“பெரியாச்சி வந்துருக்கு போலருக்கு?”, உள்ளே எட்டிப் பார்க்குமுன் பக்கத்து வீட்டு ஜெயா கேட்டுக் கொண்டுதான் நுழைந்தாள். அது ஒன்றும் ஆச்சர்யமில்லை. தனது நைலான் பையையும் மூட்டையையும் கண்காட்சி வைத்துவிட்டுதான் பெரியாச்சியின் தெருவலம் தொடங்கும்.

பெரியாச்சி வந்து இறங்கிய மறு கணத்திலிருந்து ஆத்தாவுக்கு சாமி வந்தது போல உக்கிரம் குறையாது. குறிபார்த்து அடிப்பதென்னவோ பெரியாச்சியைத்தான் என்றாலும் பக்கவிளைவாக அவ்வப்போது யாருக்காவதும் சாத்து விழும் அல்லது முறைப்போ திட்டோ கிடைக்கும்.
இதெல்லாம் நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை நடப்பதால் அந்த வீட்டோடு தொடர்புடைய எல்லோருக்குமே தெரியும்.

ஆத்தாவின் மாமியார் வீட்டு உறவோ என்றுதான் குடிவந்த புதிதில் ஜெயா நினைத்தாள். வீட்டு மருமகள்தான் ரகசியமாக விளக்கினாள்…பெரியாச்சி ஆத்தாவின் சொந்த அக்காதான். ஆத்தாவைப்போலவே இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவள் தான். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த சீக்காளி மனுசன் போய்ச் சேர்ந்துவிட்டதால் பதினைந்து வயதிலேயே விதவையானவள். முதல் தாரத்து மக்கள், அந்த மனிதரைக் கவனித்து கரை சேர்க்க முடியாது என்ற தங்களுக்குள்ளான சச்சரவிற்கு கண்ட முடிவுதான் அந்த திருமணம்.

“பீ வாரிக் கொட்ட அலுப்பு பட்டுகிட்டு என்ன கட்டி வெச்சிட்டாவோ”.. பெரியாச்சியே தன் வாழ்க்கையை அவ்வப்போது விமர்சிப்பது உண்டு.
” சித்தாடை வாங்கிக்குடுத்து கஞ்சி ஊத்த வழியில்லாத நெலம ..எங்க அம்மா வருசத்துக்கு ரெண்டு பொடவயும் வயித்துக்கு சோறும் போடுவியளான்னுதான் கேட்டாவொளாம்…”கண்ணீரோ வருத்தமோ இன்றி நேற்று பார்த்துவந்த சினிமா கதையைச் சொல்வது போலப் பச்சரிசிப் பல் மினுங்க சொல்லும் பெரியாச்சி ஒரு ஆச்சரியந்தான்.

” இவ்வோ மட்டும் என்ன…எங்க மாமாவுக்கு ரெண்டாந்தாரந்தான்…மாமாவுக்கு மொத கலியாணம் ஆனப்ப பாவாசத்த உறிஞ்சிக் குடிச்சிகிட்டு சுத்திகிட்டு கெடந்தாவோ…சின்னம்மா மவன் கலியாணத்துல ஒரு வாரம் புள்ள குட்டியோட வந்து சேவுகம் பண்ணிகிட்டு இருந்தாவோ எங்கம்மா…” எங்கிருந்தாவது தங்கச்சி வந்துவிடப் போகிறாளோ என எச்சரிக்கையாக எட்டிப் பார்த்துக்கொண்டே கதை தொடரும். ” மொத தாரம் எங்க பெரியம்மா பொண்ணுதான்…அந்த அக்காவுக்கு தெரவுசு பத்தாது…புள்ளகுட்டியும் இல்ல…அதான் எங்க ஆத்தா பாத்து இவ்வொள ரெண்டாந்தாரமாக் கட்டியாந்துச்சு”

