ஞானியார்தோப்பில் யாருக்கு சைக்கிள் வேண்டும் என்றாலும் ‘ஆல் இன் ஆல்’ துரை அண்ணன் கடையிலிருந்துதான் வாடகை சைக்கிள் எடுக்கவேண்டும். அரை மணி நேரத்துக்கு ஐம்பது பைசா, ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய். அம்மாவிடம் எவ்வளவு கெஞ்சியும் அந்த ஒற்றை ரூபாயை வாங்க முடியாத பால்யம் என்னுடையது. தெருவில் யாராவது துரை அண்ணன் கடையில் சைக்கிள் வாங்கி ஓட்டமாட்டார்களா என்று ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் காத்திருப்போம். அது தான் அம்மாவும் அப்பாவும் ஓய்வெடுக்கும் நேரம்! வீட்டு வாசற்படியில் மாரி, சகாயம், செல்லியக்கா என்று யாராவது ‘லேடீஸ்’ சைக்கிள் வாடகைக்கு வாங்கி ஓட்டினால் அன்றைய தினம் கொண்டாட்டம் தான். “ஏப்ள மாரி, எனக்கு ஒரே ஒரு ரவுண்ட் குடேன்”, என்று கெஞ்சிக் கேட்டு, கடைசியில் மாரி மனம் மாறி சைக்கிளை என் கையில் தந்தால் தான் உண்டு.

முதல்முறை வாடகை சைக்கிள் ஓட்டும் போது கால் பெடலை எட்டவில்லை. ஆஃப் பெடல் போட்டும், தள்ளிக்கொண்டும் ஓட்டிய லட்சணத்தில் செயின் அவிழ்ந்து சைக்கிள் தரதரவென இழுத்தது. ” ஏட்டி..கோட்டிக்காரி, சைக்கிளே ஓட்டத் தெரியாம எதுக்குத்தான் அச்சனத்தி பண்ணி வியாங்குனியோ, போ”, என்று மாரி அலுத்துக்கொண்டாள். அடுத்த சைக்கிள் முதலாளி என் தாய்மாமன். “டேய் டேய்…ப்ளீஸ் சைக்கிள் குடேன், நான் பழகிக்கிறேன்”, என்று கெஞ்சிய கெஞ்சல்கள் எதுவும் என்னை விட 8 வயது மூத்தவனிடம் எடுபடவில்லை.

ஒரு நாள் ஹால் மூலையில் சார்த்தப்பட்டிருந்த சைக்கிளை ஆர்வக்கோளாறில் நான் ஸ்டாண்டிட்ட இடத்திலேயே ஓட்ட முயல, சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்த தம்பியின் மண்டையில் சைக்கிள் விழுந்து, சீட்டின் அடியிலுள்ள ஸ்க்ரூ அவன் நெற்றியை குத்திக்கிழித்து, அவனுக்கு அவசர தையல் நீலகண்டன் டாக்டரிடம் போடப்பட்டது. அம்மா அன்று தான் எனக்கு யாருமே சைக்கிள் தரக்கூடாது என்று தடா போட்டாள்.

எப்படியாவது சைக்கிள் ஓட்டியே தீர்வது என்ற வெறி ஏற்பட்டது டான்ஸ் கிளாசிலிருந்து வாரம் இருமுறை இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வரும்போது தான். இரவு 8 மணிக்கு சலங்கை ஜல்ஜல்லென பையில் குலுங்க, கைவீசி வீசி டான்ஸ் டீச்சர் வீடிருக்கும் மூணுலாம்பு ஸ்டாப்பிலிருந்து போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப் வரை நடை. ஏற்கனவே பயிற்சியில் தொய்ந்து போன கால்கள் அந்த நடையில் இன்னும் பலவீனமாகத் தடுமாறும்.

