ஆண் பெண் உறவுச் சிக்கல்!

ஆண் பெண் உறவு என்றுமே சிக்கலானது. வளர்ப்பில் வராமல் இயற்கையாகவே இருபாலருக்கும் சில உணர்வுகள் வெவ்வேறாகத்தான் இருக்கும். அதை புரிந்து கொள்ளாமல் அடுத்தவர் எல்லைக்குள் செல்லும் போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன. அப்படி பரஸ்பரம் புரிந்து கொள்ளச் செய்ய பெற்றோர்கள் வாய்ப்பே தருவதில்லை. டீன் எஜ் வந்தவுடன் மகள்களை ஆண் பிள்ளைகளுடன் பேசுவதை கண்டிக்க ஆரம்பிக்கிறோம். அதையே அப்படியே தட்டாமல் செய்யும் நல்ல பிள்ளைகளுக்கு திடீரென கல்யாணம் செய்து வைத்து தங்கள் கடமை முடிந்ததாக ஆசுவாசமடைந்து விடுகிறார்கள் பெற்றோர்கள்.

எத்தனை எத்தனை திருமண பந்தங்கள் புரிதலின்மை, சந்தேகம், ஆற்றாமை, சச்சரவுகள் என கடந்துவருகின்றன. குடும்பங்கள் என்றால் அப்படித்தான் என சொல்கிறார்கள். சரி என அதையும் கேட்டு சகிப்புத்தன்மையோடு வாழ்வதற்குள் 10 வருடங்கள் முடிந்தே விடுகின்றன. அதற்குள் குழந்தைகள், கல்வி, பொருளாதாரம் என மற்ற பிரச்சனைகள் வந்துவிடுகின்றன, ஆனால் காணாத காதல் மட்டும் கண்ணிற்கு மீண்டும் எட்டுவதேயில்லை.

காதல் இல்லாமல்தான் எல்லாரும் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் எனச் சொல்லவில்லை. ஆனால் இங்கு பெரும்பான்மையைப் பற்றித்தானே பேச வேண்டியிருக்கிறது. பெரும்பாலான திருமணங்கள் அப்படித்தான் காதல் இல்லாமல் வாழ்கின்றன. விரைவில் சலிப்புறுகின்றன.

இளம் வயதில், காதல் எல்லாம் பெருமளவில் சினிமாவில் பார்ப்பதுதான். அவை காதல் பற்றி வேறொரு பிம்பத்தை உருவாக்கித் தந்துவிடுகின்றன. காதலுக்காக எதையும் செய்யும் ரோமியோக்கள், உருகி உருகி காதலித்து கவிதை எழுதுவது, சர்ப்ரைஸ் விசிட் கொடுப்பது, காதலி மனைவியானவுடன் 24 மணி நேரமும் அன்பு பாராட்டுவது, கர்ப்பமான மனைவிக்கு சிந்திய வெண்மணி சிப்புக்குள் முத்தாச்சு என பாடி, குடத்தை தூக்குவது முதல் சமைப்பது வரை காண்பித்து பெண்களை ஆராதிப்பது போல் ஒரு பிம்பத்தை சினிமாக்கள் கட்டமைத்துவிடுகின்றன. ஆண்களிடம் பழகாத பெண்கள் சினிமாவைப் போலவே நிஜத்தில் காதலனோ, கணவனோ அப்படித்தான் இருப்பார்கள் என முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் எதார்த்தம் நம்மைப் பார்த்து பல்லிளிக்கும்.

பெற்றோர்கள் பார்த்து மணம் செய்வித்த பல பெண்கள் இளமை காலத்தில் நாமும் காதலிக்கவில்லையே என சினிமாக்களைப் பார்த்து ஒரு நாளாவது நினைக்காமல் இருந்திருக்கமாட்டோம். ஆனால் என் தோழிகள் பலரும் காதல் மணம் செய்தவர்கள். அவர்கள் எல்லாரும் சொல்லி வைத்தாற் போல் ஒரே மாதிரி புலம்புவதை கேட்டதும்தான், காதல் திருமணமோ , பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எல்லாமே ஒன்றுதான் என புரிய ஆரம்பித்தது.

Photo by AMISH THAKKAR on Unsplash

மாநிலம் விட்டு மாநிலம் விரட்டி, விரட்டி காதலித்துவிட்டு, மணமானவுடன் கண்டுகொள்வதேயில்லை என என் தோழி கடந்த 15 வருடங்களாக புலம்பிக் கொண்டிருக்கிறாள். பெண்களுக்கு கணவன் அடிக்கடி தன்னை அழைத்துப் பேச வேண்டும், தங்களைப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும், அடிக்கடி சர்ப்ரைஸ் தர வேண்டும். கொஞ்சம் கணவன் கண்டுகொள்ளாமல் விட்டால், தன் மீது காதல் இல்லையோ என புலம்புவது இவற்றையெல்லாம் நான் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு பெண்களிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும் வார்த்தைகள்.

