சொல்லப்போனா எல்லா பிரச்சினையும் சௌந்தராவாலதான் ஆரம்பமாச்சுன்னு ஊர்க்காரங்களே சொல்றது வழக்கம். “வாயி…வாயி… இந்த வாயி இல்லாட்டி நாய் தூக்கிட்டுப்போயிறாது இவள”, என்பாள் சொந்த அம்மா. அதைத் தட்டிக் கேட்பதென்றாலும் சௌந்தராவேதான் கேட்கவேண்டும். நாள்பட நாள்பட அதில் சுவாரசியம் இல்லாமற் போய்க்கொண்டிருக்கிறது சௌந்தராவுக்கு.

சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும் முத்தையா பிள்ளை வீட்டுக்கு வருவார். தட்டில் எது இருந்தாலும் சுவற்றில் தொங்கும் காந்தி படத்துக்கு நைவேத்தியம் காட்டுவது போல ஒரு பிடியோடு தலைக்குமேல் கைகூப்பி வணங்கிவிட்டு உருட்டி உருட்டி போட்டுக்கொண்டு, சொம்புத்தண்ணீரைச் சரித்தபடி எழுந்தால் அடுத்த அடி படிப்பகத்தில்தான் இருப்பார்.
என்ன வேண்டும் ஏது வேண்டுமென்பதெல்லாம் அங்கு போய்தான் அவர் மனைவி சொல்லிவிட்டு வர வேண்டும்.

இரண்டு மா நிலத்தையும், தியாகி பென்ஷனையும் வைத்துக்கொண்டு எப்படி ஜீவிப்பார் என்று ஊர்ப் பெரிய மனிதர்கள் யோசித்து படிப்பகத்தை உருவாக்கினார்கள். மூன்று செய்தித்தாள் வரும். யார் யார் வீட்டிலோ இருந்த ராமாயணம், மகாபாரதம், தெனாலிராமன் கதை என்று ஒரு ஐம்பது புத்தகங்கள் தேறின. குழந்தைகள்,பெண்கள் யார் வேண்டுமானாலும் வந்து படிக்கலாம் என்று ஏற்பாடானது. அங்கேயே தியாகியும், அவர் மனைவிவியும் வாழ்ந்திருக்கவும் தக்கபடி பஞ்சாயத்து இடத்தில் கொட்டகை போட்டார்கள். இதெல்லாம் சௌந்தரா கல்யாணம் ஆன அடியோடு நடந்த விவகாரம். அதற்கு முன்பு அவர்களுக்கென்று ஒரு சின்ன ஓட்டு வீடு இருந்தது.

முத்தையா பிள்ளை அந்தக்காலத்தில் காந்தி, சத்தியாக்கிரகம் ,கள்ளுக்கடை மறியல் என்று போராடிக்கொண்டிருந்தபோது ஊரில் அவ்வளவு ஒன்றும் மரியாதை கிடையாது. இவர் சொல்வது போல சுயராச்சியம் வரும் என்று யாரும் தப்பிப்போய்க்கூட நம்பியதில்லை. ஆனால், அப்படி ஒருநாள் வந்தபோது, முத்தையனைக் கொண்டாட முனைந்தார்கள். அதுவரை திருமணம் செய்யாமல் சுற்றியவரைப் பிடித்து நாற்பது வயதில் தாலிகட்ட வைத்தார்கள். தேர்தல் ஆசை அவருக்கு வராததற்கான நன்றிக்கடனை ஊர்ப்பண்ணையார் எப்போதும் செலுத்துவார். அவர் சேர்மனாக முடிந்ததே…

சுதந்திரா பிறந்தாள். அது யாரென்று யோசிக்க வேண்டாம். கூப்பிட சிக்கலாக இருக்கிறதென்று அவள் அம்மாதான் அவளை சௌந்தராவாக்கியது. பின்னாளில் முத்தையா கூட சுதந்திராவைக் கைவிட்டார். கூப்பிட்டால் என்னவென்று கேட்க வேண்டுமே.
அடுத்து வில்லாளன் பிறந்தான். தன்னை ஆளாக்கிய குருவின் பெயர் என்றார். வில்லாளனுக்கு கதரும் பிடிக்கவில்லை காங்கிரசும் பிடிக்கவில்லை. பக்கத்து ஊர் கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்குக் கொஞ்சநாள் போனான். பிறகு ஏதோ தலைமறைவு இயக்கம் ஈர்க்க, வீட்டுக்கும் அவனுக்கும் தொடர்பில்லை.

