ஆண் பெண் இருபாலர் பயிலும் அரசுப் பள்ளி அது. உரை நிகழ்த்தப் போயிருந்தேன்.
‘என் வீட்டில் என்னை விட பலவீனமான ஒருவர் இருக்கிறார். அவருக்கு நான் உதவி செய்ய வேண்டுமா, அல்லது அவர் எனக்கு உதவ வேண்டுமா?’, எனக் கேட்டதற்கு, எல்லோரும் ஒட்டுமொத்தக் குரலாக, ‘நீங்கள்தான் உதவ வேண்டும்’, என்றார்கள்.
‘ஆண் பலசாலியா… அதே வயதுள்ள பெண் பலசாலியா?’
‘ஆண்தான்’
‘அப்போ, தன்னைவிட பலத்தில் குறைந்த பெண்ணுக்கு வீடு மற்றும் வெளி வேலைகளில் ஆண் உதவி செய்ய வேண்டுமா… இல்லை, பெண்தான் தன்னை விட பலசாலி ஆணுக்கு வேலை செய்ய வேண்டுமா?’
பலத்த அமைதி.
மாற்றம் என்பது ஒவ்வொருவருடைய வீட்டிலிருந்தும் ஒவ்வொரு மனிராலும் தொடங்கப்பட வேண்டியது. அத்தனை வீடுகளும் குடும்பங்களும் சேர்ந்ததுதான் சமூகம் என்பது.
மக்களின் பரவலான பாராட்டைப் பெற்ற ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தில் இரண்டு விசயங்கள் கவனிக்கத்தக்கன. ஒன்று: வீட்டில், தான் சாப்பிட்ட எச்சிலைக் கூட எடுக்காமல்தான் அந்த வீட்டு ஆண்கள் பழக்கப்பட்டிருப்பார்கள். தன் எச்சிலை தானே எடுப்பது அசிங்கம் எனில், கௌரவக் குறைச்சல் எனில், அவர்கள் சாப்பிட்ட எச்சிலை இன்னொருவர் எடுப்பது மட்டும் அமிர்தமாகுமா என்ன?
‘பழக்கப்பட்டுவிட்டோம்; பழக்கப்படுத்தப்பட்டுவிட்டோம்’ என்பதற்காக, தவறான பழக்கம் அது, என உணராமலே இருக்க வேண்டுமா? அல்லது தவறான பழக்கம் என்று உணர்ந்த பிறகும், அதைத் தொடர வேண்டுமா?
இரண்டு: சமையலறையின் கழிவு நீர்த்தொட்டி சரி செய்யப்படாமல், கணவனிடம் பலமுறை சொல்லியும் ப்ளம்பரை அழைத்து கணவன் சரி செய்யவில்லை என்பதன் தொடர்ந்த ‘நூற்றாண்டுகளின்’ சலிப்பையும் வெறுப்பையும் உமிழ்வதாகத்தான் படத்தின் உச்சக்கட்டக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
மடிக்கணினியில் தனது வேலைக்கு விண்ணப்பிக்கத் தெரிந்த ஒரு மெத்த படித்த பெண்ணிற்கு, தானே ஒரு ப்ளம்பரை அழைக்கத் தெரியாதா? அந்த வேலையை ஆண்தான் செய்ய வேண்டுமா?
வேலை என்பது எப்போதும் வேலையாக மட்டுமே இருக்கிறது. ஆண் வேலை, பெண் வேலை என்பதாக இல்லை. ஆண்கள் அதிகமாக பயிற்சி பெற்ற வேலை; பெண்கள் அதிகமாகப் பயிற்சி பெற்ற வேலை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
வீடு என்பது இருவருக்கும் பொதுவான ஒன்று. அங்கு குழந்தை வளர்ப்பையும் வீட்டுப் பொறுப்புகளையும் இருவருமே பகிர்ந்து செய்வதுதான் நல்லது. அதைப் பார்த்து வளர்கிற குழந்தைகள் சிறப்பாக வளர்வார்கள்.
