கணிப்பு

யோசித்துப் பாருங்கள். பெண்களிடம் பழகுவதைத் தவிர்த்து, வேறெப்படியும், எதற்கும் நாம் ஆண்களை கேள்வி கேட்பதில்லை. அவர்கள் கோபப்பட்டாலோ, தனியாக எங்காவது சென்றாலோ, இரவில் தாமதமாக வந்தாலோ, ‘அவனுக்கு ஆயிரம் வேலைகள், டென்ஷன்’, என்றும், அதே ஒரு பெண் சரியான விஷயத்திற்கு கோபப்பட்டாலோ, தனியாக சென்றாலோ, தாமதமாக வந்தாலோ, அவளைத் திருப்பி கேள்வி கேட்டுதான் இந்த சமூகம் பழக்கி வைத்திருக்கிறது.

“பெண்கள் நல்லதுக்காகத்தான் சொல்றோம். அவங்க பாதுகாப்புக்காத்தான் கண்ட நேரத்தில் போகக் கூடாதுன்னு சொல்றோம்”, என்று அக்கறையாக சொல்லக் கேட்டிருப்பீர்கள்… உலகில் 15 கோடி பெண்கள் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுவது சம்பந்தமில்லாத வெளி ஆட்களால் அல்ல, குடும்பத்தில் நெருக்கமாக இருக்கும் யாரோ ஒருவரால்தான். ஆக ஆபத்து வெளியே இருப்பதைக்காட்டிலும் வீட்டிற்குள் அதிகமிருக்கிறது. இப்போது அவர்கள் எங்கு அக்கறை செலுத்தவேண்டும்? வீட்டிலா, பொதுவெளியிலா? யாரைக் கட்டுப்படுத்த வேண்டும்? ஆனால் செய்ய மாட்டார்கள். இதனால்தான் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை வெளியே சொல்வதில்லை. ” அதெப்படி அத்தனை பேரை விட்டு உங்கிட்ட தப்பா நடந்துகிட்டான் ?”, என அம்பை மாற்றி பெண்கள் மீதே எய்வார்கள்.

திருமணமான புதிதில் என் கணவரின் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். ஊர் சுற்றிய களைப்பில் பத்து மணி வாக்கில் தூங்கச் செல்லும் போது அந்த உறவினர் வந்து பேச்சுக் கொடுத்தார். பேசினார்… பேசினார்… பேசிக் கொண்டே இருந்தார். நாலைந்து உறவினர் குழுமி இருந்த இடத்தில், அவர் என்னை மட்டுமே பார்த்து பேசியதால் வேறெங்கும் பார்வை திருப்பாமல் தலையாட்டியபடி உட்கார வேண்டியதாயிற்று. மணி 11 ஆனது, 12 ஆனது. கண்கள் சொருகியது. அப்போதும் விடாமல் பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார். மணி 1 ஆகி, 2 ஐயும் தாண்டிவிட்டது. கட்டுப்படுத்த முடியாமல், ” எனக்கு தூக்கம் வருது , ஸாரி தூங்கப் போறேன்” எனச் சொல்லி அப்படியே படுக்கையில் விழுந்துவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் அந்த உறவினர் என் மாமியாரிடம், ” பொண்ணு ரொம்ப வாயாடி போலிருக்கு. பார்த்துக்கோங்க”, என்று சொல்லியிருக்கிறார். அந்த வார்த்தை எங்கெங்கோ பயணப்பட்டு, மதியத்திற்கு என்னை அடைந்தது. எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. நடு இரவு வரை ஓயாமல் பேசியவர், ஒரு வார்த்தை பேசிய என்னை வாயாடி என சொன்னது எனக்கு வேடிக்கையாக இருந்தது. அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நீட்டாமல், நம் உரிமையைப் பற்றி மட்டும் பேசினால்கூட நமக்கு கிடைக்கும் பட்டங்கள், “வாயாடி, மரியாதையற்றவள், திமிர் பிடித்தவள்”. இது போல் இந்த சமூகத்தில் பெண்களுக்கென பட்டங்கள் இன்னும் நிறைய உண்டு.

