உறவு பெண்ணில் இருந்துதான் தொடங்குகிறது, பெண்ணின் வாயிலாகவே நிலைக்கிறது, பெண்ணால்தான் முடிவுக்கு வருகிறது. இந்த வாசகம் எதற்கு? எதற்கெடுத்தாலும் பெண்களை நோக்கி கைநீட்ட ஒரு கூட்டம் நிற்கிறது என்று உங்களுக்குத் தோன்றலாம். அதற்கு காரணம் இருக்கிறது. உதாரணமாக நாம் ஒரு வீட்டிற்கு செல்கிறோம்… அங்கே ஐந்து ஆண்கள் நம்மிடம் பேசவில்லை என்று வருத்தப்பட மாட்டோம். ஆனால், அங்கிருக்கும் ஒரு பெண் நம்மைப் பார்த்து நலம் விசாரிக்கவில்லை என்றால் அடுத்த முறை அந்த வீட்டுக்குச் செல்வதில் தயக்கம் காட்டுவோம். அதே வீட்டில் ஐந்து ஆண்களும் நமக்கு ஜென்ம விரோதியாக இருந்தாலும், நம்மிடம் அன்பான அந்தப் பெண்ணுக்காக அங்கே வாசம் செய்வோம்.

ஓர் உறவு வலுபடுவதும் அது வெட்டுப்பட்டுக்கொண்டு உடைபடுவதும் ஒரு பெண்ணின் மூலமாகத்தான் என்பதை பெண்களே ஒப்புக்கொள்வார்கள். குடும்ப உறவு சிதைந்து போக அந்த வீட்டிற்கு வரும் பெண்கள்தாம் காரணம் என்று இதனால்தான் சொல்லப்படுகிறது. சம்பந்தி வீட்டை குறை பேசுவதில் தொடங்கி, மாமியார் வீட்டை துவம்சம் செய்வதில் தொடர்ந்து, மாமியார், மருமகள், அண்ணி, நாத்தனார் என இவர்கள் அடித்துக்கொள்வதில் உறவுகள் நொறுங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதைந்து சின்னாபின்னமாகி இறுதியில் குடும்ப நபர் யாரேனும் இறந்துவிட்டால் அவரிகளின் இறுதி ஊர்வலத்தில் விருந்தாளியாக பங்கேற்கும் அவலநிலை மட்டுமே எஞ்சுகிறது. ஏன் இந்த நிலை? கண்ணுக்குத் தெரியாத உயிர் ஒட்டுமொத்த உடலை இயக்குவது போலதான் உறவுகளும். அசையும் சொத்து அசையா சொத்து என ஆயிரமாயிரம் இருந்தாலும் கஷ்டத்தில் வருந்தும்போது விரோதியான உறவுகளுமே ஆறுதல்படுத்த வருவார்கள்.


ஒருவரை உச்சத்தில் உட்காரவைத்து அழகு பார்ப்பதும், உயரத்திலிருப்பவரை கீழே தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பதும் உறவுகள் தான். அன்பு பாசம் கருணை அக்கறையை காட்டுவதும் பொறாமை கோபம் வெறுப்பை உமிழ்வதும் உறவுகள் தான். உதிரத்தின் வாயிலாக தொடர்புடையது என்பதனால் தான் உரிமையும் அதிகம் உணர்வும் அதிகம்.
திருமணம் செய்துக்கொள்வதும், குழந்தை பெற்றுக்கொள்வதும் உறவுகளை உருவாக்க நிகழ்த்தப்படும் பெயர்சூட்டு விழா தான் உலகத்தில் ஜனித்த எல்லா உயிர்களுக்கும் உறவு தான் அடித்தளம். உறவு என்ற அடித்தளம் இல்லாமல் இந்த வாழ்நாளை ஒருவரால் தனியாக கடக்கவே முடியாது.

