தங்களுடைய நிலத்தில் தங்கள் இனத்தைத் தவிர வேறு யாரும் விதைத்து அறுவடைசெய்து பயன்பெற்றுவிடக்கூடாது என்று நிலத்தைக் காக்க ஏற்பட்ட இனக்குழுக்கள், தங்கள் நிலத்தை விரிவு செய்துகொள்ள எதிரி இனத்துடன் போரிடத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக, பகை நாட்டு மன்னனின் மகளை வேண்டியும் போர் செய்யத் தொடங்கின. மகளைக் கொடுக்க மன்னன் உடன்படாத போது, அம்மன்னனின் மதிலைச் சுற்றி முற்றுகையிட்டு போர் புரிந்து ஊரையே அழித்தும், பல கொடுஞ்செயல்களை நிகழ்த்தியும் பலிதீர்த்துக்கொண்டன.

மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும் போர்புரிந்த தந்தைமைய சமூகம் இறுதியில் மண்ணையும், பெண்ணையும் ஆண்களுக்கு உரிய உடமைகளாக வளைத்துக் கொண்டது. பெண் வாரிசுகளின் வழி தங்களது இனத்தின் நிலமும், செல்வமும் எதிரி இனக்குழுவிற்கு சென்றுவிடக்கூடாது என்பதில் தந்தைமைய சமூகம் தெளிவாக இருந்தது. இதற்காக தந்தை வழி வரும் சொத்திலும் அதிகாரத்திலுமிருந்த பெண் வாரிசுகளுக்கான உரிமையை மறுத்து, ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரியதாக நிறுவியது.

இனக்குழுவுக்குள்ளேயே நிகழ்ந்த ஆண்-பெண் காதல் வாழ்க்கை களவாகவும் கற்பாகவும் இருந்தது. களவு என்பது பருவமடைந்த பெண் நீராடுகின்ற பொழுதோ, தினைப்புனம் காக்கின்ற பொழுதோ தம் இனத்தின் ஆண் ஒருவன் மீது மையல் கொண்டு, இருவரும் காதல்வயத்தால் எவரும் அறியா வண்ணம் கூடி இன்பம் துய்த்து மகிழும் முறையாகும். களவு நெறிப்பட்ட காதலர்கள் தங்கள் காதலை நண்பர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அவர்கள் பெற்றோர்களுக்கும் மற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி, அனைவரும் அறியும் வண்ணம் களவை வெளிப்படுத்தி, இருவரும் சேர்ந்து இல்லறம் நடத்துவது(குடும்பம் நடத்துவது) கற்பாகக் கருதப்பட்டது. கற்பு என்பதை உறுதிப்பாடு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

ujiladevi.in

ஆணும் பெண்ணும் உறுதியேற்று, உறுதியின் தன்மை மாறாமல் இருவரும் இறுதிவரை ஒழுகும் நெறி கற்பு நெறியாகும். களவு வாழ்வை கற்பு வாழ்வாக மாற்றிய ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அறத்தோடு இருப்பது உயர்வாகக் கொள்ளப்பட்டது. இனக்குழுக்களுக்குள்ளே சுருங்கியதானாலும் சுதந்திரமாக இருந்த இத்தகு காதல் முறையை வெகுகாலம் நீடிக்கவிடாமல் தந்தை மைய சமூகம் சிதைத்தது. தத்தம் இனக்குழுவின் பெண்கள் தத்தம் இனக்குழுவின் ஆண்களுடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாட்டை முன்னம் நிறுவியிருந்த தந்தைமைய சமூகம், பெண்கள் தன்னிச்சையாக இயங்க அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆணைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில் தலையிட்டு, தந்தையே ஒரு பெண்ணின் காதல் உறவை தீர்மானிக்க வேண்டுமென்று வலியுறுத்தியது. தந்தையின் ஒப்புதல் இல்லாமல் ஒரு பெண்ணால் களவை காற்பாக்கிக்கொள்ள முடியாது.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

என்று எவருடைய தொடர்பும் தலையீடும் இல்லாமல் காதலித்து வந்த பெண்களின் உரிமையில், தந்தையர்கள் தலையிடத் தொடங்கினார்கள். இதனால் காதல் வாழ்விலிருந்து காதல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, காதலறம் அழிக்கப்பட்டு குலப்பாகுபாட்டை வளர்த்தெடுக்கும் நிறுவனமாக காதல் உறவுகள் மாறின. காதல் செய்ய விரும்பும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறப்பு, குடி போன்றவைகள் ஒத்திருக்க வேண்டுமென்ற கருத்தை தொல்காப்பியர்,

