ஆச்சிக்கு 18 வயதில் திருமணமாகி, 9 வருடங்கள் கழித்துப் பிறந்தவர் அம்மா. அம்மாவைக் கருவுற்றிருந்த போது தாத்தாவும், ஆச்சியும் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

ஆச்சிக்கும், தாத்தாவுக்கும் ஒரே வயது. சுதந்திரத்திற்கு மறு ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலம். தாத்தா பாலம், முன்னணி என்ற இதழ்களை நடத்திவந்தார். அடக்குமுறைக்கு எதிராக கவிதைகள், கட்டுரைகள் எழுதிவந்ததால் கைது உத்தரவு இருந்தது. இருவரும் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். பகல் முழுவதும் அடைந்து இருப்பார்கள். தகவல் கிடைத்ததும் இரவில் இடம் பெயர்வார்கள். எல்லோரும் ஆண்கள். ஆச்சி மட்டுமே பெண்.

தாத்தா கவிஞர் குயிலன், ஆச்சி மங்கலநாயகி

ஏழாவது மாதத்தில் அன்றைய ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் கல்யாணசுந்தரமும் மற்ற தோழர்களும் சேர்ந்து கட்டுச் சோறு செய்து, ஆச்சியின் வளைகாப்பை நடத்தியதைப் பற்றி கூறும்போதெல்லாம் கண்ணைத் துடைத்துக்கொள்வார், ஆச்சி. பிறகு சிலரின் உதவியோடு ஆச்சியை அவர் கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட்டனர். அதனாலோ என்னவோ அம்மா எப்போதும் ‘அடங்கமறு’ பார்ட்டியாகவே இருந்தார்!

’சித்திரை மாசம் சிம்ம ராசியில் பிறந்து, என்னைப் பாடா படுத்துறா’ என்று திட்டுவார் ஆச்சி. உறவினர் பெண்களுக்கு அம்மாவின் நகையை அணிவித்து விசேஷங்களுக்கு அழைத்துச் சென்றால், கூட்டத்தின் நடுவே, ‘ எனக்கு அந்த நகையைக் கழற்றிக் கொடு’, என்று அடம்பிடிப்பார் அம்மா. அதற்குப் பயந்து அம்மாவின் நகையை யாரும் வாங்க மாட்டார்கள்.

அம்மா தன் சகோதரன் சகோதரியுடன்

தமிழை எவ்வளவு நேசித்தாரோ அதே அளவு கணிதத்தை வெறுத்தார். கணக்கு டீச்சர்களுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். கணக்கு நோட்டில் ஓர் எழுத்துக்கூட எழுத மாட்டார். அதற்காகப் பயப்படவும் மாட்டார். அவருடன் மல்லுக்கு நின்று முடியாமல் அவர் இருக்கும் திசை பக்கமே திரும்ப மாட்டார்கள். தையல் ஆசிரியை திட்டியதற்காக அவருடைய நீளமான ஜடையின் கீழே மூன்று அங்குலம் முடியை வெட்டிக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, அதைச் செய்தும் காண்பித்தாராம் அம்மா.

திருமண வயதில் டாக்டர், என்ஜினீயர் என்று மணமகன்களைத் தேட, ’என்னை மீறி யாராவது மாப்பிள்ளைப் பார்த்தீங்கன்னா அவன் தலையில் கல்லைப் போட்டுவிடுவேன்’, என்றார். அதையும் மீறி ஓர் என்ஜினீயர் மாப்பிள்ளையை வீட்டில் பெண் பார்க்க உட்கார வைத்து அவர் புகழ் பாடியபோது, ஆச்சியைப் பார்த்து, ‘பிடிச்சிருந்தா நீயே கட்டிக்கொள்’, என்று அதிர்ச்சி கொடுத்தார். பிறகு தான் விரும்பியவரையே கல்யாணம் செய்துகொண்டு, அண்ணனையும் என்னையும் பெற்றெடுத்தார்.

அம்மா கவிதா, அப்பா நச்சினார்க்கினியன்

அம்மா தைரியம் மிக்கவர். இருளைப் பற்றிய பயம் ஏற்படும் போதெல்லாம், “ஒன்றுமில்லை, வெளிச்சமின்மையே இருள். நம்மைச் சுற்றி இருப்பவை பகலில் இருந்தது போன்று அப்படியேதான் இருக்கிறது. வெளிச்சம் இல்லை. ஒரு விளக்கை ஏற்றினால் மறையக்கூடியது”, என்பார்.

