(ஜென்னி பெர்லினிலிருந்து எழுதிய காவியக் கடிதங்கள்)


எனது அன்பிற்கினியவரே… என்னால் மட்டுமே காதலிக்கப்படுபவரே…

என் இனிய இதயமே… என் மேல் உங்களுக்கு இனிமேலும் கோபமில்லாமலும் என்னைப்பற்றிய கவலை இல்லாமலும் இருக்கிறீர்களா? சென்ற கடிதத்தை எழுதும்பொழுது நான் மிகவும் மனம் நொந்துபோய், எதைப் பார்த்தாலும் மிகச்சூன்யமாகவும், அதன் யதார்த்தமான அளவைவிட பிரமாண்ட மானதாகவும் தோன்றியது.

ஒரே ஒருத்தியால் மட்டுமே நேசிக்கப்படுபவரே…
உங்களுக்கு அப்படியொரு மனக்கொதிப்பை ஏற்படுத்தியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால், எனது காதலை நீங்கள் சந்தேகித்ததாலும் அதன் பரிபூரணத்தை உணராததாலும் நான் அதிர்ந்துபோய் விட்டேன்.

சொல்லுங்கள் கார்ல், எப்படி உங்களால் அப்படி ஒரு உலர்ந்த வரிகளால் எழுத முடிந்தது, அதுவும் நான் வழக்கத்திற்கு மாறான நீண்ட மெளனத்தில் இருந்த காரணத்தால் நீங்கள் அப்படி சந்தேகப்பட முடியுமா?

உங்கள் கடிதத்தால் ஏற்பட்ட நிம்மதியுடன் கூடிய துக்கத்தையும் நானே எனக்குள்ளாகவே தக்கவைத்த காரணத்தாலும், என் மனம் முழுவதும் வியாபித்த, சொல்ல முடியாத, தொடர்ந்த துன்பத்தாலும்தான் நான் மெளனம் காத்தேன். இப்போதும்கூட உங்களை நிம்மதிப்படுத்தவும், என்னை நானே கலக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்ளவும் வேண்டும் என முடிவெடுத்து உங்களுக்காகவும் என் குடும்பத்துக்காகவும் நான் கடமைப்பட்டிருப்பதால் எழுதுகிறேன்.


ஓ, கார்ல், உங்களுக்கு என்னைப்பற்றி கொஞ்சம்தான் தெரியும்? சிறிதளவாவது எனது நிலையினை எண்ணியிருப்பீர்களா, எனது துக்கம் எங்கு எதனால் தோன்றுகிறது என்பது குறித்தோ, எனது இதயத்தில் கசியும் ரத்தம் குறித்தோ ஓரளவாவது தெரியுமா? ஒரு பெண்ணின் காதல் நிச்சயமாக ஆணின் காதலிலிருந்து வேறுபட்டது, வேறுபடாமல் இருக்கவும் முடியாது. ஒரு பெண் தனது காதலனுக்கு காதலைத் தவிர, தன்னையும் தன் சுயத்தையும் கொஞ்சமும் குறைவில்லாமல் வாழ்நாளெல்லாம் தந்துதான் ஆகவேண்டும். சாதாரண சூழ்நிலைகளில்கூட ஒரு பெண் தன் ஆணின் காதலினால் முழு திருப்தியையும் காணவேண்டிய அவசியமும் காதலைத் தவிர அனைத்தையும் மறந்துவிட வேண்டியவளாகவும் ஆகிவிடுறாள்.

