“எனக்குள்ளே ஒரு சின்னஞ்சிறு பெண் எப்போதும் இருந்துகொண்டு, ஒருபோதும் மூப்படையவோ சாகவோ மறுத்தபடி வாழ்கிறாள்…’’

(இந்த மேற்கோள் லிவ் உல்மன்(Liv Ullmann) என்கிற நார்வே நாட்டு நடிகை தனது ‘மாற்றம்’ (Changing) என்கிற தன்வரலாற்றில், டேனிஷ் எழுத்தாளர் Tove Ditlevsen சொல்லியதாகச் சொன்னது.)

இதை வாசிக்கிற ஒவ்வொரு முறையும் எனக்குள் இப்படி ஒலிக்கும், ‘எனக்குள்ளே ஒரு சின்னஞ்சிறு பெண் எப்போதும் இருந்துகொண்டு ஒருபோதும் மூப்படையவோ சாகவோ மறுத்தபடி வாழ்கிறாள். கூடவே அவளை அதட்டி உருட்டியபடி, ஒரு அம்மாவும், பாட்டியும் எப்போதும் வாழ்கிறார்கள்’.

எனது ஒற்றைப் பெற்றோரின் (Single Parent) கதை என் அம்மாவில் தொடங்குவதாய் நேற்றுவரை, இந்த நொடிக்கு முன்புவரை நினைத்திருந்தேன். ஆனால் அது அம்மா பிறப்பதற்கும் முன் ஆரம்பிக்கிறது; எனது பாட்டியிலிருந்து.

என் பாட்டி வேலைக்குப் போகாத ஒற்றைப் பெற்றோர். தனது தம்பி வீட்டில் பிள்ளைகளோடு இருந்தார். தாத்தா விட்டுவிட்டுப் போய்விட்டார். அவ்வப்போது வருவார், திரும்பக் காணாமல் போய்விடுவார். அது அந்தக் காலம்! அப்போதெல்லாம் – 50, 60 வருடங்கள் முன்பு – இதுபோல நிறையப்பேர் இருப்பார்கள். மரம் செடி கொடிபோலப் பிள்ளைகள் தானாக வளரும்; ஆங்கிலேயர் ஆட்சிக்கால இந்தியாபோல அம்மாவின் இளமைக் காலம்.

என் அப்பா பொறுப்பானவர், மிகப் பொறுப்பானவர். பிள்ளைகளை, பெண்டாட்டியை நன்றாகப் பார்த்துக்கொள்வார். குடும்பத்திற்காக மிகவும் ஏங்கி, திருமணம் செய்தவர். எனக்கு ஆறு வயதிருக்கும்போது இறந்துபோனார். என் அம்மா வேலைக்குப்போகிற ஒற்றைப் பெற்றோர்!

crosswalk.com

அப்பாவின் இறப்பைவிட, பின்னர் அம்மாவுக்கு நிகழ்ந்தவை மிகக்கோரமாக இருந்தன. அம்மாவின் தனிமையும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நிகழும் மொழிக்கு அகப்படாத நூதனமான வன்முறைகளின் நேரடி அனுபவங்களும்தான் என்னை எழுதவைத்தன. அப்பா இல்லை என்பது பலமான தகுதிக் குறைச்சல். விளையாட்டுகளில் பெரும்பாலும் ஒப்புக்குச் சப்பாணியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டேன், ஜெயிக்கும் திறனிருந்தும் தோற்றுப்போக வற்புறுத்தப்பட்டேன். சிறுவயதிலிருந்து இப்போதுவரை அதில் அதிக மாற்றமில்லை. என்மேல் படிந்தவையிலிருந்து விடுபட்டு, எந்தத் தீர்வையும் சார்பற்றுத் தெளிவாக, உறுதியாக, நிலையாக, முடிவான முடிவாக எடுக்க மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

இது உளவியல் உண்மை. சிறுவயதில் அப்பா அம்மா அடித்துக்கொள்வதைப் பார்த்து வளர்கிற குழந்தைகள், திருமண வாழ்வில் அடிப்பவர்களாகவோ அடிவாங்குகிறவர்களாகவோ ஆகிறார்கள். அதன் இருவித உதாரணங்கள்தான் நானும், என் கணவரும்.