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”

(தொல்காப்பியம்- 1219)

என்ற நூற்பாவில் குறிப்பிட்டுள்ளதன் வாயிலாக, ஆணும் பெண்ணும் காதல் வயப்படுவதற்கு ஒத்த அந்தஸ்த்தும் அவசியமென்ற சூழல் அக்காலத்தில் நிலவிய விதத்தை அறியலாம். நிகரற்ற பொருள்வளம் கொண்டிருப்பதை உயர்வாகக் கருதிய ஆண்கள், அழகிய ஒரு பெண்ணையும் உடமையாக வீட்டில் வைத்துக்கொள்வதை உயர்வான ஆண்மையெனக் கருதினர். அதன்வழி ஒருத்திக்கு ஒருவன் என்ற மரபு தோன்றியது.

கல்லானாலும் கணவன் புள்ளானாலும் புருஷன் என்ற விதி கி.பி. யின் தொடக்கத்திலிருந்தே சமூகத்தில் நிலவி வந்துள்ளது. சான்றோர்கள்கூட கணவனின் செயலைக் குற்றமெனச் சுட்டினாலும் சிறந்த குணமுடைய பெண்கள் தங்கள் கணவனை உயர்த்தியே போற்றுவர் என்ற கருத்தை, “தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றோர் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவர்”
(பரிபாடல்-20[89-90]) என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது.

இருபாலுக்கும் பொதுவாய் இருந்த கற்பு நெறியை பெண்களுக்கே உரிய ஒன்றாய் தந்தை மைய சமூகம் மாற்றியது. போர்களில் கவர்ந்துவரப்பட்ட அழகிய பெண்கள், தந்தை அடையாளமற்று குழந்தைகளைப் பெற்ற பெண்கள் போன்றவர்களை பரத்தையர்களாக (பொதுமகளிர்) ஒடுக்கி அப்பரத்தையர்களிடம் திருமணமான ஆண்கள் விரும்பிய பொழுது உறவு வைத்துக்கொள்வதை சாதாரணமாக்கியக்கியது. பரத்தையரிடம் செல்லும் கணவனைப் பெண்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும், ஆண்களென்றால் ‘கொஞ்சம் அப்படி இப்படி’ என்றுதான் இருப்பார்கள், மனைவியாக்கப்பட்ட பெண்கள் பொருத்தருள்ந்து போற்றுவதுதான் மரபு என்று போதித்தது. இதுபோன்ற ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கக் கூடிய இயல்பான காம உணர்வுகளை ஆண்களிடத்தே தூண்டிவிட்டு வெறியேற்றிவிடக்கூடிய சமூக உரையாடல்கள், பெண்களை ஒடுக்கும் நோக்கோடு வழிமொழியப்பட்டன.

மனைவி குழந்தை ஈன்றெடுத்த பொழுதும், மாதவிடாயின் பொழுதும் கணவன் பரத்தையரை நாடிச் செல்வது வழக்காக இருந்துள்ளது. பரத்தையரை நாடிச் செல்லும் கணவன், மனைவியின் மாதவிடாய் முடிந்த 12 நாளும் மனைவியைப் பிரிந்து பரத்தையரிடத்தில் செல்ல மாட்டான் என்ற கருத்தை, ”பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகன்று உறையார் என்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான”
(தொல்காப்பியம்;கற்பியல்-46) என்ற நூற்பாவில் தொல்காப்பியர் ஆய்ந்து அறிந்து பதிவு செய்துள்ளார்.

மனைவியின் மாதவிடாய்க் காலங்களில் ஆண்களுக்கு எழும் காமத்தேவைகளை பரத்தையர்களிடம் சென்று தணித்துக்கொள்வதை குற்றமற்ற செயலாக தந்தை மைய சமூகம் அங்கீகரித்துள்ளது. ஆண்களின் காமத்தை ஊக்குவித்து கட்டுப்படுத்த முடியாத வெறியாக தந்தைமைய சமூகம் வளர்த்தது. ஆண்களின் காமத்தை கட்டுப்படுத்தாமல் ஊக்குவித்த சமூகம், பெண்களின் காமத்தை மட்டுப்படுத்தியது.

