அமெரிக்கா வந்த புதிதில், குழந்தைகளை இங்கே பள்ளியில் சேர்க்க வேண்டியதாக இருந்தது. மகன் படித்த நடுநிலைப் பள்ளி நடந்து செல்லும் தொலைவில் இல்லை என்பதால், அவனது பள்ளி தொடர்பான அனைத்தையும் என் கணவர் பார்த்துக் கொண்டார். மகள் படித்த ஆரம்பப் பள்ளி நடந்து செல்லும் தூரத்தில் இருந்ததால், அவளது பள்ளி தொடர்பான அனைத்தையும் நான் கவனித்துக் கொண்டேன்.

பள்ளியில் சேர்ந்ததும் முதலில் குழந்தைகள் சந்தித்த பிரச்சனை ஆங்கிலம். என்ன தான் ஆங்கில வழியில் கற்றிருந்தாலும் பேசுவதில் மிகப்பெரிய சிரமம் இருந்தது. ஓரளவு எழுத வாசிக்கத் தெரிந்திருந்தாலும், புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் இல்லாததால், பாடத்துக்கு தொடர்பில்லாத வார்த்தைகள் பல அவர்களுக்குத் தெரியவில்லை. இது, என் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, இங்கு உள்ள பல மாணவர்களுக்குமான பிரச்சனை. இங்குள்ள பள்ளிகளில் பல இன/ மொழி மாணவர்கள் படிக்கிறார்கள். பலரும் வீட்டில் அவரவர் தாய்மொழியில் பேசுவர்களாக இருப்பார்கள். அதனால் ஆங்கிலப் புலமையில் வேறுபாடான குழந்தைகள் ஒரே வகுப்பில் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதற்குத் தீர்வாக இருப்பது ESL வகுப்பு.

ESL என்பதன் விரிவாக்கம், English as a second or foreign language. இந்த
வகுப்பிற்கென தனி ஆசிரியர் இருப்பார். அவரது உதவி தேவைப்படும் மாணவர்கள், தங்கள் ஆங்கில பாட வகுப்பின்போது அவர்களிடம் செல்வார்கள். அவர் அவரவர் தேவைக்கேற்ப எழுத, வாசிக்க, பேச என தனித்தனியாக பயிற்சி கொடுப்பார். வழக்கமான வகுப்பு பாடத்தை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வரை இந்த பயிற்சி தொடரும். பெரும்பாலான மாணவர்களுக்கு, புரிந்து கொள்ள ஆண்டுக் கணக்கில்
ஆகும்.

நாங்கள் ESL ஆசிரியரை அணுகி, நாங்கள் வீட்டில் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினால், அது குழந்தைகளுக்கு ஆங்கிலம் எளிதாக பேசுவதற்கு உதவுமா? என கேட்டோம். அந்த ஆசிரியை, “அப்படி ஒருபோதும் செய்யாதீர்கள். குழந்தைகள், பள்ளியில், விளையாட்டு மைதானத்தில் உடன் பயிலும் குழந்தைகளுடன் கலந்து பழகும்போதுதான் பேசப் பழகும். மேலும் நீங்கள் வீட்டில் ஆங்கிலம் பேசத் தொடங்கினால், ஒரு காலகட்டத்தில் அவர்கள் உங்கள் தாய் மொழியில் வார்த்தைகளைத் தேடியோசித்துப் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது என நினைக்கத் தொடங்கி விடுவர்”.

“அப்படி நினைக்கத் தொடங்கி விட்டால், பிறகு அவர்களை உங்கள் தாய் மொழியில் பேச வைப்பது மிகவும் சிரமம். இரண்டு மொழி பேசுவது என்பது இரண்டு பண்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்கான வாசல். அது உங்கள் குழந்தைகளுக்கு இயல்பிலேயே கிடைத்துள்ளது. அந்த வாசல்களை அடைக்காதீர்கள். மொழி தெரியாவிட்டால் அவர்கள் உங்கள் நாட்டிற்கு செல்வதையே விரும்பமாட்டார்கள்”, என்றார்.

அவரது அறிவுரையால், இருவரும் இன்று தமிழ் பேசுகிறார்கள்.

Photo by Sam Balye on Unsplash

நாங்கள் வாழும் கலிபோர்னியா மாநிலம், மெக்ஸிகோ நாட்டின் எல்லைப்புற மாநிலம். அதனால், அவர்களது தாய் மொழியான ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் எங்கள் பகுதியில் அதிகம். (பண்டைய ஸ்பானிஷ் குடியேற்ற பகுதிகள் அனைத்திலும் ஸ்பானிஷ் மொழியே பேசப்படுகிறது.) அவர்களில் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது. இங்குள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஸ்பானிஷ் மொழி தெரிந்தவர்கள் ஓரிருவர் இருப்பர். பள்ளி, மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும், அவை வெளியிடும், அறிக்கைகள், சுற்றறிக்கைகள் அனைத்தும், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலே தான் வெளியிடும். அறிவிப்புகளும் பொதுவாக இரு மொழிகளிலும் ஒலிபரப்பப் படும். இதனால் அவர்களுக்கு எந்த சிரமமும் இருப்பதில்லை.

வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெறும் போது சாலையில் இருக்கும் குறியீடுகளைப் படிப்பதற்கு மற்றும் குடியுரிமை பெறுவதற்கு அடிப்படை ஆங்கிலம் தேவை. அவ்வாறு தேவைப்படுபவர்களுக்கென அரசு இலவசமாக ஆங்கில வகுப்புகள் நடத்துகிறது.

தேவையென்றால், மருத்துவமனை போன்றவற்றில் அங்கு வருபவர்களின்
எண்ணிக்கையைப் பொறுத்து சைனீஸ், பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களின் மொழி, வியட்நாம் மொழி, இந்தி போன்றவற்றிலும் கையேடுகள் வைத்திருப்பார்கள்.

நமக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவையென்றால், ஏறக்குறைய அனைத்து மொழிகள் பேசுபவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர் யாரையாவது நேரிலோ, தொலைபேசி மூலமோ நியமிப்பார்கள். நான் ஒருமுறை மருத்துவரை அணுகிய போது, மருத்துவ துறை சார்ந்த வார்த்தைகள் தெரியாமல் திணறக்கூடாது என்று மொழிபெயர்ப்பாளர் கேட்டேன். ஒரு தமிழ் பெண் தொலைபேசி மூலம் எனக்கு உதவினார். சமாளித்துக் கொண்டேன். மொழி ஒரு தடையல்ல தானே?

கட்டுரையாளரின் பிற படைப்புகள்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.