PNGkey

ஆண் பெண்ணுக்கு வாழ்க்கை துணை தேவை; அந்த இருவருக்கும் வாரிசு தேவை, இவர்கள் உருவாக்குவதுதான் உறவுகள் என்று மூன்று வரிகளில் சுலபமாக சொல்ல முடிந்தாலும் இந்த மூன்று உறவுகளில் இருந்துதான் தாத்தா பாட்டி, பெரியம்மா பெரியப்பா அண்ணன் தங்கை மாமா மாமி அத்தை சித்தப்பா சித்தி என இதர உறவுகள் என்ற நீண்ட நெடிய பயணம் கோடிடப்படுகிறது. என் அப்பாவுக்கு பிறகு என்னை கவனித்துக்கொள்வான் என் அண்ணன், வருங்காலத்தில் என் அம்மாவின் இடத்தை நிரப்புவாள் என் தங்கை என்று இனிமையாகத் தொடங்கும் பந்தம் ஒன்றுக்கும் உதவாத ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து பிரிந்து செல்கிறது. சிலரின் வாழ்க்கையில் என்றோ ஒரு நாள் அதே உறவுகள் ஒன்று படுகிறது அல்லது விரிசல் பெரிதாகி கடைசி வரை எட்டவே நிற்கிறது.

காதுகுத்துக்கு கறிசோறு போடல, கல்யாணப் பத்திரிகையில் என் மாமன் பேர் எழுதலை என்ற காலம் மலையேறி, வாட்ஸ்ஆப்பில் பத்திரிகை அனுப்பு, ஜூம் லிங்கில் லைவ்வாக நிகழ்ச்சியை பார்த்துக்கொள்கிறேன் என்றளவில் உறவும் உணர்வும் சுருங்கி விட்டது.

முன்னது ஆபத்து என்றால் பின்னது பேராபத்து, பத்திரிக்கையின் கடைசி வாசகமாக மொய் எழுத கூகுள் பே நெம்பர் கொடுத்திருப்பதுதான் உச்சக்கட்ட சுவாரஸ்யம். வாழ்த்து செய்தியை வாய்ஸ் மெசேஜில் அனுப்புவதைப் போலவே துக்கத்திற்கு அழுது ரெகார்ட் செய்து அனுப்பி வைக்கும் நிலையும் வரும்.

பிள்ளை பெற்றுக்கொள்ளும் வைபவமே உறவை உருவாக்க வைக்கப்படும் முதல் புள்ளி என் உதிரத்தில் இருந்து கருவாக்கி உயிராக உருவாகி பெற்ற பிள்ளையை உயிரை உருக்கி வளர்ப்பது எதற்காக? இந்த உலகத்தில் எனக்கு உறவை உருவாக்க பிறந்தது என்ற காரணத்தினால்தானே. நான் உழைத்து சம்பாதித்த நற்பெயர், வீடு , நிலம் நகை செல்வம் அத்தனையையும் கட்டி ஆளப்போவது என் உதிரத்தில் உதித்த நான்தான் என்ற உணர்வுதானே பிள்ளையை உச்சத்தில் வைத்து உற்சவம் காண வைக்கிறது. என் ஆயுட்காலத்தில் நான் கஷ்டப்படட்டு ஈட்டிய செல்வம் வீண் போகாமல் என் வாரிசுக்கு திரும்ப கிடைக்க போகிறது என்ற நிதர்சனத்தால்தானே வாழ்நாளில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குக்கூட அவகாசம் எடுத்துக்கொள்ளாமல் பொருள் ஈட்ட ஓடுகிறோம். நாம் சேர்த்து வைக்கும் எல்லாம் யாரோ ஒருவர் அனுபவிக்கப் போகிறார்கள் என்ற நியதி இருந்தால், மனிதனின் ஓட்டம் இதனை வேகமாக இருக்குமா? ஓரிடத்தில் தானே உறைந்து கிடக்கும்!

பிள்ளையை பேணி வளர்ப்பது எதற்காக? தனது வயோதிக காலத்தில் தன்னை பராமரித்துக் கொள்ளும் என்ற சுயநலத்தினால் தானே! எல்லா உறவுகளும் சுயநலத்தால் பதியமிடப்பட்டவையே ……. அன்பு பாசம் அக்கறையோடு பாயாசத்தில் தூவும் ஏலக்காய் பொடியைப் போல கொஞ்சம் சுயநலமும் கலந்திருந்தால் தப்பில்லை ஆனால் சுயநலம் மட்டுமே தூக்கலாக தலைத்தூக்கும் சமயத்தில் உறவுகள் பட்டு போகிறது. உறவுக்கு மிஞ்சிய ஒன்று இந்த உலகத்தில் இல்லை அதே போல உறவை போல உயிரை பறிக்கும் ஆயுதமும் வேறொன்றும் இல்லை. நீ எனக்கு அண்ணனாக இருப்பதால் கடன் வாங்கி என் திருமணத்தை நடத்து, என் பிள்ளையை மடிமீது உட்க்கார வைத்து மாமன் முறை செய், சடங்கு வைக்கும்போது வந்து தங்க சங்கிலி வாங்கி வா, பிறந்தநாளுக்கு சைக்கிள் பரிசளி, கல்யாணத்துக்கு சீர் செய் என்று விரட்டி விரட்டி சீர் செய்யாவிட்டால் இந்த அண்ணன் உறவு இதனை சீராட்டப்படுமா? ஆபத்து என்ற நேரத்தில் முன்னால் வந்து நிற்பவர்களை கொண்டாடுவதை விட, பொருளாக கொடுத்தவர்கள் தான் உறவாக உச்சிமுகரப்படுகிறார்கள்.