திருமணமான புதிதில் கணவரின் வருமானம் குறைவு என்பதால், ‘வாரம் இரு முறை வாக் கூட்டிப் போங்க, மாசம் ஒரு தரம் பீச் கூட்டிப் போங்க’ இவ்வளவுதான் நான் கேட்டது. இயல்பான எளிய விருப்பங்கள்கூட மறுக்கப்படும்போது, அடிப்படை அன்பின்மேல் கேள்வி வருகிறது. க்ரெடிட் கார்ட் கடனால் திடீரென ஒருநாள் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு தனிக்குடித்தனம் வந்தோம். வீட்டு ‘அட்வான்ஸ்’ கொடுப்பதற்கு வாங்கிய கடனும் சேர்ந்துகொள்ள, என் கேரியர் ஜீரோவில் இல்லை, மைனஸில் ஆரம்பித்தது. கணவரின் மொத்த வருமானமும் கடனடைக்கவே சரியாகப் போய்விடும். என் சம்பளத்தில்தான் குடும்பம் நடத்தியாக வேண்டும். ஒரு கட்டத்தில் அவரும் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்.

இன்றோ நாளையோ வந்துவிடுவார், எல்லாம் சரியாகப் போய்விடும் என்று குருட்டு நம்பிக்கை. 2011இல் பிரிவு நோட்டீஸ் வந்தபோது, உலகமே இடிந்து போனதுபோல இருந்தது. சாலையில் போகிற – வருகிறவர்களை எல்லாம் நிறுத்திவைத்து அழ வேண்டும்போல, என்னவோ எனக்கு மட்டும்தான் இப்படி என்பதுபோல…

கணவர் விட்டுவிட்டுப் போன ஓரிரு வருடங்கள் எந்த நண்பர்கள் வீட்டுக்கும், சொந்தக்காரர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் போகமாட்டேன். யாரையும் வீட்டுக்குக் கூப்பிடமாட்டேன். சொந்தக்காரர்கள் பேசுகிறார்கள் என்றால், எங்கே திருமண வாழ்க்கையைப் பற்றிக் கேட்டுவிடுவார்களோ என்று பயந்து ஓடுவேன். யாரும் குடிகாரனுக்கு அறிவுரை சொல்லமாட்டார்கள், அவன் பெண்டாட்டிக்குத்தான் அறிவுரை சொல்வார்கள். அவள்தானே நிதானத்தில் இருப்பாள்!

“நீங்க என்ன பண்றீங்க? அவர் என்ன பண்றாரு?” இது சாதாரணமாக எல்லாரும் கேட்பது. இதில் குறைபட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. என்னை நோகடிக்க என்று அவர்கள் கேட்கவில்லை. அது அவர்கள் நோக்கமுமில்லை. ஆனாலும்கூட நான் உடைந்துபோய்விடுவேன்.

தேவையில்லாத அழுவாச்சி ஸீன்களை ‘கட்’ பண்ணக் கண்டுபிடித்ததுதான் ‘வெளிநாட்ல இருக்கார்’, என்கிற பதில். சிலபேர் அதோடு விட்டுவிடமாட்டார்கள். ‘வெளிநாட்ல எங்க?’ ‘துபாய், விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து’ என்று காமெடியாக்கிச் சிரித்ததுண்டு. இதில் இன்னும் பெருங்காமெடி என்னவென்றால், இப்போது அவர் நிஜமாகவே துபாயில் இருப்பதுதான்!

தாய்லாந்து ஆதிவாசிப் பெண், படம்: Serena Campagnola

ஓர் ஆதிவாசி இனத்தில் பெண்கள் கழுத்தில் ஒரு வளையத்தைச் சுற்றிவிடுவார்கள். வளரவளர அந்த வளையத்தை அதிகப்படுத்திக்கொண்டே போவார்கள். பெண்களின் கழுத்து நீண்டு, வளையத்தின் பலத்தில் நிற்கும். எந்தப் பெண் தவறு செய்துவிட்டதாகக் கருதுகிறார்களோ அவளின் வளையத்தை எடுத்துவிடுவார்கள், கழுத்து நிற்க முடியாமல் முறிந்து அவள் செத்துவிடுவாள். அந்த வளையத்தைப் போலத்தான் இந்தியக் குடும்பங்களில் திருமணம்.

