குப்பாத்தாள் அந்த ஊரின் பெரிய வீட்டுக்காரார் மகனான வெங்கடாசலத்துடன் எதார்த்தமாகப் பேசியதைப் பார்த்து, வெங்கடாசலம் அவர் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்பட்டார். உடுத்திய துணியுடன் குப்பாத்தாவின் வீட்டுக்கு வந்த வெங்கடாசலத்துடன் குப்பாத்தா இணைந்து வாழத் தொடங்கினார். இணைந்து வாழ்ந்த இருவரின் அனுபவங்களும், கனவுகளும் சாதாரண மனுஷியான அவர்கள் பேத்தி கீதாவை சாதாரண மனுஷியில் சமூக மனுஷியாக மாற்றியது.

கீதாவின் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இருந்த இள வயது காதல் அனுபவங்களை அவர்கள் மறந்தும் பகிர்ந்து கொண்டதில்லை. சின்னச் சின்ன மோதல்களைப் பாட்டி அவளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அவையும் ஆணாதிக்க சிந்தனையைப் புரட்டிப் போடுவதாய் அமைந்திருக்கும். தாத்தா பெரியார் சிந்தனையாளர். தாத்தாவின் அம்மாவிடம் இருந்த கடவுள் மறுப்பு சிந்தனை அவருக்குள்ளும் இருந்தது.

தாத்தா சிறுவனாக இருந்த போது அவரது அப்பா காளியண்ணன் தினமும் ஆற்றில் குளித்து விட்டு, கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வருவாராம். வீட்டுக்கு வரும் கணவரிடம், உங்கள் நெற்றியில் இருக்கும் திருநீரைக் கழுவி விட்டு வந்தால் தான் சாப்பாடு போடுவேன் எனச் சொல்லி விடுவாராம் மனைவியான தாத்தாவின் அம்மா. ஆம், கிராமத்து வீடுகளில் ஆண்கள் ஊருக்கே நீதி சொல்பவர்களாக இருக்கலாம். ஆனால் வீட்டில் பெண்ணின் ராஜ்ஜியம் தான். அவள் சொல்வது தான் பெரும்பாலும் சட்டமாக இருக்கும்.

பள்ளிக்கே செல்லாத குப்பாத்தாள் பாட்டி எழுதப் படிக்கத் தெரியாதவர். பாட்டியின் பெயரை எழுதவைத்தது தாத்தா தான் என ஒவ்வொரு முறை கையெழுத்துப் போடும் போதும் மறக்காமல் நினைவுகூர்வார். போஸ்ட் ஆபீசில் வேலைக்கு சேர்ந்த புதிதில் இருவரும் வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், தாத்தாவுக்கு துறை ரீதியான தேர்வுகள் எழுதி உயர் பதவிகளுக்குச் செல்ல ஆசை. ஆனால் வரும் சம்பளம் உணவுக்கே சரியாக இருந்தது.

பாட்டியின் காலில் இருந்த தண்டை, கொலுசு, செயின் ஆகியவற்றை விற்று தாத்தா மேலும் படிக்கவும் போஸ்ட் மாஸ்டர் ஆக உயரவும் பாட்டி உதவியதாக தாத்தா கீதாவிடம் பகிர்ந்து கொள்ளுவார். அவர் பதவி உயர்வு கிடைத்து முதல் சம்பளம் வாங்கியதும், பாட்டிக்கு தங்கச் செயின் வாங்கிக் கொடுத்தார். உயர்வுக்கு உதவுவதும் அதற்கான நன்றியை வெளிப்படுத்துவதும் வார்த்தைகளாக மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கையாகவும் இருந்தது.

பாட்டி கிராமத்து வயல்களில் ஆண்களோடு போட்டி போட்டு வேலை செய்த பெண். ஒரு நாளும் தோற்றதில்லை என்பது சரித்திரம்! அவரோடு சண்டை போடும் போது தாத்தா கோபமாக இரண்டு வார்த்தை பேசிவிட்டு வெளியில் சென்று விடுவார். ஒரு நாள் பாட்டி ஆட்டுக்கல்லில் இட்லிக்கு மாவரைத்துக் கொண்டிருந்தார். அப்போது பேச்சின் இடையே பாட்டியின் முதுகில் தாத்தா ஒரு அடி வைத்துள்ளார். உடனே பாட்டி ஆட்டுக் கல் குளவிவைத் தூக்கி தாத்தாவை நோக்கி வீசினார். அந்த சமயம் தாத்தா சுதாரித்துக் கொண்டு நகர்ந்து விட்டார். அதற்குப் பின்னர் தாத்தா பாட்டியை அடிக்க முயற்சித்தது கூட இல்லை என்று பாட்டி சொல்லுவார்.

