93-வது ஆஸ்கர் விருதுகளில் ‘நோமட்லேண்ட்’ (Nomadland) திரைப்படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் க்ளோயி ஷாவ் (Chloe Zhao). கேத்ரின் பிகிலோவுக்குப் பிறகு, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்ற இரண்டாவது பெண் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற முதல் ஆசியப் பெண் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. அமெரிக்க வாழ் சீனரான க்ளோயி ஷாவின் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளிவந்தது முதல் திரைப்படம். நோமட்லேண்ட் இவரின் மூன்றாவது திரைப்படம். 39 வயது க்ளோயி ஷாவ் ஐந்தே ஆண்டுகளில் மூன்றாவது திரைப்படத்தில் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார்!

“நீங்கள் என்ன டின்னர் சாப்பிட்டீர்கள் என்பதிலிருந்து என் ஆய்வுகளைத் தொடங்கலாம். இன்று இரவு என்ன டின்னர்? நீங்கள் உண்மையில் என்ன சாப்பிட்டீர்கள்? அல்லது என்ன சாப்பிட்டதாக என்னிடம் சொல்வீர்கள்?”, இப்படித்தான் அமெரிக்காவின் பைன் ரிட்ஜ் ரிசர்வேஷன் (பூர்வகுடிகளுக்கென அமெரிக்கா ஒதுக்கியுள்ள வாழிடப் பகுதி) ஒக்லலா லகோடா பூர்வகுடிகளுக்கான குடியிருப்பு (Oglala lakota – லகோடா பூர்வகுடிகளின் ஏழு குடிகளில் ஒன்று ஒக்லலா) பகுதியில் சுற்றித் திரிந்து அமெரிக்க பூர்வகுடிகளிடம் பேட்டிகள் எடுக்கத் தொடங்கினார் க்ளோயி ஷாவ்.

“மற்றவர்களைப் போல நகரங்களில் வாழ்ந்து கொண்டு எப்போதாவது இங்கே வந்து சென்று கொண்டிருந்தால், என்னிடம் இந்த மக்கள் வழக்கமாக மற்றவர்களிடம் சொல்லும் குடிப் பிரச்னை, மனப் பிறழ்வுப் பிரச்னை போன்றவற்றையே பேசி இருப்பார்கள்”, என்றும் சொல்கிறார். அங்கேயே தங்கிய க்ளோயி, அந்தப் பகுதி பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்த களப்பணியின் விளைவே அவரது முதல் படம் Songs my brothers taught me. சீனப் பெண்ணான க்ளோயி, அமெரிக்க பூர்வகுடிகளின் கதைகளையே தொடர்ச்சியாக தன் திரைப்படங்களுக்கு களமாக அமைக்கிறார். ஆண்டுக்கணக்காக அவர்களை ஆய்வுசெய்து சுற்றித் திரிந்து படமாக்குவதால் அவரது கதைகள் மண் மணம் மாறாமல் உண்மை பேசுகின்றன.

இணையர் ரிச்சர்ட்ஸ், நடிகை மக்டர்மன்டுடன் நொமேட்லேண்ட் படப்பிடிப்பில் க்ளோயி

1982-ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் ஷாவ் யுஜி என்ற எஃகு நிறுவன உயர் அதிகாரியின் மகளாக ஷாவ் திங் (Zhao Ting) பிறந்தார். ஷொகங் குழுமத்தின் உயர் அதிகாரியான தந்தை பின்னாளில் ரியல் எஸ்டேட் துறையில் கோலோச்சினார். அவரது தாய் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். சிறு வயதில் துறுதுறு சேட்டையும், படிப்பில் நாட்டமில்லாதவருமாக இருந்த ஷாவ், ஜப்பானிய காமிக் மற்றும் கிராஃபிக் நாவல்களான ‘மாங்கா’ மேல் பெரும் காதல் கொண்டிருந்தார். மைக்கேல் ஜாக்சன் மீதும், வொங் கர் வை படங்கள்மீதும் அதே காதல் உண்டு.