அதே போல தினமும் காலை 6 மணிக்கு செல்லும் ஹிந்தி வகுப்புக்கு ஜிங்குஜிங்கென்று ஓடும் அவசியமும் உரைக்க, அம்மாவிடம், ” மா..எனக்கு ஒரு சைக்கிள்”, என்ற பாட்டு பாடத்தொடங்கினேன். ஒரு முறை வெறிகொண்ட தெருநாய் ஒன்று ஜல்ஜல் சத்தத்திற்கு என்னை விரட்ட, வி.கே.புரத்து வீதிகளில் இரவு 8 மணிக்கு பி.டி.உஷாவாக நான் ஓடிய அழகை ஊரே கண்டு சிரித்தது.

மே மாதம் ஒன்றில் பேப்பர் திருத்தும் பணி முடிந்ததும் அம்மா சைக்கிள் வாங்கித்தர சம்மதித்தார். பெருமிதம் புரிபடவில்லை. அம்பை விஜயன் சைக்கிள்ஸில் அப்பா பேரம் பேசி, சிவப்பு நிற கேப்டன் சைக்கிள் ஒன்றைத் தேர்வு செய்து வைத்திருந்தார். “லேடீஸ் சைக்கிளா? லேடீஸ் தானே?”, அப்பாவிடம் மீண்டும் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன். நடுவே பார் வைத்த சைக்கிளில் ஏற முயன்று பல முறை தோற்றுப்போன அனுபவம் பேசியது. 900 ரூபாய்க்கு வாங்கப்பட்ட சைக்கிள் பளபளவென கண்சிமிட்டியபடி ஒரு நாள் இரவு வீடு வந்து சேர்ந்தது. ஆச்சி வீடு வரை சைக்கிளை தள்ளிக்கொண்டே போய், வீட்டு முற்றத்து வேப்பமரத்தைச் சுற்றி சைக்கிள் ஓட்டிப் பழகினேன்.

ஆச்சி வீட்டு முற்றம். குற்றாலத்து சீசன் தொடங்கியதும் முன்னெல்லாம் வி.கே.புரத்திலும் சாரல் தொடங்கிவிடும். ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே வெயில் தெரியும். மற்ற நேரம் எல்லாம் சாரலும், மூடாக்குமாய், சிணுங்கிக்கொண்டே இருக்கும். அதன் காரணமாக ஆச்சி வீடு உள்ளிட்ட பல பழைய வீடுகளின் சுற்றுச் சுவர்கள் பாசி படிந்து செங்குத்துத் தோட்டங்களாகக் காட்சி தரும். ஆச்சி வீட்டு முற்றமும் பாசிபிடித்த பச்சை வண்ணத்தில், புசுபுசுவென்ற மென்பாசி படிந்திருக்கும். வழுக்கவும் செய்யும்.

ஆச்சி வீட்டு ஜானி என்னையும் சைக்கிளையும் பார்த்தவுடன் ஆரம்பிக்கும் வள்வள்ளை நான் வெளியேறும் வரை கீறல் விழுந்த ரிக்கார்டு போலத் தொடரும். கூடவே அந்த குட்டிச்சாத்தான் கிளி வேறு. “நிவேதிதா…விழப் போறா..விழப்போறா”, என்று தாய்மாமன் சொல்லித் தந்ததை சரியாகப் பாடும்.

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதே இவ்வளவு சோதனைக்கு இடையில் நடந்த சாதனை தான். ஒற்றை வேப்பமரத்தை சுற்றிச்சுற்றி ஓட்டியதால் தலை கிறுகிறுத்து முதல்முறை விழுந்து தொலைத்தேன். பகபகவென தாய்மாமன் சிரிப்பு காதுகளில் கேட்க, ‘இனி பொறுப்பதில்லை, இனி விழுவதில்லை’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு மணிக்கணக்காக டக்கடித்து, ஓடி, ஏறி என்று பல சர்க்கஸ் செய்து சைக்கிளை லாவகமாக ஓட்டக்கற்றுக்கொண்டேன். கற்றுத் தந்த சித்தியும் கூட சேர்ந்து ஓடி ஓடி களைத்துப் போனார்.

