குழந்தைப் பருவம் தான் நாம் குழந்தைகளுக்குத் தரும் உண்மையான சொத்து.

நடிகர் சிவகுமார் அவரது அம்மாவிற்கு அவர் மூன்றாவது மகன். கிராமத்தில் வளர்ந்த அவர் ஓவியம் பயில, சென்னை செல்ல விரும்புகிறார். முதலிரண்டு மகன்கள் குழந்தையிலேயே மரணித்த பிறகு பிறந்தவர் சிவகுமார். எனில், அவரது அம்மா எந்தளவு இவர் மேல் பற்றுடன் கண்ணும் கருத்துமாக வளர்த்திருப்பார் என்பது புரியும். அத்தகைய மகன் ஓவியம் பயில்வதற்காக இளவயதிலேயே தன்னைப் பிரிந்து வெகுதூரம் செல்கிறான் எனும்போது அந்த தாய்க்கு அது எத்தகைய வேதனையாக இருக்கும்? ஆனால், அவர் எதுவும் சொல்லவில்லை. படிக்க அனுமதித்து அனுப்புகிறார். அப்போது ஊரார் கேட்கிறார்கள். இப்படி ஒற்றை மகனை அனுப்புகிறாயே, என்னாகுமோ ஏதாகுமோ என்கிற கவலை இல்லையா, எது குறித்தும் பயமில்லையா என்று. அதற்கு அந்த அம்மா சொல்கிறார், மேலே கையைக் காட்டி ‘சாமி, இருக்குது; அது பாத்துக்கும்’ என்று. ஊரில் இருக்கும்போது தான் பார்த்துக்கொள்வேன்; வேற்றூரில் சாமி பார்த்துக்கொள்ளும் என்று. இவை பற்றி, ‘இது இராஜபாட்டை அல்ல’ என்கிற தனது நூலில் நடிகர் சிவகுமார் சொல்லியிருப்பார்.

இதே போலத்தான். தாயின் இடுப்பை விட்டு குழந்தை இறங்கும் நாளிலிருந்தே, ஏன் சொல்லப்போனால், தாயின் கருப்பையிலிருந்து வெளிவந்த நாளிலிருந்தே உடல் மற்றும் மன நலத்துடன், ஒரு குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்த சமூகத்தின் பொறுப்பு. இதை அந்தக் குழந்தையின் தந்தையிலிருந்து சமூகத்தின் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

Photo by Mohd Aram on Unsplash

இந்த சமூகம்தான், இந்த சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும்தான், குழந்தைகளுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும்; குழந்தைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

‘இரவில் தன்னந்தனியாக நிறைய நகைகள் அணிந்து ஒரு பெண் வெளியே சென்று பாதுகாப்பாக வீடு திரும்பும்போதுதான் நமது நாட்டிற்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைக்கப் பெற்றதாக நாம் பெருமை கொள்ள முடியும்’ என்றார் மகாத்மா காந்தியடிகள்.

ஆழ்ந்து யோசித்தால் இதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளன. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத தன்னிறைவு பெற்றவர்களாகவும், பெண்ணை சகவுயிராக மதிக்கும் பேறு பெற்றவர்களாகவும் பெண்ணிடத்தில் கண்ணியம் காப்பவர்களாகவும் இந்தியர்கள் ஆகும்போதுதான், நமது நாடு உண்மையிலேயே சுதந்திரம் அடையப் பெற்றதாக அர்த்தம் என்பதுதான் அது.

நாம் சுதந்திரம் பெற்று (1947 – 2021) 74 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இரவில் அல்ல பகலில், பெண்ணை மட்டுமல்ல, குழந்தைகளைக் கூட பட்டப்பகலிலே கூட நம்பி வெளியே அனுப்பும்படியான பாதுகாப்பான சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? வெளியே மட்டுமல்ல, வீட்டிலேயே எத்தனை வகையான எதிர்ப்புகளையும் வன்முறைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இது ஏன்? புரிதலின்மையால்.
எதனால் இப்படி? தன் புரிதலின்மையை ஒத்துக்கொள்ளாததால்.
யாரால்? குற்றம் புரியும் ஆண்களால்.

ஒரு முல்லா கதை உண்டு. முல்லா தெருவிளக்கின் அடியில் எதையோ தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்த நண்பர் என்ன என்று கேட்க, வரும் வழியில் இருளில் தனது பொற்காசுகள் அடங்கிய பையைத் தொலைத்துவிட்டதாகவும் அதை இங்கே தேடுவதாகவும் கூறுவார். இருளில் எங்கோ தொலைத்ததை, இங்கே தேடினால் எப்படிக் கிடைக்கும் என நண்பர் வினவ, ‘இங்கேதானே வெளிச்சம் இருக்கிறது; அதனால் இங்கே தேடுகிறேன்’ என்பார் முல்லா. அந்தக் கதையில் போலத்தான், இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடுகிறோம். எப்படிக் கிடைக்கும்?

பெரும்பாலான ஆண்கள், காலம் காலமாக வழிவழியாக தன்னுடல் பற்றிய அறிதல் இல்லாமல், தன்னுடலின் பிரச்சினைகளுக்கும், தன் மனதின் அறிவீனங்களுக்கும் பெண்ணையும் பெண்ணுடலையும் காரணமாக்குகிறார்கள். அது எந்த விதத்தில் நியாயம். தங்களுடைய பார்வைக் கோளாறுகளை தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்திருக்கிறார்கள். இது எந்தவிதத்தில் சரி. எதாவது ஒரு தலைமுறை, தானறியாமல் தான் தொடர்ந்து செய்துகொண்டே வரும் இப்படியான விசயங்கள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு அப்பாவும் தனது மகன் / மகள்களுக்கு தன் பங்கு பொறுப்பை ஏற்று சொல்லித்தர வேண்டும். ஆனால், அப்பாக்கள் தத்தமது பிள்ளைகளுக்கு வழி காட்டுகிறார்களா? எந்த அளவு குழந்தை வளர்ப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்? குழந்தைகளுக்குத் தன்னுடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்களா? அப்பாக்களுக்கு தன் சின்ன வயதில், தமது அப்பாவிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கவில்லை என்பதால், தானும் தன் பிள்ளைக்கு வழிகாட்டுதல் தராமல், சொல்லித் தர தெரியாமல், எப்படிச் சொல்லித்தருவது என்று தயக்கத்தாலும் இது வழி வழியாகத் தொடர்கிறது.

