எங்கள் தெருவில் பத்து சென்ட் இடம் காலி மனையாக இருந்தது. அந்த இடம் முழுவதும், காட்டு உடை (சீமைக்கருவேல) மரம் நிற்கும். விடுமுறை நாட்கள் முழுவதும் அங்கு தான் இருப்போம். அது தான் எங்களது விளையாட்டு மைதானம்.

அந்த நிலத்தில் வாளறுப்பு இடம் என ஒன்று இருந்தது. ஒரு பெரியவர், தடிகளை அறுப்பதற்காக ஒரு பெரிய பள்ளம் தோண்டி வைத்திருப்பார். பள்ளத்தில் குறுக்கே தடியை வைத்து விட்டு அவர் பள்ளத்திற்குள் நின்று அறுப்பார். சில நேரம், மேலே இருந்து கொண்டு ஒரு ஆளும், கீழே நின்று கொண்டு ஒரு ஆளும் அறுப்பார்கள்.

மழை முடிந்த பின் உடை மரம் மிகப் பெரியதாக வளர்ந்து விடும். அவற்றை அந்த நிலத்தின் உரிமையாளர் விறகிற்கு விற்பார். விறகு வெட்டி செல்பவர்கள் மீதம் வரும் முள் நிறைந்த பொடி சுள்ளிகளை (கம்புகளை) வாளறுப்பு பள்ளத்திற்குள் போட்டுவிட்டு போவர்.

இவ்வாறான காலகட்டத்தில், எனது மூன்றாம் வகுப்பில் சைக்கிள் ஓட்டுவதற்கு, எனது அண்ணனும் அவனது நண்பனும் சொல்லிக் கொடுத்தார்கள். ஊரில் பல சைக்கிள் கடைகள் அப்போது இருந்தன. அவற்றிலிருந்து, இருப்பதிலேயே சிறு சைக்கிளை அண்ணன் எடுத்து வருவான். இரண்டு நாள்கள் பழகிய பின் ஒரு நாள் என் அண்ணன் என்னை தனியாக விட்டு விட்டான். நான், அவன் பின்னால் வருகிறான் என்ற நினைப்பில் சென்று கொண்டிருந்தேன். திடீரென அவன் வரவில்லை என்ற உணர்வு வந்தவுடன் பயந்து அலறத் தொடங்கினேன். சைக்கிள், வாளறுப்பு பள்ளத்திற்குள் இறங்கி விட்டது. உடம்பெல்லாம் முள் பதம் பார்த்து விட்டது. ஆனாலும் உள்ளிருந்து தூக்கிவிட்டு, மீண்டும் ஓட்டு என சொல்லி விட்டான். அழுதுகொண்டே ஒட்டியவள், அதன் பிறகு விழவே இல்லை. இவ்வாறு முள் படுக்கையில் படுத்து எழுந்து சைக்கிள் ஓட்டப் பழகியவள் நான்.

அப்போதெல்லாம், பெரும்பான்மையான வீடுகளில் சைக்கிள் கிடையாது. வீடுகளில் உள்ள ஆண்கள், வெளியே, வேலைக்கு செல்வதற்கு சைக்கிள் தேவை என்று இருந்த வீடுகளில் மட்டுமே சைக்கிள் இருந்தது. அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு மதிய உணவு சாப்பிட வரும் இடைவேளையில் சைக்கிளை கேட்டு வாங்கி நாங்கள் ஓட்டியதுண்டு.

அந்த காலகட்டம்தான் பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டத் தொடங்கிய காலகட்டம். எங்கள் வகுப்புத் தோழிகள் பலரும் சைக்கிள் ஓட்டுவோம். ஒரு சைக்கிளை எடுத்து, ஆளுக்கு பத்து/ இருபது நிமிடம் என மாற்றி மாற்றி ஓட்டுவோம். இவ்வாறு சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் எங்களுக்கு இருந்தது.

ஒரு முறை பால் பண்ணையில் இருந்து சைக்கிளில் பால் வாங்கி வந்து கொண்டிருந்தேன். ஒரு முக்கு திருப்பத்தில், நானும் எனது ஆசிரியர் ஒருவரும் நேரடியாக மோதிக் கொண்டோம். நான் சிறு சைக்கிளில் வந்ததாலும், சிறு வயது என்பதாலும், உடனே சமாளித்து விட்டேன். அவர் கீழே விழுந்து விட்டார். மறுநாள், பள்ளியில் வகுப்பில் என்னை எழுப்பி விட்டு, கேலியாக ‘டேய்! இவள், நேத்து என்ன கொல்லப் பாத்தாடா; நான் எப்படியோ தப்பினேன். அவ கையில் இருந்த பால் வாளியில் இருந்து ஒரு சொட்டு பால் கூட சிந்தவில்லை. நான் தான் தடாலடியாக விழுந்து விட்டேன். என்னைப் பழிவாங்கி விட்டாள்”, என சொல்லிச் சிரித்தார்.

வயது வர வர, நாங்கள் சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தி விட்டோம். கல்லூரி படிக்கும் போது, எங்களுக்கு சைக்கிளில் செல்ல வேண்டும் என விருப்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தினமும் நடந்து தான் சென்றோம். அப்போது அனுமதி கொடுத்திருந்தால், நாங்கள் மட்டுமல்ல, அருகில் 4-5 கிலோமீட்டர் தூரத்தில், இருந்து நடந்து வந்து படித்த மாணவிகளும் சிரமமில்லாமல், படித்திருப்பார்கள்.

இப்போது அரசு கொடுக்கும் இலவச சைக்கிள், ஏழைப் பெண்களுக்கு மட்டுமல்ல, வசதி இருந்தும், சைக்கிளில் செல்ல முடியாத பெண்களுக்கும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகச் செல்லும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இலவசமாகக் கிடைக்கும் சைக்கிளைப் பயன்படுத்தும் பெண்களுடன் இணைந்து, பிற, பெண்களும் சைக்கிள் வாங்கி ஓட்டுகின்றனர்.

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.