தொலைவு அதிகம் என்பதால், பள்ளிக்கு பள்ளிப் பேருந்தில் மட்டுமே செல்லவேண்டும் என்று வீட்டில் சட்டம் இருந்தது. ஆனால், ஒன்பதாம் வகுப்பு வந்தபோது பள்ளியில் இதற்கு மேல் 9ம் வகுப்பு முதலுள்ள மாணவ மாணவிகளை பள்ளிப் பேருந்தில் ஏற்ற முடியாது என்று சொல்ல, மாட்டிக்கொண்டேன். அரசு/தனியார் பேருந்துகளில் தான் பள்ளிக்குச் செல்லவேண்டும். ரூட் பஸ் போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்பில் கை அசைத்தால் அம்பலவாணபுரம் ஸ்டாப்பில் போய் நிற்பான். டவுன் பஸ்ஸில் அம்பை ஆர்.எஸ்.ஸில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் காட்டுக்குள் நடந்து பள்ளிக்குப் போகவேண்டும். காலை 7.30 பஸ் பிடித்தால், ஆளில்லாத சாலையில் சத்தமாகப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் போகும் என்னைக் காணலாம்!

ஒரு மழை நாள் மாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருந்த பள்ளியில் இருந்து வீடு திரும்ப பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன். ஊர்க்காட்டில் அன்று ஏதோ சாதிச்சண்டை போல. பஸ் வரவில்லை. மணிகணக்காகக் காத்திருந்து அசந்த நேரம் பண்ணையார் வீட்டு கார் என் முன் நின்றது. ” வாயேன் பாப்பா…வீட்ல விட்டுர்றேன்..”, என்ற அவரது வேண்டுகோளுக்கு, ” வேணாம்”, என்று விரைப்பாய் சொல்லி மறுத்தேன். உள்ளூர அச்சம் வேறு. ஒரு வழியாக பஸ் கிடைத்து வீடு வந்து சேர்ந்த பின் அம்மாவிடம் சொன்னதும், பதட்டமானார். அடுத்த நாள் முதல், ‘எக்கேடோ கெட்டு சைக்கிளில் ஒழி’ என்று அனுமதி கிடைத்தது.

hercules cycle

சிவந்திபுரம் வரை தனியே சைக்கிள். அங்கிருந்து வேல்முருகன் என்னோடு இணைந்து கொள்வான். இருவரும் பேசிக்கொண்டே சைக்கிள் மிதிப்போம். என்னவெல்லாமோ கதைகள். பாரதியார் கவிதைகளை சொல்லிக்கொண்டே எதிர்காற்றில் சைக்கிள் மிதிப்பது பிடித்தமானது. பட்டிமன்றம் வைத்துப் பேசிக்கொள்வோம். ஆர்.எஸ். காலனி வாய்க்காலில் தண்ணீர் ஓடிவிட்டால், கைப்பிள்ளையைக் கையில் பிடிக்க முடியாது. சைக்கிளை பார்க் செய்துவிட்டு, ஆகாயத்தாமரை பூப்பறிக்கப் போவேன். வேல் திட்டிக்கொண்டே பின் தொடர்வான்.

அருகம்புல் படர்ந்த இடங்களில் பட்டுப்பூச்சி தேடி இறங்கிவிடுவேன். தேன்பூவைக் கண்டுவிட்டால், குதியாட்டம் தான். பூவைப் பறித்து, தேனுறிஞ்சுவது, தொட்டால்சிணுங்கி கண்ணில் பட்டால், இறங்கி அதைத் தட்டிவிடுவது, தாத்தாப் பூ தலை வெட்டுவது, எருக்கம் பூவை சொடக்கு போடுவது, காட்டு இலந்தை செடியைக் கண்டால் செம்மஞ்சள் உதை பழங்களை முள் படாமல் லாவகமாகப் பறித்துத் தின்னுவது, குன்னிமுத்து பறித்து டப்பாவை நிரப்பிக்கொள்வது, ஊசித்தட்டான் பிடித்து தீப்பெட்டியில் வைப்பது என்று சைக்கிள் பயணம் ஒரு ஊர்வலம் போலத்தான் இருக்கும்.

