பள்ளிக்கால கனவு உலக அதிசயம் ஒன்று நம் நாட்டில் இருந்தால் அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. பள்ளி நாட்களில் பொது அறிவு சம்பந்தமான விசயங்களை தேடி படிப்பது என் வழக்கம். நான்காவது ஐந்தாவது வகுப்புகள் படிக்கும் போதே உலகம் குறித்த தேடல் இருந்தது. ஆனால் அப்போது பாட புத்தகம் தவிர வேறு புத்தகத் தொடர்பு அதிகம் இல்லை.

அப்பா காலையில் டீக்கடையில் இருந்து வாங்கி வரும் பன் சுருட்டப்பட்ட செய்தித்தாள் தான் எனக்கு அறிவியல் களஞ்சியம். நடிகர் சசிக்குமார் கூட ஒரு படத்தில் சொல்லுவார் “ பஜ்ஜி சுருட்டின பேப்பர கூட படிப்போம்ன்னு”. என் கதையும் அதுதான். என் ஆர்வத்தை பார்த்து அப்பா கடைக்காரரிடம் பேசி வெள்ளிக்கிழமை வரும் சிறுவர் மலரை கிழிக்காமல் சனிக்கிழமை தருமாறு கேட்டிருந்தார். ஒரு வரி விடாமல் படித்து முடித்தவுடன் தான் அடுத்த வேலை. அப்படித்தான் உலக விசயங்களை தேடும் ஆவல் பிறந்தது.

அதிசயம் என்பது தானாகவே உருவானது என்று எனக்கு நானே நிறைய கற்பனை செய்துவைத்திருந்தேன். நான் வளர வளர அதிசயங்கள் குறித்து சிறிது புரிதல் வந்தது. பள்ளி நாட்களில் கூட ஆசிரியர் அடிக்கடி என்னை அழைத்து உலக அதிசயங்கள் என்ன என்று சொல்லச் சொல்வார். நானும் அதற்காகவே காத்திருந்தது போல ஓடிச் சென்று சொல்வேன். இப்படியாக தாஜ்மஹால் என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேர் ஊன்றத் தொடங்கியது.

Photo by Drew Colins on Unsplash

எட்டாவது முடிக்கும் வரைக்கும் பக்கத்து ஊருக்கு கூட போனது இல்லை. ஆனால் கனவு காண எல்லை இல்லையே. தாஜ்மஹால் கனவு எனக்குள் வளர்ந்து கொண்டே தான் இருந்தது. பள்ளி நாட்களில் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி என்று எதையும் விட்டு வைத்ததில்லை. ஆனால் ஓவியம் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் ஆசிரியை ஓவியப்போட்டியிலும் என் பெயரை எழுதி விட்டார். நான் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பெயரை நீக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் முதலும் கடைசியுமா பங்கெடுத்த ஓவியப் போட்டி அது தான். என்ன வரைந்திருப்பேன்னு சொல்லணுமா என்ன….. அழகிய தாஜ்மஹால் என்னால் அலங்கோலமானது…

அதற்குப் பிறகு வெகுகாலம் தாஜ்மஹால் பற்றி நான் மறந்தே போனேன். பள்ளி இறுதி காலத்திலும் கல்லூரிக் காலத்திலும் நிறைய இடங்களை சுற்றி பார்த்திருக்கிறேன். வாழ்வின் முக்கியமான வருடங்கள் கடந்து சென்றன. கிட்டத்தட்ட என் கனவை நான் இழந்து விட்டேன் என்று நினைத்திருந்தேன். வாழ்வில் அதிக பொறுப்பும் கூடிய நாள்களை நான் கடந்து கொண்டிருந்தேன். அப்போது நான் கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். மாணவர்களுடன் சேர்ந்து பல முறை கல்விச்சுற்றுலா சென்றுள்ளேன். புது அனுபங்களை வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்த நேரம்.

அன்றும் சாதாரண நாளாய் தான் எனக்கு விடிந்தது. எப்பொழுதும் போல் கல்லூரிக்குச் சென்றேன். எங்கள் கல்லூரியில் இருந்து டில்லிக்கு சுற்றுலா செல்வது என்று முடிவு செய்தார்கள். அந்த குறிப்பிட்ட மாணவர் குழுவின் பொறுப்பில் இருந்த பேராசிரியை டில்லி வரைக்கும் போக விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார். அதனால் மாணவர்கள் என்னிடம் வந்து கேட்டார்கள். வேறு எந்த ஆசிரியரும் வர விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் என்னால் அவர்களுடன் டில்லிக்கு வர முடியுமா என்றும் வினவினார்கள்.

அந்த நாள் வந்தே விட்டது. கரும்பு தின்னக் கூலியா?? மனம் துள்ளியது . கோட்டை கட்டியது. உடனே ஒத்துக்கொள்ளவில்லை. நாளை சொல்கிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். அன்று இரவு நான் தூங்கவே இல்லை.
ரயிலோசை தடதடத்துக் கொண்டிருந்தது. இரண்டு இரவு மூன்று பகல் பயணம் அது. ஆம் நான் டில்லிக்கு சென்னையில் இருந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் முதல் நெடுந்தூர ரயில் பயணமும் அதுவே. ரயிலில் பயணம்; அதுவும் ஜன்னலோர இருக்கையில் இருக்கிறேன். அதிகம் ரயில் பயணம் செய்ததில்லை. அதனால் ஒவ்வொரு நொடியும் மகிழ்ந்திருக்க ஆரம்பித்து இருந்தேன்.