Photo by Sharath G. from Pexels

முத்தையா பிள்ளைக்கு குடும்ப வேலைகளுக்கு நடுவில் தேசத்தைப் பற்றிக் கவலைப்படக்கூட முடியவில்லை. சௌந்தரா நெருப்புச்சுடர் மாதிரி இருந்தாள். என்னவோ திகில் கூடிக்கொண்டிருந்த சமயம், அவர் மனைவியே ஒன்றுவிட்ட அண்ணன் வீட்டு சம்பந்தம் வருகிறதென்றாள். அப்பாடா என்றிருந்தது முத்தையாவுக்கு..அவர் எங்கு போய் மாப்பிள்ளை தேடி….இப்போது விட்டாலும் எங்காவது பாதயாத்திரை, முகாம் என்று போய்விடக்கூடிய மனநிலைதான் அவருக்கு. மாப்பிள்ளை அரசுப்பணியில் சேர்ந்திருந்தான். பெரிய சீர் செனத்தி இல்லாவிட்டாலும் கௌரவமாக அனுப்பி வையுங்கள் என்ற செய்தி வந்தது. அந்த கௌரவத்தை வீட்டை விற்று அடையலாம் என்ற முடிவையும் சௌந்தராவின் அம்மாவே எடுத்தாள்.
வீடு, வாடகை என்ற நெருக்கடிகள் கல்யாணத்துக்குப்பிறகு வந்து நின்றபோதுதான் முத்தையாபிள்ளைக்காக படிப்பகம் உருவானது.
ஆறேழு மாதம்தான் அந்தக்கதை. ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்க வேண்டும் என மகளை அழைத்து வந்தார்கள்.

ஓரிருநாளில் திருப்பி அனுப்பப் போகிறோம். சமாளித்துவிடலாம். பிரசவத்துக்கென்று வரும்போது ஒரு வீடு பிடித்துக்கொள்ளலாம் என்று அம்மா கணக்கு போட்டாள். எதிரில் உள்ள சித்ரா வீட்டில் சௌந்தரா தங்க, மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி செய்ய ஒத்துக் கொண்டு விட்டார்கள்.
சௌந்தராவின் கணவன் ராஜேந்திரனும் வீட்டாரும் வந்தபோதுதான் பிரச்சினை ஆரம்பமானது. இருந்த வீட்டை விற்றுவிட்டார்கள் என்பது அதுவரை தங்களுக்கு சொல்லப்படவில்லை என்று பொங்கினார்கள். இதற்கெல்லாம் எப்படி சமாதானம் செய்வது என்றுகூடத் தெரியாதவராக சித்ரா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் முத்தையா பிள்ளை. வளவளவென்று யார் யாரோ ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
சௌந்தரா நிதானமாக வெளியில் வந்தாள்.

” ஏன் மாமா…இஞ்ச இவ்வளொதான் இருக்குன்னு ஒங்களுக்கு நெசமா தெரியாதா.. எதுக்கு இன்னிக்கி வந்து கரச்ச பண்ணியிட்டு?”

சிரித்தபடி கேட்கும் அந்த தொனி கூடுதல் அவமானம் என்றார் அந்த மாமனார், பின்னாளில் சமாதானம் பேசப்போனவர்களிடம்.
எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் சௌந்தராவை அழைத்துக் கொள்ளாமலே எல்லோரும் கிளம்பிப் போனபோது அவள் வாழ்க்கை என்ன ஆகும் என்பதைவிட எங்கு தங்குவது என்பதே பிரச்னையாக இருந்தது. சேர்மன் ஆன நன்றிக்கடன் வகையறாவில் ஏதாவது செய்ய வேண்டுமெனத் தோன்றியது பண்ணையாருக்கு. ” ஏங்க…முத்தையா குளத்தங்கரையில இடம் கெடக்குல்ல…அங்க இப்போதைக்கு ஒரு கூரை வீடு கட்டிக்குங்களேன்…ஒங்களப்பத்தி ஊருக்கே தெரியும்..மீறி எதாச்சும் பெரச்சின வந்தா நா பாத்துக்கறேன்…”