சைக்கிள் பயணத்தில் தான் முதல் காதல் விண்ணப்பத்தைக் கேட்டதும்…அது கானலாகிப் போன போது அருவிக்கரை தேடிப் பறந்ததும்! பதினொன்றாம் வகுப்புக்கு கிராமத்திலிருந்து சென்னைக்குப் படிக்க வரும்போது, சைக்கிளையும் அப்பாவிடம் கெஞ்சிக்கேட்டு லாரி சர்வீஸில் அனுப்பச் சொன்னேன். அரும்பாக்கம் டூ அண்ணா நகர் ஓராண்டு தனியே செல்வேன். பட்டுப்பூச்சியும் இல்லை, குன்னிமுத்தும் இல்லை. ரோஹினி திரையரங்கை ஒட்டிய பாலத்தை சைக்கிளில் கடக்கும் போது உயிரே இருக்காது. ஆளரவமற்ற பகுதியாக கோரை படர்ந்த கூவம் ஆறு திகிலாகவே இருக்கும். பன்னிரெண்டாம் வகுப்புக்கு வில்லிவாக்கம் பகுதிக்கு குடிபெயர்ந்த பின், சைக்கிள் வில்லிவாக்கம் டூ அண்ணாநகர் ரூட்டில் பறக்கும்.

குளத்தூரிலிருந்து கீதா, பிரபு, வில்லிவாக்கத்திலிருந்து நான், ஐ சி எஃப்ஃபில் இருந்து செந்தா, சுசித்ரா என ஐவர் படை திரண்டு சைக்கிளில் செல்வோம். 7+7…தினமும் 14 கிலோமீட்டர் சைக்கிள் பயணம். நடுவே நாதமுனி தியேட்டர் அருகேயுள்ள சமோசா கடையில் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் சமோசாக்களை சுடச்சுட மொக்கிக் கொள்வோம். பள்ளியில் அன்று நடந்த விஷயங்கள், புதிதாக வந்த திரைப்படம், ஹிந்திப்பட ஹீரோக்கள், பாலஸ்தீன பிரச்னை, உலகக்கோப்பை கால்பந்து என எங்கள் வாய்களில் அகப்படாத உலகப் பிரச்னையே கிடையாது. சில சமயம் ஐ சி எஃப் காம்பவுண்டை ஒட்டி சைக்கிள் ஓட்டுகையில் எழும் எதிரொலி கேட்டு சத்தமாகப் பாடுவதும் உண்டு. ஒருவர் சைக்கிளில் செயின் கழன்று போனாலும் மற்ற நால்வரும் பொறுமையாக நின்று சரிசெய்வதும், ஓட்ட முடியாத சூழலில் அவரை பின்னால் டபுள்ஸ் அடித்துக்கொண்டு, சைக்கிளை இழுத்துக்கொண்டு போவதும் நடக்கும்.

மேல்தட்டு மாணவிகள் கைனடிக் ஹோண்டாவில் பறந்து சென்று எங்களுக்கு முன் சைக்கிள்/பைக் ஸ்டாண்டில் வண்டியை விடும்போது கரகர சத்தத்துடன் விழிக்கும் கேப்டனை பரிதாபமாகப் பார்த்துக்கொள்வேன். வேலைக்குப் போனதும் பைக் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தோன்றியது தான்.

மீண்டும் ஊருக்கு வேலையின்றி வெறுங்கையாய்த் திரும்பியதும் கை கொடுத்தது சைக்கிள் தான். கேப்டன் சைக்கிளின் கேரியரில் சேலைகளை கட்டைப் பையில் வைத்து இன்ஸ்டால்மென்டில் வீடு வீடாகக் கொண்டு விற்றதும், அதே சைக்கிளில் சென்று என் முதல் சேமிப்பான 1000 ரூபாய்க்கு கம்மல் வாங்கியதும் மனதின் ஓரத்தில் தங்கிவிட்ட நினைவுகள்.

