பொருள் 28 : தீவு

இந்தப் பெண்களுக்குள் ஒற்றுமை என்பதே இருக்காதா? அவர்களுக்குள் நட்பே இருக்காதா? உதிரி உதிரியாகத் தீவுகள் போல் ஏன் அவர்கள் எப்போதும் சிதறியே கிடக்கிறார்கள்? ஏன் அவர்கள் ஒன்று திரள்வதில்லை? ஏன் அவர்கள் சேர்ந்து கடைகளுக்குச் செல்வதில்லை? சேர்ந்து அமர்ந்து உண்பதில்லை? சேர்ந்து விளையாடுவதில்லை? காலம் காலமாகத் தாம் ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் ஏன் அவர்கள் அமைதியாக அனைத்தையும் ஏற்றுக்கொண்டனர்? அப்படியானால் பெண்கள் பலவீனமானவர்கள் என்று சொல்லப்படுவது உண்மைதானா? நாம் இரண்டாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனரா? ஆனால், வரலாற்றில் ஆண்கள் அப்படி இருக்கவில்லை. அவர்கள் குழுவாகத் திரண்டிருக்கிறார்கள். வேட்டைக்குப் போவதாக இருந்தாலும் சரி விளையாடுவதாக இருந்தாலும் சரி; இயல்பாகவே அவர்களுக்கு அணிகள் உருவாகிவிடுகின்றன. ஆண்கள் நட்பைத் தொடர்ந்து பேணுகிறார்கள். போரிட்டாலும் குழுவாகச் சேர்ந்தே போரிடுகிறார்கள். ஏன் பெண்களுக்குள் மட்டும் இந்தக் கூட்டுறவு சாத்தியப்படவில்லை?

தன் மீதான ஒடுக்குமுறையை ஒரு பெண்ணால் எதிர்க்க முடியாமல் போகலாம். தன் மீது செலுத்தப்படும் வன்முறையை எதிர்த்து அவளால் போராட முடியாது இருக்கலாம். ஆனால், அவளுக்காக இன்னொரு பெண்ணால் ஏன் போராட முடியாமல் போகிறது? அந்த இன்னொரு பெண்ணாலும் முடியவில்லை என்றால் மற்றொரு பெண் வந்திருக்கவேண்டுமே? ஏன் அது நடக்கவில்லை? ஒரு பெண்ணால் முடியாததைப் பல பெண்கள் சேர்ந்து சாத்தியப்படுத்தியிருக்க முடியும், இல்லையா? ஏன் இந்த ஒற்றுமை உருவாகவில்லை?

வரலாற்றில் பெண்கள் தங்களுடைய பாலின அடையாளத்தை முன்நிறுத்தி அணிதிரண்டதில்லை என்பது உண்மைதான் என்கிறார் மெரிலின் பிரெஞ்ச். கிரேக்கம், ரோம், இந்தியா என்று உலகின் எந்த மூலையை எடுத்துக்கொண்டாலும் அங்கே பெண்கள் உதிரிகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அதிகாரம் என்பது ஆண்களுக்கானது என்பதை முழுவிழிப்புணர்வுடன் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். இப்படித்தான் இதற்குமுன்பு எல்லாப் பெண்களும் இருந்திருக்கிறார்கள், எனவே நானும் அதே வழியில் இருந்துவிடுகிறேன் என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். குடும்பம் அவர்களைச் சிறைப்படுத்தியிருந்தது. அதற்கும் அவர்களுடைய அனுமதியும் இருந்திருக்கிறது. எழுதப்பட்ட, எழுதப்படாத சட்டங்கள் அனைத்தையும் பெண்கள் அமைதியாகப் பின்பற்றினர். சமூக இழிவுகளை மென்று விழுங்கினார்களே தவிர, ஒரு சொல் ஏன் என்று எதிர்த்துக் கேட்கவில்லை.

