எங்களது இளமைக் காலத்தில் வானொலி என்பது எங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்தது.

தொடக்க காலத்தில் வானொலி பயன்படுத்துவதற்கு உரிமம் பெற வேண்டும். இந்தியா பல்வேறு காலகட்டங்களில் வானொலி உரிமம் பெறுவதற்கான பொழுதுபோக்கு அஞ்சல் தலைகள் வெளியிட்டுள்ளது. வானொலிப் பெட்டியின் மேல் ஏரியல் ஒன்று வலை போல பொருத்தியிருப்பார்கள். வீட்டில் மின்சாரம் இல்லாதவர்கள் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ வைத்திருப்பார்கள்.

வானொலி உரிமத்துக்கான அஞ்சல் தலைகள், இதில் BRL Fee என்பது Broadcast Receiver License Fee
வானொலி உரிம அஞ்சல் தலைகள்

இந்திய வானொலிகளில் திருநெல்வேலி வானொலி மட்டுமே எங்கள் ஊரில் கேட்கும். அறிவிப்பாளர்களாக சாத்தூர் சவரிராஜன், கீழப்பாவூர் சண்முகையா போன்றோர் பணி புரிந்தனர். மாநில செய்தி வாசிப்பாளராக ராஜாராம் மற்றும் பொது செய்தி வாசிப்பாளராக சரோஜ் நாராயணசாமி இருந்தனர். சரோஜ் நாராயணசாமி, ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது என ச உச்சரிக்கும் இடத்தில் ஷ என உச்சரிப்பார். நாங்கள் ச என உச்சரிப்பதற்கு பெரும்பாலும் ch தான் பயன்படுத்துவோம். அதனால் அவரது உச்சரிப்பு மிகவும் வேறுபாடானதாக எங்களுக்குத் தோன்றியது. மாநில செய்திகள், ‘All India Radio’ எனவும் பொதுசெய்தி ‘ஆகாசவாணி’ எனவும் தொடங்கும். நாங்கள் மாநில செய்தியும், இரவு காலை இரவு பொது செய்தியும் ‘ஆகாசவாணி’ கேட்போம். பகல் வேளையில் இலங்கை வானொலி தான்.

காலை 6 மணிக்கு அறிவிப்புகள், பின் பக்திப் பாடல்கள், அதன்பின் மாநில செய்திகள் என நிகழ்ச்சி துவங்கும். உழவர்களுக்கான அறிவிப்புகள், உழவர் உலகம் போன்ற வாழ்வியல் நிகழ்ச்சிகள், சேர்ந்திசை பாடல் பயிற்சி, கல்வி ஒலிபரப்பு போன்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், வட்டார ஊர்கள் பற்றிய நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும். சில நேரங்களில் மிகவும் பாரதிதாசனார் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளின் நேர்காணல்கள் ஒலிபரப்பப் பட்டன.

ஒரு நாளில் அரை மணி நேரம் திரைப்படப் பாடல்கள், வாரத்தில் ஓரிரு நாடகங்கள் ஒளிபரப்புவார்கள். ஞாயிற்றுக் கிழமை மாலை 3-4 வரை நீள நாடகம் ஒலிபரப்பப் படும். மற்றபடி பெரும்பாலும் கர்நாடக இசை தொடர்பான நிகழ்ச்சிகளே பெரும்பாலும் ஒலிபரப்பப் பட்டன.

இதனால், நாங்கள் பெருமளவிற்கு ரசித்து கேட்டது இலங்கை வானொலி தான்.

இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையம், ஆசியாவின் முதல் வானொலி நிலையம். முதல் உலகப் போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியைக் கொண்டு,1922 ஆம் ஆண்டு, நிறுவப் பட்டது. டென்சிங், ஹிலாரி இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அங்கிருந்து அவர்களால் கேட்க முடிந்த ஒரே வானொலி சேவை இலங்கை வானொலி சேவை தான். அவ்வளவு தூரம் அவர்களின் தொழில் நுட்பம் தரமானதாக இருந்தது. அவர்களிடம் இல்லாத தமிழ் இசைதத்தட்டுகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் தொகுப்பு இருந்தது.