” நா ஒண்ணும் தங்கச்சியக் குடுத்த எடமாச்சேன்னு வர்ரதா நெனச்சுக்காத பாப்பா…இந்தமாரி..இந்தமாரி ஆனதுலருந்தே எங்க பெரியம்மா வீட்டக்காவுக்கு எம்மேல பாசம் அதிகம்…அங்க என்னடி பாப்பா செஞ்சிகிட்டு கெடக்க…நம்மூட்டுக்கு வா வான்னு எப்ப பாத்தாலும் பிரியமாக் கூப்புடும்…எங்க மாமாவும் ஆத்தாவுங்கூட ஆசயா இருப்பாவோ…..அதான் அப்பப்போ வருவேன் ஒரு மாசம் பத்துநாளு இருந்துட்டு போவேன்…எங்க ஆத்தா இருக்க வரக்கிம் நல்ல பண்டம் பொல்லாப் பண்டம் செஞ்சு போடும்…எங்கக்காவுக்கு ஒழுங்கா உலைய வெச்சு சோறு வடிக்கவே தெரியாது…அப்பறந்தான் இந்த மவராசி வந்தாவோ”

தன் தங்கையின் திறமை பற்றி பெரியாச்சிக்குப் பெருமையும் கிடையாது. பொறாமையும் கிடையாது. அது அவள் இயல்பு, இது என் இயல்பு என்பதுபோல எடுத்துக்கொள்வது ஒருவேளை ஆத்தாவின் எரிச்சலுக்குக் காரணமாக இருக்கக் கூடும். கஞ்சிக்கு வழியில்லாத குடும்பத்திலிருந்து இருபது வயது மூத்தவரின் இரண்டாந்தாரமாக வந்து சேர்ந்த கணத்திலிருந்தே அவள் உழைப்பு தொடங்கிவிட்டது.

வக்கணையாக சமைக்கவும்,மனிதர்களின் மனப்போக்கிற்கேற்பக் கையாளவும் கற்றது மட்டுமல்ல. ஊர்ப் பெருந்தலை என்று மதிப்பவர்கள் வரிசையில் தாத்தாவை உட்கார வைத்ததும் ஆத்தாவின் சாமர்த்தியம்தான். கல்லுவீடு , சொந்தக்கடை, கொஞ்சம் நிலம் என்று ஆளாகத் தொடங்கியது குடும்பம். ஒற்றைப் பிள்ளையும் பெற்று, மூத்தவர்களைக் கரையேற்றி, தன் அந்தஸ்தைத் தானே கட்டியெழுப்பியவள் அவள். ” வெறும்பய மவ” என்று இடதுகாலால் எத்திவிட்டுப் போகும் வழக்கத்தைத் தாத்தா காலப்போக்கில் தானே கைவிட்டார்.

இவ்வளவு கௌரவத்தைத் தானே கட்டி வைக்க, அவ்வப்போது பணம் கேட்கும் அண்ணனும், அஞ்சாறு மாசத்திற்கொருமுறை உட்கார்ந்து தின்ன வரும் அக்காவும் தனது அவமானங்கள் என்றுகூட அவள் கருதியிருக்கலாம்.
தங்கச்சி முகந்திருப்பிக் கொள்வதோ,எரிச்சல்படுவதோ பொருட்டேயில்லை என்பது போலதான் பெரியாச்சியின் உலா இருக்கும். நிலம் வாங்கிய புதிதில் வேலைக்கு சேர்ந்த முருகன் தன் ஆச்சியின் அக்காவாக வந்திருக்கும் இவளைப் பெரியாச்சி என்று அழைக்க சகலருக்குமாக நிலைத்து விட்டது.
கெங்க..என்று உரிமையாகச் சொல்லக்கூடியவர்கள் போயாச்சு. மற்றவர்கள் எப்படியாவது கூப்பிட வேண்டுமே….

ஆத்தாவின் முணுமுணுப்புக்குப் பொருளில்லை என்று அவளுக்கே தெரிந்திருந்தது.