தன் கணவனோ, காதலனோ சினிமாவில் வருவது போல் ரொமான்டிக்காக இல்லை, என்பதுதான் பெண்களின் கவலையே. ஆனால் ஆண்களின் நிலைப்பாடுகள் வேறு மாதிரியானவை. அவர்களின் காதல் எப்போதும் வெளிப்படையாக இருப்பதில்லை. ” உன்னை காதலிக்கவும் கல்யாணம் செய்யணும்னுதான் அவ்வளவும் செஞ்சேன். . அதுக்காக 24 மணி நேரமும் உன் கூடவே பேசிட்டு இருக்க முடியுமா, ஆபிஸ் வேலையை யார் பாக்கிறது? சினிமால வர்ற மாதிரி மரத்தை சுத்தி டூயட்லாம் எப்பவும் பாடிட்டு இருக்க முடியாது, எப்பவும் உன்னை சுத்தி வர்றதுதான் காதல்னு நினைச்சுக்காத”, என்ற பதில்களைச் சொல்வார்கள்.

பெண்கள் சற்று உணர்ச்சிமிக்கவர்கள். காதல், காமம், அழகு எல்லாமே மனம் சார்ந்ததுதான். அதனால்தான் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், எவ்வளவு பெரிய கமிட்மென்ட் இருந்தாலும் அதற்கிடையே காதலும் செய்ய பெண்கள் தயங்குவதில்லை. விட்டுக் கொடுக்கவும் தயங்குவதுமில்லை. ஆனால் ஆண்களுக்கு வேலை என்றால் வேலை மட்டும்தான். காதலுக்கு நடுவிலும் வேலை அல்லது அவர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். தங்களுடைய மகிழ்ச்சி சார்ந்த விஷயங்களை பெண்ணிற்காக விட்டுத்தர மாட்டார்கள். அதனால்தான் அவர்களால் நிலையான மன நிலையுடன் இருக்க முடிகிறது. ஆனால் நமக்குள் நடக்கும் உணர்ச்சித் தடுமாற்றங்கள் வேண்டாததையெல்லாம் கற்பனை செய்ய வைக்கும். இந்த உணர்வுகள்தான் ஆண் பெண் இருவருக்குமே புரிதலை உருவாக்காமல் அவரவர் நியாயங்களை பேசி பேசி வாழ்க்கை முழுவதையும் ஏனோதானோவென கடப்பதற்கு காரணமாகிறது.

இந்தியாவில் விவாகரத்து வாங்கும் தம்பதிகள் வெறும் 1 சதவீதத்திற்கும் குறைவுதான். அப்படியெனில் மற்ற நாடுகளை விட, இந்தியாவில் மணமானவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? இல்லவே இல்லை. சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஏன் விவாகரத்து வாங்குவதில்லை? விவாகாரத்து வாங்காமலிருப்பதற்கு, ஒன்று, சமூகத்தில் அந்தஸ்து, இரண்டு, குழந்தைகள் எதிர்காலம், மூன்று, பெண்களின் பொருளாதார சார்பு ஆகிய மூன்று காரணங்களையும் மிக முக்கியமான காரணங்களாகச் சொல்லலாம்.

எல்லாரும் பிரிவதை மட்டும் நினைத்தால் இங்கு எல்லாருமே விவாகரத்து பெற்றிருக்கும் நிலை உண்டாகியிருக்கும். தனித்து வாழ்வதோ, சேர்ந்து வாழ்வதோ அவரவர் தனிப்பட்ட நிலை பொறுத்துதான் முடிவு எடுக்க வேண்டும். யாரோ ஒருவர் எடுத்த முடிவு மற்றவருக்கும் அதே போல் சாதகமாக இருக்கும் என நினைக்கக் கூடாது. நமக்கு ஒருவர் சரியில்லையென இரண்டாம் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இன்னும் மிக மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முதல் தவறையே இரண்டாவது வாழ்க்கையிலும் செய்பவர்கள் இங்கு அதிகம்.

