியார் அவளிடம் வந்து தன்னைக் குளிப்பாட்டிவிடும்படிச் சொல்வாராம். ஒட்டுத்துணி இல்லாமல், முக்காலியின் மீது அமர்ந்து கொண்டு உடலுக்கு இதமாக வெந்நீர் ஊற்றச்சொல்வாராம்.

‘நல்லா தேச்சிவிடு’, என்று சொல்லிச் சொல்லிக் குளிப்பாராம். சில மணி நேரம் வரை அப்படியே நிர்வாணமாய் இருந்து குளித்துவிட்டு, வீட்டின் அறைகளில் கூட அப்படியே திரிவாராம். வளருக்கு முதலில் சங்கடமாக இருந்தது போகப்போக, மாமியாரின் மனநிலை புரிந்து அவர் மீது இரக்கம் தான் தோன்றியதாம். ‘உடம்ப, ஒத்த அறை மட்டும் இருக்குற வீடு மாதிரியே வச்சுக்கிட்டுத்தான் செத்துப் போப்போறேன். ஜெயில்ல இருக்குற மாதிரி. நீயாவது அப்படியெல்லாம் இருக்காத’, என்று அடிக்கடி சொல்வார் என்றாலும் மகன் முன்னால் வளரிடம் ஒரு சொட்டுக் கூட அன்பு காட்டியதில்லை. வளருக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும் என்பாள். இதில் வேறு, வளருக்குக் குழந்தையே உண்டாகவில்லை. பல நேரங்களில் கணவனும் மாமியாரும் மாமனாரும் ‘மலடி’, என்று தான் அழைப்பார்கள். அதுவே பெயர் மாதிரி கூட உடம்புடன் ஒட்டிக்கொண்டதாக வளர் சொல்வாள். வளர்மதி என்று தன்னை யாரேனும் அழைத்தால் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று உணர கணம் பிடிக்கும்.

வளரின் மாமனாரும் மாமியாரும் ஒருவர் பின் ஒருவராய் ஓர் ஆண்டு இடைவெளியில் இறந்து போனார்கள். கணவன் இறந்ததும் மாமியார் அடிக்கடி சொரசொரவென்ற தேய்ப்பானைத் தன் பாலுறுப்பின் மீது தேய்த்துக்கொண்டு இரத்தம் சொட்டச்சொட்ட வந்து வளரின் முன் நிற்பாளாம். ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்க’, என்று சொன்னால், ‘அவர் இல்லாம நான் எப்படி இருப்பேன்’, என்று அழுவாளாம். காயம் ஆறியதும் மீண்டும் அப்படி ஒரு முறை செய்தபோது, வளர் உடைந்து அழுதாளாம். ‘நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க ப்ளீஸ்.’ அப்படிச் சொல்லும் வளர்மதியின் கண்களையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம் மாமியார்.

