18 வயது அடைந்தவுடனேயே எல்லாரும் எல்லாமும் செய்வதற்கான முதிர்ச்சி அடைந்து விடுகிறார்களா?
பதினெட்டு வயதானாலே, எல்லாருக்கும் யாரும் நான்கு சக்கர, இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் கொடுத்துவிடுவதில்லை. அதற்கான தகுதியைப் பெற்ற பிறகுதான் தருகிறார்கள். வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கே அப்படி எனில், திருமணங்கள் நமது வாழ்வில் எவ்வளவு முக்கியமானவை; திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சம்பந்தபட்ட இருவரும் திருமணத்திற்குத் தயாராகும்போதுதான் திருமணம் செய்யப்பட வேண்டும்.

உள, உடல் மருத்துவச் சான்றிதழ் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். தாயாவதற்கான, தந்தை ஆவதற்கான ‘மன ஆலோசனை’ பெற்ற பிறகே, குழந்தை பெற்றுக்கொள்வது என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.
பதினெட்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது வந்த பிறகு, வாகன உரிமமும் பெற்ற பிறகுமே எத்தனை சாலை விபத்துகள்? அப்படியிருக்க, 18 வயதானாலே வண்டி ஓட்டலாம், உரிமம் தேவையில்லை என்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான், இப்போது திருமணங்கள் எந்த வித உள மற்றும் உடல் தகுதியும் முறைமையும் இல்லாமல் இருக்கின்றன. பிற்பாடு நிகழும் விபத்துகளைத் தடுக்க, திருமண முறைகள் தகுதியான வகையில் முறைமைப்படுத்தப்பட வேண்டும்.

எந்த மதப்படி நடக்கும் திருமணங்களிலுமே, இவை இல்லை. அரசு பதிவு செய்யும் திருமணங்களிலும் சரி, அறிவுசார் விழிப்புணர்வு கொண்ட சுயமரியாதைத் திருமணங்களிலுமே கூட, வெறும் வயதுச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ் ஆகியவை மட்டுமே பெறப்படுகின்றன. இது குறிப்பிட வேண்டிய விசயம்.

ஆணின் திருமண வயது 21 எனவும், பெண்ணினுடையது 18 என இருப்பதையும் சொல்ல வேண்டும். வாக்களிப்பதற்கு இருவருக்கும் சமமான வயது என நிர்ணயித்த அரசு, திருமணத்திற்கான வயதை சுதந்திரமடைந்து 74 ஆண்டுகளுக்குப் பிறகும் சமமாக்கவில்லை. இது சரி செய்யப்பட வேண்டும்.

பதினெட்டு வயது வந்த பிறகு திடீரென யாரும் மின்னலடித்தது போல ஞானம் அடைந்து விடுவதில்லை. அந்த வயதின்போது பெறும் எல்லாச் சலுகைகளையும் அடைய முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாகத் தகுதிப்படுத்தப்பட வேண்டும். அது திருமணமோ, ஓட்டுரிமையோ, இன்ன பிறவோ…

ஓட்டுரிமை, வாக்களிப்பு பற்றிய கவனப்படுத்துதல் முன்கூட்டியே இருந்தால், நமது நாட்டில், வாக்களிப்பு சதவிகிதம் முழுமையாக இருக்கும். அனைவரும் அரசியல் நீதி ஓரளவு அறிந்தவர்களாக இருந்திருப்பார்கள்.
குடி, புகைப் பழக்கம், வயது வந்தோர் மட்டும் பார்க்கிற படங்கள் ஆகியவற்றிற்குமே கூட, வயது மட்டுமே போதுமான தகுதி என்பது, இவ்வளவு குடிகாரர்கள் உருவாகவும், அதிக அளவில் பாலியல் வக்கிரங்கள் நடைபெறவும் காரணமாக இருக்கிறது.

சகவுயிரை மதித்தல்

திருமணம், ஆணுடலைப் புரிந்துகொள்ளுதல், பெண்ணுடலைப் புரிந்து கொள்ளுதல் என்பதெற்கெல்லாம் முன்னதாக, ‘சகவுயிரை மதித்தல்’ குறித்த தெளிவு தரப்படவேண்டும். சகவுயிரை மதிப்பதற்கு, தன்னை மதித்தல் – தன்னுடலை மதித்தல் என்பது வேண்டும். “உனது உடல்; உனது உரிமை” – இது ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெரியோரும் அறிய வேண்டும். நமக்குள்ள உரிமைகளை அறிந்தால்தான், பிறருக்குள்ள உரிமைகளும் தெரிய வரும்; உரிமை மீறல் என்பது எவ்வளவு தவறு என்பதும் புரியும்.