ஒரு ஆண் தவறு செய்தால், ‘தவறு’ என்ற ஒற்றை நோக்கிலேயே பார்க்கப்படும் ஒரு விஷயம், அதே தவறை பெண்கள் செய்யும் பொழுது ‘கலாச்சார குற்றமாகப்’ பார்க்கப்படுகிறது. குடிப்பது, புகைப்பது, பார்ட்டி செல்வது, ஊர் சுற்றுவது என பல விஷயங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். நான்கு பேர் இருக்குமிடத்தில் சத்தமாய் சிரிக்கக் கூடாது, கலகலவென பேசக் கூடாது. அலுவலகத்தில் எவ்வளவு மதிப்பிருந்தாலும், அந்தப் பெண்ணுக்கு குடும்பத்திலும், அக்கம்பக்கத்திலும் சற்று குறைவான அங்கீகாரம்தான் கிடைக்கும். ” இந்த நேரம் வெளியில் போறாளே. இவளையெல்லாம் வீட்டில யாரும் கேட்க மாட்டாங்களா? இந்த மாதிரி ட்ரெஸ் போட்றாளே, அசிங்கமா தோணலையா? இப்படி சிரிச்சு ஆம்பளைங்ககிட்ட பேசறாளே நாலு பேர் என்ன நினைப்பாங்க எனத் தெரியாதா? “, இப்படி எத்தனைக் கேள்விகள்?

அதுவும் பெண்கள் அணியும் உடைகள் பார்வைக்கு பார்வை மாறுபடும் பாருங்கள்! நம் இந்தியாவில் இதற்கெல்லாமா இத்தனை அக்கப்போர் என யோசிக்க வேண்டிய பல விஷயங்களில், உடைகளைப் பற்றிய கணிப்பும் ஒன்று.

பெங்களூரில் என் நெருங்கிய அலுவலக தோழி ஒருத்தி மிக நவீன உடைகளை அணிவாள். அப்படி அணிய அவளுக்கு விருப்பம் அதிகம். ஒருமுறை சினிமா சென்றவளுக்கு கடும் வயிற்று வலி. பாதி சினிமாவில் வெளியே வந்து உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்த்திருக்கிறாள். அந்த மருத்துவர் அவள் அணிந்திருந்த உடையை கவனித்து, ” ஆர் யு அ வெர்ஜின்?”, எனக் கேட்டிருக்கிறார். அவளுக்கு கடும் அதிர்ச்சி. கோபத்தில் அவரை திட்டிவிட்டு வந்து என்னிடம் அலைபேசியில் அழைத்து புலம்பினாள். பெங்களூர் போன்ற நகரத்திலேயே, மேன்மையான படிப்பை படித்து சமூகத்தில் மதிப்பை கொண்டிருக்கும் மருத்துவருக்கே, பெண்களைப் பார்க்கும் பார்வை மாறவில்லையென்றால், நகரைத் தாண்டியிருக்கும் ஊர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்?

Photo by Sasha Freemind on Unsplash

அது போல் இன்னொரு சம்பவமும் அவளுக்கு நடந்தது, அவள் ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்திற்குச் சென்றாள். அவளுடைய நண்பனின் நண்பன் அவளிடம் தவறாக நடக்க முற்பட்டிருக்கிறான். அவள் திருப்பி அடித்து கலவரமாகிப் போய்விட்டது. ஏன் அப்படி அவளிடம் தவறாக நடந்து கொண்டாய் எனக் கேட்டதற்கு, அவன் சொன்ன காரணம் அத்தனை அருவெறுப்பாக இருந்தது. “அவள் அணிந்த உடை பார்த்து அவள் டேக் இட் ஈஸியாக நினைத்துக் கொள்வாள் என நினைத்து அப்ரோச் செய்தேன்”, எனக் கூறியிருக்கிறான். இது மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்கள்? இவளை யார் அந்த நேரத்தில் போகச் சொன்னது? அது அவள் தவறுதான் என திருப்பி அவள் மீதே கல்லை எறிவார்கள். ஆக குற்றம் செய்தவனை நாம் கேள்விகேட்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களைத்தான் குறுக வைக்கிறோம் , இப்படித்தான் நம் சமூகம் கற்றுத் தந்திருக்கிறது.

அவளுடைய உடல் அவளுக்குப் பிடித்த உடை. அதைத் தாண்டி என்னெவெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது மற்றவர்களுக்கு! உடைகள் மற்றவர்களை ஈர்க்கவே என வைத்துக் கொள்வோம். மற்றவர்களைக் கவர அழகாய் உடுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? பெண்களுக்கு ஆண், பெண் பேதமில்லாமல் எல்லா இடங்களிலுமே அழகாக உடைகள் அணியப் பிடிக்கும். ஆனால் ஆண்களை கவரத்தான் அவர்கள் அப்படி அணிகிறார்கள் என நினைத்தால் மன்னிக்கவும், அவர்கள் இன்னும் மனதளவில் வளர வேண்டும்.