பெண்களுக்கென்று பிரத்தியேக வரம் ஒன்று உள்ளது. ஏதாவது முக்கியமான நாட்களில் அழைக்காமலே வந்து விடுவாள் அந்த மூன்று நாள் தோழி. பண்டிகை நாட்கள், ஊர்திருவிழா, உறவினர்களின் திருமணம் ஏன் சில சமயங்களில் தன் சொந்த திருமணம் கூட அவளுக்கு விதிவிலக்கல்ல. நம்மை சோதித்து பார்ப்பதில் அவளுக்கு அவ்வளவு ஒரு ஆனந்தம். எனக்கும் அது போலவே நிகழ்ந்தது. நம் ஊர் ரயில் பெட்டியில் கழிவறைகளின் நிலைமை பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. என் பாடு திண்டாட்டம் தான். ஆனால் என்னை சுற்றி இருந்த என் தோழியும் என் பாசத்திற்குரிய மாணவர்களும் என் பயணத்தை இனிமையாகவே மாற்றிக் கொண்டிருந்தார்கள். பாட்டுக்குப் பாட்டு, சீட்டுக்கட்டு என்று நேரத்தை கடந்து கொண்டிருந்தோம்.

ரயில் ஆந்திரா கடந்து போய்க்கொண்டிருந்தது. மாணவர்களில் சில காதல் ஜோடிகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தவரை கவர்வதற்கான வேலைகளில் இறங்கினர். எங்களுக்கு எல்லாம் தெரிந்தாலும் தெரியாதது போலவே நடந்து கொள்வோம். ரயில் மத்தியப்பிரதேசத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நடந்து வந்து கதவருகில் நின்று கொண்டிருந்தேன். தடதடத்துக்கொண்டிருந்த ரயிலின் ஓசையை ரசித்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு முன்னால் ஒரு பெரிய காட்சி விரிந்து கொண்டிருந்தது.

பச்சைப் புல்வெளிகளுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் வண்டி நுழைந்து கொண்டிருந்தது. அது ஒரு மணி நேரமா, இல்லை ஒரு யுகமா என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த அழகான சோலைக்குள் ரயில் வண்டி ஒரு மரவட்டை போல் ஊர்ந்து கொண்டிருந்தது. சலசலக்கும் ஓடைகளும், கிறீச்சிடும் பறவைகளும் , மலைக்குகைகளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரழகு. சாதாரண பயணத்தில் இந்த காட்சிகளை பார்த்திருந்தாலே மனம் லயித்திருக்கும். எனக்கோ வாழ்வில் மறக்க முடியா பயணம். கண்ணில் படுவதெல்லாம் மனதை கொள்ளை கொண்டதாகவே இருந்தது. ரயில் ஆக்ரா ஸ்டேசனுக்கு அதிகாலை 3.15 மணிக்கு போய்விடும் என்று தெரிய வந்தது. மணி இப்போது 3.00 . எங்கள் பெட்டிகளை எடுத்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தோம். மனது ஏனோ திக்திக் என்று அடித்துக்கொண்டது.

நடன மங்கை

daily pioneer

ரயில்வே ஸ்டேசன் கடிகாரம் சரியாய் 3.15 காட்டியது. எல்லாரும் தங்கள் உடமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்து ஒரு பேருந்தில் முன்னரே புக் செய்திருந்த ஓட்டலுக்கு போனோம். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு சுற்றிப்பார்க்க செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

என்னதான் கனவுகளை தேடும் பயணமாக இருந்தாலும் வாழ்வில் மிக அவசியமான ஒன்று உணவு என்பதை பசி வயிற்றைக் கிள்ளிய போது உணர்ந்தேன். பிரியா தம்பி தன்னுடைய “பேசாத பேச்செல்லாம் “ புத்தகத்தில் கூட சொல்லியிருப்பார். கணவனே இறந்து கிடந்தாலும் அந்த பெண்ணுக்கும் பசிக்கும் என்று. ஆம் உலகத்தின் பொது மொழி பசி. மணி காலை 9.00. வழக்கத்தை விட அதிகமாகவே பசித்தது. இரயில் பயணத்தின் போது நாங்கள் கொண்டு வந்தது எல்லாம் ஒரே நாளில் தீர்ந்து விட்டது. மீதம் இரண்டு நாட்கள் இரயிலில் கிடைத்ததை சாப்பிட்டோம். இரயில் சாப்பாடு எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அன்னியன் படம் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் தானே. அப்பளம் கர்ச்சீப்பு தான்.