ஜென்னியுடன் மார்க்ஸ்

ஆனால், கார்ல்… எனது நிலைமையைப் பாருங்கள். என் மேல் உங்களுக்கு எந்த கவனமும் கிடையாது, நம்புவதும் கிடையாது. மேலும் உங்களது இளமை மிகுந்த சாகசமிக்க, காதலை தக்கவைத்துக்கொள்ளும் தகுதியும் எனக்கு இல்லை, இது துவக்கத்திலிருந்தே தெரிந்தும், என்னிடம் ஏற்கனவே விளக்கமாகவும் காரணங்களுடனும் மென்மையாகவும் அறிவுபூர்வமாக எடுத்துச்சொல்லியும்கூட அதனால் ஆழ்ந்த கவலைதான் பட்டிருக்கிறேன். ஆனால், கார்ல் என்னை துன்பப்படுத்துவது என்னவெனில் எந்தப்பெண்ணுக்கும் தனது பகிர்ந்துகொள்ள முடியாத, பரிபூரண மகிழ்ச்சியை உங்களது அழகும் ஸ்பரிசமும், தீவிரக்காதலும், விவரிக்க முடியாத நேசமுடன் கூடிய வார்த்தைகளும், ஈர்க்கக்கூடிய விஷயங்களைத் தெளிவாக்கும் உங்கள் கற்பனைகளும் – இவைதாம் எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு எட்டமுடியாததாக்கிவிடுகிறது.

என்னைநானே எவ்வளவு அதிகமாக மகிழ்ச்சிக்குள் ஆட்படுத்திக்கொள்ளுகிறேனோ அவ்வளவு பயங்கரமானதாக எனது எதிர்காலம் தெரிகிறது, ஏனெனில் உங்களது ஆவல்மிக்க காதல் உறைந்து, காலாவதியாகி, பின்வாங்கி விடுமோ என்ற பயம் என்னை எப்பொழுதும் ஆட்கொள்கிறது. கவனியுங்கள் கார்ல், உங்கள் காதல் மேல் உங்களுக்கிருக்கும் அக்கறை எனது மகிழ்ச்சியையெல்லாம் கொள்ளை கொண்டு விடுகிறது. உங்கள் காதல் எனக்கு முழுமையான கொண்டாட்டத்தை ஏற்படுத்தி விடவில்லை, ஏனெனில், எனக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. கிட்டாவிட்டால் அதைவிடப் பயங்கர மானதாக எதுவும் இருக்கவும் முடியாது.

அதனால்தான் கார்ல் நான் உங்களுக்கு எனது முழுமையான நன்றியை தெரிவிக்க இயலவில்லை. உங்களது காதலால் அது உண்மையான தகுதியுடையதாக இருந்தாலும் பூரணமாக கட்டுண்டு விடவில்லை. அதனால்தான் நான் உங்களுக்கு, வெளிவிஷயங்களைப் பற்றியும், வாழ்க்கை, அதன் யதார்த்தம் பற்றியும் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறேன். அதுவல்லாமல் உங்களைப்போல அந்தக் காதல் உலகிலேயே முழுமையாக மூழ்கிவிடாமல், அதை ஆழமாக உணர்ந்து அதைமேலும் மேலும் உயரிய நிலைக்கும், அன்பான நிலைக்கும் உங்களுடன் அனைத்தையும் மறந்து ஒன்றுபடவும், எல்லா இன்பங்களையும் நிம்மதியையும் அதன் மூலம் மட்டுமே பெறமுடியும் என்ற நிலையை எட்ட வேண்டும். கார்ல்… என்னுடைய அவல நிலையை நீங்கள் புரிந்துகொண்டால், என்னிடம் மென்மையாகவும் விகாரமில்லாமலும் சாதாரணமாகப் பேசவும் முற்படுவீர்கள். அதோடு எல்லா இடங்களிலும் உண்மையான தூய காதலுக்காக ஏங்கமாட்டீர்கள்.

ஓ,கார்ல், உங்கள் காதலினால்தான் நான் பாதுகாப்பாக இருக்க முடியும். இல்லையெனில் தலையில் எரிச்சலும் இதயமும் பாதித்து ரத்தமும் கசியும். நான் உங்கள் இதயத்தில் நிரந்தரமாக இருக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால்… கார்ல், கடவுள் மட்டுமே உணர்வார். எனது ஆத்மா, அதன்பிறகு வாழ்க்கை பற்றியோ அதன் அவலம் பற்றியோ நினைத்துகூடப்பார்க்காது. ஆனால், எனது இனியவரே… உங்களுக்கு என் மேல் அக்கறை ஏதும் இல்லை. என்னை நம்புவதும் இல்லை. உங்கள் காதல் மேலும் உங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், அதற்காக நான் அனைத்தையும் தியாகம் செய்யவேண்டியதிருக்கிறது. நான் எப்பொழுதும் பொலிவோடும் இளமையாகவும் இருக்க வாய்ப்பில்லை. இந்த நினைவலைகளில்தாம் எனது மரணமும் இருக்கிறது.