இலங்கை வானொலி லோகோ

ஆசிய சேவை, தமிழ்சேவை ஒன்று, தமிழ்சேவை இரண்டு என்று பல விதமான ஒலிபரப்புகள் இலங்கையில் இருந்து ஒலிபரப்பப் பட்டன. இவற்றுள் ஆசிய சேவை மிகப் பழையது என நினைக்கிறேன். ஏனென்றால் நான் மிகவும் இளமையாக இருக்கும் போது எனது தந்தையின் இசையும் கதையும் ஒலிபரப்பப் பட்டது. அந்த காலகட்டத்தில் மிகவும் குறைந்த நேரம் மட்டுமே என் வீட்டில் வானொலி ஒலித்ததாக நினைவு. அப்பொழுது எங்கள் வீட்டில் மின்சார வசதி கிடையாது.

காலை நிகழ்ச்சிகள் 6-10 மணி வரை, மாலை நிகழ்ச்சிகள் 12- 6 மணி வரை ஒலிபரப்பப் பட்டன. பிற்காலத்தில் அது இரவு 11 மணி வரை நீண்டது.

ஊராட்சி மன்றங்களின் ரேடியோ அறை, முடி திருத்தகம், தேநீர் கடைகள் போன்ற மக்கள் கூடும் வர்த்தக நிறுவனங்கள், வயல்களின் வரப்புகளில், தோட்டத்து மரங்களில், மாடு மேய்க்கும் இடங்களில் கூட வானொலிப் பெட்டியைப் பார்க்கலாம். அனைத்து வானொலி பெட்டிகளும் இசைத்தது இலங்கை வானொலி சேவை. ஒவ்வொரு பாடல் இடைவெளியிலும் நேரம் சொல்லுவார்கள். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. அறிவிப்பாளர்கள், நல்ல தமிழ் வார்த்தைகள் பலவற்றை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார்கள்

கே.எஸ். ராஜா, பி.ஹெச். அப்துல் ஹமீது, நடராஜ சிவம், ராஜேஸ்வரி சண்முகம், புவனலோசினி துரைராஜசிங்கம், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், மயில்வாகனம் சர்வானந்தா, சில்வஸ்டர் எம். பாலசுப்பிரமணியம், ஜி.பால் ஆண்டனி, ஜோக்கிம் பெர்னாண்டோ போன்றோர் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக இருந்தார்கள்.
நிகழ்ச்சி முடிந்து அடுத்த நிகழ்ச்சி தொடங்கும்போது விடைபெறும் அறிவிப்பாளர், வரும் அறிவிப்பாளர் பெயரை சொல்லிவிட்டு செல்வார்.

‘மதுரக் குரல் மன்னன்’ கே.எஸ்.ராஜா, பெரிய ரசிகர் வட்டத்தை சம்பாதித்து இருந்தார். மிகவும் வேகமாக பேசும் வழக்கம் கொண்ட அவர், நேயர் விருப்பத்தில் அதிகமான நேயர்களின் பெயர்களை இடம்பெறச் செய்வார். இலங்கைக் கலவரத்தின் போது, அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு அவர் ராணியில் என நினைக்கிறேன் அதில் அவர் பேட்டி கொடுத்தார். அவரது முன்னோர் வடக்கன்குளம் அருகில் உள்ள வேப்பிலங்குளம் ஊரைச் சார்ந்தவர்கள் எனப்படுகிறது.

வைரமுத்துவை 1980ம் ஆண்டு கே.எஸ்.ராஜா இலங்கை வானொலிக்காக கண்ட பேட்டியை இங்கே கேட்கலாம்.

