பொருள் 8

ஒரு நாள் தன் தந்தை ஜீயஸின் நெற்றியில் இருந்து உதித்தாள் அத்தீனா. பிறக்கும்போதே நல்ல வளர்ச்சியடைந்த ஒரு பெண்ணாக, ஆயுதம் தரித்த கடவுளாக காணப்பட்டாள் அத்தீனா. அறிவு, துணிச்சல், நாகரிகம், சட்டம், நீதி ஆகியவற்றின் கடவுளாக அத்தீனா அறியப்பட்டாள். அவள் திருமணமே செய்துகொள்ளவில்லை என்பதால் கன்னித் தெய்வம் என்றும் கிரேக்கர்கள் அவளை அழைத்தனர்.

ஜீயஸின் நெற்றியிலிருந்து உதிக்கும் அத்தீனா- ஆம்ஃபோரா ஜாடி ஓவியம், கிபி 5ம் நூ., wikipedia

மெடூசா, அத்தீனாவின் பிரத்யேகமான பெண் பூசாரி. உங்களைப் போலவே நானும் என் வாழ்நாள் முழுக்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பேன் என்று அத்தீனாவிடம் முழங்கி, சபதமேற்றவள் மெடூசா. சிறந்த அழகி. குறிப்பாக அவளுடைய தலைமுடியை ஆண்கள், பெண்கள் அனைவரும் பொறாமையுடன் பார்த்துப் பார்த்துப் பூரிப்பார்கள். காரணம், அதிசயத்திலும் அதிசயமாக மெடூசாவின் தலைமுடி தங்க நிறத்தில் மினுமினுக்கும். அவளுடைய விழிகள் காண்போரை மயக்கி ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை.

ஒரு நாள் கடல் கடவுளான பொசைடன் மெடூசாவின் அழகில் மயங்குகிறான். ஆனால், மெடூசா பொசைடனை ஏற்க மறுக்கிறாள். ‘ஒருவரையும் மணம் செய்துகொள்ள மாட்டேன் என்று என் கடவுளான அத்தீனாவுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். எனவே, என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று கேட்டுக்கொள்கிறாள். ஆனால், பொசைடன் விடாமல் மெடூசாவை வட்டமிட்டுக் கொண்டிருந்தான். மீண்டும் மீண்டும் மறுத்து பார்த்த மெடூசா ஒரு கட்டத்தில் பொசைடனை மணந்துகொள்ள சம்மதித்துவிடுகிறாள். ‘இனியும் பொறுக்க வேண்டாம்’ என்று இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.

பொசைடனும், மெடூசாவும், ஓவியம்: ஐலிசி, devianart

இதைக் கேள்விப்பட்ட அத்தீனா கடும் சினம் கொள்கிறாள். வாக்கு தவறிவிட்ட மெடூசாவுக்குத் தக்க தண்டனை அளிக்க முடிவெடுக்கிறாள் அத்தீனா. மிகக் குரூரமான ஒரு சாபத்தை அவளுக்கு இடுகிறாள். பொசைடனை மயக்கியது மெடூசாவின் அழகு அல்லவா? எனவே, அதைக் குறிவைத்து அழிக்கிறாள் அத்தீனா. மெடூசாவின் அழகிய தங்க நிற தலைமுடி ஒவ்வொன்றும் விஷப் பாம்பாக மாறுகிறது. அமைதியான, அழகிய அவள் விழிகள் ரத்தச் சிவப்பாக மாறிவிடுகின்றன.

அவளுடைய வெண்மேனி அருவெறுப்பூட்டும் பச்சை நிறத்தைப் பெற்றுவிடுகிறது. இனி மெடூசாவைப் பார்ப்பவர்கள் கனவிலும் அவளிடம் மயங்க மாட்டார்கள். இனி மெடூசா என்றால் அச்சமும் அருவெறுப்பும்தான் ஆண்களின் உள்ளத்தில் தோன்றும். ஒரு காலத்தில் அவள் ஓர் அழகிய தேவதையாக இருந்தாள் என்பதே ஒருவருக்கும் இனி தெரியாமல் போய்விடும்.