Photo by Sam Moqadam on Unsplash

‘பெண்களோட உரையாடலில் பல நேரம் சம்பவங்களே இருக்கிறது இல்ல, மலர். பல சமயம் நாம ஆம்பிளைங்க முன்னாடி, அல்லது அவங்க சூழல்ல தேமேன்னு ஒரு எருமை மாதிரி நிக்கனும். அவ்வளவு தான் இந்த வாழ்க்கை. உனக்கு ஒன்னு தெரியுமா?’, வளர் கேட்ட போது மலர் தூரத்தில் வானில் ஒரு பறவை வட்டமடிப்பதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘ஒரு தடவ கூட என் கூட அந்த ஆளு உறவு வச்சிக்கிட்டதே இல்லை. எப்பப் பாத்தாலும் நான் என்னைய நானே அவன் முன்னால அப்படியே செஞ்சுக்கனும். மொதல்ல அசிங்கமா இருந்துச்சி. அப்புறம் அவன் ஒரு பெர்வர்ட். இதுக்கு மேல என்னால சொல்லமுடியாது. நாம கல்யாணம் பண்ணிக்கிற ஆம்பிளைய சொத்தா நினைச்சிக்கிறோம். அவங்க அசிங்கம் வெளிய தெரியாம அதை மூட்டை மாதிரி கட்டி வச்சிக் கடைசில தானே அந்த மூட்டையா ஆகிடறோம். என் மாமியாரு அப்படித்தான் வாழ்ந்தாங்க. நானும் அப்படித்தான்’, வளர்மதி மலரிடம் சொல்லிச் சொல்லி ஓய்ந்து போவாள். இத்தனைக்கும் வளர்மதியின் உடல் வாளிப்பான, கவர்ச்சியான ஆரோக்கியமான உடல். ஓயாமல் வேலை செய்து கொண்டே இருப்பாள். ஒரு நிமிடம் கூட ஓய்வாக இருக்கமாட்டாள். ‘அது அப்படித்தான். மனசோட வேகத்த உடம்புல பாய்ச்சிக்கிட்டோமுன்னா வாழ்க்கைய பத்தி துக்கமே படவேணாம் தான.’, என்று வளர்மதி சொல்லிவிட்டுப் பேச்சை அடுத்த விடயத்திற்குக் கொண்டு செல்வாள்.

மூவருமாய் அந்த வீட்டிற்கு வரவேண்டுமென்று முடிவெடுத்த போது ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் ஒவ்வொரு பொய்யைச் சொன்னார்கள். சசி, தன் வேலை விசயமான ஒரு கருத்தரங்கிற்குச் செல்லவேண்டும். அப்படியே அருகில் இருக்கும் மலர்விழி வீட்டில் இரண்டு நாட்கள் என ஒருவாரம் ஆகும் என்று சொன்னாளாம். வளர்மதி, தன் கணவனை விட்டு ஒரு நாள் கூட வெளியே சென்றதில்லை. ‘என் தூரத்து அக்கா சொந்தம். அக்கா முறை வேணும். புள்ளைக்குச் சடங்கு வச்சிருக்கா. போயிட்டு வந்துர்ரேனே’, என்று சொன்னதும் என்ன நினைத்தானென்னு தெரியவில்லை. உடனே ‘ம்’, என்று சொல்லிவிட்டான்.

தான் இந்தப்பக்கம் சென்றதும் ஆபாசப்படங்கள் போட்டுப்பார்ப்பான் என்று வளர்மதிக்குத் தெரியும். மலர்விழிக்கு மாமியார் தான் சங்கடம். ‘எங்கம்மா வீட்டுக்குப் போயிட்டு வந்துரேன். அம்மாவுக்குக் கால்வலியா இருக்காம்’, என்று சொன்னதும், ‘எனக்குந்தான் கால் வலி. யார் சமைக்கிறது, வீட்டைத் துடைக்கிறது’. சரியான நேரத்தில் மலர்விழியின் கணவன் உள்ளே வந்து, ‘போயிட்டு வரட்டும். ரெண்டு நாளைக்கு வெளிய சாப்பிடலாம். குழந்தைங்க கேட்டுக்கிட்டே இருக்காங்க’. மலர்விழி தன் அம்மாவிடம் சொல்லிவைத்திருந்தாள். மலர்விழி அம்மா கமலாவிற்குச் சந்தேகம் தலைதூக்கியது. ‘அப்படி எங்க மலர் போற? வேற ஒண்ணும் பிரச்சனை இல்லையே’, என்று கேட்டு வைத்தாள். பெண்ணின் விடுதலையுணர்வு எவ்வளவு சந்தேகக் கேள்விகளைப் பின்னுகின்றன என்று நினைத்தபடியே பெட்டியில் துணிகளை எடுத்து வைத்தாள். தனக்குப் பிடித்தமான ஸ்லீவ் லெஸ் நெட் பிளவுஸ்களை மட்டும் எடுத்து வைத்தாள். கேட்டதிலிருந்து மாமியார் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு திரிந்தாள். மலர்விழிக்குமாய்ச் சேர்த்து வாங்கும் மல்லிகை சரத்தை வாங்காது தவிர்த்தாள்.