தாத்தாவுக்கு இதய நோய் இருந்தத்தால் வீட்டில் எல்லோரும் அவருக்கு சமைக்கும் பத்திய உணவையே எடுத்துக் கொண்டனர். தாத்தாவுக்கு எப்போதாவது உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நேர்ந்தால் கீதாவின் அம்மா மகளைப் பார்த்துக் கொள்ள வந்து விடுவார். அவளது படிப்பு எந்தச் சூழலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டனர். பாட்டி தாத்தாவுடன் மருத்துவமனையில் இருந்து பார்த்துக் கொள்ளுவார். உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று திரும்பும் தாத்தாவின் எடையும், பாட்டியின் எடையும் சமமாகவே இருக்கும். வலியோ வேதனையோ அவர்களுக்குள்ளாகவே பகிர்ந்து கடந்து விடுவார்கள். அன்பான வார்த்தைகளால் பேசியோ, அருகருகில் அமர்ந்தோ கூட அவர்களை கீதா பார்த்ததில்லை.

பாட்டியின் கோபங்களை தாத்தா மதிப்பார். “அவள் சிறு வயதில் இருந்து ரொம்பவும் கஷ்டப்பட்டவள். நான் இல்லாத காலத்திலும் அவளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்”, என்பார். அவரது துணிகளை அவரே துவைத்துக் கொள்ளுவார். சமைத்திருந்தால் சாப்பிடுவார். பாட்டி உடம்புக்கு முடியவில்லை என்றால் அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து விட்டு வேலைக்குச் சென்றுவிடுவார். அந்த ஊரிலேயே மத்திய அரசு பணியில் இருந்தது அவர் ஒருவர்தான்; ஆனால் அந்த பந்தா எதுவும் அவரிடம் இருக்காது.

தாத்தா படித்தவர், மத்திய அரசு வேலையில் இருப்பதோடு யாருக்கும் உதவும் குணம் கொண்டவர். அவரைப் பார்ப்பதற்காக யார் வீட்டுக்கு வந்தாலும் டீ கொடுக்காமல் அனுப்பியதில்லை. இரவு நேரத்தில் வந்தால் கட்டாயம் அவர்களைச் சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார். எப்போதும் இரவில் ஒரு ஆளுக்கான உணவு மீதம் இருக்கும்படி தான் சமைக்க வேண்டும். அவரின் இந்த வழக்கம், திருமணமாகி வந்த பின் கீதாவுக்கும் இருந்தது. யாரும் பசியில் இருப்பதை அவள் விரும்ப மாட்டாள். அலுவலகமோ, வெளியிடமோ தன் கையில் இருக்கும் உணவையோ, காசையோ கொடுத்து சாப்பிடச் செய்வாள். இந்த குணம் தாத்தாவிடம் இருந்து வந்தது தான்.

ஒரு மனுஷி தான் சார்ந்து வாழ்பவர்களால் செதுக்கப்படுகிறாள். கீதா அதற்கு ஒரு சிறு உதாரணம்.

முந்தைய பகுதி:

படைப்பாளர்:

ஸ்ரீதேவி யாழினி

20 ஆண்டுகாலம் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் ஸ்ரீதேவி யாழினி, பெண்களுக்கான தொடர்கள், கட்டுரைகள், நேர்காணல்களை தொடர்ந்து எழுதி வருபவர். தினகரன், காலைக்கதிர், விகடன் போன்ற நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றியவர். தேர்ந்த பேச்சாளர், கட்டுரையாளர், கவிஞர், எழுத்தாளர். ‘செல்லமே’ என்ற குழந்தை வளர்ப்பு வழிகாட்டி நூலையும், பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ நூலையும் எழுதியுள்ளார்.