எது அவளுக்கு இதுவரை பெருமிதத்தையும் பூரிப்பையும் அளித்ததோ அதுவே இப்போது ஒரு தண்டனையாக மாறிவிடும். அந்தத் தண்டனையை அவள் ஒவ்வொரு விநாடியும் அனுபவிப்பாள்.  அவள் மட்டுமல்ல, அவளை மணந்த பொசைடனும்தான். அவன் மட்டுமல்ல, இனியும் அவளைக் கண்டு மயங்கும் ஒவ்வொரு ஆடவனும்தான்.

அத்தீனாவின் சாபத்தால் உருமாறிய மெடூசா, The Whit Online

அத்தீனா எதிர்பார்த்ததைப் போலவே துடிதுடித்துப் போகிறாள் மெடூசா. தன்னுடைய கோரமான உருவத்தைக் காணச் சகியாமல் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள். அவளைக் காண்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் முகத்தைத் திருப்பிப் கொள்கிறார்கள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைவரும் அவளை வெறுத்து விரட்டுகிறார்கள். எங்கும் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் மெடூசா மனம் உடைந்து போகிறாள். 

வாளில் தெரியும் பிம்பம் கண்டு மெடூசாவின் தலையைக் கொய்யும் பெர்சியஸ், ArtStation

இன்னொரு விதமாகவும் மெடூசா சபிக்கப்பட்டிருந்தாள். அவள் யாரைப் பார்த்தாலும் அவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள். இறுதியில் பெர்சியஸ் என்னும் வீரன் மெடூசாவின் விழிகளை நேரில் பார்க்காமல் தன் வாளில் தெரிந்த பிம்பத்தை வைத்து அடையாளம் கண்டு, கணப்பொழுதில் அவளை வெட்டிச் சாய்த்துவிடுகிறான். மெடூசாவின் தலை துண்டாகி விழுகிறது. அப்போதும் அவள் தலையில் இருந்த பாம்புகள் நெளிந்துகொண்டும் சீறிக்கொண்டும்தான் இருந்தன.

மெடூசா பற்றிய இதிகாசக் கதைகளில் இது ஒன்று மட்டுமே. இன்னொன்றின்படி, பொசைடனை மெடூசா நிராகரித்துவிடுகிறாள். கோபம் கொண்ட பொசைடன் ஏதென்ஸ் கோயில் ஒன்றில் வழிபட்டுக்கொண்டிருந்த மெடூசாவை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். இதைக் கண்டு கொதித்தெழுந்த அத்தீனா (ஏதென்ஸ் என்னும் பெயர் இவளிடமிருந்து வந்ததுதான்) மெடூசாவைச் சபித்து விடுகிறாள். அவள் தலைமுடி பாம்பாக மாறுகிறது. அவளைப் பார்ப்பவர்கள் கல்லாகிறார்கள். இறுதியில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது.

சரி, மெடூசா செய்த தவறுதான் என்ன? எதற்காக அவள் அத்தீனாவால் சபிக்கப்பட வேண்டும்? முதல் இதிகாசத்தின்படி, காலம் முழுவதும் மணம் செய்து கொள்ளமாட்டேன் என்னும் முடிவை மாற்றிக்கொண்டு தனக்கு விருப்பப்பட்ட ஒருவரை (அதுவும் கடவுளை!) மணந்து கொள்கிறாள். அதற்கு இப்படியொரு குரூரமான தண்டனையா? இரண்டாவது கதையில் கடவுளால் துரத்தப்பட்டு, கடவுளால் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அதற்கும் அவளேதான் காரணமா? அழகாக இருப்பதற்கான தண்டனை அழகை இழந்துவிடுவதா? இறுதியாக, மெடூசாவை ஒரு கோரமான அரக்கியாகவும் அபாயகரமான சூழ்ச்சிக்காரியாகவும் உருமாற்ற வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

எலெனெ சிக்ஸோ (Helene Cixous) என்னும் பிரெஞ்சு தத்துவவியலாளர் ‘மெடூசாவின் புன்னகை’- The Laugh of the Medusa என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதியிருக்கிறார். ( 1975ம் ஆண்டு எழுதபட்ட கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே வாசிக்கலாம்). அதில் மெடூசாவின் தொன்மக்கதை எப்படி உருவாகியிருக்க வேண்டும் என்பதையும் அதை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் விவாதித்திருக்கிறார். சிக்ஸோவைப் பொறுத்தவரை மெடூசா ஓர் இயல்பான பெண். அவளைப் பார்ப்பவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள் என்பது நிச்சயம் ஆண்களின் கற்பனையாகத்தான் இருக்க வேண்டும்.