மூவருமாய் ஒன்றாக இருக்கப் போகிறோம் என்று முடிவெடுத்ததிலிருந்து மலர்விழி சூழலுடன் எதுவுமே ஒட்டவில்லை. கண்ணுக்குத் தெரியாத பொன் சிறகுகள் விரித்தாற்போல தரையில் கால் பாவாது பறந்து கொண்டிருந்தாள். இரவில் கண்விழித்து மேலே பரவும் இருளினூடே மின்னும் நட்சத்திரங்களைத் தேடிக்கொண்டிருந்தாள். அவள் முன்பு திரையில் மூவருமாய்ச் சத்தமின்றிச் சிரித்தபடி இருந்தார்கள். கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். வளர்மதியும் சசியும் மலர்விழியின் முலைகளைத் தொட்டுப்பார்த்தார்கள். அந்த முதல் தொடுகை சிலிர்ப்பாய் இருந்தது. மறந்து போன சிலிர்ப்பை நினைவூட்டுவதாய் இருந்தது.

சசி தான் இதைத் தொடங்கிவைத்தாள். எல்லோரும் மாறி மாறி இணைப்பு அழைப்புகளில் தங்கள் வீட்டுத் துயரங்களைப் பகிர்ந்துகொள்வதை நீண்ட நாட்களாகக் கொண்டிருந்தனர். மதிய வேளைகள் பெரும்பாலும் அவரவர் வீட்டின் அன்றைய சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதாக இருக்கும்.

‘ஏய், கழுதைங்களா. எனக்கு ஒரு ஐடியா தோணுது’

‘சொல்லு, சொல்லு என் மூதேவி. உடனே சொல்லு’, வளர்மதி.

‘ஆனா நான் சொன்னதும் உடனே யாரும் பின் வாங்கக்கூடாது. இதே மாதிரி தினமும் எப்படிப் பேசிக்கிறோமோ அதுல எந்த மாத்தமும் வரக்கூடாது’

‘சொல்லித்தொலையேன். இவ்வளவு பீடிகை போடாத’, மலர்.

இடையில் மாமியார் ஒட்டுக்கேட்பது போல் அந்தப்பக்கமாய் வந்து சென்றதைக் கவனத்துடன் மனதில் வைத்துக்கொண்டாள், மலர்.

‘மொதல்ல உன் ஐடியாவ சொல்லு மூதேவி’, வளர்மதி.

‘நாம மூணு பேரும் ஒரு வாரத்துக்கு இன்னொரு இடத்துல போய்த் தங்கணும். நாம மூணு பேரு மட்டும்’

சில நொடி மெளனத்திற்குப் பின், மலர் கேட்டாள். ‘ஒரு வாரத்துக்குப் போய் இன்னொரு இடத்துல தங்கி…அப்புறம்…?’

வளர்மதி, ‘யப்பப்பா என்னால முடியாது. ஒரு வாரத்துக்கா…அப்புறம்?’

சசி சட்டென்று சொன்னாள். ‘நாம எல்லோரும் ஒரே மெத்தையில ஒரே ரூம்ல படுத்துத் தூங்கிக் கட்டிப்பிடிச்சி, முத்தம் கொடுத்து…எல்லாமும் தான் செய்யனும். அப்புறம் ஒரு வாரம் வேற என்ன பண்ணுறதாம்’, கிண்டலான தொனியில் கேட்க, வளர்மதி வீறிட்டுக் கத்தினாள். ஆனால், சத்தம் வரவில்லை. தன்னையறியாமல் வாயைப் பொத்தியிருந்தாள்.