எனது இதயச்சிறைக்குள் உங்கள் காதல் அமர்ந்து விட்டால், பின்பு என்னைப் பற்றிய நினைவுடனும் காதலுடனும் எனக்கு ஆறுதலாகவும் இருப்பீர்கள். நீங்கள் எல்லா விஷயங்களிலும் மிகவும் சரியாக இருப்பதாக நான் முழுவதும் நம்புகிறேன். ஆனால், எனது நிலையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நான் சோகமான நினைவுகளில் மூழ்குவதை – இவற்றையெல்லாம் பற்றி யதார்த்தமாக யோசித்தால் என்னிடம் அவ்வளவு கடினமாக நடந்துகொள்ளமாட்டீர்கள். மேலும் நீங்கள் என்னைப் போல கொஞ்சநேரமாவது பெண்ணாகவும் வித்தியாசமானவளாகவும் இருந்தால் மட்டுமே இதை புரிந்து கொள்ள முடியும்.

எனவே, எனது அன்பு இதயமே, உங்களது கடிதம் கிடைத்தபின், எனக்காக நீங்கள் கொந்தளித்து கலவரமாகியிருப்பீர்கள் என்று நான் வேதனைக்குள்ளானேன். இரவு பகலாக நீங்கள் ரணமாகி, ரத்தம் கசிந்து, நலமில்லாமல் இருப்பதுபோல உணர்ந்தேன். மேலும் கார்ல்… இந்த நினைவுகளால் நானும் மகிழ்ச்சியில்லாமல் போகவில்லை. எனது மானசீகமான கற்பனையில் நீங்கள் உங்கள் வலது கையை இழந்து, அதில் நான் மகிழ்ச்சி அடைவதாகவும் இருந்தது. என் இனிய இதயமே, அதுபோல நடந்தால் நான் தவிர்க்க முடியாதவளாகவும், எப்போதும் உங்கள் அருகிலேயே இருந்து காதலிக்கப்படுபவளாகவும் ஆகிவிடுவேன். மேலும் நான் உங்களது அன்புமிக்க, கனவுலக சிந்தனைகளையும் எழுதுபவளாகவும், உங்களுக்கு உதவுபளாகவும் என் நினைவலைகள் ஓடியது. இதையெல்லாம் நான் இயற்கையாகவே கற்பனைசெய்து, நினைத்துப்பாக்கும்போது, தொடர்ந்து உங்களது நேசமிக்க குரலை, என்னைத்தழுவிய அன்புதழுவிய வார்த்தைகளை தொடர்ந்து கவனித்தேன். அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பத்திரமாகப் பாதுகாத்தேன்.

எனது வாழ்க்கையில் இதுபோன்ற சித்திரங்களையே எனக்குள் தீட்டி வருகிறேன்,ஏனெனில் அதனால் உங்களுடனேயே மகிழ்ச்சியாக,உங்களுடையவளாகவே இருக்க முடிகிறது.இந்த கற்பனையே நிஜமாகிவிட்டால் நான் மிகவும் திருப்தியாகிவிடுவேன்.என் அன்பே, என்னால் மட்டும் நேசிக்கப்படுபவரே,எனக்கு ஒரு கடிதம், நீங்கள் மகிழ்ச்சியாகவும்.என்னை எப்போதும் காதலிப்பதாகவும் எழுதுங்கள்.ஆனால் அன்பு கார்ல்,நான் உங்களுடன் மீண்டும் முக்கியாமாக பேசவேண்டியதுள்ளது.எப்படி நீங்கள் எனது பணிவை சந்தேகிக்க முடிந்தது.ஓ,கார்ல்,மற்றவர்களால் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க முடியாதவராக இருக்கலாம்,ஆனால் நான் அடுத்தவர்களின் நல்ல குணங்களை அங்கீகரிக்க மறுப்பவள் அல்ல,அப்படித்தான் உங்களை யாரோடும் ஒப்பிடமுடியாதவராக நான் மதிப்பு வைத்துள்ளேன்.