உலகளவில் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளில், இந்தியா லிஸ்டிலேயே இல்லை. அப்படியெனில் நம்முடைய வாழ்க்கைமுறை கேள்விக்குள்ளாகிறதே? சிறு வயதிலிருந்தே இருபாலரையும் பேசவிடாமல், அதன் பின் சேர்ந்து வாழுங்கள் என்பதில் சிறிதாவது நியாயம் இருக்கிறதா?
2000 வரையே இப்படித்தானே இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது, “ஏய் அவகிட்ட பேசாத. அவ ஒரு மாதிரி. நேத்து கூட ட்யூஷன் சென்டர் பக்கத்துல பசங்க கூட பேசிட்டு இருந்தா .. நீ அவகிட்ட பேசினா உன்னையும் தப்பா நினைப்பாங்க”, என்று தோழிகள் சொல்வதைக் கேட்டு, அப்படி பையன்களிடம் பேசும் பெண்களை நாங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறோம். வீதியில் எங்களுக்கு பிடித்தமான ஆண்கள் இருந்தால், அவர்கள் பெயரைச் சொன்னால் கூட பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று அவர்களுக்கு பெண் பெயர்களிட்டு எங்களுக்குள் பேசிக் கொள்வோம்.

ஆனால் கல்லூரி படிக்கும் போது என் பார்வை மாறியிருந்தது. எங்கள் வீட்டருகே நிறைய கல்லூரி மாணவர்கள் இருந்தனர். அவர்களிடம் பழகும்போதுதான், ஆண்களிடமும் எந்த வித ஈர்ப்பில்லாமல் பேச முடியும் என்ற எண்ணம் தோன்றியிருந்தது. இன்று வரை அவர்களுடன் நட்பு புரிகிறேன். அதற்கு காரணம் அவர்களை பேதமில்லாமல் பார்க்கத் தொடங்கியதுதான்.

Photo by Ethan Johnson on Unsplash

அந்தப் புரிதலை என் மகளுக்கும் கடத்தினேன். எல்லாரிடம் சகஜமாக பேசும் அவளிடம், சமூகத்தில் எப்படியெல்லாம் ஆண்கள் இருக்கிறார்கள், இருப்பார்கள், அவர்கள் பழகுவதன் நோக்கம் என்ன என்பதெல்லாம் அவளுடைய 13 வயதிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். டீன் ஏஜில் இருக்கும் அவள் நண்பர்கள் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் என்னுடைய ஆலோசனையும் சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனாலும் இன்றும் நம்முடைய சுற்றம் மாறவே இல்லை.

பெங்களூரில் கொரோனா லாக்டவுன் காலத்தில் எங்கள் வீதியில் வசித்து வந்த, அவள் வயதையொத்த நான்கு நண்பர்கள் கிடைத்தார்கள். அந்த நான்கு பேருமே பையன்கள். இவள் ஒருத்தி மட்டுமே பெண். இவர்கள் ஐந்து பேரும் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள் ( இடைவெளி மற்றும் மாஸ்க்குடன் தான்), ஒரே மாதிரி நிறத்தில் உடை அணிவது , ஸ்னாக்ஸ் சாப்பிடுவது, அரட்டை அடிப்பது, விளையாடுவது என இருந்தார்கள். என் அபார்ட்மென்ட் முன்னேயே பேசிக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது நான் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் மற்றவர்களின் பார்வை வேறு மாதிரியாக இருந்தது.

என் உறவினர்களிடமும், அக்கம்பக்கம் இருப்பவர்களிடமிருந்தும் புகைச்சல்கள் வரத் தொடங்கின. ” ரோட்ல நின்னு பசங்க கூட சிரிச்சு பேசி கூத்தடிச்சிட்டு இருக்கா, இதெல்லாம் தப்புன்னு சொல்லி நீ புரிய வைக்க மாட்டியா. உன் கணவர் இங்கே இருந்தா இப்படியெல்லாம் விட்டிருப்பாரா?…” என்று அவர்கள் சொன்ன போது, ” என் மகள் அவள் நண்பர்களை என்னிடமும் அறிமுகப்படுத்தியிருக்கிறாள். அவள் மறைவாக சென்று யாருக்கும் தெரியாமல் பேசவில்லை. என் கண்முன்தானே பொதுவெளியில்தான் பேசுகிறாள். என் மகளை நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்று அவர்களின் வாயை அடைத்தேன். எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் யாரென தெரியாத ஆண், பெண் இணைந்து நண்பர்களாக சென்றால், கண்டும் காணாமல் இருக்கு சமூகம் இதே தெரிந்தவர்கள், உறவினர்கள் என்றால் நெற்றிக் கண்ணை திறந்து குற்றம் என எப்படி வினவுகிறது ? இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

சிறு வயதிலேயே ஆண் பெண் பேதமில்லாமல் பழகுபவர்களிடம் புரிதல்கள் மேம்படும். காதலிக்கும்போதோ, மணமான பின்னரோ உண்டாகும் பல வித ஏமாற்றங்களை தவிர்க்கலாம். குறிப்பாக இணையரை தேர்ந்தெடுப்பதில் தெளிவு இருக்கும்.

தொடரும்…

தொடரின் முந்தையை பகுதிகள்:

கட்டுரையாளர்

ஹேமி கிருஷ்

பெருந்துறையை சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் ,இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.