ராஜா ராணிக் கதைகளில் வருவதுபோல ஒரு ராஜகுமாரன் வருவான், தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்குவான் என்றுதான் ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள். அப்படித்தான் வளர்க்கப்படுகிறாள். நான் எந்தக் கற்பனைகளும் கனவுகளும் இல்லாமல்தான் என் திருமணத்தை எதிர்கொண்டேன். வாழ்வின் சுக துக்கத்தை, பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமதையாகப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

மூன்றில் ஒரு திருமணம் முறிவில் விழுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன; அவற்றை விடுவோம். அவை வெறும் பதிவு விபரத்தைச் சொல்வன. நான் எனது 39 வருட வாழ்வில் நேரடியாகப் பார்த்த மகிழ்ச்சியான தம்பதி என ஒன்றிரண்டு பேரைத்தான் சொல்ல முடியும், இதுதான் நிஜமான நிஜம்.

வீடு – அலுவலகம் – வீடு… இது எனக்கு; வீடு – பள்ளிக்கூடம் – டே கேர் – அலுவலகம் – வீடு… இது என் மகளுக்கு. இப்படிக் கொஞ்சகாலம் அஞ்ஞாதவாசம்போல. யோசிக்க ஆரம்பித்தேன்.ஒற்றைப் பெற்றோராக இருப்பதால் உண்டான குறைநிறைகளைப் பட்டியலிட்டு, என்னிடமுள்ள குறைகளை ஒவ்வொன்றாகச் சரிசெய்யத் தொடங்கினேன்.

Photo by Aditya Romansa on Unsplash

அப்பா (அல்லது அம்மா) இல்லாத எந்தவொரு பிள்ளைக்கும், குழந்தைப் பருவமே இல்லை. ஆனால் குழந்தைப் பருவம்தான் நம் மொத்த வாழ்வையுமே கட்டமைக்கிறது. அதில் கிடைத்தது கிடைக்காதது நிகழ்ந்தது நிகழாததுதான் நம் மீதி வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. சிறுவயதில் என் அம்மா சிரித்து ஒருபோதும் பார்த்ததில்லை. பளிச்சென்று உடையுடுத்தி கலகலப்பாக வெளியேபோய், இப்படி எதுவுமேயில்லை. தன்னைச் சுற்றி எப்போதும் யாரும் அணுகாமல் ஒரு நெருப்பு வளையத்தைப் பேணி, அதனுள்ளே கருகிக்கொள்வது எந்தளவு சரி?

வாழ்க்கை ஒரே ஒருமுறைதான். நாமாக உணர்வதற்குள் ஆயுளில் பாதிக்குமேல் போய்விடுகிறது. எனக்கு நூறு இருநூறு வருடங்கள் வாழும் ஆசையில்லை. நாளைவரைதான் என்றால்கூட நிம்மதியாக நிறைவாக வாழ்ந்திருக்க வேண்டும். சோகப்பட்டவரை போதும் என்று எல்லாவற்றையும் மூட்டைகட்டித் தூக்கிப்போட்டுவிட்டேன். மகளோடு விளையாடுவது தொடங்கி, கராத்தேயும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மகளோடு மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே சென்ற மாதிரி, மகளைப் புரிந்துகொள்ளவும் மகள் என்னைப் புரிந்துகொள்ளவும் இவை உதவின.

வெளியிடங்களுக்கு எங்கு போனாலும், கங்காரு தன் குட்டியைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோல அலைய வேண்டியிருக்கும். அலுவலகத்தில் மீட்டிங் என்றால் எனக்காக அலுவலக நேரத்திலேயே வைப்பார்கள் அல்லது வேறு நேரம் என்றால் மகளும் உடன் இருப்பார். என் செக்ஷனை முதலில் வைத்து முடித்தனுப்புவார்கள். இலக்கியக் கூட்டங்களுக்கு மிகத் தாமதமாகப் போய், முதல் ஆளாக வெளியே வருவேன். நம் அலைச்சலைப் பிள்ளைக்கும் தருகிறோமோ என்று வருத்தமாக இருக்கும். அலுவலக நண்பன் சொன்னான் “இல்லை மேடம்! எப்போதும் மகளுடனேயே இருக்கீங்க. அதுதான் முக்கியம்’’ என்று.

ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்ப்பதுபோலத்தான்- பரிதாபமாக, வக்கிரமாக, ஏளனமாக- இந்தச் சமூகம் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கிறது. தனியாக என்னதான் செய்வார்கள், எப்படித்தான் வாழ்கிறார்கள் என்று அவர்களைத் தன்னிலிருந்து வேறுபடுத்தி விநோதமாக யோசிக்கிறது. யாரும் விரும்பி வேண்டுமென்றே விபத்திற்குள்ளாவதில்லை. ஆயிரம், லட்சம் காரணங்கள் இருந்தாலும் ‘நீ பார்த்துப் போயிருக்கணும்’ என்பதுதான் தீர்மானமாகச் சொல்லப்படுகிறது. சரி ஒரு கை போய்விட்டது. எத்தனை நாள் அழலாம்? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று கதறலாம். பிறகு, ஒரு கையோடு வாழப் பழகித்தானாக வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு, இழந்ததற்கும் சேர்த்து மற்றவற்றில் பலம் அதிகம். இப்படித்தான் ஒற்றைப் பெற்றோரின் பலத்தை நான் பார்க்கிறேன், அசாதாரணமானதாய், ஆச்சரியமானதாய்.

