ஆரோக்கியத்தையும் கவனியுங்கள் அம்மாக்களே!

ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் சமைக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சலசலப்பை உண்டு பண்ணியதை பலரும் அறிந்திருப்போம். அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் தாய்மை என்ற பெயரில் பெண்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள் என்பதே பெண்ணியவாதிகளின் பெரும் ஆதங்கமாக இருந்தது. இதுகுறித்து கொதித்தெழுந்த பெண்கள் பலர் காட்டமான பதிவுகளைச் சமூக வலைதளங்களில் எழுதி இருந்தனர். 

இந்த உண்மையைப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘சூப்பர் மாம் சிண்ட்ரோம்’  என்ற பெயரில் கதையாக எழுதி இருக்கிறார் P.சத்யவதி. நாற்பதைத் தொடும் அல்லது நாற்பதைத் தாண்டிய அனைத்துப் பெண்களும் கட்டாயம் படித்து, தன்னை தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கதை. 

‘சூப்பர் மாம் சிண்ட்ரோம்’  கதையின் நாயகி, அனுராதா. சுவாமிநாதனின் மனைவி. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளைகள். வேலைக்குச் செல்லும் பெண்ணான அனுராதாவிற்கு தன் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள். 

அதற்காக மாடு மாதிரி உழைக்கிறாள். பிள்ளைகளுக்குத் தான் ஒரு சூப்பர் மாம் ஆக விளங்க வேண்டும் என்பதற்காக எந்நேரமும் பாடுபடுகிறாள். அதனால் வேலை, வீடு பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு என்பதே அவள் உலகமாகிவிடுகிறது. ஒரு வழியாக மகன் வேலைக்காக வெளிநாடு செல்கிறான். மகளுக்கும் வெளிநாட்டு வரனை முடித்து அனுப்பி விடுகிறார்கள். 

அவர்களின் படிப்புச் செலவுக்காக உழைத்தது போக, பெண் கருத்தரித்தவுடன் வெளிநாட்டுக்குச் சென்று அவளைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக மறுபடி பணம் சேர்க்கிறாள் அனுராதா. 

காலை 5 மணிக்கெல்லாம் டாண் என்று எழுந்து வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதில் தொடங்கி வேலை, கடன் தவணை செலுத்துவது போன்ற  வங்கி தொடர்பான பணிகள் என அனைத்தையும் அருமையாக நிர்வகித்து வரும் அனுராதா, ஒரு நாள் எழத் தாமதமாகவே அவர் கணவர் வந்து சோதிக்கிறார்.

அவள் உடல் முழுவதும் சுண்ணாம்பால் ஆனது போல விறைத்துக் கிடக்கிறது. அதிர்ச்சி அடைந்த சுவாமிநாதன் தன் நண்பரான ராமமூர்த்திக்குத் தெரிவிக்க, மருத்துவர் வந்து பார்த்து, அவள் இறந்து விட்டதாகத் தெரிவிக்கிறார். ஆனால், அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என யாருக்கும் தெரியவில்லை என்கிறார். 

அவளின் இறப்புச் செய்தியை அவளின் மகனுக்கும் மகளுக்கும் ராமமூர்த்தி தெரிவிக்க, மகன் வர முடியாத சூழ்நிலையைச் சொல்லி வருந்துகிறான். மகள் அவசரமாகக் கிளம்பி வருகிறாள். 

இதற்கிடையில் அவள் சருமத்தின் ஒரு பகுதியை எடுத்து லேப்பில் பரிசோதிக்கிறார்கள். அதில் உள்ள நிறமி தலைவலிக்குப் போடும் மாத்திரை என்பது மட்டும்  தெரிகிறது. அனுவின் உடம்பு சுண்ணாம்பாக மாறவில்லை. மாத்திரைகளைச் சேர்த்து செய்த பதுமையாகவே அவள் இருப்பது மெதுவாகப் புரிகிறது. 

விஷயம் ஊர் முழுதும் பரவி அக்கம் பக்கத்தினர் அனைவரும் அவள் உடம்பை பரிசோதிக்கின்றனர். மகள் வெளிநாட்டிலிருந்து வந்து சேர அனுராதாவின் நெருங்கிய உறவினரான புரபசர் பிரகாஷும் அங்கு வருகிறார். அவள் உடம்பை பரிசோதிக்கிறார். அவள் உடம்பை எரிக்கையில் பச்சை நிறத்தில் ஒன்று வெடித்து பறந்து வெளியே வந்து விழுகிறது. அதை பிரகாஷ் பரிசோதிக்கிறார். பாசி படிந்துபோன தன் பிரியமான அக்காளின் மூளை என்பதை தம்பி பிரகாஷ் தெரிந்து கொண்டு அவளுக்கு நேர்ந்தது என்ன என்பதையும் முழுவதுமாக உணர்ந்து கொள்கிறார். 

