சமூகம் கட்டமைத்துள்ள வழமையான பால் பண்புகளை நிலைநிறுத்தவும், மரபுசார்ந்த பாலின பேதத்திற்கு நியாயம் கற்பிக்கவும் அடிக்கடி அறிவியல் துணைக்கு அழைத்துக் கொள்ளப்படுகிறது. “ஆண் என்பவன் இயல்பாகவே….”, “பெண்களின் உடல் அமைப்பிலேயே…” என்று தொடங்கும் வாக்கியங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். ஆனால் தற்கால அறிவியல் இந்த பொதுமைப்படுத்தல்களை மறுக்கிறது.

பால் பண்புகள் (Sex characteristics) என்பதும் பாலினம் (Gender) என்பதும் வேறு என்பதை அறிவியலாளர்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். இன்னும் சொல்லபோனால் அறிவியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க அதிகரிக்க, விலங்குகளின் பழக்க வழக்கவியல் (Behavioural ecology) குறித்த பல்வேறு வழக்கமான பார்வைகள்கூட கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. “மனித சமூகத்தின் பால் வேறுபாடு மற்றும் கட்டமைப்புகளை நாம் விலங்குகள் உலகத்துக்குள்ளும் புகுத்துகிறோமா?” என்று பல பெண் விஞ்ஞானிகள் கேள்வி கேட்டு, தரவுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தியபிறகே வெளியிட்டு வருகிறார்கள்.

பாலினம் என்பது சமூகம்சார், மரபுசார் கட்டமைப்பு. அது நுணுக்கமானது. பாலினம் என்பதே பன்முகத்தன்மை கொண்ட, புரிந்துகொள்ள சிக்கலான ஒரு கருத்தாக்கம். சமூகத்தால் நிறுவப்பட்ட கடமைகள் மற்றும் தன்னுணர்வினால் வெளிப்படும் பண்புகள் இரண்டும் இணையும் புள்ளியிலிருந்து பாலினக் கூறுகள் பிறக்கின்றன.

இதில், “சமூகம்” என்பது முக்கியமான சொல். மனிதர்களில் சமூகம் உண்டு, விலங்கினங்களில் சமூக அமைப்பு உண்டா? அது எப்படிப்பட்டது?அதற்கும் மனித சமூகத்திற்கும் என்ன வேறுபாடு? சமூக விலங்குகளைத் தவிர மற்ற விலங்குகளைப் பொறுத்தவரை சமூகம் என்றால் என்ன? மரபு என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானதா? – ஆகியவை அவசியமான கேள்விகள். விலங்குகளைப் பொறுத்தவரை இந்தக் கேள்விகளுக்கான விடைகள் இனத்துக்கு இனம் மாறுபடுகின்றன.

எப்படிப் பார்த்தாலும், மனித இனத்தின் பார்வையிலிருந்து நாம் சொல்லும் “பாலினம்” என்பதற்கும் விலங்குகளின் பால்சார்ந்த சமூகப் பங்களிப்புக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. எல்லா பெண் விலங்குகளும் சற்றே நாணத்துடனும் அமைதியாகவும் தாயன்பின் ஊற்றாகவும் நடந்துகொள்வதில்லை, ஆண் விலங்குகள் எல்லாம் மூர்க்கமானவையும் அல்ல. பிரசவித்து பிள்ளை பெறும் ஆண் விலங்குகள், ஆண் பாலே இல்லாமல் பெண்கள் மட்டுமே கொண்ட விலங்கினங்கள், உடலளவில் பெரிய பெண்களைக் கொண்ட விலங்கினங்கள், பெண் வழி சமூகமாக இயங்கும் விலங்குக் கூட்டங்கள் என்று விலங்கியல் உலகில் பல்வேறு பாலின நெகிழ்தன்மைகள் உண்டு. பாலினப் பண்புகள் இனத்துக்கு இனம் மாறுபடுகின்றன. இந்தப் பண்புகளைப் பொதுமைப்படுத்திவிட முடியாது.

விலங்குகளின் உலகைக் கூர்ந்து கவனித்தால், பாலினம் பற்றிய மனிதர்களின் கட்டமைப்புகளை இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். எதை நாம் கற்பிதமாக வைத்திருக்கிறோம், எது அறிவியலின்படி நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று பிரித்தறிவதற்காக, நாம் விலங்குகளின் உலகத்துக்குள் சற்றே எட்டிப் பார்க்கலாம். “சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளுதல்” என்கிற ஒரு அறிவுரையை அதீதமாகக் கடைபிடிக்கும் ஒரு வகை மீன்களைத்தான் நாம் முதலில் சந்திக்கப்போகிறோம். ஒரு பிரபலமான குழந்தைகள் திரைப்படத்தில் இருக்கும் தகவல் பிழையையும் நாம் கண்டுபிடிக்கப்போகிறோம்!

பவளப்பாறைத் திட்டுக்களுக்குள் டைவ் அடிக்கலாமா?…

படைப்பு

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.