வேலை, வேலை என்று இருபத்து நான்கு மணி நேரமும் வீட்டுக்குள் சுருண்டுகிடந்தார்களே தவிர, ஏன் நான் வெளியில் செல்லக் கூடாது என்று கேட்கவில்லை. வெளியில் சென்று பணியாற்றிய பெண்களும் அப்படியொன்றும் சுதந்தரமாக இருந்துவிடவில்லை. பெண்கள் தங்களிடம் பணம் வைத்துக்கொள்ளக் கூடாது; தங்களுடைய சம்பாத்தியத்தை ஆண்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை அவர்களும் ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டை ஒரு தொழிற்சாலை போல் பாவிக்க வேண்டும் என்று ஏதென்ஸ் ஆண்கள் நினைத்தனர். அந்தத் தொழிற்சாலையை நிர்வகிக்கும் பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்தது. அதுவே அவளுடைய கடமையும்கூட. இந்தக் கடமையை அவள் எப்படி நிறைவேற்றுகிறாள் என்பதை வைத்தே அவள் மதிப்பிடப்படுவாள். பண்டைய சீனத்து ஆண்கள் பெண்களைக் கண்காணித்தபடியே இருந்திருக்கின்றனர். ஒரு பெண் எந்த வேலையும் செய்யாமல் ஏதேனும் சிந்தித்துக்கொண்டிருந்தால், ஏதேனும் ஏட்டை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தால் அல்லது விளையாட்டாகத் தோட்டத்தைச் சுற்றிக்கொண்டிருந்தால், வீட்டிலுள்ள ஆண்கள் கோபம் கொண்டுவிடுவார்கள். இப்படி வீணடிக்கலாமா என்று சீறி விழுவார்கள். சாமானியர்களுக்கு மட்டுமல்ல படித்த கற்றறிந்த அறிஞர்களும்கூட பெண்கள் தங்கள் பொழுதுகளை வீணாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இந்த நேர மேலாண்மையெல்லாம் ஆண்களுக்கு இல்லை என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

ஆண்களின் கோபத்தைச் சம்பாதித்துக்கொள்ளாமல் வீட்டுக்குள் இருந்தபடி எப்படியெல்லாம் பொழுதுபோக்கலாம் என்பதையும் ஆண்களே வரையறுத்து வைத்திருந்தனர். இதையும் பெண்கள் அப்படியேதான் ஏற்றுக்கொண்டனர். உன்னால் உன் வாழ்க்கையை உன் விருப்பப்படி நிர்வகிக்க முடிகிறபோது எனக்கு மட்டும் ஏன் அது அனுமதிக்கப்படுவதில்லை என்று அப்போதும் அவர்கள் கேட்கவில்லை. சிறை என்று தெரிந்தும் யார் உள்நுழையச் சொன்னது? சட்டம் ஒடுக்குகிறது என்று தெரிந்தும் யார் அதனை மதிக்கச் சொன்னது? இந்த உலகம் ஆண்களால் ஆளப்படுகிறது என்று தெரிந்தும் யார் வாய்மூடிக் கிடக்கச் சொன்னது? அந்த வகையில், பெண்கள் இரண்டாம் பாலினமாகக் கருதப்படுவதற்கு ஒரு வகையில் அவர்களும்தான் காரணம் என்றாகிறது அல்லவா? அல்லது முழுக்க அவர்களே காரணம் என்றும் சொல்லலாம்தானே?

இந்த இடத்தில் மெரிலின் பிரெஞ்ச் மாறுபடுகிறார். பெண்கள் இந்த நிலையை அடைந்ததற்குக் காரணம் பெண்களே என்று வாதிடுவது எளிதாக இருக்கலாம். ஆனால், அது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, பிழையான வாதம் என்கிறார் அவர். பெண்கள் தங்களுக்குள் திரளாமல் உதிரிகளாகவே இருந்ததற்குக் காரணம் அவர்களல்ல, அது ஒரு தந்திரமான ஏற்பாடு என்கிறார் பிரெஞ்ச். ஒரு பெண் தன்னளவில் பலவீனமானவள். ஒரு குடும்பத்துக்குள் அவளை அடக்கிவிடுவது சுலபம். அந்தக் குடும்பத்தின் விதிகளை அவள்மீது சுமத்துவதும் அவற்றை அவள் ஏற்கும்படிச் செய்வதும் சுலபம். இயல்பாகவே குடும்பத்தில் ஆண்களின் அதிகாரமே மேலோங்கியிருக்கும் என்பதாலும் பிறந்தது முதல் தந்தை, சகோதரன், உறவினர் என்று ஆண் உறுப்பினர்களாலயே பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டும் வழிநடத்தப்பட்டும் வருகிறார்கள் என்பதால் ஆணாதிக்கத்தைப் பெண்கள் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுவிடுகின்றனர்.