அதுகுறித்து விசாரிக்கும் அனுராதாவின் மகள் ரஜினிக்கும் ராமமூர்த்தியின் மகள் சுசீலாவிற்கும் நடந்ததை விவரிக்கிறார். இளம்வயதில் அதி புத்திசாலியாக இருந்த அனு, தன் குடும்பம் மற்றும் பிள்ளைகளுக்காக வேலை, வேலை என்று இருந்தததால் அவ்வவ்போது தலைவலி மற்றும் உடல்வலிக்கு மாத்திரை, பல நேரங்களில் தூக்கத்திற்கு மாத்திரை, வீட்டு விசேஷங்களின்போது மாதவிடாய் தள்ளிப் போக மாத்திரை, நாற்பதுகளுக்குப் பிறகு பிபி மாத்திரையென மாத்திரைகளுடனே பெரும்பாலும் வாழ்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். எந்நேரமும் பிள்ளைகள், அவர்களின் படிப்பு, அதற்கான பணம், வீடு என்றே இருந்தவள் தனக்கென நேரம் ஒதுக்கி, தன் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவே இல்லை. தன்னை சூப்பர்மாம் ஆக்க அவள் கொடுத்த பெரிய விலை இது என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறார். 

Photo Courtesy: Pexels

இங்கே பல பெண்களின் நிலை இதுதான். தான் ஒரு நல்ல தாய் என்பதை நிரூபிப்பதற்கே தன் வாழ்நாள் முழுமையும் செலவிடுகிறார்கள். சமூகத்திற்கு தான் ஒரு நல்ல தாய் என்பதை நிரூபிக்க அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். சரியாகச் சாப்பிடாமல், சரியான நேரத்திற்கு சாப்பிடாமல், தூங்காமல் பிள்ளைகளுக்காக, பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிடும் தாய்மார்கள்தாம் இங்கே அதிகம். 

தாய்மை, தியாகம் என்ற சொற்களில் மட்டுமே மனம் குளிர்ந்து போய் பெண்கள், பிள்ளை பெறுவதில் தொடங்கி அவர்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவமனைகளில், படிப்புக்காகப் பள்ளியில், சாதனையாளர் ஆக்க வேண்டுமென்பதற்காக பாட்டு கிளாஸ், நடன கிளாஸ் எனப் பல இடங்களிலும் காத்துக்கிடந்தே அவர்களின் தலை நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இதெல்லாம் அவர்களுக்குப் பிரச்னை இல்லை. “உங்க பிள்ளை சுத்த தங்கம்”. “இப்படி ஒரு பிள்ளை பிறக்க நீங்க கொடுத்து வைத்திருக்கணும்”, “உங்க பிள்ளை நீங்க வாங்கி வந்த வரம்” போன்ற ஓரிரு வாக்கியங்களைக் கேட்க வேண்டும் என்பதே அவர்கள் வாழ்நாள் தவம். அதைக் கேட்பதற்காகவே இங்கே தன் வாழ்நாள் முழுவதையும் பல பெண்கள் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த கதையினை படிக்கும் போது ஒவ்வொரு பெண்ணும் தன்னை அனுராதாவாக ஒரு நிமிஷமேனும் உணர முடியும். தன் நிலையை உணர முடியும். தாய்மை என்ற பெயரில் நாம் இழந்து கொண்டிருக்கிற நம்மைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். 

தியாகி பட்டமெல்லாம் போதும் பெண்களே! உங்களுக்காகவும் சற்றே சிந்திக்கத் தொடங்குங்கள். அது சற்றே சுயநலமாக இருந்தாலும் உங்களின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்துவதுகூட ஒரு வகையில் உங்களின் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யும் நல்லதுதானே? நாளைப் பின்னே உடல்நலம் கெட்டு அவர்களைத் தொல்லை செய்ய வேண்டாம் பாருங்கள்.

உங்களைத் தாய்மையின் கடமையிலிருந்து தவறச் சொல்லவில்லை. பிள்ளைகளைப் பற்றிச் சிந்திக்கும் நேரத்தில் ஒரு பகுதியிலாவது உங்களைப் பற்றியும் சற்றே சிந்தியுங்கள். உங்களையும் சற்றே கூர்ந்து கவனியுங்கள். அழகான புடவைகளும் சில தங்க நகைகளும் மட்டும்தான் உங்கள் தேவையா என்ன? உங்கள் ஆரோக்கியமும், தேவைகளும், உங்களின் உள் மன உணர்வுகளும் உங்களுக்கு முக்கியமில்லையா?

  • கதை: சூப்பர் மாம் சிண்ட்ரோம்
  • தெலுங்கில் எழுதியவர்: P.சத்யவதி 
  • மொழி பெயர்த்தவர்: கௌரி கிருபானந்தன்
  • (மங்கையர் மலர் இதழில் வெளியானது)