ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கும் பாலினத்தை விவரிக்கும் இரண்டு வார்த்தைகள் உள்ளன. உதாரணத்துக்கு, ஆண்-பெண், மணமகன்-மணமகள், கணவன்-மனைவி. ஆனால், சில பெயர்ச்சொற்களுக்கு பெண்பாலைக் குறிக்கும் சொல் மட்டுமே தமிழில் உள்ளன. குறிப்பாக விதவை, மலடி ஆகிய இரு பெண்பால் பெயர்ச்சொற்களுக்கு இணையான ஆண்பால் பெயர்ச்சொற்கள் தமிழில் இல்லை. தமிழில் மட்டுமின்றி பல இந்திய மொழிகளில் இவ்விரு பெண்பால் பெயர்ச்சொற்களுக்கு இணையான ஆண்பால் பெயர்ச்சொற்கள் இல்லை. ஏன் இது போன்ற சொற்களுக்கு ஆண்பால் பெயர்ச்சொற்கள் இல்லை என்ற கேள்விக்கு மொழியியல் ஆய்வாளர்கள் பல விளக்கங்கள் தரக்கூடும். ஆனால், இந்தக் கேள்விக்கான சரியான பதில் ஆணாதிக்கம் என்று மானிடவியலாளர்கள் பார்வையில் அணுகும் போது அறியலாம். இந்தக் கேள்விக்கும் ஆணாதிக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம்.

சமகாலத்தில் நாம் அனைவரும் ஆணாதிக்க உலகில் வாழ்கிறோம். ஆண்கள் அதிகாரத்தை வைத்திருக்கும் சமூகத்தில் பெண்கள் பெரும்பாலும் அதிலிருந்து விலக்கப்படுகிறார்கள். மற்ற பாலினத்தவர்களுக்கு ஆணாதிக்க சமூகத்தில் இடமே இருப்பதில்லை. இந்த உலகம் முற்றிலும் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தின் ஒவ்வோர் அம்சமும் மனிதனின் வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் தொடங்கி வேலை செய்யும் நிறுவனங்கள் வரை அனைத்துப் பதவிகளுக்கும் ஆண் பெயர்ச்சொற்கள் மட்டுமே பெரும்பாலும் உள்ளன. எப்போதாவது ஏன் ‘Bachelor of Arts’ என்று மட்டும் உள்ளது? ‘Bachelorette of Arts’ என்று ஒன்று இல்லை என்பது குறித்து சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி என்றால் கல்வி ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானதா? அப்போது பெண்கள் கல்வி கற்கக் கூடாதா? இதே போல் ஏன் பெருநிறுவனங்களின் ‘Chairman’ என்ற பதவி மட்டும் இருக்கிறது? ‘Chairwoman’ என்று ஏன் பதவி இல்லை? அப்படி என்றால் பெருநிறுவனங்களுக்குத் தலைமை பொறுப்பு வகிக்கும் தகுதி ஆண்களுக்கு மட்டுமே இருக்கிறதா? இது போன்ற கேள்விகளுக்கான பதிலும் ஆணாதிக்கம் தான் என்றும், இதன் மூலம் இந்த உலகம் எப்படியெல்லாம் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

உலகம் எப்போதும் ஆண்களை மையமாகக் கொண்டே தான் இருந்ததா?

எல்லாக் காலகட்டத்திலும் இந்த உலகம் ஆணை மையமாகக் கொண்டு இயங்கவில்லை. மனிதன் தோன்றிய காலத்தில் பெண்கள்தாம் தலைமைப் பொறுப்பு வகித்தனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தொடக்கத்தில், உணவும் இனப்பெருக்கமும் தான் மனிதனின் அடிப்படை தேவையாக இருந்தது. இனப்பெருக்கத்தின் விளைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான உணவைப் பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு தாயுடையதாக இருந்தது. அப்போது தந்தையின் பொறுப்பு என்னவாக இருந்தது என்ற கேள்வி எழலாம். தந்தை என்று ஓர் உறவு இருந்தால் தானே அவருக்குப் பொறுப்பு என்று ஒன்று இருக்கும். ஆதிகாலத்தில் மற்ற விலங்குகளைப் போல் மனித பெண் பல மனித ஆண்களோடு உறவு கொண்டதால் பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்று தெரியாது. எனவே, தந்தை என்ற உறவே அச்சமூகத்தில் கிடையாது. அதனால், தன் குழந்தைகளின் பசி தீர்க்கும் பொறுப்பானது பெண் கையில் இருந்தது. இதன் காரணமாகப் பெண்கள் உணவைத் தேடி தங்கள் குழுவை வழிநடத்தினர். மனித இனத்தின் அடிப்படைத் தேவையான உணவு கிடைக்கக் காரணமாக இருந்த பெண்கள் அக்காலத்தில் தலைமைப் பொறுப்பு வகித்தனர்.

