திருவனந்தபுரத்திலிருந்து, சிங்கப்பூர், சியோல், சான் பிரான்சிஸ்கோ என
அரைவட்ட உலகை சுற்றி வந்து சேர்ந்த நாங்கள் வந்தவுடன் தூங்கி விட்டோம். ஆகஸ்ட் மாத இறுதியில், அமெரிக்கா வந்த எங்களுக்கு, குளிர் பெரிதாகத் தெரியவில்லை. விழித்துப் பார்த்தால், வெளிச்சம் இருந்தது ஆனால் மணி விடியற்காலை மணி நான்கு.

இங்கு குளிர் காலத்தில் மாலை நான்கு மணிக்கே இருட்டி விடும். காலை 8 மணி வரை கூட இருள் விலகாதிருக்கும். அதுவே கோடை காலம் என்றால், விடியற்காலை நான்கு மணி முதல், இரவு 8/9 மணி வரை கூட வெளிச்சம் இருக்கும். ஓரிரு நாட்கள், ஜெட்லாக் என சொல்லி நினைத்த நேரம் தூங்கி, நினைத்த நேரம் விழித்து, சாப்பிட்டு என வாழ்க்கை ஒரு விதமாக போய்க்கொண்டிருந்தது.

இப்படி பகல் முழுவதும் தூங்குவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஞாயிற்றுக் கிழமை வந்தது. நாங்களும் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றோம். காரை விட்டு இறங்கும் போதே, அருகில் காரை நிறுத்திய குடும்பம் எங்களை அன்புடன் விசாரித்தது. கோவிலுக்குள் நுழையும்போது அதிக ஒப்பனையுடன் மிகவும் விலை உயர்ந்த ஆடை நகைகளுடன், ஒரு வயதான பெண், எனது சேலை அழகாக இருக்கிறது என்றார். உள்ளே நுழைந்தால், ஒரு பெரியவர் தனது கோட்டினுள் கையை விட்டு எனது குழந்தைகளுக்கு சாக்லேட் எடுத்துக் கொடுத்தார். எங்களுக்கு வழிபாடு தொடர்பான புத்தகத்தைக் கொடுத்தார். (இருவரும் கணவன் மனைவி என, பின்பு தெரிந்து கொண்டோம். அந்த அம்மாவிற்கு நாங்கள் வைத்துள்ள பெயர் மேக்கப் பாட்டி). இன்றும், அவர்களுக்கு எனது சேலைகள் மீது கண்; எனக்கு அவர்களது அலங்காரப் பொருட்கள்மீது கண். ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்வோம்.

திருப்பலியில் காணிக்கை ஒப்புக் கொடுக்கும்போது, அதற்கான அப்பம், திராட்சை ரசம் போன்ற பொருட்களைப் பொதுமக்களில் யாராவது கொண்டு கொடுப்பது வழக்கம். அன்று அவ்வாறு கொடுப்பதற்கு, எங்கள் குடும்பத்தை அழைத்தார்கள். ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக் கொள்வோம் என, திருப்பலியில் சொல்லும்போது, எங்களைச் சுற்றி நின்றவர்கள் கைக்கொடுத்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் நின்றவர்களும், கை அசைத்தார்கள்.

திருப்பலி முடிந்து வெளியே போனபோதும், பலரும் வந்து அன்பாகப்
பேசினார்கள். குருவானவர் இந்தியர். அவர் எப்போது வந்தீர்கள் என்றெல்லாம் விசாரித்தார். நான் என் கணவரை அனைவருக்கும் தெரிந்திருக்கிறதே என வியப்படைந்தேன். திருப்பலி முடிந்ததும் ஒரு கடைக்கு சென்றோம்.