வீட்டுக்காரி முகத்தாலடித்தும் எப்படி ஒரு மாசம் போல இருக்க முடியும்…
அதெல்லாம் ஒரு பிரச்சினையேயில்லை…காலையில் அரக்கப்பரக்க வேலை பார்க்கப் போகிறவள் போல ஊருக்கு முந்தி ஒரு குளியல்…பழையது கிடந்தால் ஒரு குவளை நீராகாரத்தைக் குடித்துவிட்டு கோயிலோ குளமோ வயல்வெளியோ எங்கோ போகும் மனுசி பத்து பத்தரைக்கு வந்து உள்ளே போய் என்ன இருக்கிறதோ எடுத்து திருப்தியாகச் சாப்பிடுவாள்…அதற்குள் மற்றவர்கள் ஆகாரம் முடித்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு மிச்சம் மீதி இல்லாமல் சாப்பிட்டுவிட்டு வந்து வெற்றிலையை மென்றபடி ஒரு கோழித்தூக்கம். யாரும் சாப்பிடாவிட்டால் மிச்சம் கிடைக்காது. மருமகள் வந்த புதுசில் ஏமாந்த அனுபவத்தால் இப்போதெல்லாம் தனக்கு உஷாராக எடுத்து வைத்துவிடுகிறாள்.

வற்றல் போடுவது, வடகம் பிடிப்பது, புளி அரிவது என்று பருவத்துக்கு ஏற்றபடி ஆத்தாவுக்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கும். வீட்டுக்கு மட்டுமல்ல, உறவுகளுக்கும் சேர்த்து நடக்கும். அக்கம் பக்கத்துப் பெண்கள், வாடகைக்குக் குடியிருக்கும் ஜெயா என யாராவது அவளுக்கு எடுபிடி செய்து கொண்டிருக்க கூடத்தின் ஓரத்தில் பெரியாச்சியின் குறட்டை முழங்கும்.

அதேபோல் இரண்டு இரண்டரைக்கு மீண்டும் சமையலறைக்குப் போய்த் தானே வேண்டியமட்டும் எடுத்துப் போட்டுக்கொண்டு ” சிவசிவா” என பக்தியைப் பிரகடனப்படுத்தியபடி உருட்டி வீசினால், சோற்றுப்பானை காலியான பிறகு எழுந்து சிறு ஏப்பமும் வெற்றிலையுமாக வாசலில் காலை நீட்டி உட்காருவாள். ஆத்தா அங்கு இருந்தால் பக்கத்து வீடுகளுக்குப் போய்விட வேண்டியது.

அங்கேயே டீயோ, காப்பியோ குடித்துவிட்டு மீண்டும் பொடிநடையாக ஊர்வலம். யாருடனாவது வாரம் ஒருமுறை டூரிங் தியேட்டர் சினிமா, பெரிய கோயில், ஆற்றங்கரை முழுக்கு, தேர், தெப்பம் என்று தினம் ஒன்று.
இரவு ஒன்பது பத்து மணிக்கு வந்து தானே பரிமாறி உண்டு உறங்குவது …இதுதான் தினசரி அட்டவணை…

” ஏட்டீ… நார்த்தங்கா ஊறுகா இல்லியா…மோர் மொளவா வறுக்கலியா…புளி மொளவா போடுவாளே ஒம் மாமியா” என்று விசாரணை வைக்கும் தருணத்தில் மருமகள் துணிந்து கேட்டுவிட்டாள்…
” ஏம்மாமி…கிராமத்துலருந்து போறமே ..ஒரு காய கறிய கொண்டு போவோம்…ஊறுகா… உப்புகா…போடுவோம்னு எதாச்சும் கொண்டாந்தா என்ன…அட…இங்ஙன வந்து கூட செய்யலாமில்ல…”

அவ்வளவுதான்…குய்யோ முறையோ என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து மூக்கைச் சிந்தி சிந்தி ஒப்பாரி வைத்து.. வைக்கோல் அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த ஆத்தா வந்து..” என்னா…இஞ்ச வந்து ஆகாத்தியம் பண்ற வேல வெச்சிகிட்டா மரியாத கெட்டுரும்” என்று உறுமியவுடன் பொட்டு போல எழுந்து போய்ப் படுத்தாயிற்று. முதல்நாள் சம்பவத்தின் சுவடே இல்லாமல் மறுநாள் குளித்து முழுகி..பச்சரிசிப்பல் தெரியச் சிரித்து உரையாடி….
கடுமையாகத் திட்டும்போது கூட வராத ரோஷம் சில நாள் முகந்திருப்பலுக்கே வந்துவிடும்.