சாப்பிடத் தெரிந்த அனைவரும் சமைக்கக் கற்க வேண்டும்; செலவு செய்கிற அனைவரும் சம்பாதிக்கக் கற்க வேண்டும். உடனடியாக குழந்தைகளுக்கு இதில் ஓரளவு பொருந்த முடியாது எனினும், குழந்தைப் பருவத்திலேயே அந்த திசை நோக்கித் திருப்ப வேண்டும்.
எப்போதும் ஆண் பிள்ளைகளை தானே செய்ய முடிகிற தன் அடிப்படை வேலைகளுக்கும் இன்னொருவரைச் சார்ந்திருக்கும் நோயாளிகளாகவே வளர்த்துகிறோம். அது அவர்களைத் தன்னம்பிக்கை குறைந்தவர்களாக ஆக்குகிறது. அந்த தன்னம்பிக்கைக் குறைவு, பெண்களை மரியாதைக் குறைவாக நடத்த வைக்கிறது. பெண்களைத் தன்னைவிட தாழ்த்தி, தன்னை உயர்த்திக்கொள்ளப் பார்க்கிறது.
பயப்படுபவர்தான் பயமுறுத்துவார். ட்ராஃபிக்கில் பாருங்கள்; அதிகம் பயப்படுபவரே, அதிகம் ஹார்ன் அடித்து அருகிலிருப்பவர்களுக்கு அதிக பீதியூட்டுவார்.
அடுத்தது, டாய்லெட் ஹேபிட்ஸ் (கழிவறைப் பழக்கங்கள்). நல்லவேளையாக ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ என்று எடுத்தார்கள். தி கிரேட் இண்டியன் டாய்லெட் கதை எடுத்திருந்தால், கதை இன்னும் கந்தலாகி இருக்கும்.
அலுவலகங்களில் வளர்ந்த, படித்த, பெரிய பதவியில் இருக்கிற ஆண்கள் கூட, டாய்லெட் ‘ஃப்ளஷ்’ பண்ணாமல் அப்படியே போவார்கள். அந்த ‘ஃப்ளஷ்’ பட்டனை அழுத்துவது கூட அவர்களால் முடியாதா? அல்லது அப்படி விட்டுச் செல்வதுதான் தன் பதவிக்கான அதிகாரம் என்று நினைக்கிறார்களா?
வீட்டில் அவர்கள் சரியாக வளர்த்தப்படாததையும் தானாக சுய அறிவுடன் வளராததையும்தான் இது காட்டுகிறது.
கமலாதாஸின் கதை ஒன்று, ‘கணவன் கழிவறை சென்று சரியாக நீர் ஊற்றப்படாத கழிவறையில் மிதக்கும் கழிவுகளில் கண் விழிப்பதாக’ இப்படித்தான் ஆரம்பிக்கும். மனைவிமார்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் தெரியும் இந்த கணவன்மார்களின் கழிவறை சுத்தம் பற்றி.
நான் எட்டாவது படிக்கையில் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்தவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை. அது போக்குவரத்து நெரிசலான சாலை. எதாவது வாகனங்கள் நிற்பதும் செல்வதுமாக இருக்கும். எதிர்வீட்டு வாசலருகில் எப்போதும் யாராவது வந்து சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார்கள். அதொரு திறந்தவெளி கழிவறை போல தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
எதிர்த்த வீட்டுக்காரர்கள் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ‘சீ நாயே சிறுநீர் கழிக்காதே’ என்று சுவரில் எழுதி வைத்துப் பார்த்தார்கள். ஆனால், அதை நாய்க்குத்தான் சொல்லியிருப்பதாகக் கருதிய ‘ஆண்’மக்கள் அங்கேயே தொடர்ந்து சிறுநீர் பெய்தார்கள். பிறகு, எதிர் வீட்டுக்காரர்களுக்கு ஒரு ‘ஐடியா’ உதித்து, கூண்டு வைத்த அதிக வெளிச்சம் தரும் விளக்கொன்றை வாசலில் பொருத்தினார்கள். பிறகுதான் இந்த விசயம் நின்றது.