சசி, எச்சரிக்கையாகி எல்லோருக்கும் யோசிக்கக் கொஞ்சம் நேரம் வேண்டுமென்று கருதி, ‘சரி நாளைக்குப் பேசலாம். நாளைக்குச் சொல்லுங்க’, என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

மூவரில் சசி தான் அழுத்தமானவள். என்ன நினைக்கிறாள், என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறாள் என்ற மற்ற இருவரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. அவள் கணவனுக்கு இரண்டாம் மனைவி. முதல் மனைவி இறந்த பிறகு அவளுக்கு இருந்த பெண் குழந்தையை வளர்ப்பதைக் காரணம் காட்டித்தான் அவளுடைய கணவன் சங்கர் சசியைத் திருமணம் செய்து கொண்டான். சசியின் வீட்டில் இவளுக்குப் பிறகு மூன்று பெண்கள். அவர்களுக்காகவேனும் இவள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. சசிக்கு எங்கு வாழ்வதும் எப்படி வாழ்வதும் ஒன்று தான் போல. அந்த அளவிற்கு அவள் தனக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பவள் போல இறுக்கமான முதுகெலும்புடன் இருந்தாள்.

அவள் கணவன் சங்கரைப் பார்த்ததே இல்லை. பதிவுத்திருமணம் தான் நடைபெற்றதால் மலர்விழியையும் வளர்மதியையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை. முதல் மனைவிக்குப் பிறந்த பெண் வளர்ந்து கல்லூரி செல்லத்தொடங்கிவிட்டாள். அவளுக்கு சசி யாரென்று தெரிந்தாலும் அன்பாகவே நடந்து கொள்கிறாள் என்று சொல்வாள் சசி. எப்பொழுதும் சிறிய பூக்கள் உதிர்ந்து சிதறிக் கிடக்கும் சேலையைத் தான் அணிவாள். பெரும்பாலும் அவை மொடமொடவென்று கஞ்சியில் ஊறவைத்து உலரவிட்டு, சலவை செய்த உடைகளாயிருக்கும். வளர்மதியும் மலர்விழியும் முதன்முதலாக சசியை முழுவதுமாகப் பார்த்த அனுபவம் பரவசமானதாக இருந்தது.

மூவரும் இந்த வீட்டிற்கு வருவதற்கு முன் இந்த வீட்டை ஒட்டியிருந்த பேருந்து நிலையத்தில் வந்து சரியாக மாலை ஆறுமணிக்குச் சந்திப்பதாகத் திட்டம். வளர்மதி, பத்து நிமிடங்கள் தாமதமாக, மிகுந்த பதட்டத்துடன் வந்து சேர்ந்தாள். அவள் அப்படித்தான். எல்லாவற்றையும் பெரிதாக்கிவிடுவாள் என்று சசியும் மலரும் நினைத்தனர். அங்கேயிருந்து ஆட்டோவில் வரலாம் என்றாலும் ஒரு குறுகிய சந்தில் இறக்கத்தை நோக்கிப் பாயும் பாதை வழியாக சசி அழைத்து வந்தாள். ‘எதுக்கு ஆட்டோ டிரைவருக்கு நாம இங்க இருக்கோம்னு தெரியணும்?’

‘ஏதோ கொலை பண்ணப்போற மாதிரி கிலியா இருக்கு’, என்று வளர் சொல்ல சசி அவளைச் சிறியதாக முறைத்தாள். ‘நாம கொஞ்சம் சுதந்திரமா அக்கடான்னு இருப்போம். இதுல யாருக்கு என்ன வம்பு’, என்ற சசிக்கு பதிலாய், ‘ம்க்கும்’, என்று வளர் பதில் கொடுத்தாள். வளருக்கு சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது. எப்பொழுது வீடு போய் சேர்வோம் என்று நினைத்துக்கொண்டிருந்தவளை, ‘என்ன ஆச்சு மலர்? எல்லா ஓகே தான?’, என்று சசி கேட்க, ‘ம். யூரின் போகணும். வேற ஒண்ணும் இல்ல’.

