வேலை

என் நெருங்கிய உறவினரான ஒரு முதிய பெண்மணிக்கு பென்ஷன் வருகிறது. கணிசமான சேமிப்பை வைத்திருக்கிறார். அவருக்கு பிடித்த இடங்களுக்கு செல்கிறார்.  நினைத்தால் உறவினர் வீட்டுக்கும், அவ்வப்போது குழுக்களுடன் சேர்ந்து  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுலாவும்  செல்கிறார்.  அதே வயதிலுள்ள மற்றோர் உறவினர் பெண்மணி  மகன் வீட்டிலும், மகள் வீட்டிலும் மாறி மாறி இருந்துகொண்டு,  பணம் காசுக்கு பெற்ற பிள்ளைகளை நம்பும் நிலைமையில் இருக்கிறார். எங்காவது விசேஷத்தில் உறவினர்களைக் கண்டால் தன்னுடைய வேதனையை பகிர்ந்துகொண்டு அழுகிறார்.

முதலாவது வகை பெண்கள் நம் நாட்டில் குறைவு. ஆனால் இரண்டாவது வகைப் பெண்கள் ஏராளம். இதற்கு முதல் காரணம் என்ன? பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பது.  

Woman vector created by freepik – www.freepik.com

இந்தியாவில் வெறும் 19.9 சதவிகித பெண்களே வேலைக்குச் செல்கிறார்கள். அதாவது ஐந்தில் நான்கு பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் நுழைந்திருந்தாலும் ஒப்பீட்டு அளவில் வேலைக்குச் செல்லும் பெண்களின்  எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

 வீதிக்கு வீதி ஊருக்கு ஊர் பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்கிறார்கள். பெண்கள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் ஆனால், எத்தனை குடும்பங்கள் பெண்களை வேலைக்கு அனுப்ப தயாராக இருக்கிறார்கள்?   

பல்கலைக்கழகத்தில் தங்க மெடல் வாங்கிய என்  நெருங்கிய தோழியிடம், ‘இப்போது என்ன செய்கிறாய்’ என கேட்டால்,  குடும்பத்தைக் கவனிப்பதாகச் சொல்கிறாள். இன்னொரு தோழி  PHD முடித்து பல வேலைவாய்ப்புகள் வந்தாலும், உள்ளூரிலேயே வேலை பார்க்க வேண்டும் என கணவன் சொன்னதால் வேறு வழியின்றி  சொற்ப சம்பளத்தில்  ஆசிரியர் பணிக்குச் செல்வதாக ஓரிரு மாதங்களுக்கு முன் என்னிடம் புலம்பினாள்.  

கணவன் சுமாராகவே படித்திருந்தாலும் வேலை அனுபவத்தால் (திறமையும்தான்) முன்னுக்கு வந்து பல மடங்கு சம்பளம் வாங்குவார்.   மனைவி பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக வந்தாலுமே , குடும்பத்தைக் கவனிக்கக்கூடிய வகையில், எந்த வேலை கிடைக்கிறதோ அதற்கே போக வேண்டும்.

“வேலையை விட்டுவிட்டு வீட்டைப் பார்த்துக்கோ. இல்லைனா  என்னைவிட அதிகம் சம்பளம் வாங்கு. அப்போ நான் வீட்ல இருக்கேன். நீ வேலைக்கு போ” என்று கணவன் செய்யும்  வாக்குவாதங்களை நிறைய குடும்பங்களில் காணலாம்.


வேலை செய்யும் இடத்தில் இருக்கும் ஆண்-பெண் பாகுபாடு பற்றி யாருக்கும் அக்கறையில்லை.   ஒரே தகுதி, ஒரே பதவி, ஒரே வயது என்றாலும்  ஆணைவிட  பெண்ணுக்கு 25-30  சதவிகித சம்பளம் குறைவு.  இந்தப் பாகுபாடு உலகம் முழுக்க இருந்தாலும்,  இந்தியாவில் மற்ற நாடுகளைவிட  ஆண்- பெண் சம்பள இடைவெளி  அதிகம்.  தன் குடும்பம்  மட்டுமென்றால் பரவாயில்லை, சமூகமே சேர்ந்து சதி செய்தால் என்ன செய்வது? 