நிகழ்ச்சிகள் என எடுத்துக் கொண்டால் காலை 7 மணிக்கு பொங்கும் பூம்புனல் ஒலிபரப்பப் படும். அதன் ஆரம்ப இசை மிகவும் அருமையாக இருக்கும். பொதுவாக புதிய பாடல்கள் ஒலிபரப்பப் படும். புது வெள்ளம் என்ற நிகழ்ச்சியில், புத்தம் புதிய பாடல்களை அறிமுகப் படுத்துவார்கள்.

இன்றைய இசையமைப்பாளர் என்ற நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரின் பாடல்களை அவரைப் பற்றிய குறிப்புகளுடன் தொகுத்து வழங்குவார்கள். பொதிகைத் தென்றல் என்ற நிகழ்ச்சியில், திரைப்பாடலில் இடம்பெற்றுள்ள சங்க இலக்கிய வரிகள், பாடலில் உள்ள இலக்கண குறிப்புகள் குறித்து விளக்கங்கள் கொடுப்பார்கள்.

செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற வரிகளே செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது என மாறியள்ளது; நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை என்ற கம்பராமாயண வரிகளே நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை என மாறியள்ளது போன்ற பல எடுத்துக்காட்டுகள் சொல்லுவார்கள்.

அந்தாதிக்கு எடுத்துக்காட்டாக வரும் பாடல்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

இந்த பாடலை நாங்கள் இலக்கண பகுதி தேர்வில் பயன்படுத்தியது உண்டு.

மலர்ந்தும் மலராதவை என்ற நிகழ்ச்சியில், ஒலிப்பதிவு செய்யப் பட்டு படத்தில் இடம்பெறாத ‘புத்தம்புது காலை (அலைகள் ஓய்வதில்லை) போன்ற பாடல்கள் ஒலிபரப்பாகும்.

ஜோடி மாற்றம் என்ற நிகழ்ச்சியில், ஒரு பாடகர் அல்லது பாடகி வேறு பல பாடகர் அல்லது பாடகியோடு இணைந்து பாடிய பாடல்கள் ஒலிபரப்பாகும். எடுத்துக் காட்டாக சொல்ல வேண்டுமென்றால், முதல் பாடல் SPB, சுசிலா பாடல் என்றால், இரண்டாவது பாடல் சுசிலா TMS பாடல், மூன்றாவது பாடல், TMS ஜானகி அவர்களின் பாடல் என்பதாக இருக்கும். அன்றும் இன்றும் நிகழ்ச்சி, ஒரு பாடகர் அல்லது பாடகி பாடிய அல்லது ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த, ஒரு கவிஞர் எழுதிய .. பழைய, மற்றும் புத்தம் புதிய பாடல்கள் ஒலிபரப்பாகும்.

‘ஒரு நிமிடம் தமிழ்’ நிகழ்ச்சியில், வேறு மொழி வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது

இன்பமும் துன்பமும் நிகழ்ச்சியில், இன்பமாகவும், துன்பமாகவும் பாடிய பாடலை ஒலிபரப்புவார்கள். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், வெள்ளை புறா ஒன்று பாடலில் இன்பமாக பாடும் பாடலும் உண்டு; சோகப்பாடலும் உண்டு.

இன்றைய நேயர் என்ற நிகழ்ச்சியில், ஒரு நேயருடன் கலந்துரையாடி அவருக்குப் பிடித்த பாடல்களை ஒலிபரப்புவார்கள்.

அதேபோல அறிவிப்பாளர் ஒருவர் தனது விருப்பப் பாடல்களைத் தொகுத்து ‘என் விருப்பம்’ என சிறு குறிப்புகளுடன் தொகுத்து வழங்குவார்.

குறுக்கெழுத்து போட்டி நடத்தினார்கள். காகிதத்தில் கட்டங்கள் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். விடைக்கான குறிப்புகள் பாடல்களாக ஒலிபரப்பப் படும்.