வெளிச்சத்தைக் காட்டிலும் இருட்டு நேர்மறையானது; அமைதியானது, என்பார். மனிதர்கள் உறங்கும் போது அழகானவர்கள். எதிர்மறை எண்ணங்கள் இருப்பதில்லை என்பார். எதைப் பார்த்துப் பயப்படுகிறோமோ அதை ஒரு முறை எதிர்கொண்டால் போதும், பயம் இருக்காது. ஆகவே சிறு வயதிலேயே இருட்டு, தனிமை பயம் போய்விட்டது.

அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில் பிடிக்கும். ஆனால், கூட்டம் பிடிக்காது. சடங்குகள், சம்பிரதாயங்கள், காலம், நேரம் மீது நம்பிக்கை கிடையாது. மனிதர்கள் தங்கள் நேர்மையற்ற தன்மையை, பயங்களை அதில் மறைத்துக்கொள்ளவே உண்டாக்கி இருக்கிறார்கள் என்பார். எனவே திருவிழா காலங்களில் பெண்கள் கோயில்களுக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்லும் போது, இவர் குழந்தைகளுடன் ஆற்று மணலில் அமர்ந்து கதை சொல்லிக்கொண்டிருப்பார். சிறந்த கதை சொல்லி. குழந்தைகளை மிகவும் நேசிப்பார். யாரேனும், ’ஏ கவிதா! ஒரு நல்ல நாளில்கூடக் கோயிலுக்கு வரக்கூடாதா?’ என்றால், ‘ தெய்வங்களுடன்தான் அமர்ந்திருக்கிறேன்’, என்பார்.

என் குழந்தைப் பருவ இரவுகள் ஆசிர்வதிக்கப்பட்டவை. அம்மாவின் மீது கை கால்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, அவர் மார்பின் மீது முகத்தை வைத்து சிறிது அண்ணாந்து பார்த்தபடி கதை கேட்டுத்தான் உறங்குவேன். அம்மாவின் பிரத்யேக வாசனையுடன் அந்த மார்பு, வயிற்றின் கதகதப்பில் ஒடுங்கியபடி, அவர் விவரிக்கும் பரந்த காடும், விலங்குகளும், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியும், மழையும், நெடிதுயர்ந்த மலைகளும், நிலவின் குளிர்ச்சியும், சூரியனின் வெப்பமும், குருதி கொப்பளிக்கும் போர்க் களங்களும் மனக்கண் முன் விரிந்தபடியே உறங்கும் சுகமிருக்கிறதே… உலகின் அதிகபட்ச போதை அதுதான்.

அது திருவிழாக்காலங்களில் இரட்டிப்பாகும். உறவினர் குழந்தைகள் இல்லையென்றால் அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளை அழைத்துச் செல்வார். அங்கு நடக்கும் நாடங்களோ இன்னிசைக் கச்சேரிகளோ திரைப்படங்களோ எங்களை ஈர்க்காது. அம்மாவின் கதைதான். நிலவு வெளிச்சத்தில் ஆற்றின் மணற்பரப்பு மட்டுமே சற்று வெள்ளையாகத் தெரியும். மனிதர்கள் எந்த நிறத்தில் இருந்தாலும் ஒரே நிறம்தான். முகம்கூடத் தெரியாது. குரல்கள் மட்டுமே. எப்பொழுதும் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு எதிர்த் திசையில்தான் செல்வோம். ஒலி பெருக்கிகளின் சப்தங்களோ, மனிதர்களின் சலசலப்போ அம்மாவைப் பாதித்தது இல்லை. அந்த இருளில்கூட, கதையின் காட்சிகளை ஒரு திரைப்படம் போல் கண் முன்னே ஓடச் செய்வார். யார் எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாது, முடிந்ததும் எல்லோரையும் இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவார்.

நானும், அண்ணனும்

ராமாயணம், மகாபாரதம், தெனாலிராமன், ஈசாப், கிருஷ்ண தேவராயர் அப்பாஜி, முல்லா, சீன, ரஷ்ய நாடோடிக் கதைகள், அரேபிய இரவுகள், சின்னச் சின்னச் சிரிப்புப் கதைகள்… அளவே இல்லை!