என் தோழி கேட்டார், “இன்னொருவருடைய பொறுப்பையும் சேர்த்து இரட்டைச் சுமை சுமக்கிறவர்களை ஏன் ஒற்றைப் பெற்றோர் என்கிறோம்?’’

உணவகங்களில் சாப்பிட, தனியாகவோ மகளுடனோ சென்றால் பார்க்கும் பார்வையும் கவனிக்கும் விதமுமே தனி. திரையரங்குகளுக்குச் செல்வதுபற்றிச் சொல்லவே வேண்டாம். ஆனால் இதெல்லாம் ஆரம்பத்தில்தான். தூரத்திலிருந்து பார்க்கும்போதுதான் இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே அய்யோ எப்படிப் போவது என்று பயமாக இருக்கும். கிட்டே போகப்போக நமக்கான வழி தானாகக் கிடைக்கும். கிடைத்தது!

மகளுக்காக எடுக்கிற தீர்மானங்களில் வரும் குழப்பங்கள். எந்தப் பள்ளியில் சேர்ப்பது? பஸ்ஸில் அனுப்புவது பாதுகாப்பா? ஆட்டோவிலா? ஸ்கூட்டரில் இருவருமாய் போய்க்கொண்டு இருக்கும்போது விபத்து நேர்ந்தால் மகள் என்ன செய்வார்? எப்படி எதிர்கொள்வார்?எனக்கேதும் ஆகிவிட்டால் மகளின் எதிர்காலம் என்னவாகும்?

படிப்பா விளையாட்டா எதில் அவருக்கு ஆர்வம்? எதை ஊக்கப்படுத்தித் தனியாகப் பயிற்சிக்கு அனுப்புவது? அப்படி அனுப்பும் பயிற்சிப் பள்ளிகள் பாதுகாப்பானவையா இல்லையா? அப்படித் திடமாகத் தீர்மானித்து அனுப்பியபிறகு வரக்கூடிய நடைமுறைச் சிக்கல்கள்… இதைப் பற்றியெல்லாம் தனியாகவே முடிவெடுக்க வேண்டியிருப்பது, இதுதான் ஒற்றைப் பெற்றோரின் மிகப்பெரிய சவாலான இடம்!

சாதாரணமாக அம்மா அப்பா இருவருமாய் வளர்க்கும் குழந்தை வளர்ப்பு கயிற்றின்மேல் நடக்கும் வித்தை என்றால், ஒற்றைப் பெற்றோராக வளர்ப்பது பல மாடிக் கட்டடங்களுக்கிடையில் கட்டிய கயிற்றில் நடப்பதற்குச் சமம். விழுந்தால் அடியும் பலமடங்கு, வென்றால் கைத்தட்டலும் பலமடங்கு.

அடுத்து எதிர்கொள்ளும் பெரும்பிரச்சினை ஒற்றைப் பெற்றோரின் மூச்சு பேச்சு காட்சி கவனம் எல்லாவற்றிலும் பிள்ளைகளையே கொண்டிருப்பது.

என் தோழி கேட்டார் – ‘ இப்படி வளர்க்கப்படும் பிள்ளை உன்னை ஒருநாள் அம்போ என்று விட்டு விட்டுப் போனால் என்ன பண்ணுவே’ என்று.

நான் உன்னை இப்படி எல்லாம் பார்த்துக் கொண்டேன்; நீ என்னை இப்படி எல்லாம் பார்த்துக்கொள் என்பது வியாபாரம்! மரணத் தறுவாயில் இருக்கிற ஒருவருக்கு கொடுக்கப்படும் ஒரு டம்ளர் தண்ணீர், அவர் குணமானதும் ‘இந்தா நீ கொடுத்த தண்ணீர்’ என்றுத் திருப்பிக் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இது! நான் என் மகளைச் சிறப்பாக வளர்ப்பது எதற்கென்றால், அவர் அவரது பிள்ளைகளை நல்லபடியாக வளர்ப்பதற்கு! ஒரு பறவை எப்படித் தனது குஞ்சுப் பறவைகளுக்கு பறக்கக் கற்றுத்தருகிறதோ, அதுபோலத்தான்.