காலப்போக்கில் மனித பரிணாம வளர்ச்சியில் பெண்ணின் மகப்பேறு மற்ற விலங்குகளைவிடச் சிக்கலானதாக மாறியது. அதனால், பெண்களால் தங்கள் இனக்குழுக்களைத் தொடர்ந்து உணவைத் தேடி வழிநடத்த முடியவில்லை. ஒரே இடத்தில இருந்து தங்கள் தேவைகளை தீர்த்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, மனித இனம் வேட்டையாடும் பழக்கத்தைத் தழுவியது. பெண்கள் பெரும்பான்மை நேரத்தை குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையில் இருந்ததால் ஆண்கள் பெரும்பான்மையாக வேட்டையாடினர். இதனால், பெண்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் இருக்க முடிந்தது. காலப்போக்கில் இனக்குழுவின் அளவு பெருத்து, உணவு தேவை அதிகரித்தது. இதன் விளைவாகப் பெண்கள் விவசாயத்தைக் கண்டுபிடித்தனர். படிப்படியாக மனித இனம் மேய்ச்சல் மற்றும் விவசாயத்தைத் தங்கள் அடிப்படை வாழ்வாதாரமாக ஆக்கிக்கொண்டனர்.

எப்போது ஆண் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினான்?

இரை தேடிய காலம் முதல் விவசாய சமூகமாக மாறிய காலம் வரை மனித இனம் சமத்துவமாகத் தான் இருந்திருக்கக் கூடும் என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், சமூகத்தில் சமநிலை குலைக்கப்பட்டு ஆண் எப்போது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினான்? குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புத்தகத்தில், இந்தக் கருப்பொருளைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் கொண்டு ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உருவாக்கினார். ஓர் ஆண் பல பெண்களோடும் ஒரு பெண் பல ஆண்களோடும் கூடி வாழ்ந்த சூழ்நிலையில் இருந்து தாய்வழி உருவானது என்று அவர் வாதிட்டார். இதில் தந்தைவழி நிச்சயமற்றது. எனவே பெண்களின் ரத்தவழி சொந்தங்களை மட்டுமே நம்பத்தகுந்த முறையில் கண்டறிய முடியும். ஏங்கெல்ஸ் ஆரம்பகால மனித சமூகங்கள் சமத்துவமாக இருந்ததாகக் கருதுகிறார். இனக்குழுக்களின் அளவுக்கு ஏற்ப அவர்களுக்குக் கிடைத்த உணவுகளைச் சமமாகப் பகிர்ந்து வாழ்ந்ததாகவும் உபரி அதிகமாகச் சேர்ந்த பிறகு சொத்துரிமை கொண்டாடும் கோட்பாடு உருவானதாகவும் அவர் கூறினார். மேலும் பல்வேறு வகையான சமத்துவமின்மை தனியார் சொத்துகளின் தோற்றத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதினார்.

விவசாயத்தின் விளைவாக மனிதன் நிலவுடமை சமூகமாகப் பரிணமித்தான். தன் காலத்திற்குப் பின் தன் சொத்துகளைத் தனக்குப் பிறந்த குழந்தைகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று சிந்தித்தான். ஆனால், கட்டற்ற பாலியல் சுதந்திரம் கொண்ட சமூகத்தில் குழந்தைகளின் தாய் மட்டுமே நிச்சயமாகக் கூற முடியுமே தவிர, தந்தையை நிச்சயமாக கூற முடியாது. இதன் காரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒருதார மணக் கோட்பாடு உருவானது. இதன் தொடர்ச்சியாகக் காலத்திற்கேற்ப மனிதனின் திருமண அமைப்பு மாறியது. போர் சூழல் நிலவும்போது ஏற்படும் உயிரிழப்புகளை ஈடுசெய்ய பெண்கள் அதிகக் குழந்தைகளைப் பெற வேண்டியிருந்தது. இதன் விளைவாக ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்யும் பலதார திருமண முறை உருவானது.

காலப்போக்கில் பெண்கள் குழந்தைப் பெற்றுத் தரும் ஓர் இயந்திரமாக மட்டுமே பார்க்கப்பட்டனர். எனவே, சொத்துரிமையும் தலைமைப் பொறுப்பும் ஆண்கள் சொந்தமாக்கிக்கொண்ட பிறகு பெண்கள் இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். படிப்படியாக ஆணாதிக்கத்தின் வளர்ச்சி முதலாளித்துவத்தின் பிறப்புடன் பிணைக்கப்பட்டது. அதில் தொழிலாளர்கள் தங்கள் உழைப்பின் உற்பத்திப் பொருட்களின் உரிமையாளர்களாக இல்லை. அன்று முதல் இன்று வரை தொழிலாளர்களின் உழைப்பை முதலாளித்துவம் தொடர்ந்து சுரண்டி வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களின் உழைப்பு முதலாளித்துவத்தால் மட்டுமில்லாமல் ஆணாதிக்கத்தாலும் மிக அதிகமாகச் சுரண்டபட்டு வருகிறது.

இந்தியாவில் ஆணாதிக்கம் இருக்கிறதா?