‘இதோ மூனு நிமிசம் தான். பொறுத்துக்கோ. இங்க எங்கயும் நிக்கவேணாம்’, சசி வேகமெடுத்து இன்னும் இரண்டு குறுக்குத்தெருக்கள் வழியாக நடந்து ஒரு சிறிய பங்களா வீட்டின் முன் போய்ச் சேர்ந்து அதன் முன்பக்கத்தைத் தழுவி நின்ற கொடிகளின் கீழ் இருந்தக் கதவைத் திறக்கவும் தான் எல்லோரின் உடல்களும் இறுக்கம் தளர்ந்தன. மலர், கழிவறையைத் தேடி சிறுநீர் கழித்து வரவும், வளர் சென்று வந்தாள். மூவரும் அறையின் நடுவில் வந்து நிற்க, மூச்சு முட்ட மூவரும் நிதானமாகக் கட்டியணைத்துக் கொண்டனர். சட்டென்று விலகி நகர்ந்தும் கொண்டனர்.

வளர் சொன்னாள். ‘மொதல்ல குளிச்சிட்டு வந்துரலாம். எனக்குப் பதட்டமா இருக்கு’.

‘சரி’, வளருக்குக் கொஞ்ச நேரம் தனியாக இருந்து தன்னைத் தயார் செய்துகொள்ளவேண்டும் போல் இருந்தது. அல்லது, தனியாகவே அந்தக் குளியலறையில் இருந்துவிட்டால் நல்லது என்று தோன்றியது. நீர் தூவும் ஷவரை திறந்து விட்டுக் கீழே வெறுமனே நின்றிருந்தவளின் உடலில் மெல்ல மெல்ல உணர்வுகள் ஆங்காங்கே கொடிகளென முளைத்துப் படரத்தொடங்கின. கைகளை மார்பின் குறுக்கே தன்னைத்தானே இறுக்கிக் கட்டிக்கொண்டு உணர்வுகள் வடிந்துவிடாதிருக்க மிகவும் முயற்சி செய்தாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கால்கள் துவண்டு மடிந்து விடும் போல் இருந்த போதே, அரை குளியலில் டவலைச் சுத்திக்கொண்டு வந்து உடை மாற்றிக்கொண்டாள்.

மலர் பொதுவென இருந்த பெரிய அறைக்கு வரும் முன்பே, சசியும் வளரும் அங்கே இருந்த மெத்தை மீது அமர்ந்து வளர் வருவதற்காகக் காத்திருந்தனர். இருவரும் மலரையே ஆவலாகப் பார்த்திருந்தனர். ஈரத்தலையைத் துவட்டியபடியே என்ன என்பது போல் தலையை மட்டும் அசைத்து மலர் கேட்க, ஒன்றுமில்லை என்று சசியும் வளரும் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். இவளும் அவர்கள் அருகில் சென்று உட்கார அந்த இடத்தில் திடீரென்று பரவசத்தின் வெளிச்சம் பரவியது போல் இருந்தது.

Photo by We-Vibe WOW Tech on Unsplash

அப்பொழுது தான் சசி மற்றவர்கள் மிரள்வதைப் போல் ஒன்று செய்தாள். சட்டென்று வளரைப் பின் தலையுடன் தன் பக்கம் தள்ளி அவள் உதடுகளைத் தன் உதடுகளுக்கு இடையே வைத்து முத்தம் கொடுக்கும் நோக்கில் துவைத்து எடுத்தாள். வளர் ஒரு கட்டத்தில் சட்டென்று விலகி, ‘ப்பா..இதுக்கு மேல முடியாதப்பா’, என்று திணறினாள். இரண்டு முன்று முறை மூச்சுவாங்கிக் கொண்டாள். மூவருமே சொல்லி வைத்தது போல் நைட்டி அணிந்திருந்தனர். வளர் விலகவும், சசி மலரைப்பார்த்துப் பெரியதான ஒரு புன்னகை பூத்தாள். மலர் சசியை நோக்கித் தன் முகத்தைக் கொண்டு செல்ல, சசியும் மலரும் வளர் ரசிக்கும் படியான ஒரு முத்தத்தை நீண்ட நேரமாகக் கொடுத்தனர். அப்படியே மலர் சசியைப் பின்னோக்கித் தள்ள, சசி மலரின் ஒரு கையைப் பற்றி, தன் நைட்டியின் முன் பொத்தான்களை அவிழ்க்க வைத்து தன் இடது முலைக்கு அவள் கையை அழைத்துச் சென்றாள்.