14 வயதில் ஷாவின் வாழ்வில் பெரிய மாற்றம் வந்தது. மகளுக்கு நல்ல கல்வியைத் தர விரும்பிய தந்தை அவரை இங்கிலாந்தின் உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்தார். 14 வயதில் ஆங்கிலமே பேசத் தெரியாத க்ளோயி-தான் இன்று தன் ஆங்கில ஆஸ்கர் உரையில் உலகைக் கட்டிப் போட்டிருக்கிறார்.

2000-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தன் பள்ளிப்படிப்பை முடிக்க வந்து சேர்ந்தார் க்ளோயி. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் நெருக்கடி மிகுந்த கொரியாடவுன் பகுதியில் அவரும் அவரது சகோதரியும் குடியேறினார்கள். க்ளோயியின் அமெரிக்கக் கனவு இங்கே தான் உடைந்து போனது. “நான் சினிமாக்களில் பார்த்த அமெரிக்கா அது இல்லை என்பது புரிந்தது”, என்று சொல்பவர், அங்கிருந்தே தன் வாழ்க்கை மாறத் தொடங்கியது என்று சொல்கிறார்.

மவுன்ட் ஹோல்யோக் கல்லூரியில் அரசியல் அறிவியல் கற்பதற்காக சேர்ந்தார். அங்கு படித்த நான்கு ஆண்டுகளில் தனக்கு அரசியல் சுட்டுப் போட்டாலும் வரப்போவதில்லை என்று உணர்ந்துகொண்டார். பார் ஒன்றில் பணியாளாகச் சேர்ந்தார். சின்னச் சின்ன வேலைகளில் மனம் லயிக்கவில்லை. சட்டதிட்டங்களை விட மக்களையே தான் அதிகம் நேசித்ததை அவர் உணர்ந்து கொள்ள இந்த காலம் போதுமானதாக இருந்தது. தன்னை Jack of all trades என்று கண்டுகொண்டார். எந்த நுண்திறனும் இல்லாமலேயே சினிமா இயக்குநர் ஆகலாம்; படத்துக்கு யார் யார் எல்லாம் தேவை என்பது புரிந்தால் போதும் என்று எண்ணியவர், நியூ யார்க் பல்கலைக்கழகத்தின் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார்.

“ஆர்ட்ஸ் படித்த நீ ஏன் சினிமா கல்லூரிக்கு வந்தாய்?”, என்ற தன் பேராசிரியர் ஸ்பைக் லீயின் கேள்விக்கு, “படித்து முடித்தபின் என்ன செய்வது என்று தெரியவில்லை; இங்கு சேர்ந்தேன்”, என்று பதில் சொன்னவர் க்ளோயி! ஆனால், இங்குதான் இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியைச் சேர்ந்த ஜோஷ்வா ஜேம்ஸ் ரிச்சர்ட்ஸை சந்தித்தார். “அவர் சிக்கலானவர்; தீவிரமானவர். அவர் வயதை ஒட்டிய திரைத்துறை மாணவர்கள் தங்கள் புராஜெக்ட்களைப் பற்றிப் பேசிக்கொண்டும், திட்டம் தீட்டிக்கொண்டும் இருந்த வேளையில் அவர் கேமராவுடன் சாலையில் இறங்கியிருந்தார். அதுவே என்னை அவர்பால் ஈர்த்தது”, என்று சொல்லும் ரிச்சர்ட்ஸ், தான் இன்றுவரை வெளியான க்ளோயியின் மூன்று திரைப்படங்களுக்கும் கேமராமேன்; திரை அசிஸ்டன்ட் மற்றும் லைஃப் பார்ட்னர். தன் இரண்டு நாய்கள், கோழிகள் மற்றும் ரிச்சட்சுடன் வசித்து வருகிறார் க்ளோயி.