வேலை, படிப்பு என பெண்கள் பொதுவெளிக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பெண்ணியம் பேசும் பெரிய பத்திரிகை நிறுவனங்களில் கூட, பெண்கெளுக்கென கழிப்பறை இல்லை. கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கென கழிப்பறை இல்லாமல் இருக்கிறது; ஆண்களுக்கும் அங்கே கழிப்பறை இல்லை. அவர்கள் எங்கே போகிறார்கள். தெருவில்தான்.
டாய்லெட் ஹேபிட்தான் செக்சுவல் ஹேபிட்டையும் உருவாக்குகிறது. பழக்கங்கள்தான் நடத்தைகள் ஆகின்றன; பழக்கங்களை சரி பண்ண சரி பண்ணத்தான் நடத்தைகளும் மாறும். பெரும்பாலான ஆண்கள் கண்ட இடங்களில், வந்த நேரங்களில் சாலைகளில் ஒன்றுக்குப் போவதும், பொதுக்கழிப்பறைச் சுவற்றில் அசிங்கம் அசிங்கமாகக் கிறுக்குவதும், பெண்களைக் கண்ட போதெல்லாம் இடிக்க வருவதும் ஆகிய நடத்தைகள், தினப் பழக்கங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் உருவானவைதான்.
சிறு பையன்களை தூக்கத்தில் கழிவறைவரைக் கூட்டிச் செல்ல சோம்பேறித்தனப்பட்டு வாஷ்பேஷினில் போக வைத்த, பயணங்களில் பேருந்தின் ஜன்னல் வழியாக இருக்க வைத்த, வாசலில், மரத்தடிகளில் போக வைத்த, சிறு குழந்தையின் ஆணுறுப்பில் மோதிரம் மாட்டி அழகு பார்த்த பல குடும்பங்களை அறிவேன். கழிவறை நடத்தை என்பது சிறுவயதிலிருந்து சரி செய்யப்பட வேண்டிய ஒன்று. அதற்கு அந்த ஆணை சிறு வயதிலிருந்து வழி நடத்துகிற அத்தனை பேரும் பொறுப்பு.
வீட்டில் ஒவ்வொரு மனிதரின் மனதின் எண்ணங்களை சரிபடுத்த சரிபடுத்த, வெளியிலிருந்து சட்ட ரீதியிலான அழுத்தமும் வேண்டும். மாஸ்க் போடவில்லை எனில், ஹெல்மெட் போடவில்லை எனில் ஃபைன் என்பது போல, மக்கள் புழங்கும் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை எவ்வகையிலும் தடை செய்ய வேண்டும். போலவே, பொது இடங்களில் சுகாதாரம் காப்பதற்காக, வீதிக்கு வீதி கழிப்பறை வசதிகளும் செய்யப்பட வேண்டும்.
உள்ளிருந்து விதையும் முளைத்துக் கிளைத்துச் செடியாக வேண்டும்; வெளியே ஆடுமாடுகள் தின்று விடாமலும் காக்க வேண்டும் என்பது போல இது.
- எதையும் கேள்வி கேள்
தொடரின் முந்தைய பகுதி:
கட்டுரையாளர்
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.
அருமை பிருந்தா தோழர் !
நன்றி மிக
கிட்னி க்கு பதிலாக சிறுநீர்ப் பை என்று இருந்திருக்க வேண்டுமோ?
கர்ப்பப் பையின் அருகாமை காரணமாக சிறுநீர்ப்பை விரிவடைய முடியாமல் போவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சங்கடம் பெண்களுக்கு ஏற்படுகிறது.
சிறுநீர்ப்பை யின் அளவில் மாற்றம் ஏதுமில்லை.
நன்றி. கவனத்தில் கொள்கிறேன்.