உன் சமையலறையில்…

பெண்கள் வீட்டைத்தாண்டி வந்து ஒரு நூற்றாண்டிற்கும் மேலாகிவிட்டது.  விவசாயம்  முதல்  விண்வெளி வரை பெண்கள்  தடம் பதிக்காத  துறையே இல்லை. ஆனால், இன்னமும் பெண்கள்தான் சமையலறைக்குள் இருக்கிறார்கள். கணவனின் கட்டாய செக்ஸை எதிர்கொள்கிரார்கள். குடும்ப வன்முறைக்கு பலியாகிறார்கள்.  பாலியல் வன்புணர்விற்கு ஆளாகிறார்கள்.   

பெண்கள் இப்போது உலக செய்திகளை நிறையவே கவனிக்கிறார்கள்.  பலவிஷயங்களை கற்கிறார்கள்.  சமூகவலைதளங்களில் அநீதிகளை அலசுகிறார்கள்.  எல்லாம் ஆகட்டும்…  வீட்டின் மற்ற வேலைகள் பற்றிக் கூட வேண்டாம்… உங்கள் வீட்டில் யார் தினந்தோறும் சமைக்கிறார்கள்?  பெண்கள்தானே?  ஏன் அது இயற்றப்படாத சட்டமாக இருக்கிறது ஒவ்வொரு வீட்டிலும்? இன்னமும் நாம் அடிப்படையையே மாற்றிக் கொள்ள சிரமப்படுகிறோ என்றால் போக வேண்டிய தூரம் இன்னுமிருக்கிறதே…

House vector created by pch.vector – www.freepik.com

“நான்  ஒரு நாள் சமைத்தால் நீ ஒரு நாள் சமை” என்பது மிகச் சில  வீடுகளில் வேண்டுமானாலும் ஒருவேளை ( ஒருவேளை) நடக்கலாம். வீட்டில்  அமர வைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு இது வெறும் கனவாகத்தான் இருக்கும். 

உலக அளவில் சமைப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில் இந்தியாவே முதலிடம் .  அதுவும் இந்தியப் பெண்களுக்கு  ஒரு வாரத்தில் 14 மணி நேரம் சமைப்பதிலேயே கழிகிறது . வெறும் சமையலுக்கே இவ்வளவு நேரமென்றால், வீட்டின் மற்ற வேலைகளை எல்லாம் கணக்கிலிட்டுப் பாருங்கள்.  பைசா சம்பளமில்லாமல்  உழைப்பைத் தரும் பெண்கள் கேட்பது சம்பளமில்லை. மதிப்பு மற்றும் அங்கீகாரம்.  பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்றாலே ஓர் இளக்காரம் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களே அப்படித்தான் நினைக்கிறார்கள். ‘வீட்டில் இருப்பவளுக்கு என்ன தெரியும்?’ என்ற கேள்வியே பதிலாகவே முடிந்துவிடும் அவலம் நமக்கு இன்னமும் வாய்த்திருக்கிறது.  சமையலில் உப்பு இல்லை, ருசி இல்லை, வீட்டை சரியாக பராமரிப்பதில்லை என ஆயிரம் குறைகள் சொல்லத் தெரியும் நாவிற்கு, அணுசரணையாகப் பேசத் தெரிவதில்லை.  

“தேசம் வீடுகளால் ஆனது. நீங்கள் உங்கள் இல்லத்தில் நீதியில்லாமலும், சமத்துவத்தை முழுமையாக அனுசரிக்காமலும் இருக்கும்வரை அவற்றை பொதுவாழ்வில் காணமுடியாது” என என்றோ பாரதி எழுதி வைத்த வரிகள் எத்தனை சத்தியமானவை என ஒவ்வொரு வீட்டிலும் காணலாம்.

Food photo created by senivpetro – www.freepik.com

என்னுடைய தோழி ஒருத்தி வீட்டிற்குச் சென்றிருந்தேன்.  அவளின் மூன்று வயது மகன் என் கைபிடித்து வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தான். “இது என் ரூம். இது அக்கா ரூம், இது அப்பா ஹால்” என்று விவரித்துக்கொண்டே போனான். “அப்போ உங்கம்மா ரூம் எது எனக் கேட்டதும் “ம்ம் என யோசித்து விடை கண்டுபிடித்தது போல  சமையலறையைக் காண்பித்தான்.  அவ்வளவுதான் நம்முடைய எண்ணங்கள்.  எத்தனை பெரிய வீடிருந்தாலும், சமையலறைதான் பெண்ணின் அறை. வெளியே  எங்கே என்ன எவ்வளவு வேலை செய்தாலும் பெண்தான் வீட்டில் சமைக்க வேண்டும். house wife என்பது home maker என்று வார்த்தையில்  மட்டுமே மாறியிருக்கிறது. யதார்த்தத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல்  இருக்கிறது.