ஸ்கூட்டி வந்ததும், சைக்கிள் ஓட்டத்தை நிறுத்தியது. கரூரில் சித்தி வீட்டுக்கு கேப்டன் பயணம் செய்தது. தம்பிகள் ஓட்டிக் கற்கட்டும் என்று அதற்குக் காரணம் சொல்லிக்கொண்டேன். இன்றும் சித்தி வீட்டு ஷெட்டில் ஒரு ஓரமாக கேப்டன் சைக்கிள் நின்றுகொண்டிருக்கிறது. ஒரு வேளை கேப்டன் இல்லாமல் போயிருந்தால், இந்த நுனி நாக்கு ஆங்கிலமும், சரளமான ஹிந்தியும், பரதமும் எனக்குக் கைவராமலேயே போயிருக்கலாம். சைக்கிள் இல்லாமல் நான் பத்தாம் வகுப்பைக் கூடத் தாண்டாமல், கிராமத்தில் யாரோ ஒருவருக்கு இப்போது சம்பளமில்லாத சமையல்காரியாக இருந்திருக்கலாம்.

சைக்கிள் எனக்கு சிறகு தந்தது; என் உலகை விரிவாக்கியது; பாரதியையும், உலகையும் அணுக்கமாக்கியது; நல்ல நட்புகளைத் தந்தது; சில காதல்களை முறித்துப் போட்டது. வாழ்க்கையின் ஓட்டத்தில் ஸ்கூட்டியிலிருந்து ஹோண்டா சிட்டிக்கு நான் மாறிய பின் தான், சைக்கிள் கடையில் பன்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்த துரை அண்ணன் என்ன ஆனார் என்பதைத் திரும்பிப் பார்க்க முடிந்தது.

ஊரே பைக் வாங்கும் அளவுக்கு வந்த பின் துரை அண்ணன் சைக்கிள் கடைக்கு வேலை இல்லையே? நொடித்துப் போனார். வீட்டுக்குள்ளேயே வளைய வருவார். எதிர் வீடு என்பதால் அவ்வப்போது என் தலை தட்டுப்படும் போதெல்லாம் கேட்பார், ” ஏல…நல்லா இருக்கியா? சைக்கிள் ஓட்டுதியா?” இல்லை என்று தலையை ஆட்டி சிரித்து வைப்பேன். துரை பொண்டாட்டி தான் பாவம். பீடி சுற்றி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். புத்திப் பேதலித்த துரை அண்ணனை குழந்தை போலத்தான் பார்த்துக் கொண்டார்.

சைக்கிள் கடை துரை அண்ணன் ஒரு நாள் என் கேப்டன் சைக்கிள் போல கடந்த காலத்துக்குக் கடந்துபோனார். சைக்கிள் என்ற சொல்லைக் கண்டாலே கேப்டனும், துரை அண்ணனும் மனதில் நிழலாடுவதைத் தவிர்க்கமுடிவதில்லை.

கடந்த முறை ஊருக்குப் போன போது துரை பொண்டாட்டி கன்னம் தடவி முத்தமிட்டுச் சொன்னாள், “ஏல…நல்லாருக்கியா? இருக்குறவர என்னத்தையாவது பேசிக்கிட்டே கெடப்பாக. எண்ணிக்கைக்கு வீட்ல ஒரு ஆளுன்னு இருந்துச்சுல. எனக்கென்ன புள்ளகுட்டியளா இருக்கு? இப்ப தனியா இங்கன கெடக்கேன். புள்ளியள நல்லா பாத்துக்கிடு என்ன? எப்பவாவது என்னிய எல்லாம் நினச்சு பாப்பியா? அடிக்கடி ஊருக்கு வால”… துரையண்ணன், அவன் பொண்டாட்டி, என் கேப்டன் சைக்கிள் இதெல்லாம் எங்கோ கடந்த காலத்தில் பொதிந்து போயிருக்கின்றன. இன்று நினைத்துப் பார்க்கிறேன். துரை பொண்டாட்டிக்கு இன்று புரையேறினால், என்னை நினைப்பாளா?

நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர், வரலாற்றாளர்.