“கெட்டுப்போனவ” என்ற சொல் பிரயோகத்தை நிறைய சினிமாக்களில், தொலைக்காட்சித் தொடர்களில், கதைகளில் கேட்டிருப்போம். பார்த்திருப்போம். ஆனால்… கெட்டுப்போவதற்கு, பெண் என்ன ஒரு பொருளா? ஜடமா? ஆணினத்தைப் போல அவளும் உணர்வுள்ள சக உயிரல்லையா?

நிகழ்ந்த விபத்திற்கு பெண் பொறுப்பில்லை எனும் போது இத்தகைய பண்படாத சொற்களால் பெண்களை தண்டித்தல் எவ்விதத்தில் நியாயம்? இதில் அவள் புனிதத்தை கேள்விக்குள்ளாக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

ஆனால்… ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். என் புனிதம் என்னிடம் தான் இருக்கிறது. அதை யாராலும் அழிக்கவோ, பிடுங்கி கொள்ளவோ இயலாது’, என்பதை தன் வார்த்தைகளின் மூலமும், வாழ்வின் மூலமும் தன் உறவுகளுக்கும், இந்த சமுதாயத்திற்கும் உணர்த்த எத்தனை பெண்களுக்கு இங்கே துணிவிருக்கிறது? அத்தகைய துணிச்சல் கொண்டவள் நிச்சயம் நமக்கெல்லாம் ஒரு நாயகி தானே?
“கற்பு என்பது உடலில்லை. அது மனசுல தான் இருக்கு”, என்று நெத்தியிலடித்தாற் போன்று இந்த விஷயத்தை அங்குள்ளவர்களுக்குப் புரிய வைக்கிறாள், ‘அம்மா என்றொரு ஒரு புண்ணிய நதி’ எனும் இக்கதையின் நாயகி.

தன்னுடைய சிறுவயதில் வீட்டை விட்டு அப்பாவால் துரத்தப்பட்ட அம்மாவை காண வேண்டும் என்ற எண்ணம் இளைஞன் ஜீவாவுக்கு தோன்ற ஆரம்பிக்கிறது. கோயில் சென்று விட்டு வரும் வழியில் வழிப்போக்கர்கள் மூவரால் வன்புணர்வுக்கு ஆளானதன் காரணமாக, அவன் தந்தையால் விரட்டியடிக்கப்பட்டவள் தான் ஜீவாவின் தாய். தன் தாய் மீது தவறில்லை என்பதை தாமதமாக உணரும் ஜீவா, தன் தந்தையின் நண்பரின் உதவியோடு தன் தாயை தேடிக் கண்டுபிடிக்கிறான். கடைசிக்கட்டத்து கேன்சர் நோயாளிகளைப் பார்த்துக்கொள்ளும் பணியில் இருக்கும் தன் தாயைக் கண்டு தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான் ஜீவா.

அவனை அன்போடு தழுவி நலம் விசாரிப்புகளை நடத்தினாலும்….தான் அங்கேயே திருப்தியாக வாழ்வதாக கூறி அவனுடன் வீட்டிற்குச் செல்வதற்கு மறுத்துவிடுகிறாள் ஜீவாவின் தாய். அதுமட்டுமின்றி கிளம்ப தயாராகும் பிள்ளையிடம்,

“உன் மனைவியை நல்லபடியா பார்த்துக்கோ. வெறும் சதையால் ஆனவள் இல்ல பெண். உள்ளே அழகான மனசிருக்கு. வெளித்தோற்றத்தை விட அந்த மனசுக்குத் தான் மதிப்புக் கொடுக்கணும். கற்புங்கிறது உடம்புல இல்ல அழியறதுக்கு. அது மனசுல இருக்கு…மூணு பேர் தொட்டதும் என் கற்பு போயிடுச்சின்னு உங்கப்பா நினைச்சார். உண்மையில் என் கற்பு எங்கிட்ட தான் பத்திரமா இருக்கு. அது அழியவும் இல்லை. தொலையவும் இல்லை”, என்கிறாள்.

பாவங்கள், பிணங்கள், அழுக்குகளை சுமப்பதால் கங்கையின் புனிதம் கெடுவதில்லை. அது போல தன் அம்மாவும் ஒரு புண்ணிய நதியைப் போல் மிளிர்வதாக ஜீவா உணர்ந்து, அங்கிருந்து வெளியேறுகிறான். தன்னைப் புரிந்து கொள்ளாத கணவன், எல்லாவற்றுக்கும் மேலே அவன் அளித்த ‘கெட்டுப்போனவ’ என்ற பொருந்தாத பட்டம், கையில் எதுவுமில்லாத நிகழ்காலம், நிச்சயமில்லாத எதிர்காலம் இப்படியான சூழல் இருந்தும், தன்னுடைய தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே ஊன்றுகோலாக வைத்து இந்த பள்ளத்திலிருந்து வெளிவந்து நான்கு பேருக்கு உதவும்படி தன்னை செதுக்கிக்கொள்கிறவள் நிச்சயமாய் நாம் போற்றப்பட வேண்டிய நாயகியே தான்.

இந்த நாயகியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. வாழ்க்கையைப் பறி கொடுத்தவள் நிச்சயமாய் நிலைகுலைந்து போய்விடுவாள் என்று நினைத்தவர்களின் எண்ணத்தைத் தகர்த்து கண்களில் தீட்சணியத்தோடு, பளீரென்ற முகத்தோடு தேஜஸோடு விளங்குகிறாள் கதாநாயகி.

வாழ்க்கை என்பது கணவன் மற்றும் குழந்தைகளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. நாம் வாழும் வரை வாழ்க்கையும் இருக்கும். மற்ற எதுவுமே முற்றுப்புள்ளி இல்லை என்பதையும் ஊடாக உணர்த்திச் செல்கிறாள்.

கதை – அம்மா என்றொரு ஒரு புண்ணிய நதி (பெண் என்பவள் பொருள் அல்ல, உயிர்)
ஆசிரியர் – ஐ.கிருத்திகா
தொகுப்பு – உப்புச்சுமை

படைப்பாளரின் பிற படைப்புகள்:

கட்டுரையாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.