பிறந்த நாள் இன்று பிறந்த நாள், நாம் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் ஹாப்பி பர் த் டே டு யூ என்ற பாடலுடன் தொடங்கிய பிறந்தநாள் வாழ்த்து, மற்றும் அதில் ஒலிபரப்பப் படும் பாடல்கள் அருமையாக இருக்கும். வாழ்த்துபவர்களின் உறவு முறை, அப்பம்மா, அம்மம்மா.. போன்ற அழகு தமிழில் இருக்கும். பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியில் அன்பு வந்தது என்னை ஆள வந்தது, தாலாட்டு போன்ற பிரபலமான குழந்தைகள் தொடர்பான பாடல்களை ஒலிபரப்புவார்கள்.

ஒரு படப்பாடல்கள், இந்திப் பாடல்கள், பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, சிறுவர் மலர், திரைக் கதம்பம், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, இரவின் மடியில் (இது இரவு ஒலிபரப்புக்கு தொடங்கிய பிறகு ஒலிபரப்பப் பட்டது.) போன்றவை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சிகளுக்கு அழகிய தமிழ் பெயர்கள் கொடுக்கப்பட்டன. ஒரு நிகழ்ச்சியின் பொதுவாக ஏதோ ஒரு இழையில் கோர்த்தது போல இருக்கும். பாடல்கள் மெல்லிசை, துள்ளிசை பழைய, புதிய பாடல்கள் என ஏதோ ஒரு வகையில் வகைப்படுத்தப் பட்டிருக்கும். தொடர்பில்லாத பாடல்களாக இருக்காது. இதனால், பாமர மக்களின் இலங்கை வானொலி செயல்பட்டதால் அனைத்து மக்களின் இதயம் கவர்ந்த ஒன்றாக அது இருந்தது.

திரைப்பாடல் மட்டுமல்லாமல் சிவாஜி போன்ற திரைக்கலைஞர்களின் பேட்டிகள் கூட இடம்பெற்றன. கண்ணதாசன் மறைந்தவுடன், அவரை நினைவு கூர்ந்து அன்று முழுவதும்,பாடல்கள் ஒளிபரப்பினார்கள். பாரதியாரின் நூற்றாண்டு விழா ஆண்டில் தினமும் முதல் பாடலாக பாரதியார் பாடல் ஒலிபரப்பியதாக நினைவு.

சனி ஞாயிறுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் இருக்கும். சனி ஞாயிறுகளில் காலை 10 மணிக்கு மேலேயும் சிறப்பு நிகழ்ச்சிகள் இருந்தன என நினைக்கிறேன்.

ஞாயிறு காலை திரைவிருந்து என்ற புதிய திரைப்படங்களுக்கான விளம்பர நிகழ்ச்சி நடைபெறும். நீயா படத்தில் “என்னை விட்டுட்டு போறீங்களா ராஜா? என ஸ்ரீபிரியா கதறும் வசனத்தை கே.எஸ். ராஜா ஒலிபரப்பி விட்டு “போக மாட்டேன், அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பேன். அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது கே.எஸ். ராஜா” என நிகழ்ச்சியை முடித்து வைப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைச்செல்வி சுஜாதா, நாளை நமதே புகழ் சந்திர மோகன் என விறுவிறுப்பாக கே.எஸ். ராஜா பேசிய அந்தமான் காதலி திரைப்பட விளம்பரம் இன்றும் நினைவில் உள்ளது.