பெண்கள் தங்களுக்குள் உண்டாகும் காமத்தேவைகளைக் குறித்து கணவனிடத்தில் கூட விருப்பம் தெரிவிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு பெண்களுக்கு இருந்த விதத்தை, “தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை”
(தொல்காப்பியம் – 1064) என்ற நூற்பாவில் தொல்காப்பியர் சுட்டியுள்ளார்.

பெண்களின் பவித்திரமான கற்புத்திறம் கணவனது காமம் அறிந்து, அவனது தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து, சுயத்தைப் பற்றி சிந்திக்காமல் வாழ்க்கை நடத்துவதாகும் என்ற பெண்ணொடுக்க நிலை சமூக மரபாக மாறியது. ஆண்கள் சமய ரீதியான பிளவுடன் ஆன்மீகத்தை நோக்கி நகர்ந்து சமய மரபுகளில் தங்களை முதன்மையாக்கிக் கொண்ட போது, கணவனைக் ‘கண்கண்ட தெய்வமாக’ வணங்கும் பெண்களே பெண்களில் உயர்வானவர்கள் என்ற உளவியலை தந்தை மைய சமய சமூகம் விரிவுபடுத்தியது.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

(திருக்குறள் – 55)
என்ற குறளில் வள்ளுவர் ‘தெய்வத்தை வணங்காமல் கணவனைத் தெய்வமாகக் கருதி வணங்கும் பெண் பெய்யென்றால் மழை பெய்துவிடும்’ என்று பதிவு செய்துள்ளார்.

thamizhdrops

இக்குறளின் கருத்தைப் போலவே எழுந்த காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். ‘ உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’, என்ற கருத்தை வலுவாக்க சொல்லப்பட்ட கதையான சிலப்பதிகாரத்தில், மாநாய்க்கன் என்பவர் காவிரி பூம்பட்டினத்தின் பெருவணிகர்களுள் ஒருவராவார். மாநாய்க்கன் தன்னுடைய மகளான கண்ணகியை பெருவணிகரான மாசாத்துவானின் மகனான கோவலனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். பெருவணிகக் குடிகளாக இருவரது குடியும் அமைகின்றது. ஒத்த அந்தஸ்து மற்றும் குடியைச் சேர்ந்தவர்களே திருமணம் செய்யத் தகுதியுடையவர்கள் என்ற நிலை சிலப்பதிகாரக் காலமாகக் கொள்ளப்படும் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு பிந்தைய நூற்றாண்டுகளிலும் எழுதாச் சட்டமாக நிலவியது. இன்றைக்கும் அந்நிலையே நீடிக்கின்றது.

சாதி, மதம், இனம், வர்க்கம் என அனைத்தும் ஒத்திருக்கிற ஆணுக்கும் பெண்ணுக்குமே தந்தைமார்கள் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைக்கின்றனர். ” ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோன் ஆயினும், கடி வரை இன்றே”
(தொல்காப்பியம்;களவியல்-90) என்ற நூற்பாவில் தொல்காப்பியர் ஒத்த அந்தஸ்து அவசியமெனினும், பெண்ணை விட ஆண் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றே என்று குறிப்பிடுகிறார். பெண்ணைவிட ஆண் உயர்ந்த இடத்தில் இருப்பதை அக்கால சமூகம் அங்கீகரித்திருந்ததை மேற்கண்ட நூற்பா வழி அறியலாம்.

இன்றைய நாளிலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆண்கள் வேறு சாதி பெண்களைக் காதலிக்கின்ற பொழுது, சாதியக்குடும்பங்கள் அக்காதலை ஏற்றுக்கொள்கின்றனர். மகனின் காதலை ஏற்றுக்கொண்ட சாதியக்குடும்பங்கள், மருமகள் ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பின் சாதிப்பெயரைச் சொல்லி அப்பெண்ணை இழிவு செய்யும் கொடுமைகளும் நிகழாமல் இல்லை. ஆனால் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெண்கள் வேறு சாதி ஆண்களை காதலிக்கின்ற பொழுது சாதியக்குடும்பங்கள் காதலை ஏற்றுக்கொள்ளாமல், பெற்று வளர்த்த மகள் என்று கூட பாராமல் கொலை செய்யும் அளவிற்குத் துணிகின்றன. இதன் பின்னுள்ள உளவியலை அடுத்த கட்டுரையில் காண்போம்.

தொடரும்.

கட்டுரையின் முந்தைய பகுதி:

படைப்பு:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.