‘மூணு பேரும் சேந்து என்ன செய்யறது?’ என்று அடுத்த நாள் வளர் கேட்டபோது, மலரும் சசியும் உரக்கச் சிரித்துவிட்டார்கள். ‘சரி, நான் மக்கு தான். அதுக்காக இதெல்லாம் புரியாம இல்ல’, என்று எல்லோரையும் நிகழ்வின் நடுப்பகுதிக்கு இழுத்து வந்தாள். ‘முத்தம் கொடுத்துக்கிட்டா போதும், முத்தம் கொடுக்கத் தெரிஞ்சா போதும்’, என்று சசி சொல்ல, ஆர்வக்கோளாறாக மலர், ‘முத்தம் மட்டும் தானா?’ என்று கேட்க, ‘குறைந்த பட்சம் முத்தம், அதிகபட்சம் நிர்வாணம்’, என்று சொன்ன சசிக்குப் பின் எல்லோருக்கும் இதயம் படபடத்ததை ஃபோன் உரையாடலிலேயே உணரமுடிந்தது. பேசிக்கொள்ளாத பகுதிகள் நிறைய இருந்தன. இது தான் மூவருக்குமே முதல் அனுபவம். இயன்றவரை, அவரவர் கற்பனையின் சிறகுகளை விரித்துக்கொண்டிருந்தனர். துணிகரமான சாகச நிகழ்வு போன்ற உணர்வும் எதிர்பார்ப்பும் அந்த நாட்களை நெருங்கி வரச்செய்தன.

மலர்விழி, உடைகளைத் தேர்ந்தெடுத்துச் சேகரித்திருந்தாள். காமத்தின் மயக்கமும் அதன் சாயலும் தூக்கலாய் இருந்தன அவள் உடையில். வலை போன்ற மெலிதான உடையும், கையில்லா ப்ளவுசுமென வைத்திருந்தாள். வளர்மதி வாசனை திரவியங்கள் சிலவற்றைச் சேர்த்திருந்தாள். ஏதோ தன் உடல் பற்றிய சங்கடங்களும் அவற்றின் துர்வாசனைகளையும் போக்க முயற்சித்தது போல் இருந்தது அந்த வாசனை திரவியங்களைக் கொண்டு வந்திருந்தது. சசி, அதிலெல்லாம் நாட்டம் இல்லாமல், தன் உடலை முழுமையாகத் திறந்து ஒப்படைத்துவிடுவது போலவும், அந்த அறையெங்கும் இறகுகளை மிதக்க விட வந்தவளைப் போலவும் நடந்து கொண்டாள். ஒரு சாயலில் அவள் மெத்தையில் கிடக்க, வளர்மதியும் மலர்விழியும் அவள் உடல் மீது முத்தமிட்டு நக்கிக் களித்தது, ஒரு தாய்ப் பன்றியின் மீது உவகையுடன் புரளும் பன்றிக்குட்டிகள் போலவும் அந்தத் தாய்ப்பன்றியின் பெருந்தன்மை நிறைந்த பாவனையும் சசியிடம் தென்பட்டன.