எந்த வயதில் எந்த உடை உடுத்துவது என்ற குழப்பம் நமக்குள் வருவதற்கு முன்பே மற்ற பெண்கள் என்ன ஆடை நாம் அணியவேண்டும் என்பதை நமக்குள் புகுத்திவிடுவார்கள். ஒரு பெண்ணுடன் சென்று ஒரு உடை எடுத்துப் பாருங்கள். உங்களுக்கு விருப்பமானதை சட்டென எடுத்து விட முடியாது. ஆயிரத்தெட்டு நொட்டைகள் சொல்வார்கள். அதுவும் உங்களுக்கு மணமாகி குழந்தை வந்துவிட்டால், அவ்வளவுதான்..

நான் பெங்களூரில் இருந்த போது ஒருமுறை உடை வாங்க ரெடிமேட் கடை ஒன்றுக்குச் சென்றேன். என்னருகே இரு பெண்கள் உடையைத் தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் தோழிகள் போலத்தான் தெரிந்தார்கள் . அதில் ஒரு பெண்ணிற்கு மாடர்னாக இருந்த ஒரு டாப்ஸ் வாங்க ஆசை . அதை எடுத்து அளவு பார்க்கும் போது, அருகிலிருந்த மற்றொரு பெண், ” வயசுக்கு தகுந்த மாதிரி வாங்கு. இதெல்லாம் நீ போட்றதா.. அம்மா எப்படி இருக்கணுமோ அப்படி டீசென்டா ட்ரெஸ் பண்ணிக்கோ”, என சத்தமாய் அட்வைஸ் செய்து கொண்டிருந்தாள். அந்தப் பெண் வாடிய முகத்துடன் அந்த உடையை திரும்ப இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுப் போனாள். இப்படி நம் பிள்ளைகள் என்ன சொல்வார்களோ, பெரியவர்கள் என்ன சொல்வார்களோ, என வயதாகும் வரை தங்கள் ஆசையை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளும் பெண்கள்தான் நாம்.

நகரங்களில் வேண்டுமானால் பெண்கள் தங்கள் விருப்பப்படி உடை அணிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் வசிக்கும் பெண்களுக்கு இது இன்னும் சாத்தியப்படவில்லை. என் தோழியின் மகன், “நீங்க சேலைதான் கட்டினாதான் அம்மா மாதிரி தெரிவீங்க. அதனால் சேலை மட்டும்தான் கட்ட வேண்டும் “, என கட்டளையிட்டிருப்பதால் இப்போது வரை சேலை மட்டுமே உடுத்துவதாகச் சொல்கிறாள். பிள்ளைகளின் ஆசையே நமக்கான ஆசை, கணவனின் கட்டளையே நமக்கான வேலை என்றால், பெண்கள் எல்லாம் பிறந்தது பிள்ளை பெறவும், கணவன் சொல்லைத் தட்டாமல் செய்வதற்கும் மட்டும்தானா?

நமக்கென விருப்பங்கள் எதுவுமே இருக்கக் கூடாதா? எல்லா விருப்பு வெறுப்புக்களையும் மனதிற்குள்ளேயே அடக்கி வைத்து, பின் தொட்டதெற்கெல்லாம் எரிந்து விழும் அம்மாக்கள் இங்கு அதிகம். “இந்த அம்மா ஏன் காரணமில்லாம எரிஞ்சு விழறாங்க, வயசாகிடுச்சுல அதான் “, என பொத்தாம்பொதுவாக பிள்ளைகள் சொல்வார்கள். அவள் எத்தனை ஆசைகளை உள்ளடக்கி ஆற்றாமையால் பொங்குகிறாள் என்பது அவர்களுக்குத் தெரியாது. எதெல்லாம் அணிய வேண்டும் என உங்கள் கணவர் உள்பட, மற்றவர்கள் சொல்ல இடம் அளிக்காதீர்கள். உங்கள் கணவரிடம் எத்தனையோ விஷயங்களை பேசியிருப்பீர்கள். இதையும் ஆரம்பத்திலேயே பேசிவிடுவதுதான் நல்லதுதானே?