ஆணாதிக்கத்தின் தாக்கத்தால் நாம் வாழும் இந்த உலகமானது முற்றிலுமாக ஆணை மையமாகக் கொண்டு சுழல்கிறது. அதிலும் குறிப்பாக, இந்தியச் சமூகத்தில் ஆணாதிக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்ட உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2021இன் படி, இந்தியா 156 நாடுகளில் 140வது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியை ஐந்து பரிமாணங்களில் ஆய்வு செய்கிறது. அதாவது பொருளாதாரப் பங்கேற்பு, வாய்ப்பு, கல்வி, ஆரோக்கியம், அரசியல் அதிகாரம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அரசியல் அதிகாரமளித்தல் பரிமாணத்தால் இந்திய மதிப்பெண் பெருமளவில் குறைந்துள்ளது. இந்த அறிக்கை மூலம் இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது என்று தெளிவாக அறியமுடிகிறது. இன்றளவும் பெண்கள் குழந்தை பெற்றுத் தரும் எந்திரமாகவும் ஆண்களின் வசதிக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளும் அடிமைகளாகவும் தான் பார்க்கப்படுகின்றனர்.

மற்ற நாட்டுப் பெண்களுக்கு இல்லாத கூடுதல் சுமை இந்தியப் பெண்களுக்கு உள்ளது. அது இந்திய சாதியக் கட்டமைப்பைப் பேணி காப்பதாகும். ஓர் இந்தியப் பெண் தன் சாதியைச் சேர்ந்த ஆணை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும். எந்தக் காலத்திலும் மற்ற சாதி ஆணைத் திருமணம் செய்யக் கூடாது. ஒரு நூறாண்டுக்குக்கு முன் வரை, இந்திய சமூகத்தில் கணவன் இறந்து விட்டால் உடன்கட்டை ஏறிவிடவேண்டும். அல்லது விதவைக் கோலம் தரித்து வீட்டிலேயே இருக்க வேண்டும். பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாததால் விதவைகள் சமூகத்தால் கைவிடப்பட்டார்கள். ஆனால், மனைவி இறந்து விட்டால் தன் தேவைகளுக்காகவும் தனக்குப் பின் தன் சொத்துகளைப் பார்த்துக்கொள்ள குழந்தைகள் பெற்றுத்தரவும் ஓர் ஆண் வயது வரம்பின்றி மிக எளிதில் மறுமணம் செய்துகொள்ள முடியும். இந்திய சமூகத்தில் ஓர் ஆண் எல்லா வயதிலும் மறுமணம் செய்ததால் அவன் எப்போதும் இழந்தவனாக இல்லை. எனவே, நூறாண்டு கடந்து பல சமூக மாற்றங்கள் நிகழ்ந்த பிறகும்கூட மனைவியை இழந்த ஓர் ஆணைக் குறிப்பிட நம் மொழியில் ஒரு சொல்கூட இல்லை.

அதேபோல், ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை என்றால் அதற்கு முழுப் பொறுப்பு பெண் மட்டும் தான். பெண் உடலில் உள்ள குறைப்பாடுதான் குழந்தை செல்வம் இல்லாமல் போவதற்கான காரணம் என்று அறிவியல் வளர்ச்சி பெரிதாக இல்லாத காலத்தில் கருதினர். எனவே, பெண் கருவுறாமையைக் குறிப்பதற்கு மலடி என்ற சொல் உருவானதே தவிர, ஆண் கருவுறாமையைக் குறிக்க ஒரு சொல் தமிழில் இல்லை. சிலர் ஆண் கருவுறாமையைக் குறிக்க ஆண்மையின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தச் சொல் சரியான சொல்லாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பெண் கருவுறாமையைப் பெண்மையின்மை என்று நாம் கூறாதபோது ஆண் கருவுறாமையை ஆண்மையின்மை என்று கூறுவது பொருந்தவில்லை. அறிவியல் வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்த இந்தக் காலத்தில்கூட ஆண் கருவுறாமையைக் குறிக்க ஒரு சரியான சொல் உருவாகவில்லை. பாலியல் சமத்துவம் பயன்படுத்தும் சொற்களில்கூட இருக்க வேண்டும். எனவே, எல்லா மொழிகளிலும் சீர்திருத்தங்கள் மிக அவசியமாகிறது.

இந்தியப் பெண்கள் இன்னும் எத்தனையோ அடக்குமுறைகளைத் தினமும் சந்திக்கிறார்கள். நம் சமூகத்தில் நிலவிவரும் சமத்துவமின்மையைக் குறைக்கப் பாலின சமத்துவம் குறித்த பரப்புரை மிக அவசியமாகிறது. எல்லாவற்றையும்விட அடுத்த தலைமுறையைப் பாலின பேதம் காட்டாமல் சமத்துவம் போதித்து வளர்ப்பது மிக அவசியமாகிறது. இனி வரும் உலகம் அனைவருக்குமானதாக இருக்கச் செய்வோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