ஆனால்,கார்ல்,நான் உங்கள் மேல் விவரிக்கமுடியாத அளவுகடந்த அன்பு கொண்டுள்ளேன்.எப்படி என்னால் மற்றவர்கள் மேல் இப்படி ஒரு தகுதிமிக்க காதல் கொள்ள முடியும்.ஓ அன்பு கார்ல்,நான் எப்போதும் இதுபோல் உங்களிடம் நெருங்கி வந்ததில்லை,இருந்தும் எப்போதுமே நீங்கள் என்னை நம்புவதில்லை.இருந்தாலும் ஆவலுடன் கவனிக்க வேண்டியது,யாரோ உங்களிடம்,அவர் யாரென்றுகூட எனக்கு தெரியாது,நான் பார்த்ததுகூட இல்லை, குறிப்பாக அவர்,நான் அடிக்கடி எல்லோரும் அறிய,சமூகத்தில் எல்லாவித மக்களுடனும், மகிழ்ச்சியாகவும் சரளமாகவும் கலந்துரையாடுவதாக உங்களிடம் கூறியிருக்கிறார்.நான் பெரும்பாலும்,முன்பின் தெரியாதவர்களுடன்
கூட சந்தோசமாகவும், கிண்டலடித்துக் கொண்டும்,கலந்துரையாடலில் ஈடுபடமுடிகிறது,ஆனால் உங்களிடம் மட்டும் அப்படி இருக்கமுடியவில்லை.

பாருங்கள் கார்ல்,நான் எவருடனும் பேசவும், அரட்டையடிக்கவும் முடிகிறது ஆனால் உங்கள் பார்வை என் மேல் பட்டாலே,நான் உணர்ச்சி வசப்பட்டு,என் நரம்புகளில் ஓடும் ரத்தம் உறைந்து,இதயம் நடுங்கி என்னால் ஒரு வார்த்தைகூட பேச முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.
அதுபோல அடிக்கடி உங்களைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் நான் பேசுவதறியாது, உணர்ச்சி வசப்பட்டு,அதிக அழுத்தத்திற்குளாகி இந்த உலகத்தில் எதைப்பற்றியும் ஒரு வார்த்தைகூட உதிர்க்க முடியாதுபோய்விடுகிறது.ஓ இது எப்படி நேருடுகிறது என்றே தெரியவில்லை.ஆனால் உங்களை நினைக்கும் பொழுதே அப்படியொரு இனம்தெறியாத உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.ஆனால் எப்போதாவது அல்லது விசேசமான தருணங்களில் உங்களை நினைக்காதிருக்(கலாம் என்றால்) கும்பொழுது, இல்லை,இல்லை என் வாழ்க்கை முழுவதும்,எப்பொழுதுமே உங்களைப்பற்றிய ஒரே எண்ணம்தான்.