பொத்தாம் பொதுவாக ‘இந்த பொம்பளைகளே இப்படித்தான் எஜமான்’ என்று பெண் பற்றிய புரிதலற்ற, கேவலமான விமர்சனங்களை வைப்பது என்பது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். பிரச்சினை எங்கு யாரிடமோ அங்கிருந்து மாற்றங்களை நிகழ்த்தாமல், எவ்வாறு பிரச்சினைகள் சரியாகும்? நூற்றாண்டு காலங்களாக பாதையையும் மாற்றாமல், பயண திசையையும் மாற்றாமல், எவ்வாறு நாம் நடந்து செல்லும் திசைக்கு எதிர் திசையிலுள்ள நமது இலக்கை அடைய முடியும்?

சரி, எல்லாவற்றுக்கும் யார் குற்றவாளி என்றால் – நேரடியாகவோ மறைமுகமாகவோ நம் எல்லோருக்குமே அதற்கான பொறுப்பு இருக்கிறது.

ஓரிடம் தூய்மையாக இருக்கிறது; மற்றோரிடம் சாக்கடையாக! சாக்கடை, தானாகவேவா சாக்கடையானது? சுத்தமான இடங்களின் அழுக்குகள் எல்லாம் சேர்ந்து, சேர்ந்துதானே – இப்போது சாக்கடையாக உருவானது? நாற்றமாக வெளித் தெரிகிறது?!

எனவே, சுத்தமாக இடத்தை வைத்திருப்பவர்கள்தான், குப்பை கூளங்களுக்கு பொறுப்பு. பசியாறியவர்கள், பசியோடிருப்பவர்களுக்குப் பொறுப்பு.
பணக்காரர்கள்தான், ஏழ்மைக்குப் பொறுப்பு.
அறிவுள்ளவர்கள்தான், அறியாதவர்களுக்குப் பொறுப்பு.
பலமுள்ளவர்கள்தான், பலவீனர்களுக்குப் பொறுப்பு.
நல்லவர்கள்தான், தீமைக்குப் பொறுப்பு.
சமூகத்தின் அனைத்துக் குற்றங்களுக்கும், நாம்தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் .

சரி, பொறுப்பேற்றுக் கொண்டோம்; எவ்வாறு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? ஏதோ ஒரு தலைமுறையில் யாரோ தொடங்கிய தவறுகளை, தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர வேண்டிய அவசியமில்லை. தீமைகளைத் தடுக்க, சரி செய்ய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை நம்மால் என்ன செய்துவிட முடியும் என மனத்தயக்கம் கொள்ள வேண்டாம்; மலை தடுக்கிறது என பயந்து நிற்க வேண்டாம்; துணிந்து ஒவ்வொரு அடியாக எடுத்து நடக்கத் தொடங்கினால் போதும்; மலையையும் எளிதாகக் கடந்துவிடலாம்.

முதலடி எடுத்து வைக்க வேண்டும் அல்லவா? எதாவது ஓரிடத்தில் செயல்படத் தொடங்கிவிட வேண்டும். நமது பிள்ளைகளிடம் உரையாடத் தொடங்கலாம்.

Photo by Church of the King on Unsplash

இணையத்தில் ‘லவ், கிஸ்’ என்று டைப்’படித்தால் எத்தனை வீடியோக்கள் அப்படியே கொட்டுகின்றன.

குழந்தைகள், யாரிடத்ததிலிருந்தோ எங்கோ தப்பும் தவறுமாக ஒரு விசயத்தைக் கற்றுக்கொண்டு, சமூகத்தையே சீழ்படுத்தி பாழ்படுத்தி – அப்புறம் அதை அன்லேர்ன் பண்ண இரு மடங்கு போராடுவதை விட, வாழ்வையே விரயமாக்குவதுவிட, ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றியுள்ளோருக்கு ‘சரியானதை’ கற்றுத்தரலாம்.

அப்பா-அண்ணா-தம்பி-இணையர்-மகன் ஆகியோரிடம் ‘பார்வைகள் – தொடுகைகள்’ பற்றி உரையாடத் தொடங்கலாம். பெண்களை நேராகக் கண்கொண்டு பார்ப்பதுதான் கண்ணியம் என்று உணர்த்தலாம். தொடுகைகளின் நோக்கங்களிலுள்ள கண்ணியக் குறைச்சல் பற்றிச் சொல்லலாம். இது உலகை மாற்றுமா? நிச்சயம் மாற்றும்.

நம்மிடம் இரண்டடி சுற்றளவு தூரம் ஒளிதரும் கைவிளக்குதான் உள்ளது; நம்மைச் சுற்றிலும் இருள்; எங்கும் எங்கெங்கிலும் இருள்; உலகம் முழுவதும் இருள்; எப்படி பயணிப்பது? நம்மிடமுள்ள கைவிளக்கு, அது போதும், இரண்டடி இரண்டடிகளாக நாம் உலகையே ஒளிவலம் வர!
எதையும் கேள்வி கேள்!

கட்டுரையாளர்:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.