சித்ரா வீட்டின் திண்ணையில்தான் அந்தப்பேச்சு நடந்தது.
” ஏண்ணே, எங்க நெலம என்ன…திடீர்னு வூடு வாச கட்டிக்கிறாப்புல இருந்தா ஏன் இப்புடி நிக்கப் போறோம் ” முனகினாள் அம்மாக்காரி. ” மாமா…ஒண்ணு செய்ங்க…நீங்களே அங்ஙன ஒரு வீட்ட கட்டிவுடுங்க…எங்க கைல உள்ளத வாடவ குடுத்துட்டுப் போறோம்”. இவ்வளவு நிர்க்கதியாக இருக்கும்போதுகூட கலகலவென சிரித்த முகத்தோடு யோசனை சொன்ன சௌந்தராவையே சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்தவர், அன்று மாலையே வேலையை ஆரம்பித்து விட்டார். ஒன்றுக்கு இரண்டாக கூரை வீடுகள் மளமளவென ஒரே வாரத்தில் எழும்பிவிட்டன. தியாகி குடும்பத்துக்கென உருவாகும்போது ஆட்சேபம் தெரிவிக்க விரும்பாத ஊருக்கு இரண்டாவது வீடு யாருக்கு என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது.

Twitter

ஒரு வீட்டில் சௌந்தரா குடும்பம் குடியேறிய நான்கு நாளில் தகப்பனும் மகளுமாக யாரோ குடிவந்தார்கள். சேர்மனா கொக்கா …..ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… தியாகிக்கு உதவியது போலவும் ஆச்சு..தன் புதிய துணையை ஊருக்குள்ளேயே கொண்டுவந்த மாதிரியும் ஆச்சு… வேறு சில இடங்களிலும் இப்படியான சில வீடுகளை எழுப்பி இடத்தைப் பிடிக்கவும் இந்த ஏற்பாடு உதவியது. ஒருமுறை கேட்காமல் விட்டாச்சு…இனி எப்படி என்ற தயக்கம் ஊர்சனத்துக்கு..எரிச்சலாக வந்தால், சௌந்தராவின் வாயைக் குறை சொல்வதோடு திருப்தி அடையலானார்கள். அவள்தானே யோசனை சொன்னவள்…

இப்போது வீடு என்ற ஒன்று இருப்பதால் மகளை அழைத்துப் போய்விடுவார்கள் என்று அப்போது முத்தையா பிள்ளை குடும்பமே நம்பியது. வளைகாப்பு நடத்துவதன்மூலம் சமாதானம் பேசலாம் என்று திட்டமிட்டு பெரிய மனுஷர்கள் இரண்டு பேரோடு போனார்கள்.
ஒன்றும் சரிவரவில்லை.

“உங்க சேர்மன்தான் வூடுவாசலெல்லாம் கொடுத்து சவுரியமா வெச்சிருக்காரு போலருக்கே, அப்பறம் இஞ்ச என்னத்துக்கு வரணும்’ என்று கேட்டானாம் ராஜேந்திரன். அதில் உள்ள விஷமத்தை உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடத் தெரியாமல் அவனைப் பார்த்தபடியே தாடியைத் தடவிக் கொண்டிருந்தாராம் முத்தையா பிள்ளை. திட்ட வேண்டுமென்றால் அவர் பெண்டாட்டி எடுத்தாளும் சம்பவங்களில் ஒன்றாக நின்றுவிட்டது அது.