சிக்கல் எங்கே வருகிறது என்றால் குடும்பத்து விதிகள் சமூகத்தின் விதிகளாக மாறும்போது. அதாவது குடும்பம் என்னும் சமூகத்தின் ஓர் அலகில் இருந்து விசாலமான சமூகத்துக்கு அவர்கள் வந்துசேரும்போது குடும்பத்தின் விதிகள் செல்லாதவை ஆகிவிடுகின்றன. உதாரணத்துக்கு, பெண்கள் புத்தகம் வாசித்து நேரத்தைக் கடத்துவது வீண் என்பது வீட்டின் விதி. ஆனால், பொதுவிடத்தில் இதை யார் கண்காணிப்பது? வீட்டில் பெண்கள் சிரித்துப் பேசக் கூடாது, சரி. வெளியில் செல்லும்போது சிரித்தால்? குடும்பத்தின் விதிகள் கொடுமையானவை என்பதைச் சமூகத்திடமிருந்து அவர்கள் தெரிந்துகொண்டுவிட்டால்? கட்டுப்பாட்டு வளையத்திலிருந்து பெண்கள் தப்பிச்சென்றுவிட்டால்? ஒரு புதிய விதியைக் கண்டுபிடித்தார்கள். பெண்கள் பிற பெண்களுடன் சேரக் கூடாது.

இந்த ஒற்றை விதி பல விதிகளாக வளர்ந்து நின்றன. ஒரு வீட்டில் வசிக்கும் பெண் இன்னொரு வீட்டில் இருக்கும் பெண்ணுடன் பேசக் கூடாது. பெண்கள் தங்களுக்குள் எந்தவித உரையாடலையும் நிகழ்த்திக்கொள்ளக் கூடாது. ஒரு பெண்ணின் வாழ்வில் இன்னொருவர் நுழையக் கூடாது. ஒரு பெண்ணுக்காக இன்னொருவர் பரிந்துபேசக் கூடாது. பெண்கள் ரகசியமாக எதையும் திட்டமிடக் கூடாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு தீவாக இருக்கவேண்டும். அடக்கமாக, அமைதியாக வீட்டில் அடைந்துகிடக்க வேண்டும். வெளியில் செல்வதென்றால் ஓர் ஆண் உடன் வருவான். அவன் நிழலில் நடந்துசெல். அவன் அனுமதிப்பவர்களோடு பேசு. அனுமதித்ததை மட்டும் பேசு. சமூகம் என்பது வேறல்ல, அதுவும் குடும்பம்தான். அதே விதிகள்தான் அங்கும் செல்லுபடியாகும்.

ஆண்களின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. பெண்கள் பிற பெண்களுடன் இணையாமல் தனித்து விடப்பட்டதால் அவர்களுக்குள் நட்போ குழு உணர்வோ வளரவில்லை. அவர்களால் தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாமல் போனது. உரையாட முடியாமல் போனதால் அவர்களால் தங்கள் சூழல் குறித்து விவாதிக்கவும் கூட்டாக ஆராயவும் முடியாமல் போனது. ஒரு பெண்ணை ஆடவனொருவன் நடு வீதியில் வைத்து அடித்தாலும் மற்ற பெண்கள் தங்கள் வழியில் அமைதியாக நடந்துசென்றனர். அது அந்தப் பெண்ணின் குடும்ப விவகாரம். ஒரு பெண் தன் வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்டால் அது அவர்களுடைய குடும்ப விவகாரம். ஒரு பெண் இழிவுபடுத்தப்பட்டால், அவள் பாவம்தான் ஆனால், அதில் நான் செய்வதற்கு எதுவுமில்லை.

ஆண்களின் பயமே இந்த விதியை உருவாக்கியது என்கிறார் மெரிலின் பிரெஞ்ச். தனித் தீவுகள் ஒன்றுசேர்ந்துவிட்டால் பெரும் நிலப்பரப்பொன்று உருவாகிவிடும் என்று அவர்கள் அஞ்சினர். பெண்கள் கரம் கோர்த்துவிட்டால் ஆண்களின் விதிகளும் கட்டுப்பாடுகளும் தளரத் தொடங்கிவிடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே பெண்களுக்கிடையிலான எல்லா வகையான உறவுகளையும் அவர்கள் துண்டித்தனர். பெண் இருக்கலாம், ஆனால் பெண்கள் இருக்கக் கூடாது. இந்த வரலாற்றுத் தவறைச் சரிசெய்ய நீண்ட காலம் பெண்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

