1.

தோழி அலை பேசுகையில்

என்னால் பேச முடியவில்லை

அது என் இருமலின் காலம்

தோழி, என் இருமல் பற்றி தோழியின் தோழிக்குச் சொன்னாள்

தோழியின் தோழி அவளது தோழனுக்குச் சொன்னாள்

தோழியின் தோழியினது தோழன்

தன் நண்பனுக்குச் சொன்னான்

இப்போது எனது பூரண

நலமடைந்த காலம்

இன்னும்

எல்லார் நினைவிலும்

விடாமல் இருமிக் கொண்டிருக்கும்

என் இருமல்

எப்போது நிற்குமென்று

எனக்கே தெரியவில்லை

இந்த இருமலைக் குணப்படுத்தும் மருத்துவர் யார்

என்றும் புரியவில்லை

2.

தாமதம் என் பிழையோ

திடும்மெனத் தோன்றுதல்

உன் இயல்போ

நானெப்போதும்

உனக்கான

வரிசைகளின்

கடைசியில் நிற்கிறேன்

எனக்கான அன்பு

அது எப்போதும் உள்ளது என்கிறாய்

உனக்கெப்படிப் புரிய வைக்க

வரிசைக் கடைசியிலிருப்பதன்

பதைபதைப்பை

இலையுதிர் கால மரங்களின்

பறவைகளற்ற கூடுகளின் தனிமையை

கூடு அது உள்ளது

மரமும் உள்ளது

வசந்தமும் வரும்

இலைகளும் துளிர்க்கும்

அந்தப் பறவையைக் காணாமல்தான்

மனம் பரிதவிக்கிறது

3.

இரவு கடல்

நிலவென நீ

உன்னொளி மிதக்கும்

அலையெல்லாம் நான்

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.