அவர் சொல்லும் ராமாயணம், மகாபாரதம் முன்பு இப்போதுள்ள தொலைக்காட்சித் தொடர்களால் அருகில்கூட வர முடியாது.

நான் காணும் சூரியோதத்தையும் மழையையும் வெயிலையும் மட்டுமல்ல, காணாத ஸ்டெப்பி புல்வெளிகளையும், அரேபிய பாலைவனங்களையும், சீன நிலப்பரப்புகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவரும் அவற்றைப் பார்த்ததில்லை. ஆனால், தான் படிக்கும் போது உணர்ந்த காட்சிகளை, கேட்பவருக்குக் கடத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது.

ஜராசந்தன் பீமசேனன் சண்டையில் வெற்றி பெற்ற பீமனுக்காகக் கைதட்டி இருக்கிறேன். திரௌபதியுடன் கோபப்பட்டிருக்கிறேன், சீதையுடன் மானைத் தேடியிருக்கிறேன். இயேசுவின் சிலுவைக் காட்சிக்குக் கண் கலங்கி இருக்கிறேன். தெனாலிராமனின் புத்திசாலித்தனத்தை வியந்திருக்கிறேன். கலிங்கத்துப் பரணியில் போர் முடிந்ததும் மாண்டு கிடக்கும் மானிடரின் ரத்தம் குடிக்க வரும் பேய்களுக்குப் பயந்து அம்மா மார்பில் ஒண்டியிருக்கிறேன். அவரின் பிரத்யேக தலைவெட்டி கனகசுப்பன் கதையில் தலைவெட்டி தான் திருடிய பெட்டிக்குள் கனகசுப்பன் இருப்பதை அறியாமல் தலையில் வைத்துக்கொண்டு மூச்சிரைக்க ஓடும்போது விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அத்தனை கதைகள் கேட்ட எனக்குக் கண்டிப்பாக அவர் போல் ஒரு கதை சொல்ல முடியாது. அற்புதமாக ஓவியம் வரைவார். கோலம் போடுவார். விருந்தினர்களைக் கண்டால் பலவித உணவு வகைகளை அளவுக்கு அதிகமாகச் செய்து வைத்து, ஆசையாகப் பரிமாறுவார்.

தன்னை சுற்றி இருப்பவர்களின் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடிந்தவருக்கு, தன் மீது அன்பு செலுத்தியவர்களுக்கு ஆறுதல் படுத்த முடிந்தவருக்கு, தன் உடல் நிலை மீது ஏனோ அக்கறை இல்லாது போயிற்று.

அம்மாவிற்குப் புத்தகம் படிப்பதும் பாட்டுகள் கேட்பதும் பொழுது போக்கு இல்லை. இவற்றுக்கு அடுத்தபடியாகத்தான் உணவே! புத்தகம் படிக்கும் போது பாட்டு கேட்க மாட்டார். வேலை செய்யும் நேரம் முழுக்கப் பாட்டு கேட்பார். சென்னை வந்து இறங்கியதும் அப்பாவிடம் கேட்டது ட்ரான்ஸிஸ்டர் தான். அன்று மாலையே அப்பா ஒரு சாம்பல் நிற வானொலிப் பெட்டி வாங்கி வந்தார். வார் எல்லாம் வைத்து தோள் பை போல் இருந்தது. குழந்தையின் துள்ளலுடன் வாங்கிய பின், அம்மாவின் அங்கமாக ஆனது. சில பாடல்களைக் கண்களில் நீர் வராமல் கேட்டது இல்லை. குறிப்பாக ’கண்ணனின் சன்னதியில்’, ’சரவணப் பொய்கையில் நீராடி’ அவர் பாட்டை ரசித்துக்கொண்டிருந்தால், நான் அவரைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். சில நேரம் திரும்பி, என்னடா என்று புருவங்களை உயர்த்திக் கேட்பார். ’ஏன் அழறீங்க?’ என்றால் கண் சிமிட்டி கண்ணீரைத் துடைக்காமலே சிரிப்பார்.