இந்த ‘பை’ அவர்களுடையது. அதை அவர்களிடம் கேட்காமல் எடுத்துப் பார்ப்போமா? எடுத்தால் அதற்குப் பெயர் ‘திருட்டு’. ஒரு வீட்டில் அழைப்பு மணி அடிக்காமல் உள்ளே போவோமா? ஒரு நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. ‘நான் உட்கார்ந்து கொள்ளட்டா?’ என்று கேட்டு விட்டுத்தானே உட்காருவோம். அதே போலத்தான், நமது உடல் நமக்கு உரிமையானது என்று தெரியும்போது, அடுத்தவர்களுக்கும் அப்படித்தான் என்பதை உணர முடியும்.

காதல்
இந்தத் தலைமுறை பிள்ளைகள் எல்லாருமே தொலைக்காட்சி வளர்த்திய பிள்ளைகள். ஊடகமும் தொழில்நுட்பமும் வளர்த்திய பிள்ளைகள்.
அவர்களை வளர்த்தும் சினிமா எப்படி இருக்கிறது?
‘ஜானி’ படம் தொடங்கி, தன்னைக் காதலிக்காதவளை கொல்வது என்பது நியாயப்படுத்தப்படுகிறது. அது இப்போது, ஆசிட் அடிப்பதில் வந்து நிற்கிறது. ‘சிந்து பைரவி’யில் தனது அறிவார்ந்த ரசனைத் தேர்வாக இன்னொரு இணையர் இருப்பது சரி என்றும், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் அதுவே பெண்ணிற்கென வரும்போது தற்கொலையிலும் முடிகிறது.
படங்களில் காட்டப்படும் பெண்ணியமோ, இன்னும் கொடுமையானதாக இருக்கிறது.

சினிமா காட்டும் பெண்ணியம்

ஒரு குரு வீட்டில் எலித் தொல்லை காரணமாக பூனை வளர்த்தாராம். யாகம் நடத்தும்போது அது குறுக்கே மறுக்கே ஓடவே, பிடித்துக் கட்டச் சொன்னாராம். குருவின் காலம் முடிந்த பின்பும், யாகம் செய்வது என்றால் – சிஷ்யகோடிகள், எங்கிருந்தாவது ஒரு பூனையைப் பிடித்து வந்து கட்டினார்களாம். அதுதான் யாகம் செய்வதற்கான வழக்கம் என்று அவர்களுக்கு மனதில் படிந்து போயிருந்ததாம்!

அப்படித்தான் தமிழ் சினிமாக்களின் ‘பெண்ணியம்’ பற்றிய புரிதல் இருக்கிறது. ஆண் செய்வதை எல்லாம் – அதுவும் குறிப்பாக – ஆணின் தீயப் பழக்க வழக்கங்களை பெண் செய்ய முயல்வதே – ‘தமிழ் சினிமாக்களின்’ பெண்ணியம்! சிகரெட் பிடிப்பது, பைக் ஓட்டுவது, தண்ணி அடிப்பது, இன்னும் ஒருபடி மேலே போய் ஆண்களோடு சேர்ந்து கொண்டு பெண்களைக் கலாய்ப்பது என்பதாக இருக்கிறது.

அப்புறம், எதுவென்றாலும் இப்படி ஒரு கேள்வி கேட்பார்கள் – ‘விக்ரம்’ படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கேட்பார். ‘ஆம்பள செய்ய முடிகிற எல்லாத்தையும் பெண்கள் செய்ய முடியுமா, நான் வெயில் காலத்துல சட்டையில்லாம திரிவேன். உன்னால முடியுமா’ என்று.
வெயில் காலத்திலோ, எந்தக் காலத்திலோ சட்டை இல்லாமலோ, எதுவுமே இல்லாமலோ – ஒரு ஆண் கண்ணியமாக தெருவில் மட்டும் என்ன, ஊரையே சுற்றி வந்தாலும் எதுவும் ஆகாமல், பத்திரமாக வீடு திரும்ப முடிகிற சுதந்திரத்தைத்தான் பெண் கேட்கிறாள்.

பெண்கள் பேசுவதும் கேட்பதும், இந்த பூமியில் ஆண்களுக்கு இருக்கிற அதே வகையான வாழும் உரிமையை! இருக்கிற ஒரேயொரு வாழ்வில் தனக்கான சுதந்திரத்துடன் வாழ்கிற உரிமையை!