ஒரு வழியாய் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என்று எல்லாரும் கிளம்பினோம். நம் ஊரில் இருக்கும் போது எந்த ஹோட்டலுக்கு போனாலும் பானி பூரி, சோலா பூரி, பன்னீர் மசாலா , பாவ் பாஜி என்று சாப்பிடுவோம். இதுவே வட மாநிலங்களுக்கு போனால் இட்லி, தோசை எங்கு கிடைக்கும் என்று தேடி அலைவோம். மனிதன் என்றுமே வித்தியாசமான பிறவி தான். நாங்களும் அது போல ஆக்ரா வீதிகளில் சௌத் இண்டியன் ஹோட்டல் தேடி அலைந்து கொண்டிருந்தோம். இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத்தலமான அங்கு சீக்கிரமாகவே எங்களுக்கு நாங்கள் விரும்பிய ஹோட்டல் கிடைத்தது.

ஐம்பது பேரை மொத்தமாக பார்த்ததும் கடைக்காரருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. எல்லாருக்கும் இடம் இருக்கிறதா என்று சரி பார்த்தோம். இடம் போதவில்லை என்றால் பாதியாக பிரிந்து வேறு ஹோட்டல் போலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். இந்த மாதிரி இடங்களில் கடை வைத்திருப்பவர்கள் எல்லா மொழியும் பேசுவார்கள். நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கவனித்து கடைக்காரர் எங்களிடம் வந்து ஒரு வழியாய் பேசி சமாளித்து எல்லாரையும் அங்கேயே உட்கார வைத்தார். எங்களை பார்த்த பின்பு தான் அவர் அடுப்பையே பற்ற வைப்பாரோ என்ற ஒரு சந்தேகம் எனக்கு வந்தது. எல்லாரும் சாப்பிட்டு முடித்து எப்போது செல்வது என்ற கவலை என்னை ஆட்கொண்டது.

ஒரு வசதியான இடம் தேடி என் தோழியுடன் அமர்ந்து கொண்டேன். எப்படியும் உணவு வர ஒரு மணி நேரமாவது ஆகும் .டேபிள் மேல் நான்கு தட்டு நான்கு டம்ளர் நேர்த்தியாய் இருந்தது. நடுவில் ஒரு பூ ஜாடி அதில் நான்கு நாள்களுக்கு முன்னால் வைத்த ஒற்றை ரோஜா வாடிப்போய் என்னை சோகமாய் பார்ப்பது போல் இருந்தது. ரோஜாவே நானும் உன்னைப்போல் பசியால் வாடித்தான் இருக்கிறேன் என்று சொல்லத்தோன்றியது. என் கைப்பையை திறந்து டிஜிட்டல் கேமராவை ஆன் செய்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் மொபைல் கேமரா அவ்வளவாய் பிரபலம் கிடையாது.

அங்கிருந்த சுவர்களில் இந்தியாவின் பாரம்பரிய நடன ஓவியங்கள் மாட்டி வைக்கப் பட்டிருந்தது. கேரளத்தின் கதக்களி, ஒரிஸாவின் ஒடிசி, மணிப்பூரி என்று. நான் என் கேமராவை ஆன் செய்து எனக்கு நேர் எதிரே இருந்த ஓவியத்தை படம் பிடிக்க கேமரா லென்ஸ் கொண்டு ஜும் செய்து பார்த்தேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் அதில் தெரிந்தது என் உயிர்த்தோழியின் உருவம். கேமராவை வைத்து விட்டு என் இடத்தை விட்டு நகர்ந்து சென்று அந்த படத்தின் அருகே சென்று அது என் தோழிதானா என்று உற்றுப்பார்த்தேன். ஆம் அது அவளேதான். அவள் பரதநாட்டியம் பயின்றவள். தன்னுடைய அரங்கேற்றத்திற்காக எடுத்த சில படங்களை என்னிடம் காட்டியிருக்கிறாள். அதில் ஒன்று தான் என் கண் முன்னே ஆறடி உயரத்திற்கு நின்று கொண்டு எனக்கு வியப்பளித்துக் கொண்டிருக்கிறது.

பத்து பதினைந்து படங்களுடன் அவளின் புகைப்படமும் அங்கே இருந்தது. நாங்கள் வேறு ஏதாவது ஹோட்டல் சென்றிருக்கலாம். இல்லை இந்த இடத்தில் வேறு யாராவது படத்தை அவர்கள் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் எதுவும் நடக்காமல் நான் இங்கே வந்ததும் , அதில் எங்கோ தமிழ் நாட்டின் மூலையில் இருக்கும் என் நெருங்கிய தேழியின் படத்தை இந்த ஆக்ரா வீதியில் உள்ள ஒரு இடத்தில் பார்த்ததும் வெறும் தற்செயலே. ஆனால் அது எனக்களித்த மகிழ்ச்சி எல்லை இல்லாதது. என்னைப்போல் இன்னும் எத்தனை கண்கள் இந்த நடன நளினத்தை கண்டிருக்கும்? எத்தனை மனம் இந்த அழகான புன்னகையுடன் காலை உணவை ரசித்து உண்டிருக்கும். இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களை இந்த பயணம் எனக்கு வைத்து இருக்கிறதோ தெரியவில்லை.

கனவு தொடரும்…

கட்டுரையாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.