நீங்கள் அடிக்கடி என்னிடம் எதோ சொல்வதுபோலவோ,கேட்பதுபோலவோ நேர்ந்து,எனக்கு மறக்கவும், அழிக்கவும் முடியாத அழகுமிகு உணர்ச்சிகள் ஏற்பட்டுவிடுகிறது.மேலும் கார்ல்,நீங்கள் என்னை முத்தமிடும்பொழுதும்,நொடியில் உங்களுடன் சேர்த்து இறுக்க அணைக்கும் பொழுதும்,என்னால் மூச்சைக்கூட விடமுடியாமல்,பயத்திலும்,நடுக்கத்திலும் இருக்கும்பொழுது,நீங்கள் விந்தையாகவும், மென்மையாகவும் என்னை நோக்குகிறீர்கள்.ஓ என் இனிய இதயமே உங்களுக்குத் தெறியாது நீங்கள் என்னை எப்படிப்பார்க்கிறீர்கள் என்று.என் அன்பு கார்ல்,நான் அப்படி ஒரு தனித்துவமான உணர்ச்சி களுடன் இருப்பது,உங்களுக்கு தெறிந்தால்,என்னால் விவரிக்கமுடியவில்லை, நான் சில சமயம் எனக்குள்ளே நினைத்துக்கொள்வேன்,நான் உங்களுடனேயே இருந்து,என்னை நீங்கள் இளைய மனைவியே என்று அழைத்தால் எவ்வளவு ரம்மியமாகயிருக்கும்.

நிச்சயமாக இனிய இதயமே,அப்படி அமைந்தால் என் எண்ணங்களையெல்லாம் சொல்லிவிடமுடியும்,பின்பு இதுபோல் அளவுக்கதிகமாக வெட்கப்படவேண்டியதுமில்லை. அன்பே கார்ல்,இதுபோன்ற இனிமையான இதயத்தை நேசிப்பது மிகவும் மகிழ்ச்சிக்குறியது.இது எப்படிப்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்தால் பின்பு நம்ப மாட்டீர்கள் நான் வேறு யாரையுமே நேசிக்கமாட்டேன் என்பதை.என் இனிய இதயமே, நான் அதைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் நீங்கள் என்னிடம் கூறிய பல விசயங்கள் நினைவுக்கே வருவதில்லை.

ஜென்னி மார்க்ஸ்- படம் wikidata

ஒருமுறை நீங்கள் என்னிடம் எதோ மிக அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்,எப்பொழுது ஒருவர் முழுமையான காதல் வசப்பட்டிருக்கிறார் என்று கூறுவாரென்றால்,அவர் ஒருவரோடு ஒருவராக,ஒன்றி மற்றொருவரால் பூரணமாக நேசிக்கப்படுகிறார் என்று நினைக்கும்போதுதான். அன்பே கார்ல்உங்களுக்கு நினைவிருக்கிறதா,நீங்கள் ஏதோ அடிக்கடி அழகாக சொல்லியிருக்கிறீர்கள்,நான் நினைப்பதை எல்லாம் அப்படியே சொல்லவேண்டுமானால்,என் அன்பான போக்கிரியே,நீங்கள் நான் ஏற்கனவே சொன்னதுதான் என நிச்சயமாக நம்பிவிடுவீர்கள்,அங்குதான் நீங்கள் மிகத்தவறாக எடுத்துக்கொள்கிறீர்கள்.

நான் உங்களது இனிய காதலியாக இல்லாதபோதே நான் சொல்வேன், யாரொருவரும் அவர்கள் ஒரே ஒருவருக்கே சொந்தமாகவும்,ஒரே ஒருவரது காதலியாகவும் இருப்பதாக சொல்கிறார்களே, என்பதைப்பற்றி, அன்பே கார்ல்,நிச்சயமாகச்சொல்வேன்,என்னிடம் அப்போதே எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறீர்கள்,ஆனாலும் அதே காதலுடன் என்னை மறுபடியும் நோக்குகிறீர்கள்.அதைத்தான் உலகத்திலேயே மிகவும் அழகானதாக நான் நினைக்கிறேன்.