அடிபட்டு கிடக்கும் ஒருவரின் உயிரை காப்பாற்றிவிட வேண்டும் என்ற பதற்றத்தோடு அவரை தூக்கிக்கொண்டு ஓடும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் காயப்பட்டு கிடப்பவருக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை; ஆனால், இதைவிட சிறந்த உறவு வேறு ஏதாவது இருக்க முடியுமா ? இப்படித்தான் இருக்க வேண்டும் உறவுகள்.

தேவையை பூர்த்தி செய்வது என்ற கான்செப்டில் இருந்து நாம் எல்லோருமே விடுபட வேண்டும், அப்போதுதான் பந்தலில் படரும் கொடியை போல தொடரும் இல்லாவிட்டால் தொட்டிக்குள் வளர்ந்த கொடி வேறு வழியில்லாமல் தன்னை சுருக்கிக்கொள்ளும்.

வாயில் சர்க்கரை ஊற்றி உறவுகளால் வரவேற்கப்பட்டு வாயில் வாய்க்கரிசி போட்டு உறவுகளால் வழியனுப்பி வைக்கப்படுகிறது. சர்க்கரை தண்ணிக்கும் வாய்க்கரிசிக்கும் இடைப்பட்ட நாட்கள்தாம் நமக்கான நாட்கள்… இவ்வளவுதான் வாழ்க்கை என்று யாரெல்லாம் உணர்கிறார்களோ அவர்கள் விலகி ஓடும் உறவுகளைக்கூட எட்டிப்பிடித்து பக்கத்தில் வைத்துக்கொள்ள முயல்வார்கள்.

இப்போதிருக்கும் சமூகச் சூழலில் உறவுகள் என்பதே மாயையாகிவிட்டது, உறவுக்கார பெண்மணி ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடல் அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது, இறுதிமரியாதை செலுத்த சென்றவர்கள் அவர்கள் வசித்த தெருவை கடந்த அடுத்த நிமிடம், வீட்டை கூட்டி துடைத்தார்கள், வாழை இலை விரித்து, சாதம் சாம்பார் கூட்டு பொரியல் அவியலோடு மோர்க்குழம்பும் என பரிமாறினார்கள். அந்த நிமிடம்தான் பகீரென்றது. உயிர்பிரிந்தவரின் உடலை அகற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த நிமிடத்தை வடிவமைத்துக்கொள்ள எல்லோரும் தயாராகிவிட்டார்கள் என்பது வலியை உண்டாக்குகிறது. கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் மனித இனத்தை ஆட்கொண்டு அச்சுறுத்தும் வேளையிலாவது உறவுகளின் உன்னதத்தை உணர்வோம்.

உறவுச் சங்கிலி தொடரும்…

கட்டுரையாளர்:

வைதேகி பாலாஜி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வைதேகி பாலாஜி பணியாற்றி வருகிறார். ஹெச்.டி.எஃப்.சி.குழுமத்தில் பேனல் அட்வகேட் பொறுப்பு வகிப்பவர். குடும்பநல சட்ட ஆலோசகரும் கூட. கடந்த 12 ஆண்டுகளாக திருப்பத்தூர், அகமதாபாத், சென்னை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல தமிழ் இதழ்களில் சட்ட விழிப்புணர்வுத் தொடர்கள் எழுதிவருகிறார். பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பிரிவுகள் பற்றிய பல கருத்தரங்குகளில் பங்கேற்றுவருகிறார். கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் தன் சொல்வன்மையால் சொக்கவைப்பவர்.