கொடியில் கிடக்கும் ஈரப்புடவையைக்கூட உருவிச்சுருட்டி நைலான் பையிலோ யூரியா பையிலோ அடைத்துக்கொண்டு, தூண் தும்பெல்லாம் சளியைச் சிந்தி எறிந்தவாறே கிளம்பி விடுவாள்.
“இன்னமே இங்ஙன வரப்போறனோ என்னவோ…இதான் கடேசி முழி….” என்றெல்லாம் வாசலில் நிற்கும் ஒவ்வொருவரிடமும் அழுதபடி போவாள். ஆத்தாவின் உக்கிரம் கொஞ்சமாக இறங்குவது போலிருக்கும்…
இப்படித்தான் மருமகள் வந்த புதுசில் ஒருநாள் நடந்தது.
” போன்னும் சொல்லாம போவாதன்னும் சொல்லாம ஒங்கம்மா அப்பிடியே இடிச்சபுளியாட்டமா ஒக்காந்திருந்தாவோ”
அரையிருட்டில் தங்கள் அறையில் உட்கார்ந்தபடி வெளியிலிருந்து வந்த கணவனிடம் கள்ளக்குரலில் முறையிட்டுக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டுப் போனாள்.
சரேலென யாரோ உள்ளே போனது போல இருக்கிறதே…
அவன் ஒன்றும் பதட்டப்படவில்லை.
உள்ள போய்ப்பாரு என்றான்….
பையை இறுக்கிக்கொண்டு பெரியாச்சிதான் கூடத்து விளக்கைக்கூடப்
போடாமல் உட்கார்ந்திருந்தது.
” ஒரப்படைக்குப் போட்டிருந்தல்ல பாப்பா” என்றதும் சிரித்துவிட்டாள்..
“பஸ்சுல நிக்ககூட எடமில்ல…”
முணங்கிக்கொண்ட பெரியாச்சியிடம் வந்து நின்று அவனும் சிரித்தான்.
உர்ரென்று பார்த்த பெரியம்மாவை..” எழும்பி வா …என்னோட சாப்புடு” எனச்சிரித்தபடி அழைத்தான்.
” இல்லல்ல…நா அப்பறம் சாப்பிடுறன்…நீ போயி சாப்புடு” என முடங்கிக்கொண்டது.

ஆக..இரவு வரை திரும்பி வராமல் இருந்தால்தான் பெரியாச்சி நிஜமாகவே ஊருக்குப் போய்விட்டதாக அர்த்தம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது. ஜெயா தன் வீட்டில் காப்பியோ டீயோ குடிக்கும் சமயங்களில் வாயைக் கிளறுவாள்.
” ஏம் பெரியாச்சி….நீங்களும் கொஞ்சம் நாயமா நடந்துக்கலாம். வீட்டுல அவ்வளோ வேல திமிலோகப்படுதெ….எதாச்சும் கூடமாட ஒத்தாசயா இருந்தா ஆத்தா கோச்சுக்காம இருப்பாவொள்ள..”

” எனக்கென்ன தெரியும்…நா என்னத்தக் கண்டேன்…மூத்தவொ வூட்டுல இருந்து ஆறு மாசத்துக்கொரு தரம் ஒரு பொடவ…மேஞ்செலவுக்கு கொஞ்சம் காசு வரும்…வருசத்துல ஆறு மூட்ட நெல்லு….அதயும் கொஞ்சம் வித்துக்குவேன் கை செலவுக்கு…அக்கம்பக்கத்துல ரெண்டு கத்திரிக்கா வெண்டக்கா பறிச்சியிட்டா ஒண்ணுஞ் சொல்ல மாட்டாவோ…இதுல வத்தலக் கண்டனா…வடவத்தக் கண்டனா…
எங்கூட்டுல கஞ்சிக்கே வழியில்லாமதான எங்கம்மா அங்ஙன தள்ளிவுட்டுச்சு… “

தன் வாழ்க்கையைப் பழி தீர்த்துக்கொள்ளத்தான் பெரியாச்சி இப்படி இருக்கிறதோ என்று மருமகளிடம் ஒருமுறை ரகசியமாகச் சொன்னாள் ஜெயா…

” அதெல்லாம் ஒரு சாக்கு…” என்று தன் மாமியாரே தன்னிடம் சொன்னதாகச் சொன்னாள் அவள்.

