தலைப்பு: முதல் பெண்கள்
ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்
மைத்ரி பதிப்பகம்
விலை. ரூ.200/-


அவள் விகடன் இதழில் வெளியான ” முதல் பெண்கள்” பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல். அணிந்துரையில் ச.ஆனந்தி அவர்கள் மிகவும் விரிவாக மகளிர் இயக்கங்கள் உருவான பின்னணி, வரலாற்றை மறுவாசிப்பு செய்வதற்கான தேவை, மறக்கப்பட்ட அல்லது ‌‌‌‌‌‌மறைக்கப்பட்ட வரலாற்றை பரவலாக எடுத்து செல்ல வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

நிவேதிதா லூயிஸ் தனது முன்னுரையில் ” ஒவ்வொரு பெண்மணியைப் பற்றியும் ஒற்றை வரி தகவல் மட்டுமே என்னிடம் இருக்கும். முதல் பொறியாளர், முதல் பட்டயக் கணக்காளர்- இப்படி. ஆனால் அந்தப் பெண்மணி குறித்து படிக்க, தகவல் சேகரிக்க, அவரைச் சுற்றிய புகைமூட்டம் விலக ஆரம்பிக்கும், தொலைவில் கோட்டோவியமாக ஒரு பெண்மணி நம் கண்முன் விழித்தெழுவார்.”என்று பகிர்கிறார். எங்கோ எப்படியோ காதில் விழுந்த ஒற்றை வரி தகவலை தனது அயராத கள ஆய்வின் மூலம் கட்டுரையாக்கி ஆவணப்படுத்தி இருக்கும் அவரது உழைப்பு போற்றத்தக்கது.


43 பெண்கள் பற்றிய கட்டுரைகளில், சில பெண்களின் பெயர்கள் அதிகமாக தெரிந்திருக்கிறது. சில பெண்களின் பெயர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். பல பெண்களைப் பற்றி இப்பொழுது தான் முதல் முறையாக கேள்விப்படுகிறோம். ஆனால் இந்த பெண்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி தாங்கள் தேர்வு செய்த பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி இருக்கிறார்கள். இன்றில் இருந்து 150 ஆண்டுகளுக்குள் நமது மண்ணில் வாழ்ந்து, சாதிக்கும் ஆர்வத்துடன் செயலாற்றி, சவால்களை சந்தித்து, போராடி, மறைந்த இப்பெண்களின் வாழ்க்கையை வாசிக்க வாசிக்க பிரமிப்பாக இருக்கிறது.


முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண் மற்றும் முதல் படுகர் இனப் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான அக்கம்மா அவர்களைப் பற்றிய கட்டுரை முதலாவதாக அமைந்துள்ளது. சிறுமியான அக்கம்மாவை இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன், உதக மண்டலத்தில் ஐந்து மைல் தொலைவில் உள்ள பள்ளிக்கு அவரது தந்தை தோளில் சுமந்து கொண்டு போய் விட்டிருக்கிறார். முதல் படுகர் இனப் பெண் பட்டதாரி ஆன பின்தேச விடுதலைக்கான இயக்கங்களில் பங்கேற்ற அவர், தொடர்ந்து மலைவாழ் பெண்களின் மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது தன்னலம் கருதாத செயல்பாட்டினால், 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வாழ்க்கை பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய அளவு முக்கியத்துவம் உடையது. நாம் இந்த புத்தகத்தின் வழியாக தான் அவரை தெரிந்து கொள்கிறோம் என்பது வருத்தமே‌.

இந்திய சாரண சாரணியர் இயக்கத்தின் முதல் பெண் தலைவரும், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாகிய போது, அதை விவாதித்து செழுமைப்படுத்தும் அரசியல் நிர்ணய சபையில் செயலாற்றியவருமான அம்மு சுவாமிநாதன் அவர்களின் இளமைக் காலத்தில் ஒரு சம்பவம்.33 வயதான பாரிஸ்டர் சுவாமி நாதனிடம் 13 வயதான அம்மு.. திருமணம் செய்ய இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறாள். எப்போது வீட்டுக்கு திரும்புவாய் என்று வெளியே செல்லும் போது கேள்வி கேட்கக்கூடாது. என் அண்ணன் தம்பி களை யாரும் இப்படி கேட்பதில்லை. தன்னை மதராஸ் அழைத்துச் சென்று ஆங்கிலேய கவர்னஸ் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும். அதைக் கேட்க இப்போதே சிறிது தயக்கம் ஏற்படுகிறது. ஆனால் சுவாமிநாதன் பெரு மகிழ்ச்சி அடைந்தார். அம்மு சுவாமிநாதன் தனது வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ்ந்தார்.அவர்களது அன்புமகள் லஷ்மி தான் பின்னாளில் மருத்துவராகி, இந்திய தேசிய படைப்பிரிவான ஜான்சிராணி ரெஜிமெண்டின் கேப்டனாக உயர்ந்தார். டாக்டர்.லஷ்மி செஹகல் சிறந்த இடதுசாரி சிந்தனையாளர் மற்றும் செயல்பாட்டாளராக விளங்கினார்.


இந்நூலில் சொல்லப்பட்ட எல்லாப் பெண்களையும் பற்றி இங்கே குறிப்பிடுவது சாத்தியமில்லை என்றாலும் வியக்கத்தக்க வகையில் அறிவுத் துறையில் பெண்கள் பல்லாண்டுகள் முன்பே சாதித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் விவரிக்கப்படாதவையும் கூட.
இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா, இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் துணை பொது இயக்குநர் அன்னா மானி, முதல் பெண் விமானி உஷா சுந்தரம், மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் கடம்பி மீனாட்சி, ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டி.எஸ்.கனகா, இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள், தமிழின் முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர், நாவலாசிரியர் சித்தி ஜுனைதா பேகம், தென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்கள், இந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவு கலைஞர் என நீளும் இப்பட்டியல் நாம் நினைவுகூர்ந்து கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

பாலின பாகுபாடு அனைத்து தளங்களிலும் நிரம்பிய ஒரு சமூக அமைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னர் இப்பெண்கள் எத்தனை தடைகளைத் தாண்டி வந்திருப்பார்கள். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட முதல் தென்னிந்திய ப்பெண் நமது அன்புக்குரிய கே.பி‌.ஜானகி அம்மாள் என்பதை படிக்கும் போதே நெகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழ் அறிவுலக வரலாற்றில் இந்த புத்தகம் மிக முக்கியமான பதிவாகும். ஒரு புத்தகத்தின் அணிந்துரை இத்தனை ஆழமாக, விரிவாக அமைய முடியுமா என்று ஆச்சரியமாக இருப்பினும், அருமையான பதிவு எழுதிய பேரா.ச.ஆனந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு கட்டுரை தொடர் எழுத தன் அதிகபட்ச உழைப்பை செலுத்தி, ஒவ்வொரு சிறு தகவலுக்கும் முக்கியத்துவம் அளித்து, சுவாரஸ்யமான நடையில் 43 சாதனைப் பெண்களின் வாழ்வை ஆவணப்படுத்திய நிவேதிதா லூயிஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு தமிழ் சமூகம் என்றும் கடன் பட்டிருக்கிறது. சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
(மகளிர் சிந்தனை இதழில் வெளியான கட்டுரை)

கட்டுரையாளர்:

ரஞ்சனி பாசு

மதுரையைச் சேர்ந்த ரஞ்சனி தீவிர வாசிப்பாளர், நூல் விமர்சகர்.