க்ளொயியின் முதல் படம் (Songs my brothers taught me), கதாநாயகன் ஜான் ரெட்டி

முதல் படமான Songs my brother taught me படத்துக்கான நிதிக்கு விண்ணப்பித்துவிட்டு மூன்று ஆண்டுகள் காத்திருந்தது இந்த ஜோடி. களத்தில் தகவல்கள் தேடிக்கொண்டும், திரட்டிக்கொண்டும் இருந்தார்கள். மூன்றாண்டுக்குப் பின் ஒரு நாள் திடீரென நிதியுதவி கிடைக்கும் தகவல் வர, தம்பதி பைன் ரிட்ஜுக்கே நேரடியாகச் சென்று படத்தை உடனே தொடங்குவது என்று உணவகத்தில் பேசிக்கொண்டார்கள். வீடு திரும்பிப் பார்த்தால், வீடு சூறையாடப்பட்டு அவர்கள் கேமரா, லாப்டாப் உள்ளிட்ட அத்தனை பொருள்களும் சூறையாடப்பட்டிருந்தன. “ஒரு விதத்தில் அந்த சம்பவம் என்னை விடுதலை செய்தது. பணம், பொருள் மேலான நாட்டத்தை முற்றும் ஒதுக்க வழிசெய்தது”, என்று சிரித்தபடி சொல்கிறார் க்ளோயி.

முதல் படத்தின் ஹீரோ க்ளோயி பணியாற்றிய ரிசர்வேஷன் பகுதி பள்ளி முன்னாள் மாணவர். பள்ளி ஆண்டுவிழா மலரில் அவரது புகைப்படத்தைக் கண்ட க்ளோயி, ஜான் ரெட்டியை உடனே தன் படத்தின் ஹீரோ ஆக்கிவிட்டார்! அவரது படங்களில் பெரும்பாலும் பெரிய நடிக நடிகையர் யாரும் கிடையாது. அங்கங்கே தான் சந்திக்கும் எளிய மனிதர்களை நடிகர்களாக்கி விடுவார். நோமட்லேண்ட் படத்தில் கிட்டத்தட்ட நூறு வீடற்ற நாடோடிகளை நடிகர்களாக்கிவிட்டார் க்ளோயி!

பூர்வகுடிகளுக்கு ரிசர்வேஷன் பகுதி எப்படி மீளவே முடியாத சிறையாக இருக்கிறது என்பதையும், கடன், குடி என செக்குமாடுகள் போல அவர்கள் அதையே சுற்றி வருவதையும் உள்ளார்ந்த நேர்மையோடு அவரது முதல் படம் பதிவு செய்தது. சன்டான்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட படம் வெற்றிகரமாக மக்களின் ஆதரவு பெற்று, கான் திரைப்பட விழாவுக்கும் சென்றது. க்ளோயி என்ற பெயரை முதன்முதலில் 2015-ம் ஆண்டு உலகம் இப்படித்தான் கேள்விப்பட்டது!

ரைடர் படத்தில் பிராடி ஜான்ட்ரோ

மகளின் திறமை மேல் நம்பிக்கை கொண்ட தந்தை ஷாவ் தயாரிக்க, 2017-ம் ஆண்டு க்ளோயியின் அடுத்த படமான Rider தயாரானது. மீண்டும் டகோடா பகுதி கதையையே தேர்வு செய்த க்ளோயி, இளம் கவ் பாய் ரைடர் ஒருவனது வாழ்க்கையை தத்ரூபமாகப் படமாக்கினார். அதன் கதாநாயகன் பிராடி ஜான்ட்ரோவை டகோடாவில் நடைபெற்ற ரோடியோ போட்டி ஒன்றில் கண்டெடுத்தார். குதிரைகளுக்கு பயிற்சி தந்துகொண்டிருந்த பிராடி அசப்பில் ஹீத் லெட்ஜரை போல் தெரிந்தார். அதற்கு முந்தைய ஆண்டுதான் குதிரை ஒன்று தலையில் உதைக்க, கோமா வரை சென்று மீண்டு வந்திருந்தார் பிராடி. அவரது உண்மை அனுபவத்தைக் கேட்டதும், உயிரோட்டமாக அந்த பாத்திரத்தில் நடிக்க பிராடியால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்து அவரை தன் ரைடர் பட ஹீரோவாக்கினார்.

படத்தின் கதையை தெரிந்து கொண்ட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அதை கான் விழாவுக்கு அனுப்பியது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அந்த ஆண்டு ஃபேவரிட் படங்கள் பட்டியலில் ரைடர் இடம் பிடித்தது. ஜெசிகா ப்ரூடர் என்ற நாவலாசிரியர் எழுதிய நோமட்லேண்ட் நாவலுடன் க்ளோயியை படத்தின் கதாநாயகி மக்டர்மான்ட் அணுகினார். ஏற்கனவே ‘வேன் லைஃபர்ஸ்’ என்ற வேனில் பயணித்து வாழும் முதிய நாடோடிகள் பற்றிய கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்த க்ளோயிக்கு பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்.

