“அந்தக் குட்டிப் பெண் பாட்டியின் கைகளைப் பற்றிக் கொண்டு பனைமரப் பாலத்தில் எட்டு வைத்து நடந்த போது உள்ளே விழுந்துடுவோமோ என்ற பயம் கவ்வ அவள் பாட்டியின் கைகளை இறுக்கினாள். எதிர்ப்பாதையில் கால்களைப் பதித்த போது அவள் இதயத் துடிப்பின் டெசிபல் குறைந்தது,” நீங்கள் பார்க்கும் அந்தக் குட்டிப் பெண்ணின் பெயர் கீதா.

அன்பும் கண்டிப்பும் நிறைந்த அந்தப் பாட்டி குப்பாத்தாள்.
அவளது தாத்தா வெங்கடாசலம். அம்பராம்பாளையம் போஸ்ட் ஆபீசில் போஸ்ட் மாஸ்டர். முதல் முறை ஹார்ட் அட்டாக்கில் இருந்து மீண்ட பின் அவர் முழுக்க முழுக்க ஹெல்த்தி லைஃப் ஸ்டைலுக்கும் மாறினார். பத்திய உணவு, மாலை நேரத்தில் வாக்கிங் போவார். கீதாவும் ரயில் தண்டவாளத்தில் அவரோடு வாக்கிக் போனது, தண்டவாளத்தில் காதுகளை வைத்து ரயில் வருகிறதா எனப் பார்த்ததும் தான் தாத்தா பாட்டியுடன் அவளின் பசுமை நினைவுகளாய் நெஞ்சில் ததும்பும்.

PC: Indian Express

அப்பா டெய்லர், அம்மா ஹவுஸ் வொய்ஃப், ஒற்றைத் தம்பி எல்லாரும் கீதாவைப் பொறுத்தவரை தூரத்து சொந்தங்கள். பள்ளி விடுமுறைக்கு மட்டும் சந்திப்பார்கள். கீதா தாத்தா பாட்டியுடன் கிராமத்திலேயே வாழ்ந்தாள். கீதா பாட்டி வளர்ப்பாக மாறியதற்கும் ஒரு டிராஜடி சம்பவம் காரணம். அப்போது கீதாவுக்கு ஒரு வயது இருக்கும். நிற்காத வயிற்றுப் போக்கில் துவண்டு போயிருந்தாள். உறவினர்கள் கோயிலுக்கும், மசூதிக்கும் தூக்கிச் சென்றனர்.


குழந்தை பேச்சு மூச்சின்றிக் கண்கள் மூடியபடிக் கிடந்தாள். இதற்கு மேல் இந்தக் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்ற புலம்பலுக்கு மத்தியில் கிராமத்தில் இருந்து வந்த பாட்டி இவளை பெரியாஸ்பத்திரியில் சேர்த்தார் ( ஜி.எச்). கடைசி நிமிடத்தில் கண்விழித்த கீதாவை தன்னுடனே தூக்கிக் கொண்டு வந்தவர் தான் அவளின் 20 வயது வரை தன் அன்புக் கூட்டிலேயே பொத்திப் பொத்தி வளர்த்தார்.


அவளின் இரண்டாவது வயதில் உடல் முழுக்க அம்மை போட்டு கீதாவின் உடல் முழுக்க தோல் உரிந்து புதிய தோல் படர்ந்தது. அப்போதும் ஆஸ்பத்திரியில் சேர்த்து இவளை உயிருடன் மீட்டது பாட்டி தான். உடல் முழுக்கவும் அம்மைத் தளும்புகள் பெரிது பெரிதாக இருக்கும். இரண்டு முறை நோய்வாய்ப்பட்டு உடலில் ரத்தம் நிறைய வெளியேறியதால் மற்ற குழந்தைகளைப் போல அவளால் விளையாட முடியாது. இரண்டு வயதுக்குப் பின்னர் அம்பராம்பாளையம் பள்ளிவாசலில் பாத்தியாக் கொடுத்த பின்னர் தான் அவள் எழுந்து நடக்க ஆரம்பித்ததாய் பாட்டி அடிக்கடி சொல்லுவாள்.
தாத்தா அவளுக்குப் பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுப்பது கதைகள் சொல்வது என பிரியம் காட்டினார். பாட்டி கண்டிப்பும், அன்புமாய் அரவணைத்து வளர்த்தார். தாத்தாவுக்கு பொள்ளாச்சிக்கு வேலை மாற்றல் ஆகிவிட அவர்கள் பாட்டியின் சொந்த கிராமமான மஞ்சநாயக்கனூருக்கு இடம் பெயர்ந்தார்கள். மண்ணெண்ணெய் விளக்கும், பேட்டரியில் இயங்கும் ரேடியோவும் தான் அவர்களின் மாலை நேரத் துணை.
இந்த மூவருக்குள்ளான உறவுக் கண்ணிகள் சுவாரஸ்யமானவை.

குப்பாத்தாள் பாட்டியின் தங்கை மகளின் மகள் தான் கீதா. குப்பாத்தாவுக்கு குழந்தைகள் இல்லை. அவள் தங்கை மகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்தார். பின் அவளின் மகளையும் தன் மகளாய் வளர்த்துக் கொடுத்தார். உறவில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட குப்பாத்தாளுக்கு முதல் குழந்தை பிறந்து இறந்துவிட அவள் திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது.

தன் தாயுடன் கிராமம் வந்து சேர்ந்த குப்பாத்தாள் அந்த ஊரின் பெரிய வீட்டுக்காரார் மகனான வெங்கடாசலத்துடன் எதர்த்தாமாகப் பேசியதைப் பார்த்து, வெங்கடாசலம் அவர் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்பட்டார். தான் உடுத்திய துணியுடன் குப்பாத்தாவின் வீட்டுக்கு வந்தார். இணைந்து வாழ்ந்த இவர்கள் இருவரின் அனுபவங்களும் கனவுகளும் கீதாவை சாதாரண மனுஷியில் இருந்து சமூக மனுஷியாக வளர்த்தது.
ஆம் அந்த கிராமத்துக் குழந்தை கீதா எப்படி சமூக மனுஷியாக மாறினாள்? அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

கட்டுரையாளர்:

ஸ்ரீதேவி யாழினி

20 ஆண்டுகாலம் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் ஸ்ரீதேவி யாழினி, பெண்களுக்கான தொடர்கள், கட்டுரைகள், நேர்காணல்களை தொடர்ந்து எழுதி வருபவர். தினகரன், காலைக்கதிர், விகடன் போன்ற நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றியவர். தேர்ந்த பேச்சாளர், கட்டுரையாளர், கவிஞர், எழுத்தாளர். ‘செல்லமே’ என்ற குழந்தை வளர்ப்பு வழிகாட்டி நூலையும், பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ நூலையும் எழுதியுள்ளார்.