இந்திய கணவர்களில் பலர் எப்போதுமே தங்களை மிதப்பிலேயே வைத்திருப்பவர்கள். அதாவது 'ஆண்' என்ற மிதப்பு. மனைவிகள் தங்களின் கைக்கு அடக்கமாகவே வேண்டும் என்று நினைப்பவர்கள். அதாவது படிப்பு, அந்தஸ்து, உயரம் எல்லாவற்றிலும். மனைவிகளை மட்டம் தட்டியே பிழைத்திருப்பவர்கள். பாராட்டினால் கைமீறி விடுவார்கள் என்ற பயம். படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் இந்திய ஆண்கள் பலருக்கும் இப்படியான எண்ண ஓட்டம்தான்.

என் தோழியின் கணவர் இந்த விஷயத்தில் ‘டாக்டரேட்’ வாங்கியவர். அவர் வீட்டில் ஒரு சின்ன வேலைகூட செய்யமாட்டார். அவரது கைக்கு ஆயின்மென்ட்கூட தோழிதான் போட வேண்டும். மருந்து தடவித் தடவி ஒருநாள், இரண்டு நாள் இல்லை. பத்து வருடங்களாக மருந்து தடவி அவளது விரல்கள் சிறிய சூட்டைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இட்லித்தட்டிலிருந்து இட்லிகளை எடுப்பதற்குள் பத்து முறை நீரில் கைகளை நனைத்துக் கொள்வாள். சுடுசோற்றைப் பிசைந்து சாப்பிட முடியாது.

கணவரோ அவளுடைய கவனிப்பு போதாது என்றே புகார் வாசிப்பார். அவளுக்கு முடியவில்லை என்றால் முடிந்தவரை அவளே கைவைத்தியம் செய்து கொள்வாள். முடியாத பட்சத்தில் அவரிடம் சொன்னாலும் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றதே கிடையாது. அவரது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு போனால் போகிறது என்றுதான் அழைத்துச் செல்வார். அப்புறம் அவளேதான் மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.

அவள் வேலைக்குச் செல்லக் கூடாது என்று சொல்லிவிட்டார். பொருளாதார சுதந்திரம் இருந்தால் தன்னை மதிக்கமாட்டாள் என்பது அவரது வாதம். பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு தோழி தன்னால் துணிகளைத் துவைக்க இயலவில்லை என்று உதவியாளர் ஒருவரைப் பணிக்கு அமர்த்திக் கொண்டாள். ஏகப்பட்ட ஆபரேஷன்களின் பின்விளைவால் வீடு துடைப்பது உள்ளிட்ட பணிகளையும் அவளால் செய்ய இயலவில்லை.

இன்று அவள் தலைவலி என்று மாத்திரை வாங்கி வரச் சொல்லி மதியம் சொன்னதற்கு மாலைதான் வாங்கி வந்து தந்தவர்… கேட்டாரே ஒரு கேள்வி. “நீ அப்படி என்ன வேலை செய்யற? என்னை மாதிரி வெயில்ல நின்னியா? இல்ல கடன் பிரச்னைகளால டார்ச்சரா? பின்ன உனக்கு எதுக்கு தலை வலிக்கணும்?”

People vector created by jcomp – www.freepik.com

அவள் என்னிடம் கேட்டது,
“ஏண்டி தலைவலிக்கு இப்படி எதாச்சும் காரணம் இருக்கணுமா என்ன? அப்படி பிஸியா இல்லாதவங்களுக்கு தலை வலிக்கக் கூடாதா?”

இதற்கு என்ன பதில் சொல்வது?

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.