ஓரிரு காலகட்டங்களில் பெண்களே  வேலை வேண்டாமென முடிவெடுத்து வேலையை விட்டு வீட்டை பார்த்துக் கொள்ளும்படியான சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள். அவர்களே பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்களே சமைக்க வேண்டும், அவர்களே  வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும். எத்தனையோ பெண்கள் ஆரம்பத்தில் சூப்பர் உமனாக எல்லாவற்றையும் செய்தாலும், போகப்போக எல்லா திசைகளில் வரும் நெருக்கடிகளால் ‘குடும்பமா? வேலையா?’  என யோசித்து வேலையை விட்டு விடுகிறார்கள். அதற்குப் பின் பிள்ளைகள் வளர்ந்து, “உனக்கு ஒண்ணுமே தெரியாதும்மா. உனக்கென்ன ஜாலியா வீட்ல இருக்க. இதப் பத்தி ஏதாவது தெரிஞ்சு வச்சிருக்கியா?” என இளக்காரப் பேச்சுகளையும் வாங்கிக் கொள்வார்கள்.

People vector created by pch.vector – www.freepik.com

பெண்கள் வேலைக்குச் செல்ல விருப்பமிருந்தாலும், போகாமல் இருப்பதற்கு  பல சூழ்நிலைகள் காரணமாக இருக்கின்றன. கர்ப்ப காலம், குழந்தைப் பேறு காலம்,  அதன் பின் குழந்தையை கவனிக்க வேண்டிய சூழல் என எல்லாம் சேர்ந்து வேலைக்குப் போவதையே தள்ளி வைக்கின்றன.  இவை தவிர ஒரு பெண்  வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்…  போதிய அனுபவம் இல்லை,  வேலையில் ஏற்படும் இடைவெளிகள், வயது அதிகம் ஆகிவிட்டது அல்லது குறைவான சம்பளம் என பல ஓட்டைகள்…


இந்தியாவிலாவது பெண்களுக்கு அக்கம்பக்கம் பழகும் வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியப் பெண்களின் நிலைமையை பார்த்து நான் அதிர்ந்தேன்.  ஒரு காலத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்த பெண்கள், இங்கு யாருடைய உதவியும் இல்லாமல் போகவே, தனியாக குடும்பத்தைக் கவனிக்கவேண்டி வேலையை விட்டவர்கள் கணக்கில் அடங்காது.   அக்கம்பக்கம் பேச இயலாமல், வேலைக்கும் செல்ல இயலாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்கள்.  தனிமையிலேயே உழல்வதால் பல பெண்கள் மன அழுத்தத்தில் இருப்பதை கண்கூடாக காண்கிறேன். என்னிடமே பலர் கூறியிருக்கிறார்கள். சிலர் அதிகமாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள், சிலர் பேசுவதையே நிறுத்தியிருக்கிறார்கள்.

வெளி நாடுகளில் முழுக்க கணவனையே நம்பி இருக்கவேண்டிய அவலமும் உண்டாகிறது.  நம் நாடு போல நினைத்த மாத்திரம் நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியாது.  வெளிநாட்டில் வாழும் பெரும்பாலான ஆண்கள் அவர்களுக்குப் பிடித்த மாதிரி மகிழ்ச்சியாக இருக்க தங்களுக்குத் தேவையானதை எல்லாம் செய்து கொள்கிறார்கள். ஆனால், 24 மணி நேரம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மனைவியைப் பற்றியோ, அவர்களின் விருப்பு வெறுப்புகளைப் பற்றியோ அவர்கள் துளியும் அக்கறைப்படுவதேயில்லை. எப்போதாவது  ஊர் சுற்றிக் காட்டுவதோடு தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.

அகதிகளுக்கும் அடிமைக்கும் இடைப்பட்ட வாழ்வு வெளிநாட்டில் இருக்கும் பெண்களின் வாழ்வு.  

என் தோழி அவளுடைய தோழி பற்றி சொன்னது இது… அமெரிக்காவில் நல்ல நிலையில் இருக்கும் குடும்பம்.  அந்தத் தோழியும் வேலைக்குச் செல்கிறாள். ஊரில் அந்தப் பெண்ணின் அப்பா வீடும் செல்வாக்கானது. வருடாவருடம் பெரிய மளிகை, பலகார பார்சல் அமெரிக்காவுக்கு வரும். இவ்வளவு வசதி இருந்தும் வேலைக்குச் செல்ல வேண்டுமா என எல்லாருக்குமே கேள்வி உதிக்கும். அப்படி கேட்பவர்களிடம் அந்தப் பெண் சொல்லும் பதில் அவளுடைய அப்பா அவளுக்கு சொன்ன அறிவுரைதான்.