எலெனெ சிக்சோ

கடவுளை விரோதித்துக்கொண்டு தனக்கு விருப்பமான ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட மெடூசாவின் துணிச்சலைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்தான் அவளை ஆயிரம் பாம்புகள் நெளியும் அரக்கியாக உருமாற்றியிருக்க வேண்டும். இதை நாம் நம்ப வேண்டியதில்லை என்கிறார் அவர். இதுபோன்ற தொன்மக் கதைகள் ஆண்களால் உருவாக்கப்பட்டவையாக இருப்பதால் பெண்கள் அவற்றை அப்படியே நம்பிவிடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கிறார்.

‘நீங்கள் எதற்கும் அஞ்சாமல் உங்கள் கனவைப் பின்தொடருங்கள். உங்கள் பலத்தை நம்புங்கள். மெடூசா போன்ற தொன்மக் கதைகளை உங்களிடம் யாராவது சொன்னால் அதை அப்படியே ஏற்காமல், ஆழமாகச் சென்று ஆராயுங்கள். வெளிப்படையாக விவாதியுங்கள். தொன்மங்களில் உள்ள குறைபாடுகளையும் முரண்களையும் சுட்டிக்காட்டுங்கள். மெடூசாவைப் பார்க்காதே என்று ஆண்கள் எச்சரித்தால், அவளைக் கண்கொண்டு பாருங்கள். நிச்சயம் கல்லாக நீங்கள் மாறிவிட மாட்டீர்கள். உண்மையில், அவள் முகத்தை நீங்கள் கண்டால் அழகைத்தான் தரிசிப்பீர்கள். மெடூசா அழகானவள். அவள் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.’

மெடூசாவின் தலையைச் சீவும் வீரனான பெர்சியஸ் அழகிய பெண்களை மீட்பவன் என்றும் பல ‘பெண் அரக்கியர்’களைக் கொன்றொழித்தவன் என்றும் புகழப்படுகிறான். அழகிய மெடூசா அனைவரையும் ஈர்க்கிறாள். ஆனால், அழகைத் தொலைத்த பிறகு அவள் அவமானம் தாங்காமல் ஓடத் தொடங்குகிறாள்.பிறகு கொல்லப்படுகிறாள்.

ஒரு பெண்ணுக்கு அவள் அழகே பலம், அழகே பலவீனம் என்பதை மெடூசா தொன்மக் கதை அழுத்தமாக உணர்த்துகிறது. அழகைத் தவிர ஒரு பெண்ணிடம் இருந்து வேறொன்றையும் எதிர்பார்க்கவில்லை சமூகம். தன் அழகை இழப்பது தவிர வேறொரு துயரம் பெண்ணுக்கு நிகழ்ந்துவிடப் போவதில்லை. அவளுடைய  மேலான கவலையாக இதுவே இருக்க வேண்டும்.

ஓர் ஆணைத் தவிர வேறு யாரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடியும், சொல்லுங்கள். அதனால்தான் இந்தக் கதைகளை அடியாழம் சென்று ஆராயுங்கள் என்கிறார் சிக்ஸோ. மெடூசாவின் தலை துண்டிக்கப்படும்போது அவள் உடலிலிருந்து பெகாசஸ் என்னும் வெண் நிற குதிரை ஒன்று வெளிப்படுகிறது. நீண்ட சிறகுகளைக் கொண்டிருக்கும் பறக்கும் குதிரையைப் போல மெடூசாவிடம் இருந்து மேலும் பல உண்மைகள் வெளிவரக்கூடும். அந்த உண்மைகள் அழகானவை.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பு:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.