” அதே கஞ்சிக்கில்லாத வீட்டில் இருந்து அதே மாதிரி ரெண்டாந்தாரமா தான தொரத்தி வுட்டாங்க மாமியையும். அவங்க கட்டும் செட்டுமா கத்துகிட்டு எங்க வீட்ட மேல கொண்டு வரல….பெரியாச்சிக்கி இப்பிடி அக்கு தொக்கு இல்லாத சுத்துறதுதான் புடிச்சிருக்கு. கை பாத்தா கண்ணு செய்யாதா….” அப்படியே மாமியாரின் பேச்சை ஒப்பிக்கும் மருமகளை ஜெயா ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
” வேல செய்யக்கத்துகிட்டா இப்பிடி பையச்சுருட்டிகிட்டு கிளம்ப முடியுமா…ஒதவி ஒத்தாசன்னு யாராவது கூப்புடுவாங்க…வேல செஞ்சுகிட்டுல்ல கெடக்கணும்…” என்று தொடர்ந்தாள் மருமகள். அவ்வளவு திட்டமிடத் தெரியுமா பெரியாச்சிக்கு எனத் தோன்றினாலும் கேட்கவில்லை ஜெயா.

பெரியாச்சி வந்து இம்முறை ஏழெட்டு மாதங்களாகிவிட்டது. யாரோ சொல்லிதான் தெரிந்தது.பெரியாச்சி இறந்து ஒரு மாதத்துக்கு மேலாயிற்றாம். எப்போதும்போல் எங்கோ போயிருக்கலாம் என மற்றவர்கள் நினைத்திருக்க, தனித்த வீட்டில் இறந்து கிடந்த உடலின் வாடையால் யாரோ சொல்லி மூத்தாள் மகன்கள் எடுத்து எரித்தார்களாம்.

ஒரு படமாகக்கூட இல்லாது போனாள் பெரியாச்சி.

திடீரென ஏதோ நினைத்துக்கொண்ட ஆத்தா மருமகளிடம் *பல்லுக்கொழுக்கட்ட செஞ்சு கெங்கய நெனச்சி தண்ணியள்ளி ஊத்து” என்றாள். சோகமா என்றெல்லாம் புலப்படவில்லை அந்த முகத்தில். அது என்ன எல்லாத்தயும் விட்டுட்டு பல்லு கொழுக்கட்ட படையலு? தோன்றிய கேள்வியை மனசுக்குள்ளேயே புதைத்தாள்.
“சரி மாமி’

” ஏன் பல்லுக்கொழுக்கட்டன்னு யோசிக்கிறியா பாப்பா”

இதென்ன மாமியார் மனதில் நினைப்பதையெல்லாம் வேறு கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டாளா

” கெங்கைக்கும் எனக்கும் அப்பறம் ஒரு தங்கச்சி இருந்தா…”

சொன்னதேயில்லையே என்று அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
அவளுக்கு சொல்கிறாளா தனக்கே பேசிக்கொள்கிறாளா என்று புரியாமல் ஆத்தா பேசிக்கொண்டிருந்தாள்.

” என்னை கட்டிகுடுத்தப்பறம் எங்கம்மா ஒரு வீட்டுல வேலக்கிப் போச்சு. அவங்க மகனுக்கு எந்தங்கச்சியப் பிடிச்சுப் போயி எங்கயோ கூட்டிட்டு போயி கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஊருல ஒரே அசிங்கமாப் போச்சுன்னு எங்கண்ணன் எங்கியோ போயிட்டான். இஞ்சயும் அப்ப ஒண்ணும் பெரிய வசதியில்ல…அம்மா தனியாக்கெடந்து மருகியே செத்துப்போச்சு..
அப்பறம் கொஞ்சநாள்ள தஞ்சாவூர்ல இருக்கேன் கொழந்த பொறந்திருக்குன்னு சொல்லியனுப்புனா அந்த நாயி….