ஆனந்தி பிறந்தபிறகு தையல் கற்றுக்கொண்டாள் சௌந்தரா.
” வாய் பேசற மாரிதான் அவெ கையும் பேசுது” என்று வசவா வாழ்த்தா எனப் பிரித்தறிய முடியாத அங்கீகாரமும் கிடைத்தது. அதனால் ஒரு பாட்டுக்குள் அவள் காரில் போகும் புரட்சியெல்லாம் நடக்கவில்லை. வருடத்துக்கு இரண்டு புதுத்துணி, பள்ளிச்சீருடைகள், பழந்துணிக்கிழிசல்கள் என்ற அளவான சந்தைக்கு ஆதியிலேயே உரிமை கொண்டாடியவனோடு இப்போது இவளும் களத்தில். அவ்வளவுதான். நறுக்கென்று ஏதாவது சிரித்தபடியே சொல்லிவிடுகிறாள் என்ற எரிச்சலை முத்தையா பிள்ளையை நினைத்து ஒதுக்கிவிட்டுப் போவார்கள்.

வீட்டின் கொல்லைப்புறத்தில் செடிக்கு நீரூற்றியபடியோ, பாத்திரங்களை சாம்பல் போட்டுத் தேய்த்தபடியோ இருக்கும்போது குளத்தங்கரைக்கு வருகிறவர்கள் சௌந்தராவின் பார்வைக்கும் நாக்குக்கும் தப்ப முடியாது. பாவாடையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு நீச்சலடிக்கும் முயற்சியில் இருந்த பட்டாமணியார் வீட்டுப் பேத்தியிடம், “என்னடீ ஒங்க ஆத்தா ஊருக்கே வக்கண சொல்லும். ஒனக்கு ஒரு தாவணி வாங்கிப் போடணும்னு தோணலியா அதுக்கு…கூனிக்கூனியிட்டு நடந்தா இருக்குறது இல்லனு ஆயிடுமா”, என்ற தெறிப்பில், அவள் அம்மா மிரண்டு போனாள். “கேப்பாரத்த நாயி. வாயப்பாரு….தியாகி தியாகின்னு பெருங்காய டப்பா வாசத்துல தாளிச்சியிட்டிருக்கோம். என்னிக்காவது யாருக்காவது அடியில மொளகாயக் கிள்ளி வெச்ச மாரி இருக்கப்போவுது…அன்னிக்கி நடுத்தெருவுலதான் நிக்கப்போறோம்”. ஆனாலும் அவசரமாக அம்மா புடவையைக் கிழித்து தாவணியைப் போட்டுக்கொண்டு அந்தப் பெண் மறுநாள் வந்தபோது சௌந்தராவுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

படிப்பகத்துக்கும், குளத்தங்கரைக்குமாக ஓடிக்கொண்டிருந்த அம்மா, ஆனந்திக்கு எட்டு வயதானபோது மதிய உறக்கத்திலேயே உயிர் விட்டிருந்தாள். முத்தையாபிள்ளை “என்னவிட பதினாறு வயசு சின்னதுங்க..அது பாட்டுல இப்படி..போலாமா” என்று புலம்பிக் கொண்டிருக்க, மற்றவர்களே அவரவர் அறிந்த வகையிலான உறவுகளுக்குச் சொல்லி ஏற்பாடுகளை நடத்தினார்கள்.

ராஜேந்திரன் வெளிநாடு போயிருப்பதாகவும், பிறகு பார்க்கிறோம் என்றும் செய்தி சொல்லப்போனவருக்கு காபி கொடுத்து அனுப்பி விட்டார்கள் சம்பந்திகாரர்கள். எப்படியும் விழுந்த பிணத்தைப் போட்டா வைத்திருக்க முடியும் என்று வில்லாளனுக்காகக் காத்திருக்கவும் இல்லாது, எல்லாம் நடந்து முடிந்தது. ரொம்ப தூரம் மொட்டை வெயிலில் ஓடிக்கொண்டே இருப்பதுபோல் களைப்பாக இருந்தது. இப்போது வரவு செலவும் சௌந்தராவே பார்க்க வேண்டிய நிலை. அம்மா எவ்வளவு கட்டுசெட்டு என்பதை கையால் உணர்ந்தாள். முன்பெல்லாம் குளத்தில் எப்போதும் நீர் இருக்கும். இப்போது பல மாதங்கள் வற்றிக்கிடக்க ஆரம்பித்தது. ஜனங்கள் புதிதாக முளைத்திருந்த மோட்டார் கொட்டகைகளை நாடி அன்னக்கூடையில் அழுக்குத்துணிகளோடு போகலானார்கள். ரங்கநாயகி சொல்லியிருப்பாள் போல. இரண்டு வீடுகளுக்கும் பொதுவாக ஒரு அடிபம்பு இறக்கிவிட்டார் சேர்மன்.