ஒவ்வொரு முறையும் காமத்தில் உச்சத்தினை அனுபவிக்கையில் வளர்மதி வெடித்து அழுதாள். மலரும் சசியும் அந்த அழுகை முடியும் வரை அதன் கேவலில் தோய்ந்து கிடந்தனர். வளர்மதி அழுதது மலருக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. தன் போத நிலையைத் தொல்லை செய்யும் ஓர் எரிச்சல். மலருக்கு சசி தன் உடலை ஈந்தது கொள்ளை எழுச்சியைக் கொடுத்தது. துடியான கலவியின் எல்லை வரை எல்லோரும் சென்று சென்று ஓய்ந்தனர். அறைக்குள் சந்தன ஊதுவத்தியும் மல்லிகை வாசனை பரப்பும் பெரிய வெள்ளை மெழுகுவர்த்தியும் எரிந்து கொண்டிருந்தன. புகையும் வாசனை நாசியைத் தூண்ட எல்லா புலன்களும் எழுச்சிகொண்டு தீவிரமாக இயங்கின. இந்த இயல்பு நிலையை எட்டுவதற்கு சில கணங்கள் பிடித்தன என்றாலும் ஆணின் உடலிலிருந்து மாறுபட்ட உடலை முதன்முறையாக முழுவிடுதலையுடன் கண்ட உவகை தீப்பற்றி எரிந்தது. அதிலும் தன்னைப் போன்ற உடலே தன் முன் நிற்க யானை தன் தும்பிக்கையால் எதிரில் நிற்கும் யானையைத் துழாவிடும் பாந்தம் அப்பிக்கொண்டது.

தொடர்ந்து மூன்றாவது முறை உச்சம் கண்ட வளர், ‘எனக்குப் பீரியட்சே வந்துடும் போல. விடுங்கப்பா’, என்று மெத்தையில் சரிந்தாள். மலருக்கும் சசிக்கும் அது பெரிய சந்தர்ப்பம் போல இருந்தது. இருவரும் முழு தீவிரத்துடனும் விடுதலையுடனும் நீள முயக்கத்தின் குகைக்குள் நுழைந்து இருளைக் கிழித்துக் கொண்டிருந்தனர். மலர், ‘என் ராட்சசி’, என்று அசைவுகளுக்கு இடையே சொல்லிக்கொண்டிருந்தாள். சசி, ‘மூதேவி இன்னும் வேகமா செய்யுடி’, என்று அவளை இயக்கிக் கொண்டிருக்க, வளர் அவர்களை வைத்த கண் வாங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். இப்பொழுது அவள் களைப்புற்று நோக்கி உவக்கும் இன்பத்தைத் துய்க்கும் உலகத்தைத் திறந்து கொண்டாள்.

மலர் மெத்தையை ஒழுங்கு செய்யும் போது ஒரு வித தியான மனநிலையுடன் இருந்தாள். சசி, வாங்கிவந்திருந்த உணவை ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சூடாக்கினாள். வளர், ஜானகியின் ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா’, என்று பாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தாள். மலரும் சசியும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டனர். மலர் சமைத்துக்கொண்டிருக்கும் சசியை ஒரு முறை கட்டி அணைத்து முத்தம் கொடுத்துக்கொண்டு வந்தாள். ‘என்ன செஞ்சாலும் தீராததா இருக்குல்ல’, என்று தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொல்லிக்கொண்டாள்.

ஒரு வாரம் மிகவும் குறுகிய காலம் போல இருந்தது மலருக்கு. வளர்மதி, ‘இப்படியே இங்கேயே இருந்துரலாம்னு தோணுது எனக்கு’, என்றாள். ‘நீங்க ரெண்டு பேரும் இப்படியே என்னைய வச்சிக்கிட்டீங்கன்னா வீடு மெழுகி, சமைச்சிப்போட்டு உங்க துணியெல்லாம் துவைச்சிப் போட்டு உங்கள நல்லா பாத்துக்குவேன்’, என்று கெஞ்சினாள். அது பொய்யானது போல் மற்ற இருவரும் கருதிக்கொண்டனர் என்றாலும் மூவருக்குமே அந்த வாழ்வு சலிக்காது என்றே தோன்றியது. அந்த ஒரு வாரத்தில், மூவரின் உடல்களும் ஓர் உடலாகியது. இயல்பான விடுதலை உணர்வு மனதைப் பீடித்துக்கொண்ட பெண்களாய்த் திரிந்தனர்.