செல்லும் வழியில், ஒரு நான்கு வழி சாலை; நான்கு புறமும் Stop Sign இருந்தது. எங்களுக்கு வலது பக்கம் நின்றவர் எங்களைப் போகச் சொன்னார். என் கணவரும் இடது பக்கமாக காரைத் திருப்பிவிட்டு, கையை உயரே தூக்கி அவருக்கு நன்றி சொன்னார். அந்த பகுதி நாங்கள் வசித்த இடத்திலிருந்து தூரத்தில் இருந்தது. அவரை என் கணவருக்கு எப்படித் தெரியும்? என என் மனதில் சிறு சந்தேகம் எழுந்தது.

சந்தேகத்தை கணவரிடம் எழுப்பினேன். எனக்குத் தெரியாது என்றே பதில் வந்தது. பின் நீங்கள் ஏன் கை காட்டினீர்கள் என கேட்டேன். “நான்கு புறமும் Stop Sign இருந்தால் முதலில் வருபவர் முதலில் செல்ல வேண்டும். நாங்கள்
இருவரும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் வந்து நின்றோம். அவர் என்னைப் போகச் சொன்னார். அவருக்கு நான் நன்றி தெரிவித்தேன்’’ என்று சொன்னார்கள்.

PC: Urban75

அதன்பிறகு எனக்கு மெல்லிய சந்தேகம் வந்தது. கோவிலுக்கு வந்தவர்கள்
அனைவரையும் உங்களுக்குத் தெரியுமா? என கேட்டேன். நான் இந்த கோவிலுக்கு இரண்டு வாரமாகத் தான் வருகிறேன். தனிப்பட்ட முறையில் யாரையும் எனக்குத் தெரியாது. போனவாரம், சாமியார் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். நீங்கள் வருவதாக சொன்னேன். அதனால் அவர், ‘நீங்கள் என்று வந்தீர்கள்?’ என விசாரித்தார். அவ்வளவு தான். இங்கு அறிமுகமில்லாதவர்களும் எதிரும் புதிருமாக சந்தித்தால், இவ்வாறு பேசிக் கொள்வது வழக்கம் என விளக்கம் சொன்னார்கள்.

இப்போது, எனது அனுபவத்தில் அதை நான் பார்க்கிறேன். தெருவில் யாரை சந்தித்தாலும் நலம் விசாரிப்பார்கள்.

என் வீட்டிற்கு அருகில், அஞ்சல் நிலையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், City Hall (ஏறக்குறைய நமது மாநகராட்சி அலுவலகம்) போன்றவை இருப்பதால், அங்கு வேலை செய்யும் பலரையும் வழியில் சந்திக்க நேரிடும். அவர்களும் அவ்வாறே பேசுவார்கள். அவர்களில் சிலர் உயர் அதிகாரிகளாகக் கூட இருப்பார்கள்.

அதே போல, பள்ளியில் ஆசிரியர்களைச் சந்திக்க சென்றாலோ, வேறு அரசு அலுவலகங்களுக்கோ மருத்துவமனைகளுக்கோ சென்றாலோ, அங்கும் இதே அளவிற்கு வரவேற்பு கிடைக்கும்.

இங்கு வாழ்பவர்கள் தான் நல்லவர்கள் என நான் சொல்ல வரவில்லை. நம்மை மிக அதிகமாக புகழ்வார்கள். நாம் சமைத்து எடுத்துக் கொண்டு போகும் உணவைத் தொட்டுக்கூட பார்க்காமல், நன்றாக இருக்கிறது; எனக்கு இந்திய உணவு பிடிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். இதனால் அவர்கள் நம்மைப்
புகழ்கிறார்களா அல்லது வஞ்சப்புகழ்ச்சியா என பல சமயம் குழம்பியதும்
உண்டு.

ஆனால், அவர்கள் நம்மிடம் தயக்கமில்லாமல் பேசுவதால், எந்த
அலுவலகத்தினுள்ளும் நம்மால் தயக்கம் இல்லாமல் நுழைய முடிகிறது.
அவர்களிடம் உள்ள நல்ல வழக்கங்களை மட்டும் எடுத்துக் கொள்வோமே!

கட்டுரையாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.