நோமட்லேண்ட் போஸ்டர்

அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் வேனிலேயே நான்கு மாதங்கள் சுற்றித் திரிந்து அந்த நாடோடிகளின் வாழ்க்கையை இரு பெண்களும் பதிவு செய்தார்கள். ஜிப்சம் சுரங்கம் ஒன்றில் வேலை பார்த்த கணவன் இறந்துவிட, 60 வயதைத் தாண்டிய மக்டர்மான்ட் தன் வேர்களை அறுத்தெறிந்துவிட்டு வேன் ஒன்றில் அமெரிக்காவின் மேற்குக் கரையோரமாக சக பெண்களை சந்திக்கும் கதைதான் நோமட்லேண்ட். லிண்டா மே, ஸ்வாங்கி, பாப் வெல்ஸ் என்று நிஜ நாடோடி வாழ்க்கை வாழும் மனிதர்களை படத்தில் நடிக்கவைத்திருக்கிறார் க்ளோயி.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிறகும் துணிவுடன் வேனில் வாழ்க்கையை ஓட்டும் ஸ்வாங்கி என்ற பெண்மணி, விதவையான கதாநாயகி ஃபேர்னை காதலித்து மகனுடன் ‘செட்டில்’ ஆகும்படி அழைக்கும் காதலன் டேவிட், அதை மறுத்துவிட்டு மீண்டும் வேன் வாழ்க்கை தரும் விடுதலை உணர்வுக்காக அதைத் தேர்ந்தெடுக்கும் ஃபேர்ன் என்று அழுத்தமான கதாபாத்திரங்களுடன் நகரும் கதை நோமட்லேண்ட்.

“எப்படியான பயணத்தை நம் நோமட்லேண்ட் குழுவினர் செய்திருக்கிறோம்! உங்கள் அனைவருக்கும் நன்றி. சூழல் மிக மோசமாகும்போதுகூட என்னை உந்தித் தள்ளுவது எது என்று யோசித்துப் பார்க்கிறேன். சிறு வயதில் சீனாவில் நான் வசித்தபோது நானும் என் அப்பாவும் சீனமொழியின் தொன்மையான கவிதைகளை சேர்ந்து வாசிப்போம், மனப்பாடம் செய்வோம். பின் அதை ஒன்றாக ஒப்பித்துப் பார்ப்போம். அதில் ஒருவர் தொடங்கும் வாக்கியத்தை அடுத்தவர் முடித்து வைப்போம். அவற்றில் ஒன்றை இன்னும் தெளிவாக நினைவு வைத்திருக்கிறேன்.”

“The three character classics. அதன் முதல் வரி ‘பிறக்கும் போது அனைவரும் நல்லவர்களாகவே பிறக்கிறார்கள்’ என்று இருக்கும். இந்த வரி சிறு வயது முதல் என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் அதை நான் நம்புகிறேன். நான் உலகம் முழுக்க நான் சந்தித்த நபர்கள் எல்லோரும் எனக்கு நல்லவர்களாகவே தெரிகிறார்கள். தன்னிலுள்ள நல்ல எண்ணங்களையும், அதை கடைசி வரை கடைபிடிக்கும் துணிவும் கொண்டவர்களுக்கும், எவ்வளவு கடினமாக இருந்தாலும் அடுத்தவர்களிடமுள்ள அதே நல்லவற்றைப் பார்த்து மகிழ்பவர்களுக்கும், என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி”, என்று தன் ஆஸ்கர் விருது ஏற்புரையில் க்ளோயி கூறியுள்ளார். வாழ்த்துகள் க்ளோயி!

படங்கள்: vulture.com

கட்டுரையாளர்:

நிவேதிதா லூயிஸ்:

எழுத்தாளர், சமூக மற்றும் பெண்ணிய வரலாற்றாளர், தொல்லியல் ஆர்வலர்.