பெண்களிலேயே இரு சாரார் வேறுவிதமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். ஜீன்ஸ், டாப்ஸ், பாய்கட் இப்படி இருப்பதுதான் எனக்கு தன்னம்பிக்கையாய், தைரியமாய் இருக்க உதவுகிறது என பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மேற்கத்திய உடைகள் சௌகரியமானவை, பிடித்திருக்கின்றது என்பதில் எனக்கும் உடன்பாடே. ஆனால் அப்படி உடை உடுத்துபவர்களுக்கு ஒரு உயர்வு மனப்பான்மை வந்து, சுடிதார் அல்லது சேலை உடுத்தியிருக்கும் பெண்களை தங்களை விட கீழ் அல்லது பலவீனமானவர்களாகவே நினைப்பார்கள். ” அந்த லேடியா? சேலைக்கட்டிக்கிட்டு பார்த்தா சாது மாதிரி இருக்காங்க அவங்களா?”, என என் அலுவலக இளம்தோழி ஒருத்தி, இன்னொரு பெண்ணை கிண்டல் செய்தாள். தைரியமும், தன்னம்பிக்கையும் சேலை அணிந்தால் வராது என இவர்கள் நம்புவதும் அறியாமையே.

எனக்கு வசந்தி என்ற ஒரு அக்காவைத் தெரியும். அவர் விடிகாலை 4 மணிக்கு டிவிஸ் 50 யில் எல்லார் வீட்டிற்கும் பால் ஊற்றி வருவது , பகல் முழுக்க வரிந்து கட்டிய சேலையில் தோட்ட வேலை பார்ப்பது, மாலையில் பிள்ளைகளை டியூஷன் விடுவதும் கூட்டிச் செல்வதும் , சந்தைக்கு காய்கறிகளை லோடு ஏற்றிச் செல்வதுமாக நாள் முழுவதும் காலில் சக்கரம் கட்டிப் பறப்பார். அவர் ஒருமுறை வீட்டருகே வந்த பாம்பை அடித்து, வெறுங்கையாலேயே அதனை எடுத்து குப்பை தொட்டியில் வீசினார். கார்கோ பேன்ட், க்ராப் டாப் அணிந்த பெண்களால், அவரைப் போல் தைரியமாக போகிற போக்கில் அனாயசமாக இதை செய்து விட முடியுமா என யோசித்துப் பார்க்கிறேன்.

Photo by Vignesh Moorthy on Unsplash

அதே போல் திருடன் ஒருவன் அவர் வீட்டுச் சுவரேறி வந்த போது, பயந்து அலறாமல் அவர் கம்பெடுத்து அடிக்கச் சென்றவுடன் அவன் பயந்து ஓடியதை நினைத்து வியந்திருக்கிறேன். அவர் எப்போதும் சேலைதான் கட்டியிருப்பார். என்னை விட 5 வயதுதான் அதிகமிருக்கும். ” சுடிதார்லாம் போட மாட்டீங்களா அக்கா?”, எனக் கேட்டதற்கு, ” எனக்கு என்னமோ சேலைதான் வசதியாயிருக்கு கண்ணு “, என்று சொல்வார்.

இவரைப் போல் ஊருக்கு ஊர் சேலை கட்டிய, சுடிதார் அணியும் வசந்திக்கள் உண்டு. ஒன்று அவர்கள் குடும்ப நிர்பந்தத்தால் அவ்வாறு அணிந்திருக்கலாம், அல்லது அவர்கள் விருப்பமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்களை சாதாரணமாக கணித்தால் நாம்தான் அறியாப் பிள்ளைகள்.

சேலை கட்டுவது பத்தாம்பசலித்தனம்; ஜீன்ஸ், டாப்ஸ் தைரியமான, புத்திசாலிகள் அணியும் உடை என்ற கருத்தை நீங்கள் வெளியிடும்போது, நம் ஊரில் இவற்றை அணியும் ஏனைய பெண்களின் தன்னம்பிக்கையை, தைரியத்தை நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள். எப்படி நவ நாகரீக உடைகள் அணிந்தால் மோசமாக சித்தரிக்கிறார்களோ, அவ்வாறு சேலை அணிபவர்களையும் சற்று குறைவாக எண்ணுவதும் குறுகிய மனப்பான்மையைத்தானே குறிக்கிறது? அவரவரக்கு வசதியான உடைகள் அவரவர் வகையில் தன்னம்பிக்கை அளிப்பவைதானே? இதில் சேலையென்ன, ஜீன்ஸ் என்ன? நம்முடைய attitude எதை உடுத்தினாலும் நம்மை அழகாக்கி விடும்!

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதிகள்

கட்டுரையாளர்

ஹேமி கிருஷ்

பெருந்துறையை சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் ,இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.