அவரவர் வீட்டிற்குக் கிளம்பிச் சென்ற சில நாட்களில், வளர்மதியிடமிருந்து மலருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ‘மலர், நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். தாங்கஸ் தாங்க்ஸ் தாங்க்ஸ்’, என்று எழுதியிருந்தாள். பதிலுக்கு மலரும் ‘லவ் யூ ‘, என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். அன்றைய இரவு மலருக்கும் அவளுடைய கணவனுக்கும் சிறிய சண்டை வந்தது. நீண்ட நேரம் வெளியே நண்பர்களுடன் மதுவருந்திவிட்டு வந்ததுடன் நடு நிசியில் அவளை எழுப்பி உறவுக்கு அழைத்தான். மது அருந்தியதால் வேண்டாமென்று சொன்னாள் மலர். ‘கொஞ்ச நாளாவே நீ இண்டரஸ்ட் காட்ட மாட்டேங்குற’, என்று வற்புறுத்தி இணங்க வைத்தான். உறவுக்குப் பின் எரிச்சலாகவும் மனம் லயமற்றும் இருக்க மொட்டை மாடியில் வந்து நீண்ட நேரம் உலாவித் திரிந்தாள். அலைமோதிக்கொண்டிருந்தது இதயம். நடுநிசியில் சசியையோ வளரையோ அழைத்துப் பேசலாம் என்ற ஏக்கமும் தயக்கமும் ஒரு சேர இயங்கின.

காலை எழுந்து கழிவறை சென்று முகமெல்லாம் கழுவி விட்டு வெளியே வரவும் மலரின் ஃபோன் ஒலித்தது. ஓடிப்போய் எடுத்தாள். அதிகாலை என்பதால் கவனத்தைக் கவரும் பதட்டத்தையும் ஒட்டிக்கொண்டுவரும் அழைப்பு. சசி தான். ‘ஏய், வளர் தற்கொலை செஞ்சுக்கிட்டா’, என்றாள். ‘எதிர்பார்த்தது தான்’, என்று சொல்ல வந்த மலர் சொல்லாமல் ஃபோனை காதிலேயே வைத்துக்கொண்டிருந்தாள். சசி, மலர் மலர் என்று அழைத்துக்கொண்டே இருந்தாள்.


படைப்பாளர்

குட்டி ரேவதி

குட்டி ரேவதி, அடிப்படையில் ஒரு சித்தமருத்துவர். பாளையங்கோட்டை அரசினர் சித்தமருத்துவக் கல்லூரியில் பட்டம் வென்றவர். கடந்த இருபது ஆண்டுகளாக நவீன இலக்கியத்தளத்தில் கவிதை எழுதி வருகிறார். சில புனைவு நூல்களையும் அழியாச்சொல் என்ற நாவலையும் வெளியிட்டிருக்கிறார். தமிழின் முதல் பெண்ணிய இலக்கிய இதழான, ‘பனிக்குடம்’ இதழைத் தொடங்கி இயக்கினார். அதன் வழியாக முதன்மையான சில பெண் கவிஞர்களின் படைப்புகளையும் நூல்களையும் பதிப்பித்தார்.  ஆஸ்கார் நாயகன் ஏஆர்ரஹ்மான் இசையில் ‘மரியான்’ திரைப்படத்தில் பாடல் எழுதத்தொடங்கித் திரைத்துறையில் பாடலாசிரியராக இயங்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் “சிறகு” என்ற தன் முதல் முழு நீளத் தமிழ்த்திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அம்பேத்கரியம், பெண்ணியம்,  பெண் உடல் அரசியல், பாலியல் அரசியல் இவரின் முக்கியமான உரையாடல் தளங்கள்.