கோமாளி மீன் (Clown fish) என்பது, பவளத்திட்டுக்களில் கடல் சாமந்தி/கடல் தாமரையில் வசிக்கும் ஒருவகை கடல் மீன். கோமாளி மீன்களுக்கும் கடல் சாமந்திகளுக்குமிடையே பிரிக்கவே முடியாத ஒரு பிணைப்பு உண்டு. கடல் சாமந்திகள் இல்லாமல் கோமாளி மீன்களால் வசிக்க முடியாது. கடல் சாமந்திகளின் உடலில் உள்ள நச்சுப் பொருள் காரணமாக, வேட்டை மீன்கள் கடல் சாமந்திகளுக்கு அருகில் வருவதில்லை. இதனால் கோமாளி மீன்கள் பாதுகாக்கப்படுகின்றன.

கோமாளி மீன்கள் கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை. ஒரு தலைமைப் பெண் மீன், ஒரு தலைமை ஆண் மீன், சிறிய ஆண்மீன்கள் பல கொண்ட கூட்டம் இது. தூரத்திலிருந்து ஒரு கோமாளிமீன் கூட்டத்தை கவனித்தாலே எது ஆண், எது பெண் என்று சொல்லிவிட முடியும். இருப்பதிலேயே பெரிய மீன், தலைமை பெண். அதற்கு அடுத்தது பெரிய அளவில் இருப்பது தலைமை ஆண். சோகையாகத் திரியும் சிறிய மீன்கள் மற்ற ஆண்கள்.
இதில் சில கேள்விகள் எழலாம் – ஏன் தலைமைப் பெண் மீன் அளவில் மிகப்பெரியதாக இருக்கிறது? மற்ற ஆண்மீன்கள் ஏன் பொலிவிழந்து சிறிய மீன்களாக இருக்கின்றன?

கோமாளி மீன்களைப் பொறுத்தவரை, ஒரு பெண் மீனின் உடல் அளவுக்கும் அது இடும் முட்டைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடல் அளவு அதிகரிக்க அதிகரிக்க, முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். முட்டைகளின் எண்ணிக்கை அதிகமானால், சில மீன்களை வேட்டை விலங்குகள் கொன்றுவிட்டால் கூட, எதிர்கால சந்ததிகள் கொஞ்சமாவது மிஞ்சும். அதற்காக இயற்கை செய்த ஏற்பாடு இது.

மற்ற ஆண் மீன்கள் அளவில் சிறியதாக இருப்பதற்குக் காரணம், அவற்றை ஒரு பொழுதும் தலைமை ஆண்மீன் தனக்குப் போட்டியாக நினைத்துவிடக்கூடாது என்பதுதான்.ஒருவேளை போட்டியாக நினைத்துவிட்டால், அவற்றோடு சண்டையிட்டு விரட்டிவிடும். ஒரே கடல் சாமந்தியில் பல மீன்கள் வசிக்கும்போது, சாதுவாகவும் அளவில் சிறியதாகவும் இருக்கும் ஆண் மீன்களை, தலைமை ஆண் பெரிதாகக் கண்டுகொள்ளாது.

அதுசரி, இப்படி தங்களை சுருக்கிக்கொண்டு இந்த ஆண்மீன்கள் எதற்காக அந்த கடல்தாமரைக்குள் வசிக்கின்றன?

பல கூடுதல் ஆண்மீன்கள் இருந்தால் மட்டுமே, ஒரு கோமாளிமீன் கூட்டத்தின் சங்கிலித்தொடர் அறுபடாமல் இருக்கும். இந்த ஆண்மீன்களின் நிலை இப்படியே இருந்துவிடாது. வேளை வரும்போது, சிறிய ஆண்மீன்களுக்கும் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்!

இது எப்படி சாத்தியம்?

முட்டையிலிருந்து வெளியில் வரும்போது, எல்லா கோமாளி மீன்களும் ஆண்களாகவே இருக்கும்! ஆனாலும் ஆண்மீன்களின் உடலில், வளராத ஒரு சினைமுட்டைப்பையும் காணப்படும். இதை ovotestis என்கிறார்கள்.

ஒரு கூட்டத்தில், தலைமைப் பெண் மீன் வேட்டையாடப்பட்டு இறந்துவிட்டால், சில நாட்களில், தலைமை ஆண்மீனின் உடலில் மாறுதல் தென்படும். அது மூர்க்கமானதாக மாறும், மற்ற ஆண் மீன்களுடன் உணவுக்கு சண்டையிட்டுக் கூடுதலாக உண்ணத் தொடங்கும். அதன் உடல் எடை உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும். உள்ளுக்குள் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் வேலை செய்யத் தொடங்கி, விந்தகம் சுருங்கி, கரைந்துபோகும். சினைமுட்டைப் பை வேகமாக வளரும். சில நாட்களுக்குள் அது தலைமைப் பெண் மீனாக மாறிவிடும்.