பொருள் 30 : மிரியமின் அழைப்பு

பாரோக்களின் ஆதிக்கத்தில் எகிப்தும் இஸ்ரவேலர்களும் சிக்கியிருந்த காலகட்டத்தில் பிறந்தவர் மிரியம். மிரியமின் அப்பா அம்ரம் இஸ்ரவேலிய அடிமைகளின் தலைவராகத் திகழ்ந்தார். அம்மா ஜோசிபெத் ஒரு மருத்துவச்சி. மிரியமுக்கு ஒரு சகோதரன் பிறந்தான், பெயர் ஆரோன். மிரியமின் அம்மாதான் அந்த ஊரிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் பிரசவம் பார்த்துவந்தார். மிரியமுக்கு ஐந்து வயதானபோது அவரும் தன் தாயுடன் எல்லா இடங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார். அந்தச் சமயம் பார்த்து ஒரு புது சட்டம் பிறப்பிக்கப்பட்டது. புதிதாகப் பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் நைல் நதியில் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அதை நிறைவேற்றும் பணி மிரியமின் தாய்க்கு வழங்கப்பட்டது. உடன் எப்போதும் மிரியமும் இருப்பதால் அது அவருடைய பணியாகவும் மாறியது. ஆனால், மிரியமுக்கும் சரி அவருடைய தாயாருக்கும் சரி, குழந்தைகளைக் கொல்வதற்கு மனமில்லை.

இந்நிலையில் திடீரென்று மிரியமின் தந்தை தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். மிரியமுக்கு அதிர்ச்சி. அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டபோது அவர் அதிர்ச்சி மேலும் அதிகரித்தது. ஒருவேளை இன்னொரு குழந்தை பிறந்து, அது ஆணாகவும் இருந்துவிட்டால் அதைக் கொல்ல வேண்டி வரும் அல்லவா? அதனால்தான் இந்த விவாகரத்து என்று விளக்கமளித்தார் தந்தை. ‘அப்படியானால் நான் எல்லா இஸ்ரவேல் அடிமைகளையும் அதே போல் செய்யச் சொல்லிவிடுகிறேன் அப்பா’ என்று சொன்ன மிரியம், அந்தச் செய்தியை எல்லாருக்கும் தெரிவித்து எல்லோரும் விவாகரத்து செய்யுமாறு செய்தார். தன் தந்தையிடம் சென்று நடந்ததையும் கூறினார். ‘அப்பா, அந்த பாரோவாவது பரவாயில்லை, ஆண் குழந்தையை மட்டும்தான் கொன்றார். ஆனால், நீங்களே ஆண், பெண் குழந்தைகள் எதுவுமே யாருக்கும் பிறக்காமல் செய்துவிட்டீர்கள். இனி இஸ்ரவேலர்கள் அழிய வேண்டியதுதான்.’ தன் தவறு புரிந்து மனைவியை மீண்டும் மணந்துகொண்டார் மிரியமின் தந்தை. மற்றவர்களும் அவ்வாறே செய்தனர்.

ஆறு வயதானபோது மிரியம் இன்னொரு சிக்கலைச் சமாளிக்க வேண்டியிருந்தது. தந்தை பயந்தது போலவே ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை ஒரு கூடையில் வைத்து நைல் நதிக்கரைக்கு எடுத்துச் சென்றார்கள். குழந்தையைப் பாதுகாப்பாக நதிக்கு அருகில் மறைத்துவைத்துவிட்டு தாயார் வேறிடத்தில் ஒளிந்துகொண்டார். குழந்தை இப்போது மிரியமின் கட்டுப்பாட்டில். அப்போது பாரோ அரண்மனையிலிருந்து இளவரசி ஒருவர் நதிக்கரைக்கு வந்தார். குழந்தையைக் கண்டு அள்ளியெடுத்துக் கொண்டார். மிரியமுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. ‘இளவரசி, இந்தக் குழந்தையைக் கவனித்துக்கொள்ள ஒரு பணிப்பெண்ணை அழைத்து வருகிறேன்’ என்று சொல்லி மறைந்திருந்த தன் தாயாரை அவருடன் அனுப்பிவைத்தார். நதியிலிருந்து கிடைத்த குழந்தை என்னும் பொருள்பட மோசஸ் என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டது. அதற்குப் பிறகு நடந்தது நமக்குத் தெரியும். மோசஸ் வளர்ந்து ஆளானதும் பத்து கட்டளைகளைப் பெற்றதும் ஒரு முக்கிய இறைவாக்கினராக மாறியதும் நமக்கெல்லாம் தெரியும்.