நாங்க யாரும் போவல…

இந்த கெங்க அங்க போயி தொணக்கி இருந்தான்னு சொன்னாங்க….
மானங்கெட்ட சோறு திங்கப் போனியான்னு தெருவுல நின்னு சண்ட போட்டு கெங்கைய இழுத்துட்டு வந்தேன்…
அன்னிக்கி ரயிலடியில வந்து உக்காந்துகிட்டு….இன்னிக்கி பல்லு கொழுக்கட்ட செய்யப்போறேன்னு சொன்னாடி….நீயும் மாமாவும் இன்னிக்கி போங்க… நா நாளக்கி ரயில்ல வந்துறட்டுமான்னு கேட்டா…ஒரே அறை விட்டேன்…வந்துட்டா…
ஆனா…அவளப் பாக்கும்போதெல்லாம் எந்தங்கச்சி ஞாவுகம் வந்துரும்….ஒட்டுமில்ல ஒறவுமில்லன்னு அவ போன தெச பூண்டத்துப் போனாலும்….இந்த கெங்க அவளப் பாத்தா கெளம்பிப் போயிருவான்னு இருக்கும்….

ஆத்தாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வரவில்லை…ஏதேதோ பேசிக்கொண்டேயிருந்தாள்.

யார் பாவம் தன் மாமியாரா..பெரிய மாமியாரா..பார்த்தேயிராத அந்த சின்ன மாமியாரா
தெரியவில்லை அவளுக்கு… அரிசியை எடுத்து ஊறப்போட்டாள்.

பல் கொழுக்கட்டை செய்முறை

நன்றி: kovaikkavi.wordpress.com

ஒரு கப் பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து உணர்த்தவும். பின் மிக்சியில் போட்டு இடிக்கவேண்டும். இடித்த மாவை சலித்து வதக்க வேண்டும். பாசிப்பருப்பு ஒரு சிறு கரண்டி லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் அரிசிக்கு முக்கால் கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். கால் கப் வெல்லம். தேங்காய் கொஞ்சம் பல்லு பல்லாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காய்த்தூளும் போட்டுக்கொள்ளவும். தண்ணீரைக்
கொதிக்க வைத்து  வெல்லத்துடன் சிறிது உப்பு சேர்த்து கொதி வரும்போது 
மாவைக்கொட்டி கிண்ட வேண்டும். தேங்காய்ப்பல்லும், வறுத்த பாசிப்பருப்பும் சேர்த்து மாவைப்பிசைந்து பிடி கொழுக்கட்டை போல செய்து ஆவியில் வேக வைக்கவேண்டும். கொழுக்கட்டையை வேக வைக்கு முன் கத்திமுனையால் ஆங்காங்கே கீறிவிடுவார்கள். பல் பதிந்தது போலிருக்கும். மாவு இடித்து செய்ய யோசிக்கிறவர்கள் பாக்கெட் மாவிலும் செய்யலாம். ஆனால் இடித்து செய்வது தனி ருசி.

குழந்தைக்குப் பல் முளைக்கும்போது இந்தக் கொழுக்கட்டை செய்து படைப்பதுண்டு. நகை,பணம், இந்தக் கொழுக்கட்டை மூன்றையும் நிலைப்படியில் வைத்து எதை எடுக்கிறது என்று பார்ப்பதும் உண்டு.

படைப்பாளர்:

உமா மோகன்

கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், வலைப்பூ பதிவர் என பன்முகம் கொண்ட ஆளுமை உமா மோகன். புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், நேர்முகங்கள் காண்பதில் தேர்ந்தவர். கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் ஆர்வமுண்டு. ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, துஅரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’, உள்ளிட்ட ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக் கட்டுரைத்தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.