இந்த மாற்றம் தொடங்கும் அந்தப் புள்ளியிலேயே, ஆண்மீன்கள் கூட்டத்தில் ஓரளவு அளவில் பெரிதாக இருந்த ஆண்மீன், வேகமாக வளர்ந்து, இனப்பெருக்க வயதையும் நிலையையும் எட்டிவிடும். அடுத்த தலைமை ஆணாக அது பொறுப்பேற்கும். கூட்டத்தின் தலைமைப் பெண் மீனும் தலைமை ஆண் மீனும் வந்துவிட்டன என்பதால், இனப்பெருக்க சுழற்சி எந்த ஒரு பாதிப்பும் இன்றித் தொடரும்!

இதுபோல் ஆணாகப் பிறந்தாலும் இரண்டு இனப்பெருக்க உறுப்புக்களையும் உள்ளே சுமந்துகொண்டு, தேவை ஏற்படும்போது பெண்ணாக மாறும் தன்மையை Protrandrous hermaphroditism என்கிறார்கள் விஞ்ஞானிகள். தலைமைப் பெண் மீன் இறக்கும்போது அந்த சூழல் ஏற்படுத்தும் தாக்கம், தலைமை ஆண் மீனுக்குள் ஒரு வேதிவினையைத் துவக்கி வைக்கிறது. அதுவே இந்த மாற்றத்துக்கான உந்துசக்தி.

எந்த குழந்தைகள் திரைப்படத்தைப் பற்றிப் பேசப்போகிறோம் என்று இப்போது புரிந்திருக்கும்…நீமோ என்கிற கோமாளி மீனைத் தேடி அப்பா மீன் மார்லின் அலைவதை மிக அழகாகக் காட்சிப்படுத்தியது Finding Nemo என்கிற அனிமேஷன் திரைப்படம். ஆனால், அறிவியலின்படி பார்த்தால், தலைமைப் பெண் மீனான கோரல் இறக்கும்போதே, மார்லினுக்குள் வேதி வினை தொடங்கிவிடும். மார்லின் பெண்ணாக மாறிவிடும். நீமோ திரும்பி வந்து பார்க்கும்போது, அங்கே அவனுக்காகக் காத்திருப்பது அப்பா மீன் அல்ல, அம்மா மீன்!

தவிர, இந்தக் கதையில் இன்னொரு அம்சமும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது – அம்மா கோரல், அப்பா மார்லின், பையன் நீமோ என்பதாக மூன்றுபேர் கொண்ட சிறு குடும்பங்களைக் கோமாளி மீன்களிடையே பார்க்கவே முடியாது. அவை எப்போதும் கூட்டமாகவே வசிக்கும் இயல்புடையவை. நீமோ வசிக்கும் கடல் சாமந்தியில் அவனோடு கூடவே இனப்பெருக்க நிலையை அடையாத பல ஆண் மீன்கள் வசிப்பதாகக் காட்டியிருக்கவேண்டும்.

இந்தக் குழப்பத்தையெல்லாம் குழந்தைக்கதையில் எப்படிக் காட்டுவது என்று நினைத்துதானோ என்னவோ, செண்டிமெண்ட் கலந்த ஒரு அப்பா-மகன் கதையை நமக்குத் தந்திருக்கிறது டிஸ்னி-பிக்ஸார்.
இதெல்லாம் சரிதான்…

எதற்காக பால்மாற்றம் செய்துகொண்டு, பெண் மீனாக மாறி சிரமப்படவேண்டும்? வேறு ஒரு கூட்டத்தில் போய் சேர்ந்துகொள்ளலாமே!

கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்த கடல் சாமந்தி-கோமாளி மீன் பிணைப்புதான் இதற்குக் காரணம். கடல்சாமந்திக்குள் இருக்கிறவரைதான் கோமாளிமீன்களுக்குப் பாதுகாப்பு, அதிலிருந்து கிளம்பி இணை தேடுகிறேன் என்று நீந்தித் திரிந்தால் கிளம்பிய சில நிமிடங்களிலேயே பவளப்பாறைகளில் வசிக்கும் வேட்டை மீன்களுக்கு இரையாகிவிடவேண்டியதுதான்!

பால்மாற்றம் என்பது பல உயிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப விலங்குகள் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்கின்றன. பல மீன்களில், பால்மாற்றம் நடக்கும்போது, அளவும் நிறமும் மாறுவதும் இயல்பு. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்துக்காகவே நடக்கின்றன.
கோமாளி மீன்களின் சமூக அமைப்பை மேலோட்டமாகப் பார்த்தால், தேனீக்களின் சமூக அமைப்பைப் போலவே இருக்கிறது, இல்லையா? தேனீக்களின் சமூக அமைப்பு ஏன் அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது? இதைப்போலவே இயங்கும் வேறு விலங்குகள் உண்டா?

தொடர்ந்து பேசுவோம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.