கொல்லைப் புறத்தில் துணி துவைத்து காயப்போடும் போதும் தோளிலோ கல்லின் மீதோ ட்ரான்சிஸ்டர் இருக்கும். அம்மா துணி துவைக்கும் போது அருகில் அமர்ந்திருக்கும் என்னிடம் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். சின்ன வயது புரியுமா என்றெல்லாம் யோசிப்பது இல்லை. காரணம் அவருக்கு அக்கம் பக்கம் தேவைக்கு அதிகமாகப் பேசிப் பழக்கம் இல்லை. அம்மாவின் இளம் வயதில் வீட்டின் பின்புறம் ஒரு பெண் இருந்ததாகவும் அவருக்குத் துணி துவைக்கும் போதும் குளிக்கும் போதும் உரக்கப் பாடும் பழக்கம் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

இருவரும் பார்த்ததில்லை, மதிலுக்கிடையில் பேச்சுகள் மட்டுமே. பெயர் ரத்னா. ’தன்னைக் கொடுத்து என்னை எடுத்துப் போனவன் போனாண்டி’ என்ற பாடலை அவர் பாடினால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். தினமும் அவரைப் பாடச் சொல்லிக் கேட்பேன். அவர் அந்த வீட்டை விட்டுப் போன பிறகும் துவைக்கும் நேரத்தில் அந்தப் பாட்டு காதில் கேட்டுக்கொண்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை அது சுசீலாவின் பாட்டு அல்ல, ரத்னாவின் பாட்டு என்று அம்மா கூறும்போது முகம் அறியாத அந்த ரத்னாவை உருவகம் செய்து கொண்டிருப்பேன்.

ஒரு முறை வீட்டு உரிமையாளர் வயதான பெண்மணி அம்மாவிடம், ’பெண்கள் இந்த மாதிரி எப்போதும் பாட்டு கேட்பதும் படிப்பதும் தவறு’, என்று ஆரம்பித்தார். அம்மா அமைதியாகத் திரும்பி, ’உங்களின் நன்னடத்தைச் சான்றிதழ் கேட்டேனா?’ என்றார். பாட்டியின் முகம் மாறிவிட்டது. அக்கம் பக்கம் புறம் பேசுவது போல் இது அத்தனை மோசமான காரியம் இல்லை என்றார்.

அம்மா வீட்டில் இருந்தாலும் அவ்வப்போது கண்ணதாசன் பதிப்பகத்தில் வேலை செய்துகொண்டிருந்த தம்பியிடம் கேட்டு, பிழைத் திருத்தும் வேலை செய்தார். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஒரு பாகம் அவர்தான் பிழைத் திருத்தம் செய்தார். அதில் பணம் கிடைக்கும். அப்பா சட்டையைக் கழற்றிப் போடும் போதெல்லாம் அதில் இருக்கும் சில்லறைகளை எடுத்துக்கொள்வார். அப்பா அம்மாவிடம் கொடுக்கும் பணத்திற்குக் கணக்கு எதுவும் கேட்டது இல்லை.

உடல்நிலை சரியில்லாத அம்மா ஒருநாள் எங்களைத் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு பிறகு அம்மாவின் பொக்கிஷமான ஒரு பச்சை மரப் பெட்டியைத் (அவர் இருக்கும் வரை அதைத் திறப்பதற்கு அனுமதி இல்லை.) திறந்து பார்த்தபோது, கல்யாணச் சேலை, எங்கள் கெண்டிகள், திருப்புகழ், கலிங்கத்துப் பரணிகளுக்கு இடையில் ஒரு சில்வர் டப்பா இருந்தது. அதிலிருந்த ரூபாய்களை என்ன செய்யலாம் என்று நானும் அண்ணனும் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு டேப்ரெக்கார்டர் வாங்கலாம் என்றார் அப்பா.

இன்று வரை அம்மாவின் விருப்பப் பாடல்களை நான் பார்க்க விரும்பியதே இல்லை. அது என் பிரத்யேக கேமராவில் (கண்கள்) படம்பிடிக்கப்பட்டு, பத்திரமாக இருக்கிறது என்பதால்!

கட்டுரையாளரின் முந்தைய படைப்பு:

படைப்பு:

ரமா கவிதா

தீவிர வாசிப்பாளர். கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஓவியத்திலும் நாட்டம் உண்டு. எதையும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்.