ஆனந்தி சௌந்தரத்தின் அச்சாக வளர்ந்து கொண்டிருந்தாள்.
மனைவிதான் இல்லையே தான் வைத்த சுதந்திரா என்ற பெயரைச்சொல்லிக் கூப்பிடலாமா என்று முத்தையா பிள்ளை நினைப்பார். அவ்வளவு வாகாக வரவில்லை. சௌந்தரா என்றே கூப்பிட்டுக்கொண்டு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தார். திடீரென்று நிகழவில்லை அவர் இறப்பு. ஒருவாரம் பக்கத்து ஊர் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று.
படிப்பகத்தை மூட வேண்டாம் என ஆனந்தியை உட்காரச்சொல்ல உத்தேசித்தாள் சௌந்தரா. சத்துமாவு பிசைந்து கொடுத்து ஒரு மோர்சாதமும் போட்டு வைத்து விட்டால் அது பாட்டுக்கு நாள் பூரா உட்கார்ந்திருக்கும். தன்னைப்போல் ஆள் இருக்கிறாளே ஒழிய வாய்த்துடுக்கு இல்லை என்பது சமயத்தில் திருப்தியாகவும், சமயத்தில் குறையாகவும் இருந்தது. ஓரிரண்டு வருடங்களில் பெரியவளாகி விடுவாள்.

தன் கல்யாணத்தைப்பற்றி பெற்றோர் எந்த தயாரிப்பும் இல்லாது இருந்ததால்தான் வீட்டை விற்றது, வந்த வரனுக்குக் கட்டிக் கொடுத்து இப்படி வருவார் போவாரிடம் வாயாடியே நாளைக் கடத்துவது என்றாகிப்போனதாக அம்மா இருக்கும்போது சண்டை போட்டிருக்கிறாள். தான் மட்டுமென்ன செய்து கொண்டிருக்கிறோம்… இரண்டு மா நிலத்தையும் குத்தகையிலிருந்து மீட்டு தானே பயிரிடலாமா என்ற எண்ணம் அவ்வப்போது வரும்.

” ஒழப்புதான் பாப்பா மிச்சம்” என்றபடி அவன் இறக்கிவிட்டுப் போகும் வருட சாப்பாட்டுக்கான படியளப்பில் மண் விழுந்து விடும் என்று எச்சரிப்பார் அப்பா. எப்போதாவது ஒரு வார்த்தை எச்சரிக்கை சொல்லவும் தனக்கு ஆளிருக்கப்போவதில்லையா என்ற நினைவுகளோடு அன்று மருத்துவமனைக்குப் போனபோது அங்கு மாமனார் உட்கார்ந்திருந்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ராஜேந்திரன் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி கிடைத்திருந்தது. பெற்றோருக்கு உவப்பில்லாத இடம் என்பதால் தனிக்குடித்தனம் நடத்துகிறான். சௌந்தரா அம்மா செத்தபோது அவர்களுக்குள்ளாகவே பேச்சுவார்த்தைகள் இல்லாத காரணத்தால்தான் ஏதோ சொல்லி தவிர்க்க வேண்டிய சூழல் என்றெல்லாம் நீண்ட விளக்கங்களை முத்தையா பிள்ளையை முன்வைத்து சௌந்தரத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கொன்றும் புரிகிற நிலை இல்லை. இவளுக்குப் புரியட்டும் என்று நினைத்தாரோ, தனக்கே ஆறுதல் வேண்டியிருந்ததோ..

“மாமா…சத்துமாவு கொண்டாந்தேன் எனக்காவ… சாப்பிடுறீங்களா…என்ன பாக்குறீங்க..ஒங்க மருமவ ஆவறதுக்கு மின்னாடியும் நீங்க எனக்கு மாமாதானே…பேர சொல்லிக் கூப்புட முடியாதுல்ல…” இப்போது விமர்சனமெல்லாம் செய்கிற நிலையில் இல்லை போல. மௌனமாக அவள் நீட்டியதை வாங்கிக் குடித்துவிட்டு வெளியில் போனார். ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வந்து வைத்தார். வீட்டுக்கு வந்து மகளிடம்” இதெல்லாம் பாத்து ஒங்க தாத்தா மாறிட்டாரோனு நெனச்சன் பாப்பா…ஆனா மாறல”, என்று சிரித்தாள். நெருங்கிப் படுத்துக்கொண்ட மகள் முகம் உயர்த்திப் பார்த்தாள்.