ஓ,என் காதலரே,நீங்கள் முதன்முறையாக என்னை எப்படிப்பார்த்தீர்களோ அதே காதலுடன் மறுபடியும் பார்த்துவிட்டு,உடனே பார்வையை வேரெங்கோ மாற்றிவிடுவீர்கள்,மறுபடியும் என்னைப்பார்ப்பீர்கள் மறுபடியும் பார்வையை மாற்றுவீர்கள்,நானும் அப்படியே செய்வேன்,இதையே இருவருமே ஒருவர் பார்வை மற்றவர் மேல் ஆழமாக நிலைத்து நிற்கும்வரை செய்த பின்பு பார்வைகளின் இலக்கை மாற்றமாட்டோம்.என் அன்பானவரே,என் மேல் கோபப்படாமல்,கொஞ்சம் இதமாக எனக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்.பின்பு நான் மிகவும் மகிழ்ச்சியாகிவிடுவேன்.மேலும் எனது ஆரோக்கியம் குறித்து அதிகம் கவலைப்பட
வேண்டாம்.நான் அடிக்கடி இதைவிடமோசமாகப்போகும் என கற்பனையில் நினைத்து விடுவேன்.நான் உண்மையிலேயே இப்பொழுது(நீண்ட காலமாக,)முன்பு இருந்ததைவிட சுகமாக இருப்பதாக நினைக்கிறேன் இப்பொழுது மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டேன்,எனது உணவு உட்கொள்ளும் சக்தியும் மீண்டும் கூடியிருக்கிறது. நான் வெட்டண்டார்ஃப் தோட்டத்தில் அதிக தூரம் நடக்கிறேன்,நாள் முழுவதும் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

ஆனால் துரதிருஷ்டமாக என்னால் எதையும் படிக்க முடிவதில்லை.எந்த புத்தகமாவது எனக்கு நன்றாக புரிந்துகொள்ளமுடியும்,எனது கவனத்தை மாற்ற முடியும் என்று நினைத்தால் மட்டுமே,அதைப்படிக்கிறேன்.ஆனால் அதில் ஒரு பக்கம் படிக்க ஒரு மணிநேரம் ஆனாலும் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் என் இனிய இதயமே,நான் இப்போது கொஞ்சம் பின்தங்கி இருந்தாலும் மறுபடியும் பிடித்துவிடுவேன். நீங்களும் எனக்கு அந்த வகையில் முன்னேற உதவுவீர்கள்,நானும்கூட வேகமாக உள்வாங்கிக் கொள்ள முடியும்,.உங்களுக்கு ஏதாவது ஒரு புத்தகம் தெரிந்திருக்கலாம்,ஆனால் அது விசேசமானதாக இருக்க வேண்டும்.

கொஞ்சம் படித்தவர்களுக்கானதாக,ஏனெனில்எனக்கு எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது,இருந்தாலும் மறைக்கும் பனியின் வழியே பார்ப்பதுபோல் ஓரளவு புரிந்துகொள்ள முயல்வேன்,ஆனால் மோகினிக்கதைகளோ,கவிதைகளோ வேண்டாம் என்னால் தாங்கமுடியாது எனது மூளைக்கு வேலை கொடுத்தால் எனக்கும் நல்லதுதான்.ஒருவரிடமே சேர்ந்து பணியாற்றும்போது மூளைக்கும் அதிக வேலை இருக்கும்.அன்பான கார்ல்,எனக்காக உங்கள் நலனை பாது காத்துக் கொள்ளுங்கள்.வேடிக்கையான அந்த சிறிய அன்புள்ளம் ஏற்கனவே எங்கேயோவாழ்ந்து கொண்டிருக்கிறது.உங்களிடம் காணும் இந்த மாற்றம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது….

கடிதங்கள் தொடரும்…

கட்டுரையாளர் பற்றி

சோ. சுத்தானந்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்கி, தொழில்முறைப் பயணமாக இந்தியா முழுவதும் சுற்றியவர். பல நிறுவனங்களை உருவாக்கியவர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். எல்.ஐ.சி. முகவர்களுக்கான லிகாய் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இவ்வமைப்பின் முதல் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டவர். அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ்காரராக இருந்து, பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டவர்.

வாழ்க்கையே ஒரு பயணமாக இருந்தாலும், தான் மேற்கொண்ட சில பயணங்கள் மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களை ‘பயணங்கள் முடிவதில்லை’ என்கிற நூலாக எழுதியிருக்கிறார் சுத்தானந்தம். இதில் அவருடைய கிராம வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, இயக்க வாழ்க்கையின் சில பகுதிகளை அறிந்துகொள்ளலாம்.