“என்ன வசதி இருந்தாலும் வேலைக்குப் போறதை மட்டும் விட்டுடாத. அதுதான் பெண்பிள்ளைங்களுக்கு அஸ்திவாரம் மாதிரி. எந்த சூழ்நிலையிலும் அது காப்பாற்றும்” என அப்பா சொல்வாராம்.

அடிப்படையில் இந்த வார்த்தைகள் எத்தனை முக்கியமானவை என கணவன் வீட்டில் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு புரியும். 

இப்படி சொல்லி வளர்க்கும் அப்பா, அம்மாக்கள் எத்தனை பேர்? படிக்கும் போதே “எப்படியும் நாளைக்கு புருஷன் வீட்டுல பாத்திரம் கழுவத்தான் போற. எதுக்கு அவ்ளோ செலவு செஞ்சு படிக்கனும்” என வீதிக்கு நாலு அப்பாக்களாவது நம் ஊரில் இருப்பார்கள். இன்னும் கௌரவத்துக்குத்தான் படிப்பு என்றே பல அப்பாக்கள் நினைக்கிறரகள். இந்த அறியாமை இருளான வீட்டில் ஏற்றப்படாத விளக்கு போல. எதற்கும் பிரயோஜனமில்லை. 

‘Crazy Rich Asians’ ஒரு அமெரிக்க படம் ஒன்றை பார்த்தேன்.  அதில் வரும்  சீன நாயகி  நியூயார்க்கில் பொருளியல் விரிவுரையாளராக இருப்பாள். ஒற்றைப் பெற்றோரான அவளின் அம்மாவால் வளர்க்கப்பட்ட சாதாரண நடுத்தர குடும்பத்துப் பெண்.  ஒரு சீன இளைஞனைக் காதலிப்பாள். காதலனுடன் அவனுடைய குடும்பத்தைச் சந்திக்க சிங்கப்பூரில் இருக்கும் அவன் வீட்டுக்க்ச்  செல்வாள். அது வீடல்ல; அரண்மனைப் போன்ற மாளிகை. அங்கு வந்து பார்த்த பின்தான் தெரியும், சிங்கப்பூரிலேயே அவன் குடும்பம் மிகப்பெரிய பாரம்பரியமிக்க பணக்கார குடும்பம் என்பது.

நாயகனின் அம்மாவுக்கோ  நாயகியின் சாதாரணப் பின்னணி,  அவள் வளர்ந்தவிதம், கணவனை பிரிந்து வாழ்ந்த  நாயகியின் அம்மாவின் மோசமான கடந்த காலம் என எதிலுமே திருப்தி இல்லை.  தன் மகனை மணம் செய்ய வேண்டுமானால் ஒரு நிபந்தனைக்கு கட்டுப்பட வேண்டும் என்று சொல்வாள். தங்களுடைய குடும்பத்தில்  மருமகளாக வேண்டுமென்றால், வேலையை விட வேண்டும். அது தங்கள் கௌரவத்துக்கு இழுக்கு என்று சொல்வாள். தன்னுடைய அம்மா கடினப்பட்டு படிக்க வைத்த படிப்பினால் வந்த வேலையை உதற நாயகிக்கு மனமில்லை.  இறுதியில்  தனக்கு வேலைதான் வேண்டும், தனி ஆளாக தன்னை நல்ல பண்புடன் வளர்த்த தன் அம்மா  எத்தனை உன்னதமானவர் என்று சொல்லி அவனைப் பிரியும்போது அந்த குடும்பத்தில் உண்டாகும் மனமாற்றமே படத்தின் இறுதிக் காட்சி. 

இந்தப் படத்தில்  காமெடியுடன் கலந்து சொன்ன நல்ல கருத்து… கணவன் எத்தனை வசதிபடைத்தவனாக இருந்தாலும் பெண் என்பவள் கணவனை சார்ந்து இருக்கக் கூடாது என்பதுவே. உண்மைதான்…  

கணவனின் குடும்ப கௌரவத்தைக் காப்பது ஒரு பெண்ணின் வேலையல்ல. அதற்காக அவள் பிறக்கவுமில்லை. அவரவருக்கு கௌரவம் யாருடைய அதிகாரமுமில்லாமல் சுய மரியாதையுடன் இருத்தலே.


எவ்வகையிலும், இந்தச் சமூகத்தின் நிர்பந்தத்தினால்  இறுதியில் பாதிக்கப்படுவது பெண்கள்தாம். தனது வாழ்நாள் முழுவதும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களின் வாழ்க்கை வயதானபின்  துன்பகரமாக மாறுகிறது. வயதான பின் கணவனின் காலத்துக்குப் பின் அல்லது இளமையிலேயே கணவன் இல்லாமல் போனால் என்னாவோம் என்று என்றைக்காவது யோசித்து பார்த்திருக்கிறோமா? 