‘இப்போதெல்லாம் சமைப்பதைத் தவிர மற்ற  வேலைகளை பெண்கள் எங்கு செய்கிறார்கள்; வேலைக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள்’ என பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால்,  எந்த வீட்டிலாவது பாத்திரம் கழுவ, வீடு பெருக்க ஆண்கள் வேலைக்கு வருவார்களா?  அதுவும் பெண்கள்தானே செய்கிறார்கள். 

எனக்கு சில நேரங்களில் சமையலறையை பார்க்கும்போது  தமிழ்ப் படங்களில் நடித்த பிரபல கேரள நடிகர் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வரும்.   ஒரு வார இதழில் அவருடைய  வீட்டைச் சுற்றிக் காட்டும் புகைப்படங்கள் இருந்தன, அதில் அவர்  வீட்டுச் சமையலறையை காண்பித்த அவர், தன் மனைவியை புகழ்வதாக நினைத்துக் கொண்டு,  “ஒரு பெண்ணின் குணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவள் சமையலறையை  வைத்திருக்கும் அழகைப் பார்த்தாலே போதும் ” என்று தன்னுடைய கருத்தையும் சொல்லியிருந்தார்  பெண்ணின் குணத்தைப் பத்துக்கு பத்திருக்கும்  சமையலறையோடு முடித்துவிடுகிறார் என்றால் எத்தனை பரந்த மனிதராக அவர் இருப்பார் என பல வருடங்கள் கழித்துதான் எனக்கு புரியவே ஆரம்பித்தது.  

‘நாங்கள் அலுவலகத்தில் வேலை செய்து வீட்டிலும் வேலை செய்ய வேண்டுமா?  பின் வீட்டிலிருக்கும் பெண்களின் கடமைதான் என்ன?’ என்று ஆண்கள் கோபப்படுவதில் நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது அல்லவா? அதே நியாயத்தின் அளவுகோலில் பெண்களையும் பார்க்க வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பமே.

வீட்டின் நிர்வாகத்தை பெண்கள் கையில் எடுத்துக் கொள்வதால்தானே ஆண்களால் நிம்மதியாக அலுவல் பணிகளை செய்ய முடியும், சம்பாதிக்க முடியும்.  ஆனால், வீட்டு வேலைகளை சல்லிக்காசுக்கும் குறைவாக மதிப்பிடும்போது எப்படி பெண்கள் அதனை எளிதாக கடந்துவிட  வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் எனப் புரியவில்லை.  உணவு சாப்பிடுவது அனைவருக்கும் பொது என்றால், அதனைத் தயாரிப்பதும் எல்லாருக்கும் பொதுதானே? சமையலறை வருவதே பாவம் என இன்றும் ஆண்கள் நினைக்கிறார்கள்.  “கிச்சன்ல தட்டு  எங்க இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது” எனப் பெருமையாகச் சொல்லும் ஆண்களை இன்றும் பார்க்கிறேன்.  நம் சமையலறையில்  ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கடுகு, கடலைப்பருப்பு எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால்,  மனைவி தெரியாத்தனமாக சாக்ஸ், கர்சீப்பை தேடிக் கொண்டிருந்தால், அவள் வாழவே தகுதியில்லாதது போல பேசுவார்கள். 

ஒரு விளம்பரம் அடிக்கடி கண்ணில் பட்டது. ஒரு பெண்ணுக்குச் சொந்தமாக பேக்கரி வைக்க வேண்டுமென ஆசை. ஆனால், பாத்திரம் கழுவுவது முட்டுக்கட்டையாக இருக்கிறது எனக் கவலைப்படுவார். இவ்வளவுதானா என பெரிய மனதுடன் அவளுடைய கணவன் பாத்திரம் துலக்கும் லிக்விட் கொடுத்ததும், வேகமாக வீட்டுப்பணியை முடித்துவிட்டு, அவர் தன்னுடைய பேக்கரியை வெற்றிகரமாக நடத்துகிறார்.  என்ன வேலையோ வியாபாரமோ செய்தாலும் வீட்டு வேலைகளை பெண்ணான நீதான் செய்ய வேண்டுமென மறைமுகமாக இப்படியான விளம்பரங்கள் உணர்த்துகின்றன. இதனால்  எதிர்கால சந்ததியினரின்  மனதில் விதைக்கப்படும் இந்தக்  களைகளை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நாமும் பிடுங்கிக் கொண்டிருக்க வேண்டுமோ, தெரியவில்லை. 

“உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா” என நாயகன் கேட்பதற்கு நாயகி கண்சிமிட்டி “நீ படிக்கும் வரையில் நான் கண்களா புத்தகமா?”  எனக் கேட்பார். இந்த பாடல் கேட்பதற்கு இனிமையாகத் தோன்றுகிறதுதான். ஆனால், அந்தப்  பாடல் வரிகள், ‘சமையலறை பெண்ணுக்குச் சொந்தம், படிப்பறை ஆணுக்குச் சொந்தம்’ என கோடிட்டுச் சொல்வதை மிகச் சாதரணமாக நாம் எடுத்துக் கொள்கிறோம். அங்குதான் பெண்ணடிமைத்தனமும் ஒலிக்கிறது. இங்கு எந்த பெண்ணும் சமையல் செய்வதை, வீட்டு வேலை செய்வதை குற்றமாக  கருதவில்லை. ஆனால், அதை ஒரு பாலினத்தை மட்டுமே செய்யச் சொல்வது குற்றமே. அந்த குற்றத்தைதான் காலங்காலமாக இங்கு போதிக்கிறார்கள்.

Food photo created by drobotdean – www.freepik.com

சில மாதங்கள் முன்பு  சில இந்திய குடும்பங்கள் சேர்ந்து ரிசார்ட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம். நாமே பாத்திரங்கள் கொண்டு சென்று  சமைத்து, விடுமுறையை கழிக்குமிடம். அப்போது முன்திட்டமிடலுக்காக பெண்கள் அனைவரும் ஒரு சிறிய மீட்டிங் போட்டோம். அப்போது நான்  ஒரு கருத்தை முன்வைத்தேன். “பெண்களே வீட்டிலும் சமைத்து அங்கேயும் போய் சமைப்பதற்கு எதுக்கு  ஹாலிடே என்ற பெயரில் செல்ல வேண்டும்? அதனால் ஒரு மாறுதலுக்காக ஆண்கள் சமைக்கட்டும்.  நாம் உதவி செய்யலாம். மிக வேகமாக முடித்துவிடலாம்” என்று கூறினேன். அத்தனை பேரும் ஆமோதித்து மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்கள். ஆனால், அங்கே சென்றதும் நடந்தது வேறு. பெண்கள் எல்லாரும் சமையலறையில் சென்று மளிகைச் சாமான்களை  பிரித்து வைத்து சமைக்க ஆரம்பித்தனர். ஆண்கள் செய்யட்டும் என நான் சொன்னபோது, “ஐய்யோ அவங்க வந்து சமைச்சு சாப்பிடறதுக்குள்ள நாமளே செஞ்சுடலாம்” எனச் சொல்லி,  பிடிவாதமாக இருந்தார்கள். நான் திரும்பவும் சொல்லியும் மற்ற பெண்கள் கேட்கவில்லை. அந்த மூன்று நாட்களும்  பெண்களுக்கு சமையலிலேயே முக்கால்வாசி  நேரம் கழிந்தது. ஆண்களுக்கு குடி, சீட்டு, அரட்டைக் கச்சேரி  எனக் கழிந்தது.

என்ன செய்வது? மாற்றம் முதலில் பெண்களுக்குள்ளே வர வேண்டும். நாம் தட்டாமல் கதவை அவர்களே திறப்பார்கள் என காத்துக் கொண்டிருப்பதுதான் இருப்பதிலேயே பெரிய தவறு. சமையலறை பெண்களுக்கான சொத்து அல்ல என்பதை முதலில் பெண்கள் உணர வேண்டும். 

(தயங்காமல் பேசுவோம்…)

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் – இரண்டாம் பகுதி – வேலை 
இங்கே படிக்கலாம்.

கட்டுரையாளர்:

ஹேமி க்ருஷ்
''நாம் மாறாமல் இங்கு எதுவும்  நம்மைச் சுற்றி மாறாது என்பதுதான்  நான் கற்றுக் கொண்ட முதல் பாடம். கல்லூரி காலம் வரை  எதுவுமே தெரியாது என்பது பெருமையில்லை என என்னுடைய பல  அனுபவங்களில் தெரிந்து கொண்டேன். 
இங்கு  சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே ஒரு பெண் போராட வேண்டியிருக்கிறது. இதையும் தாண்டி என்னவெல்லாம் செய்ய முடியும் என நம்மைச் சுற்றி ஒவ்வொரு பெண்ணும் நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறாள்.  வலிகளை மறைத்து, சிரித்தபடி  முழம் அளந்து பூவை விற்கும்  பூக்கார பெண்மணி முதல்,  செவ்வாய் கிரகத்தில்  விண்கலம் இறக்கிய ஸ்வாதி மோகன் வரை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் எல்லாவிதமான தடைகளையும் வென்று சாதிப்பவர்கள்தாம்.  
இப்படி நான் கண்டுணர்ந்தவற்றை  உங்களுக்கும் தெரியப்படுத்த விருப்பப்படுகிறேன். ஏனெனில், சுயபரிசோதனை மட்டுமே நம்மை எந்த இடத்தில் எதுவாக நிற்கிறோம் எனத் தெரியப்படுத்தும்'' என்று சொல்கிறார் எழுத்தாளர் ஹேமி கிருஷ். 
பெருந்துறையை சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார். மேலும் நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.