ஆனால், மிரியம் ஒரு நிழலாகவே தங்கியிருக்கிறார். தன் தந்தையையும் தாயையும் இணைத்து வைத்து, தன் இளைய சகோதரனைக் காப்பாற்றி, அம்மாவையும் குழந்தையையும் சேர்த்து வைத்த மிரியமின் சமயோசிதமும் சாதுரியமும் போதுமான அளவுக்குப் பேசப்படவில்லை. இவற்றோடு சேர்த்து இன்னொன்றையும் செய்தார் மிரியம். பாரோ ஒடுக்குமுறைக்குப் பலியாகிக்கொண்டிருந்த இஸ்ரவேலர்களைத் தட்டியெழுப்பி அடிமைகளின் கலகத்தைத் தொடங்கிவைத்தவராக மிரியம் அறியப்படுகிறார். அதற்கு மிரியம் செய்ததெல்லாம் ஒன்றுதான். ஒரு பறையைத் தன் கையில் எடுத்துவைத்துக்கொண்ட அவர் இசைக்கவும் பாடவும் தொடங்கினார். பாரோ மன்னனின் அதிகாரம் எத்தனை வலிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த அதிகாரத்தை நாம் ஒன்றுசேர்ந்தால் உடைக்க முடியும் என்று அறைகூவல் விடுக்கும் வகையில் அவர் இசை அமைந்திருந்தது. அதைக் கேட்ட இஸ்ரவேலியப் பெண்களின் உணர்வுகள் தட்டியெழுப்பப்பட்டன. வாள் ஏந்திச் செல்லும் ஒரு வீரத் தலைவனைப்போல் பறையேந்திச் செல்லும் மிரியம் அவர்களுக்குத் தென்பட்டார். ஆயிரக்கணக்கில் அவர்கள் மிரியமுக்குப் பின்னால் அணிவகுத்தனர். இசைத்தபடியும் நடனமாடியபடியும் அவர்கள் மிரியமைப் பின்தொடர்ந்தனர்.

இசை ஒரு போராட்ட வடிவமாக உயிர்பெற்று எழுந்தது. இசை ஒரு போர்க்கருவியாக மாறியது. நாங்கள் இனி அடிமைகள் அல்ல, எங்களுக்கும் கனவு காணத் தெரியும். கனவுகாண மட்டுமல்ல, அந்தக் கனவை நிறைவேற்றுவது எப்படி என்பதும் எங்களுக்குத் தெரியும் என்பதை அழுத்தமாக அறிவிக்கும் வகையில் அந்த அடிமைப் பெண்கள் தங்களுடைய புதிய தலைவரைப் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு நல்ல தலைவராகத் திகழ்ந்த மிரியம் விடுதலைக்கான பாதையைத் தெளிவாகக் காட்டியதோடு அந்தப் பயணத்தின் முதல் நபராக இருந்து அவர்களை வழிநடத்தவும் செய்தார். மிரியமின் படையில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சிறிது சிறிதாகப் பங்கேற்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த இஸ்ரவேலர்களும் மிரியமின் பின்னால் அணிவகுத்து நின்றனர். பாரோக்களின் அதிகாரம் மெல்ல மெல்ல சரியத் தொடங்கியது.

மிரியம் தன் குடும்பத்துக்காகத்தான் முதலில் போராடத் தொடங்கினார். பிறகு தன் மக்களுக்காக அந்தப் போராட்டத்தை அவர் விரிவுபடுத்தியபோது மக்களின் தலைவராக உயர்ந்தார். நிலவும் அதிகாரத்தை நோக்கி கேள்விகள் கேட்கத் தயங்காதவராக இருந்தார் மிரியம். சட்டதிட்டங்களை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவராக இல்லாமல் கலகம் செய்பவராக அவர் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாகத் தனக்குள் இருந்த வீரமிக்கப் பெண்ணை அவர் கண்டுகொண்டதோடு நில்லாமல் ஒவ்வொரு அடிமைக்குள்ளும் அப்படியொரு ஒரு பெண் இருந்ததைக் கண்டுகொண்டார். ஒவ்வொருவரும் தன் வேலிகளை உடைத்துக்கொண்டு வெளியில் வரவேண்டும் என்று தன் பறையிசை மூலம் அழைப்பு விடுத்தார் மிரியம். செங்கடலைப் பிளந்த மோசஸை நினைவுகூரும்போது, அடிமைத்தனத்துக்கு எதிரான மிரியமின் அழைப்பையும் நாம் நினைவுக்குக் கொண்டுவரலாம்.

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.