அரசு வேலை, பென்ஷன்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.  இறுதிக் காலம் வரை வாழ்வதற்கான வங்கிச் சேமிப்பு இருக்கும்படியான  நிலை வேண்டும். அதற்கு பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது தொழில் செய்ய வேண்டும். அதற்கு அவளின் குடும்பம் ஒத்துழைக்க வேண்டும். அல்லது அவள் உழைப்புக்குத் தகுந்த கணிசமான பணம் வங்கியில் இருக்கும்படியான வசதி வேண்டும்.  அதைவிட்டு ‘தியாகச் செம்மல்’, ‘அன்பின் உருவம்’, ‘காலையில் வேகமெழுந்து இரவில் தாமதமாக தூங்கச் செல்லும்  ஜீவன் அம்மா’ போன்ற  வாட்ஸப் பகிர்வுகளின் ஜிகினா வரத்தைகளுக்கு மயங்கி அவற்றின் இலக்கணமாக வாழ்ந்து  போவதால்  நீங்கள் இழப்பது உங்களின் சுயம் மட்டுமல்ல; வாழ்ந்த காலமும்தான். காலம் இனி திரும்ப வராதே, நாம் நினைத்தபடி திருத்திக் கொள்ள…

வளரும் வரை அப்பா, மணமான பின் கணவன், அதற்குப் பின் பிள்ளைகள் என அவள் எல்லா நிலைகளிலும் தனது தேவைக்கு மற்றவர்களிடம் கையேந்தும் நிலையையே இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது.   ஆனால், அது ஒருபோதும் கூடாது என ஒரு வைராக்கியம் வர வேண்டும்.  நீரோட்டத்தின் போக்கை அறிந்து  நீச்சலடிக்க வேண்டும்.  அதே நேரம் எதிர் நீச்சலும் பழக வேண்டும். எப்படிப் பார்த்தாலும்  இங்கு நீச்சலடிப்பது முக்கியம். ஆகவே, இப்படியான சமூகம் இருக்கிறதே, குடும்பம் இருக்கிறதே என ஆதங்கப்படுவதற்குப் பதிலாக, இங்கு எப்படியெல்லாம் நம் இருப்பை தக்க வைக்கலாம் என யோசிப்பதே நாம் எடுக்க வேண்டிய தீர்க்கமான முடிவு. எனவே, நாளைய நாளுக்கு இன்றைய நாள் விதை என்பதை மறந்துவிட வேண்டாம்!

(தயங்காமல் பேசுவோம்…)

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் – முதல் பகுதி உன் சமையலறையில்… இங்கே படிக்கலாம்.

கட்டுரையாளர்:

ஹேமி க்ருஷ்
''நாம் மாறாமல் இங்கு எதுவும்  நம்மைச் சுற்றி மாறாது என்பதுதான்  நான் கற்றுக் கொண்ட முதல் பாடம். கல்லூரி காலம் வரை  எதுவுமே தெரியாது என்பது பெருமையில்லை என என்னுடைய பல  அனுபவங்களில் தெரிந்து கொண்டேன். 
இங்கு  சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே ஒரு பெண் போராட வேண்டியிருக்கிறது. இதையும் தாண்டி என்னவெல்லாம் செய்ய முடியும் என நம்மைச் சுற்றி ஒவ்வொரு பெண்ணும் நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறாள்.  வலிகளை மறைத்து, சிரித்தபடி  முழம் அளந்து பூவை விற்கும்  பூக்கார பெண்மணி முதல்,  செவ்வாய் கிரகத்தில்  விண்கலம் இறக்கிய ஸ்வாதி மோகன் வரை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் எல்லாவிதமான தடைகளையும் வென்று சாதிப்பவர்கள்தாம்.  
இப்படி நான் கண்டுணர்ந்தவற்றை  உங்களுக்கும் தெரியப்படுத்த விருப்பப்படுகிறேன். ஏனெனில், சுயபரிசோதனை மட்டுமே நம்மை எந்த இடத்தில் எதுவாக நிற்கிறோம் எனத் தெரியப்படுத்தும்'' என்று சொல்கிறார் எழுத்தாளர் ஹேமி கிருஷ். 
பெருந்துறையை சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார். மேலும் நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.