” நீ அன்னிக்கி தாத்தாவ பாக்க வந்தன ..அப்ப ஒன்னப் பாத்தாராம்…அப்பிடியே அவரு மவன உரிச்சு வெச்ச மாறி இருக்குறியாம்….ஹஹா ஹ..வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.புளுவு…புளுவு…மண்ட கொண்ட புளுவு… ராஜேந்திரன் மவளா நீ…சௌந்தரத்த அச்சுல எடுத்தவன்னுதான ஆத்தா சொல்லும்…ஆத்தாவ விடு, நம்ம தெருக்காரவுங்க யார வேணும்னாலும் கேக்கட்டுமே….” சரி…இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று ஆனந்திக்குப் புரியவில்லை. என்னவோ போகட்டும் என்று சௌந்தரத்தின் மேல் காலைப் போட்டபடி உறங்கிப் போனாள். ஆனால், தன் உரிமை கோரலை அவள் அங்கீகரித்து முத்திரை குத்திவிட்டதுபோன்ற நிறைவில் சௌந்தரத்துக்கும் நல்ல உறக்கம் வந்தது.

சத்து மாவு அல்லது பொரியரிசி மாவு:

jeyashriskitchen.com

சாப்பாட்டுக்குப் பயன்படுத்தும் புழுங்கலரிசி ஒரு கிலோ எடுத்துக்கொண்டு நன்கு கழுவி நீரை வடிகட்டவும். பிறகும் கோர்த்துக்கொண்டு இருக்கும் நீர்போக ஒரு துணியில் பரப்பி உலர வைக்க வேண்டும். முறுக காய்ந்துவிடாமல் ஒரு மணி நேரத்தில் எடுத்துப்பார்த்தால் நீர் இருக்காது ஆனால் ஊறிய நீர்மை ஓரளவு இருக்கும். அந்த பதத்தில் அடி கனமான வாணலியில் போட்டு நிதானமான தீயில் வறுக்க வேண்டும். விடாது கிளறிக்கொண்டிருக்க வேண்டும். பொன்னிறத்தில் அரிசி பொரிந்து வந்தவுடன் நிறுத்தி ஆறவிட வேண்டும். மாவு மெஷினில் கொடுத்தும் அரைக்கலாம், வீட்டில் மிக்சியிலும் அரைக்கலாம். முன்பு சலித்து சலித்து திருகையில் அரைப்பார்கள்.

அரைத்த மாவை காற்றுப்புகாத பாட்டிலில் மூடி வைக்கவும். பொரியரிசியின் வாசனை ஆளைத்தூக்கும். சமயத்தில் அரைக்குமுன் அள்ளி நொறுக்கும் ஆட்களும் உண்டு. தேவையான அளவு மாவில் வெந்நீர் உப்பு போட்டுக் கரைத்து ஆறவிட்டு மோர் சேர்த்து குடிக்கலாம். பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம். சர்க்கரை, உடைத்த முந்திரி, ஏலம் சேர்த்து திட்டமான அளவு வெந்நீரில் பிசைந்து உருண்டையாகவும் தரலாம். காபி, டீ இல்லாத கால பானம். பின்னாளில் நவதானிய கலப்பு சத்துமாவு வருமுன், இதுதான் சத்துமாவு என்று சொல்லப்பட்டது.

பிற படைப்புகள்:

படைப்பாளர்

உமா மோகன்

கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், வலைப்பூ பதிவர் என பன்முகம் கொண்ட ஆளுமை உமா மோகன். புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், நேர்முகங்கள் காண்பதில் தேர்ந்தவர். கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் ஆர்வமுண்டு. ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, துஅரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’, உள்ளிட்ட ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக் கட்டுரைத்தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.