ஞாயிறு மாலை 1.30க்கு இசைத் தேர்தல் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பப் படும். அதில் மொத்தம் 6 /7 பாடல்கள் ஒலிபரப்பப் படும். ஒரு பாடலை அந்த வாரம் அறிமுகப் படுத்துவார்கள். ஒரு பாடல் அன்றைய நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும். மீதி பாடல்களை நேயர்களிடமிருந்து கிடைக்கும் வாக்குகேற்ப வரிசைப் படுத்துவார்கள். நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிகழ்ச்சி அது. என்னடி மீனாட்சி, செந்தாழம் பூவில், என் கண்மணி என் காதலி போன்ற பாடல்கள் ஏறக்குறைய ஒரு ஆண்டு நிகழ்ச்சியில் இருந்தன. அதுவும் என்னடி மீனாட்சி பாடல் ஒரு ஆண்டு முதலிடத்திலேயே இருந்தது. அதை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிய பாடல், பொன்மாலைப் பொழுது. இந்நிகழ்ச்சியைப் பலகாலம் தொகுத்து வழங்கியவர் கே.எஸ்.ராஜா.

ஞாயிறு மாலை வினோத வேளை என்றொரு நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். இது ஒரு மேடை நிகழ்ச்சி. பார்வையாளர்களின் கைதட்டல் ஒலியுடன் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும். ஆம் ,இல்லை என்று பதில் அளிக்கக் கூடாது. ஒரு வார்த்தையில் பதில் அளிக்கக் கூடாது. வார்த்தைகளுக்கு இடையே ஐந்து வினாடிகளுக்கு மேல் அமைதி காக்கக் கூடாது. வேறு மொழி வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது, ஒரே வார்த்தையை மூன்று முறைக்கு மேல் கூறக்கூடாது. இப்படிப்பட்ட பல நிபந்தனைகளோடு மிகச்சிலர் மட்டுமே பேசி வெற்றியடைவார்கள். இந்நிகழ்ச்சியைப் பலகாலம் தொகுத்து வழங்கியவர் கே.எஸ்.ராஜா.

இன்று தொலைக்காட்சி மூலம் பிரபலமான பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி அப்போதே இலங்கை வானொலியில் நடைபெற்றது. அதிலும் அறிவிப்பாளர் பி.எஸ்.அப்துல் ஹமீது தான்.

சர்வதேச வானொலி

துப்பறியும் ரத்தினம் போன்ற துப்பறியும் தொடர் நாடகம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும். கொலையை துப்பறிவாளர் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதை நேயர்கள் யூகம் செய்து எழுதி அனுப்ப வேண்டும் என்பதான ஒரு போட்டி நிகழ்வு.

இசையும் கதையும் என்ற நிகழ்ச்சியில் அறிவிப்பாளர், ஏதோ ஒரு எழுத்தாளர் எழுதிய கதையை வாசிப்பார். அதற்கேற்ற பாடல்கள் இடையிடையே ஒலிக்கும். வாசிக்கும் போது அறிவிப்பாளர், நல்ல ஏற்ற இறக்க பாவனைகளுடன் வாசிப்பார்.

பாடல்களின் இடையில் ஒலித்த ராணி சந்தன சோப், வுட்வார்ட்ஸ் க்ரைப் வாட்டர் விளம்பரங்கள் கூட நினைவில் உள்ளன. நுலம்புத் தொல்லையா? என ஒரு கொசுவத்தி விளம்பரம் வரும்.

பாப் இசை பாடல்கள், மற்றும் இலங்கையில் வெளிவந்த பாடல்கள் ஒலிபரப்பப் படும்.
இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அதுதான் எனக்குத் திருநாள்; என் கனவுகள் பலித்திடும் பெருநாள்.’
சின்ன மாமியே உன் செல்ல மகள் எங்கே? பள்ளிக்குப் போனாளோ; படிக்கப் போனாளோ? அட வாடா மருமகா என் அழகு மருமகா …
கள்ளுக்கடை பக்கம் போகாதே
சுராங்கனி சுராங்கனி…
போன்றவை சில புகழ் பெற்ற பாடல்கள்.

மேலும் சில இலங்கை புகழ் பாடல்கள் கேட்க இந்த சுட்டியை சொடுக்கவும்: https://www.youtube.com/watch?v=xVQWC6PBwCo

  • பாரதி திலகர்– கட்டுரையாளர் பாரதி தீவிர வாசிப்பாளர், தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.