பெரியார் யாரிடம் பேசுகிறார்?
ஆகச் சிறந்த பெண்ணியத்திற்கு வித்திட்ட பெரியார் அவர்களே, பெண்களுக்குத்தான் அறிவுரை கூறுகிறார். பெண்களை கர்ப்பப்பையை வெட்டி எடுத்துவிடச் சொல்கிறார். முடியை ‘க்ராப்’ வைத்துக்கொள்ளச் சொல்கிறார். ஆண்களுக்கென்று அவர் எதையும் சொல்லவில்லை. அவர்களின் எதையும் மாற்ற நிர்பந்திக்கவில்லை.

தனதுடலிலுள்ள ஓருறுப்பை சரிவர நிர்வகிக்கத் தெரியாமல், தன் வாழ்வில் சந்திக்கும் எல்லாப் பெண்களையும் கஷ்டப்படுத்தும், கேவலப்படுத்தும், மரியாதையின்றி நடத்தும் ஆண்களை சரி செய்யாமல், ஏன் “அவரும்” மற்ற எல்லாரையும் போலவே, பெண்களுக்கே ‘அப்படியிரு, இப்படியிரு’ என்று போதிக்கிறார்?

பெண்கள் ஏன் இயற்கை தமக்களித்த கர்ப்பப்பையை வெட்டி எடுக்க வேண்டும்? கட்டுப்பாடும் முறைமைகளும் ஆண்களுக்குத்தானே வேண்டும்.
சொன்னது பெரியார் என்பதற்காக ஆதரவாகப் பேசுகிறவர்களிடம், முக்கியமாக ஆண்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

” உங்களில் எத்தனை பேருக்குத் தன் உணவைத் தானே சமைக்கத் தெரியும்?
தன் செலவுகளுக்கான பொருளைத் தானே ஈட்டத் தெரியும்?
உங்களது வீட்டில் பெண்களை சமையலிலிருந்து விடுபடச் செய்தீர்களா?
உங்களது வீட்டில் ஆண்களை சமையலில் ஈடுபடுத்தினீர்களா?
பெண்களை மரியாதையோடு கண்களைப் பார்த்து பேசுகிறீர்களா?
நீங்கள் பெற்ற குழந்தைகளை வளர்ப்பதில் உங்களின் பங்கு என்ன?
குழந்தைகள் போதும் என்று முடிவெடுத்தது ஆண் இணையரா பெண் இணையரா குடும்பத்தினரா?
குழந்தைகள் போதும் என்று முடிவெடுத்து அறிவியலின் துணைகொண்டு ஆபரேஷன் செய்து கொண்டது பெண் இணையரா? ஆண் இணையரா? அதை முடிவெடுத்தது யார்?
உங்களது குழந்தை பாலியல் தூண்டுதல் ஏற்படும்முன் முறைமையான ‘பாலியல் கல்வி’ பெறச் செய்தீர்களா?
‘பாலியல் கல்வி’ என்பதில் உங்களது புரிதல் என்ன?
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அறிவார்ந்த பெரியாரிசம் பேசும் வீடுகளில் நிகழ்கின்றனவா?
வளர்ந்தவர்கள் மனத் துணிவுடன் எப்போது தங்களது ‘மீடூ’ பற்றிப் பேசுவீர்கள்?
சுயசிந்தனை / சுயமரியாதை என்பது ஆண் / பெண் / குழந்தைகள் மற்றும் சக உயிர்கள் அனைவருக்குமானது என்பதை எந்தெந்த வழிகளில் கடைப்பிடிக்கிறீர்கள்?”
இந்த கேள்விகளுக்கான பதில்களிலேயே இவர்கள் பெரியாரியத்தை வளர்த்தும் விதம், புரிந்துகொண்ட விதம், நடைமுறை வாழ்வில் பெரியாரியத்தை வாழும் விதம் தெரிந்துவிடும்.

பாலியல் விடுதலையை ஆண் முன் வைக்கும் நோக்கத்திற்கும், பெண் முன் வைக்கும் காரணத்திற்கும் இருக்கிற வித்தியாசங்கள்தாம், பெண் விடுதலை தாமதப்படுவதற்கான முக்கிய காரணிகள்.

இருப்பதையே – சொல்லிப்போன பார்வையிலேயே, நமக்கு வசதியான கோணத்திலேயே பார்த்துக் கொண்டிருக்கிறோம். சொன்னது பெரியாராகவே இருந்தாலும்….
எதையும் கேள்வி கேள்

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.