ஒரு அம்மாவுக்கு இருக்கிற எல்லா பலவீனங்களும், பயங்களும், தடுமாற்றங்களும் எனக்கும் உண்டு. ‘ம்மா! இன்னிக்கு கராத்தே க்ளாஸ்ல மூணு ஸ்டூல் உயரத்துல இருந்து குதிச்சோம்’, என்று மகள் சிரித்துக்கொண்டே சொல்லும்போது எனக்கு உயிரே இருக்காது. ஆனால் என் எந்தப் பயமும் மகள் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உறுதியாக இருக்கிறேன். அவருக்கு என்ன முடியுமோ எவ்வளவு முடியுமோ அதனுடைய எல்லைவரை சென்று வாழ்ந்துபார்க்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் அமைத்துத் தரத்தான் நான்.

முதல்முறை பார்க்கும்போது நண்பரொருவர் கேட்டார், “பாப்பா எத்தனாவது படிக்கிறீங்க? எங்க படிக்கிறீங்க? ஸ்கூல் எப்ப முடியும்? எப்ப வீட்டுக்கு வருவீங்க? யாரு கூட்டிட்டு வருவாங்க? வேற யாரெல்லாம் இருக்காங்க வீட்ல?”

நான் அதுவரை என்னைச் சுற்றியெழுப்பியிருந்த எல்லாவற்றையும் உடைத்துச் சொன்னேன் “நான் சிங்கிள் பேரன்ட்.”

இதுபோல எத்தனை பேரிடம் இதேவிதமான கேள்விகளை மகளும் எதிர்கொண்டிருப்பார். ஒற்றைப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் சந்திக்கிற பிரச்சினைகளும் சாதாரணமானதில்லை. வெளியாட்களின் கேள்விகளை வயதுக்குமீறிய பொறுப்புடனும், கவனத்துடனும் சமாளிக்க வேண்டும்.

Photo by guille pozzi on Unsplash

அம்மா கோபப்பட்டால், அம்மாவிடமேதான் சமாதானம் செய்துகொள்ள வேண்டும். எனக்கும் மகளுக்குமான பிணக்குகளைத் தீர்த்துவைத்ததில் ஸ்கூட்டருக்கும் மொட்டைமாடிக்கும் சம அளவில் பங்குண்டு. டக்கென்று ஸ்கூட்டரில் வெளியே கிளம்பி விடுவோம் அல்லது மொட்டைமாடியில் பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்போது நிலாவும் உடனிருந்தால் இன்னும் விசேஷம்!

கடந்த மே மாதம் என் மகள் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். டேக்வொன்டோ சேர்ந்திருக்கிறார், இசைவகுப்புக்குப் போகிறார். இவ்வளவையும் மகிழ்வாக உணர்ந்து செய்கிறார். அவர் இதுவாகவோ அதுவாகவோ உருவாகியே தீரவேண்டும் என்று இல்லை, வாழ்வை உணர்ந்து முழுமையாக வாழ்பவராக வளர்ந்தால் போதும்.

இந்த வாழ்க்கை, நாடகத்தைவிட அதிக நாடகத்தனம் கொண்டது. இதைத் துளித்துளியாக ரசித்துவாழத் திட்டமிடல் வேண்டும். ஒழுங்கமைத்து நிதானமாக வாழ – திரும்பத் திரும்ப ஒத்திகைகள் வேண்டும். சிறுசிறு பயிற்சிகளாக, அது பயிற்சி என்பதே தெரியாத வகையில் வாழ்வை மகிழ்வாக வாழப் பழகுகிறோம்.

நான் என்பது பலமும், பலவீனங்களும் நிறைந்தது. என் பலத்தைச் சொல்லித் திரிவதல்ல. என் பலவீனப் பகுதியையும் தெரிவிக்க முடிவதே அசல் ஆளுமை. கவிஞராக, இடையே நிகழ்ந்த பெரிய விபத்திற்குப் பிறகும் கராத்தேயைப் பிடிவாதமாகக் கற்று ப்ளாக்பெல்ட் வாங்கியவளாக… இப்படித்தான் என்னை எல்லோருக்கும் தெரியும். யாரும் அறியாத என் முகம் இது.

கட்டுரையாளரின் பிற படைப்பு:

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.